இந்திய அளவில் ஆண்டுதோறும் சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டிற்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு, அதாவது 69வது தேசிய திரைப்பட விருது பட்டியலில் தமிழ்ப் படங்கள் பெரிய அளவில் விருதுகளை பெறாத நிலையில், இந்த வருட விருது பட்டியலில் அதிக விருதுகளை தமிழ் திரைப்படங்கள் தட்டி தூக்கியுள்ளன.


4 விருதுகளை வென்ற பொன்னியின் செல்வன்-1 திரைப்படம்

"பொன்னியின் செல்வனுக்கு 4 விருதுகள்"

சிறந்த தமிழ் திரைப்படமாக மணிரத்னம் தயாரித்து இயக்கிய பொன்னியின் செல்வன்-1 படம் தேர்வாகியுள்ளது. சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு ஆகிய விருதுகளையும் "பொன்னியின் செல்வன்" படம் வென்றுள்ளது.


பொன்னியின் செல்வனுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ஆர். சிறந்த இசையமைப்பாளராக தேர்வு

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 7வது தேசிய விருது!

பொன்னியின் செல்வன்-1 படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் 7வது முறையாக தேசிய விருதை பெறுகிறார்.


திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது

சிறந்த நடிகை நித்யா மேனன்!

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்த நித்யா மேனன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


"மேகம் கருக்காதா" பாடலுக்காக ஜானி மாஸ்டரும், சதீஷும் சிறந்த நடன அமைப்பாளர்களாக தேர்வு

திருச்சிற்றம்பலம் படத்திற்கு மேலும் ஒரு விருது :

திருச்சிற்றம்பலம் படத்தில்வரும் "மேகம் கருக்காதா பெண்ணே! பெண்ணே!!" பாடலின் நடன அசைவுகள் பெரும்பாலானோரை கவர்ந்த நிலையில், சிறந்த நடனத்திற்கான தேசிய விருதையும் அப்பாடல் பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டரும், சதீஷும் சிறந்த நடன அமைப்பாளர்களுக்கான விருதை பெறுகின்றனர்.

சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது, கன்னடத்தில் வெளியாகி நாடு முழுவதும் வரவேற்பை பெற்ற காந்தாரா படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷப் ஷெட்டிக்கு கிடைத்துள்ளது.


காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகர் விருது

தேசிய அளவில் சிறந்த படம் :

தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக மலையாளத்தில் வெளியான 'ஆட்டம்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மலையாளத் திரைப்படமாக சவுதி வெள்ளக்காவும், சிறந்த கன்னடத் திரைப்படமாக கேஜிஎஃப்-2ம், சிறந்த தெலுங்கு திரைப்படமாக கார்த்திகேயா-2ம், சிறந்த ஹிந்தி திரைப்படமாக குல்மோஹரும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.



சிறந்த கன்னடத் திரைப்படமாக கேஜிஎஃப்-2 தேர்வு

சிறந்த சண்டைக் காட்சிகளுக்கான விருது கேஜிஎஃப்-2 திரைப்படத்திற்காக அன்பறிவு மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி பாடகியாக சௌதி வெள்ளக்கா படத்தில் பாடிய பாம்பே ஜெயஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த பின்னணி பாடகராக, பிரம்மாஸ்திரா ஹிந்தி படத்தின் பாடகர் அர்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரம்மாஸ்திரா படத்தின் இசையமைப்பாளர் பிரிதமுக்கு சிறந்த இசைக்காக, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கமொழி படமான அபராஜிதோ படத்தின் ஒப்பனைக் கலைஞர் சோம்நாத் குண்டு, சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருதை பெறுகிறார்.

Updated On 21 Aug 2024 4:58 AM GMT
ராணி

ராணி

Next Story