நந்தமூரி பாலகிருஷ்ணா என்கிற பாலையா, இந்த பெயரை கேட்ட உடனேயே நமக்கு நினைவுக்கு வரும் காட்சிகள் அசுர வேகத்தில் செல்லும் ரயிலை பைக்கில் சென்று ஓவர் டேக் செய்வது, ஒற்றை விரல் அசைவில் ரயிலையே திருப்பி அனுப்புவது, துப்பாக்கியால் சுட்டு விமானத்தையே வீழ்த்துவது, கத்தியில் வித்தை காட்டி வில்லனையே அலற வைப்பது, தாலி சென்டிமென்டுக்காக ஜெயில் கம்பியை வளைத்து நொறுக்குவது என அவர் நிகழ்த்திக்காட்டிய மாயாஜால வித்தைகள் தான். தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் என்.டி.ஆரின் மகனான இவர் படங்களில் என்று மட்டும் அல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவ்வப்போது இது மாதிரியான சாகசங்களை நிகழ்த்திக் காட்டுவது வழக்கம். இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கி ஊடகங்களில் பேசு பொருளாக மாறுவது என்பது இவருக்கு எப்போதுமே புதிதல்ல. அந்த வரிசையில் தற்போது ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா சட்டசபையில் தொடையை தட்டி, மீசையை முறுக்கி, விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம்...
சர்ச்சைகளுக்கு பெயர்போன பாலகிருஷ்ணா...
நந்தமூரி பாலகிருஷ்ணா சினிமாவில் உள்ள ஆக்சன் காட்சிகளுக்கு மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு அதிரடியான நபராகவே பார்க்கப்படுகிறார். தான் ஒரு பெரிய நடிகரின் மகன் என்றோ, முன்னாள் முதல்வரின் வாரிசு என்றோ அல்லது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் என்றோ எந்த பிம்பத்திற்காகவும் தனது ஒரிஜினல் முகத்தை மறைத்து வைத்துக்கொள்ளாத இவர், நான் இப்படித்தான் என்று முகத்திற்கு நேராகவே தனது செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்துபவர். அந்த வகையில், 2017 ஆம் ஆண்டு தனக்கு முன்னால் நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்ற ரசிகரை, அவர் அறைந்த விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதுதவிர அதே ஆண்டில் பாலகிருஷ்ணா தன்னுடைய காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி விடச் சொல்லி உதவியாளரை தாக்கிய சம்பவம், தலைப்புச் செய்திகளில் இடம் பெறும் அளவிற்கு கொண்டு சென்றது. இவையெல்லாவற்றையும் தாண்டி ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை யார் என்றே தனக்கு தெரியாது என கூறிய சம்பவம் அவரது ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி எதிர்ப்புக்குள்ளானது. இப்படி அவ்வப்போது ஏதாவது அதிரடியான சம்பவங்களை செய்து மீம்ஸ்களில் இடம்பெறும் அளவுக்கு பிரபலமான நந்தமூரி பாலகிருஷ்ணா இந்த ஆண்டு கூட கடந்த பிப்ரவரி மாதம் தனக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவரின் அழகு குறித்து பேசி, ஒட்டுமொத்த செவியர்களின் எதிர்ப்பை பெற்றார். பிறகு அதற்காக மனம் வருந்தி மன்னிப்பும் கேட்டார். அந்த வரிசையில் தற்போது ஆந்திர சட்டசபையில் சினிமா பாணியில் ஆக்சன் செய்து பரபரப்பை ஏற்படுத்தி சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
சர்ச்சைகளில் சிக்கிய போது நந்தமூரி பாலகிருஷ்ணா
யார் இந்த நந்தமூரி பாலகிருஷ்ணா ?
