(08.06.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
ஷோபா மறைந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனால், ஷோபாவின் வீட்டில் இன்னும் சோகம் குறையவில்லை. ஷோபாவின் அம்மா பிரேமா எப்பொழுதும் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார். ஷோபாவின் படத்தைப் பார்த்துவிட்டாலோ, யாராவது ஷோபாவின் பேச்சை எடுத்தாலோ, உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு வந்தாலோ. "என் மகள் போய்விட்டாளே! எனது ஜீவன் போய் விட்டதே! எனது சொத்து போய் விட்டதே!" என்று அழுகிறார்!
இந்த நிலையில், பிரேமாவை சந்தித்து, "உங்கள் மனக்கவலை குறையவும், ரசிகர்கள் ஷோபாவைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வசதியாகவும், "என் மகள் ஷோபா" என்ற தலைப்பில் "ராணி"யில் தொடர்ந்து எழுதும் படி கேட்டோம். பிரேமாவும், அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
பல நாள் சந்திப்புக்குப் பிறகு, கண்ணீரும் கம்பலையுமாக ஷோபாவைப் பற்றி சொல்லத் தொடங்கினார், பிரேமா!. என் மகள் ஷோபா, 1961-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி சென்னையில் பிறந்தாள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள "ஸ்ரீராமா கிளினிக்"கில் அவளை பெற்று எடுத்தேன். நாங்கள் அப்போது, ராயப்பேட்டை அய்யம் பெருமாள் முதலி தெருவில் குடியிருந்தோம். எங்கள் குடும்பம் மிக உயர்ந்த நிலையில் இல்லா விட்டாலும், வசதியாகத்தான் இருந்தது.
'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் வள்ளியாக வரும் ஷோபா
அப்பா மேனன்
ஷோபாவின் அப்பா கே.பி. பத்மநாப மேனன், மவுண்ட்ரோடு உட்ஸ் சாலையில் "ராஜ் இன்டஸ்ரீஸ் " என்ற கடையை நடத்தினார். இதன் மூலம், அசோக் லேலண்ட் கம்பெனிக்கு கார் உதிரிப் பொருட்கள் சப்ளை செய்தார்.
என் கதை
இந்த நேரத்தில் என்னைப் பற்றியும் கொஞ்சம் கூறியாக வேண்டும். நான் ஒரு சினிமா நடிகையாக இருந்தவள். சிறு வயது முதலே சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தேன். எனக்கு 17 வயது நடந்து கொண்டு இருந்த போது, கே.பி. பத்மநாப மேனனுடன் சந்திப்பு ஏற்பட்டது. அப்போது அவர், கோவையில் கார் உதிரிப் பொருட்கள் சப்ளை செய்யும் தொழிலை, பெரிய அளவில் நடத்திக் கொண்டு இருந்தார்.
2-ம் தாரம்
மேனன் ஏற்கனவே திருமணம் ஆனவர். மனைவியும் இரண்டு மகனும், இரண்டு மகளும் இருந்தார்கள். இந்த நிலையில், அவர் என்னை விரும்பினார். நானும் அவரை விரும்பினேன். நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தபோது, எனது வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. "வாழ்ந்தால் மேனனுடன் தான் வாழ்வேன்" என்று, நான் அவருக்கு மனைவி ஆனேன்.
திருமணத்துக்குப் பிறகு மேனன் எனக்கு துரோகம் செய்யவில்லை. முதல் மனைவி, குழந்தைகளையும் அவர் கைவிடவில்லை. என்னிடம் எவ்வளவு அன்பு வைத்து இருந்தாரோ, அதே அளவு அன்பை முதல் மனைவி மக்களிடம் செலுத்தவும் நான் சம்மதித்தேன்.
குப்பம்மாவாக 'பசி' திரைப்படத்தில்
தகராறு இல்லை
அதனால், அவருடைய முதல் மனைவிக்கும் எனக்கும் ஒருபோதும் மனத்தாங்கல் ஏற்பட்டது இல்லை!. எங்கள் திருமணத்துக்குப் பிறகு 3 ஆண்டு கழித்து ஷோபா பிறந்தாள். ஷோபா, குழந்தைப் பருவத்தில் "கொழு கொழு" என்று இருப்பாள். அவளை மார்பிலும் தோளிலும் தூக்கி சுமந்து வளர்த்தவன், என் தம்பி ஜோதி.
தாலாட்டு
ஷோபாவை தொட்டிலில் போட்டு, தாலாட்டி தூங்க வைப்பதும் ஜோதிதான்.
"பூவாகி, கனிந்த மரம் காயாகி ஒன்று..." என்ற பாட்டை ஜோதி அடிக்கடி பாடுவான்!
ஷோபா அப்படியே தூங்கிப் போய்விடுவாள். ஒருநாள் தாலாட்டிக் கொண்டு இருந்தபோது, "படைத்தானே... படைத்தானே! மனிதனை ஆண்டவன் படைத்தானே!" என்ற பாட்டை சோகமாக ஜோதி பாடினான். பாட்டைக் கேட்டதும், ஷோபா "வீல்" என்று கத்தி அழுதுவிட்டாள். அந்தப் பாட்டை மாற்றி "பூவாகி.... காயாகி என்ற பாட்டை பாடியபிறகே, தூங்கினாள். ஷோபாவுக்கு எப்பொழுதும் சோகப் பாட்டு என்றால் பிடிக்காது! சோகமான பாட்டைக் கேட்டுவிட்டால், அவள் முகம் மாறிவிடும். அழுது விடுவாள். என் மகள் கடைசிவரை அப்படித்தான் இருந்தாள்.
குழந்தை ஷோபா, "பிங்க்" (ரோஜா) நிறத்தில் அழகாக இருப்பாள்! அதனால் எல்லோரும், அவளை "பிங்கி... பிங்கி" என்றுதான் அழைப்போம்!
இந்துமதியாக "அழியாத கோலங்கள்" திரைப்படத்தில்
வளர்ச்சி
சிறுவயதில், ஷோபாவின் வளர்ச்சி மிகவும் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. அவள் எப்பொழுது தவழ்ந்தால், எப்பொழுது நடந்தாள் என்று சொல்ல முடியாதபடி, 8-வது மாதமே அவள் "கிடுகிடு" என்று நடந்து ஓடத் தொடங்கினாள். 8-ம் மாதமே அவளுக்கு பல் முளைத்தது. ஒரு வயதுக்குள் அவள் நன்றாகப் பேசவும் தொடங்கினாள். யார் பார்த்தாலும், சிறிது நேரமாவது ஷோபாவை தூக்கி வைத்துக் கொள்ளுவார்கள். எப்பொழுதும் துருதுரு என்று இருப்பாள். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். ஷோபா பிற்காலத்தில் "ஊர்வசி" ஆவாள் என்பது அவள் குழந்தையாக இருக்கும்பொழுதே எனக்குத் தெரியும்.
எப்படி! என்பதை அடுத்த பதிவில் காண்போம். (தொடரும்).