இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அரசியல்வாதியாகிறார் நாகார்ஜுனா

‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் 50-ஆவது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இதற்கு அடுத்து அவரது 51-வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் நேகர் கம்முலா இயக்குகிறார். இதில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இதில் அரசியல்வாதியாக நடிக்கவிருக்கிறார் நாகார்ஜுனா .


தனுஷ் உடன் இயக்குநர் நேகர் கம்முலா மற்றும் நாகார்ஜுன்

கிரிக்கெட் கதையை இயக்கும் ‘பண்டி சரோஜ்குமார்’

‘போர்க்களம்’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பண்டி சரோஜ்குமார். அதன் பின்னர் இவர் ஹீரோவாக நடித்து இயக்கிய தெலுங்குப் படமான ‘மாங்கல்யம்’ ஓடிடி தளத்தில் வெளியானது. இது தமிழிலும் வெளியாகியிருந்தது. இப்போது இயக்கம், நடிப்பு மட்டுமின்றி படத்தொகுப்பு, இசை மற்றும் தயாரிப்பு என களமிறங்கியிருக்கும் படம்தான் ‘பராக்ரமம்’. மதுரையை சேர்ந்த துரைராஜா என்ற இளைஞனின் வாழ்க்கையில் கிரிக்கெட், காதல், நாடக வாழ்க்கை, அரசியல் ஆகியவை ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் தாக்கத்தை பேசும் கதையாக அமைத்திருப்பதாக இந்தப் படத்தைக் குறித்து பண்டி சரோஜ்குமார் தெரிவித்திருக்கிறார். அனாமிகா, கிரிட்டி, மோகன் சேனாபதி நடிக்கும் இந்தப் படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளை அயேக்ரா ஸ்டூடியோஸ் மேற்கொள்கிறது. படப்பிடிப்பை அடுத்த மாதத்தில் ஆரம்பித்து வரும் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வரும் என்றும் கூறியிருக்கிறார் இயக்குநர்.


‘பராக்கிரமம்’ திரைப்படம் போஸ்டர்

இயக்குநரான நடிகர்

நடிகர் ‘அருவி’ மதன் இயக்கியிருக்கும் முதல் படம் ‘நூடுல்ஸ்’. ஹரீஷ் உத்தமன் நாயகனாக நடிக்க, ஷீலா ராஜ்குமார் ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படம் வரும் 8-ஆம் தேதியன்று திரைக்கு வருகிறது. எதிர்பாராவிதமாக ஒரு போலீஸ்காரரை அடித்து விடுகிறார் ஹரீஷ் உத்தமன். இதனால் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் உண்டாகும் பிரச்சினைகள் என்ன? அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை திரைப்படமாக்கியிருக்கிறார் மதன். இதில் இவர்தான் அந்த போலீஸ்காரர் வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார். இது குறித்து தெரிவித்த அவர், “தமிழ்த் திரையுலகில் பேசப்படும் ஒரு படமாக ‘நூடுல்ஸ்’ இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் ரசிகர்களை ஏமாற்றாது. இக்கதையின் மீது இருக்கும் நம்பிக்கையால்தான் நான் இதை வெளியிட முடிவு செய்தேன்” என்று தெரிவித்திருக்கிறார்.


நூடுல்ஸ் திரைப்படம் போஸ்டர்

அர்ஜுன் தாஸ் ஜோடியாகும் ஷிவாத்மிகா

‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விஷால் வெங்கட் இயக்கும் ஒரு பெயரிடப்படாத படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஜசேகர்-ஜீவிதா தம்பதியரின் இளைய மகள் ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார். கெம்ப்ரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுரேந்தர் சிகாமணி இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரி கிரீசன், விஷால் வெங்கட் ஆகியோர் கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக் மற்றும் பாலசரவணன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.


டி.இமான் மற்றும் அர்ஜுன் தாஸ் உடன் ஷிவாத்மிகா ராஜசேகர்

கானா பாடல் பாடிய சுதா ரகுநாதன்

சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் திரைப்படம் ‘போட்’. நடுக்கடலில் நடைபெறும் சம்பவங்களை திரைப்படமாக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் இடம் பெற்ற ஒரு கானா பாடலுக்கு பிரபல கர்நாடக இசைப்பாடகியான சுதா ரகுநாதன் பின்னணி பாடியிருக்கிறார். இது கானா மற்றும் கர்நாடக இசையை இணைத்து ஒரு அற்புதக் கலவையாக இசையமைக்கப்பட்டிருக்கும் ஒரு காதல் பாடலாகும்.


பாடகி சுதா ரகுநாதன் மற்றும் ‘போட்’ திரைப்படம் போஸ்டர்

Updated On 12 Sept 2023 12:22 AM IST
ராணி

ராணி

Next Story