தெலுங்கு திரையுலகில் மூன்றெழுத்து மந்திரமாக வலம் வந்து சினிமாவிலும், அரசியலிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய என்.டி.ஆர் - பாசவதரகம் தம்பதிகளுக்கு 6வது மகனாக 1960ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிறந்தவர் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா. 1950-60 காலகட்டங்களில் தென்னிந்திய திரையுலகம் சென்னையை மையமாக கொண்டு இயங்கி வந்ததால், பலமொழி நட்சத்திர நடிகர்களும் தங்கள் குடும்பத்தினரோடு இங்குதான் வசித்து வந்தனர். அதன்படி தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த என்.டி.ஆரும் தன் குடும்பத்தினரோடு சென்னையில் வந்து தங்கி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதனால் அவரின் குழந்தைகள் அனைவரும் இங்கு இருந்த பள்ளிக்கூடங்களிலேயே படித்தனர். அந்த வகையில், பாலகிருஷ்ணாவும் தனது பள்ளிப்படிப்பை சென்னையில்தான் படித்துள்ளார். பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தெலுங்கு திரையுலகம் ஹைதராபாத்திற்கு மாறிய பிறகு, என்.டி.ஆர் குடும்பம் முழுவதும் அங்கேயே குடியேறியது. அதன் பிறகு அங்கு இயங்கி வந்த நிஜாம் கல்லூரியில் பிகாம் படிப்பை முடித்த நந்தமூரி பாலகிருஷ்ணா சிறுவயதில் இருந்தே தந்தையின் வழிகாட்டுதலில் நடித்து வந்தாலும், கதாநாயகனாக அறிமுகமானது என்னவோ தனது 22 வயதில் சந்தான பாரதி மற்றும் பி.வாசு இயக்கத்தில், இளையராஜா இசையில் 1984ஆம் ஆண்டு வெளிவந்த ''சஹசமே ஜீவிதம்'' என்ற படத்தில்தான். இங்கு ஆரம்பித்த இவரின் கலைப்பயணம் அடுத்தடுத்த நிலைகளுக்கு வளர்ச்சி கண்டு இன்று தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளது. சினிமா தவிர அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த பாலகிருஷ்ணா, தனது தந்தையால் நிறுவப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது கட்சிக்காக கடுமையாக உழைத்தார். தேர்தல் நேரங்களில் என்.டி.ஆர் ஆந்திரா முழுவதும் பிரச்சாரம் செய்தபோது, அவருடன் சேர்ந்து கட்சிக்காக இவரும் பிரச்சாரம் மேற்கொண்டார். இருந்தும் எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் இருந்த பாலகிருஷ்ணா, 2013ம் ஆண்டுக்கு பிறகுதான் தேர்தல் அரசியலுக்கு வந்தார். அன்று முதல் தனது சகோதரி நர புவனேஸ்வரியின் கணவரும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து பயணித்து வரும் பாலகிருஷ்ணா, இன்று வரை தெலுங்கு தேசம் காட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
தந்தை என்.டி.ஆர், தாய் பாசவதரகம், உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாலையா
ஆந்திராவில் நிலவும் அரசியல் குழப்பம்
ஆந்திராவில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 2019 ஆம் ஆண்டு இவர் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பெண்கள், சமூகம் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் மத்தியில் நற்பெயரை பெற்று வருகிறார். வாரிசு அரசியல் என்று அவர் மீது எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் ஒரு முதலமைச்சராக சிறப்பாக பங்காற்றி வருகிறார். இந்த நிலையில், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கிவருவதையொட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு "ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியை அகற்றாமல் ஓய மாட்டேன்" என்று சபதமெடுத்து மாநிலம் தழுவிய அளவில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதனை தடுத்து நிறுத்தும் விதமாக, அரசுத்துறைகளில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஜெகன்மோகன் ரெட்டி. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு, ஆந்திர திறன் மேம்பாட்டு கழகத்தில் 371 கோடி ரூபாய் கைமாறியதில் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறி சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பிறகு அவரிடம் சிஐடி போலீசார் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. தற்போது அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு
சட்டப்பேரவையை அலற விட்ட பாலையா
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, அக்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த பிரச்சினை இதோடு நின்று விடாமல் ஆந்திர மாநில சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்த தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதில் குறிப்பாக இந்துபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா, ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபுவை பார்த்து தனது படங்களில் வருவது போன்று தொடைகளை தட்டியும், மீசையை முறுக்கியும் சவால் விடும் வகையில் சைகை செய்து, ஆதாரம் இன்றி சந்திரபாபு நாயுடுவை கைது செய்து இருக்கிறீர்கள். முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டசபைக்கு வந்து இதற்கு பதிலளிக்க வேண்டும் என ஆவேசமாக கூறினார். அப்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் அம்பதி ராம்பாபு, இதுபோன்ற செயல்களை சினிமாவில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் இது சட்டசபை என்று எச்சரிக்கை விடுத்தார். அதற்கு பாலகிருஷ்ணா தில் இருந்தால் இந்த பக்கம் வா என கத்தினார். அதற்கு அமைச்சர் அம்பதி ராம்பாபுவும் உனக்கு தில் இருந்தால் இந்த பக்கம் வா என பதிலடி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து 2வது நாளாக, 22 ஆம் தேதியும் சட்டப்பேரவைக்கு வருகை தந்த தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த முறை சற்று வித்தியாசமாக கையில் விசிலோடு வருகை தந்திருந்த நந்தமூரி பாலகிருஷ்ணா, கையில் இருந்த விசிலை ஊதி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தற்போது இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் விசில் அடித்து, மீசையை முறுக்கி அலப்பறை செய்த பாலையா
விஜயகாந்தை நினைவுப்படுத்திய பாலையா
ஆக்சன் காட்சிகளுக்கு பெயர் போனது என்றால் அது ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு சினிமா தான்... தற்போது அது சினிமாவோடு மட்டும் நின்றுவிடாமல், ஆந்திர அரசியல் களத்திலும் தொடர்ந்து வருகிறது. இது மாதிரியான நிகழ்வுகள் தமிழக அரசியலிலும் ஏற்கனவே நடந்துள்ளது . தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி ஆக்சன் காட்சிகளுக்கு பெயர் போனவர் கேப்டன் விஜயகாந்த். காமராஜர், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று அடையாளம் காணப்பட்ட அரசியல் களத்தில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தும் கடந்த 2006 ஆம் ஆண்டு இணைந்தார். அதுவரை எப்போதாவது வெளிநடப்பு நிகழ்வுகளால் மட்டும் பரபரப்பாக பேசப்பட்ட சட்டப்பேரவை, முதல் முறையாக அதிரடி களமாக மாறியது என்றால் அது விஜயகாந்த்தால் மட்டும்தான். 2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் வெற்றிப்பெற்று எதிர்க்கட்சி தலைவராக சட்டப்பேரவைக்குள் நுழைந்த கேப்டன் விஜயகாந்த், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றார். அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய விஜயகாந்திற்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது. அந்த சமயம் அதிமுக உறுப்பினர்களை பார்த்து நாக்கை துருத்தி, உதடுகளை கடித்து, நரம்பு புடைக்க, ஆவேசமாக கைகளை நீட்டி தூக்கி அடுச்சுப்புடுவே பார்த்துக்கோ என்று தனது வழக்கமான பாணியில் பேசிய விஜயகாந்த்தின் இந்த செயல் அன்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முன்பு சட்டப்பேரவையில் எத்தனையோ காரசாரமான நிகழ்வுகள் நடைபெற்றிருந்தாலும், விஜயகாந்தின் இந்த செயல் அன்று மட்டுமல்ல இன்றுவரை பேசப்படும் நிகழ்வாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதே மாதிரியான ஒரு சம்பவத்தை 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ஆந்திர சட்டப்பேரவையில் நிகழ்த்தி அதிரடி காட்டியிருக்கிறார் பாலையா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவரின் இந்த செயல்பாடு பார்க்க மாஸாக தெரிந்தாலும், ஆந்திர அரசியலில் மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசியல் களத்திலும் தவிர்க்கப்பட வேண்டிய மோசமான நிகழ்வாகும்.
விஜயகாந்த் மற்றும் பாலையா