இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பல வெற்றி படங்கள், பல விருதுகள் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்தவர் இயக்குநர் விக்ரமன். அவர் இயக்கத்தில் வெளியான சூரியவம்சம், பூவே உனக்காக, வானத்தைப்போல உள்ளிட்ட படங்கள் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தது என்றுதான் சொல்ல வேண்டும். விக்ரமன் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் 200 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை என திரையரங்குகளில் மக்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், அவருடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் சூரிய கதிர் காக்கல்லார் மற்றும் கே.கார்த்திகேயன் இயக்கியுள்ள ஹிட் லிஸ்ட் படத்தில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகர் முனீஸ்காந்த், நடிகர் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் அயலி படத்தில் பட்டைய கிளப்பிய நடிகை அபி நட்சத்திரா, பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளனர். ஹிட் லிஸ்ட் படம் குறித்தும், பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் நடிகர் விஜய் கனிஷ்கா.

ஹிட் லிஸ்ட் படம் உருவானது எப்படி?

சிறு வயதிலிருந்தே கே.எஸ். ரவிக்குமார் சார் மற்றும் எங்கள் குடும்பம் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் எதேச்சையாக அப்பாவிடம், பையன் என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு கே.எஸ். ரவிக்குமார் சார் கேட்டாங்க. அப்போது அப்பா பையனுக்கு சினிமால ஆர்வம் இருக்குன்னு சொன்னாங்க. உடனே கே.எஸ்.ரவிக்குமார் சார் நான் என்னோட தயாரிப்பில் இரண்டு படங்கள் பண்ண போறேன், ஒன்னு கூகுள் குட்டப்பா, மற்றொன்று ஃப்ரீலான்ஸர் படம். அதனால விஜய் கனிஷ்காவ நானே அறிமுக நடிகராக்குறேன்னு சொல்லிருந்தாங்க. அதே மாதிரி படத்தின் வேலைகள் நல்லபடி தொடங்கி இந்த மாதம் (மே 31) வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.

இயக்குநர் மகன் நடிகரானதற்கு காரணம்?

பள்ளிப் பருவத்திலிருந்து பார்வையாளர்கள் முன்னாள் நடிக்க பிடிக்கும், மேடை நாடகங்கள் மீதும் ஆர்வம் இருந்தது. நிறைய மேடை நாடகங்கள் பண்ணிருக்கேன். டைரக்ட் பண்ணவும் ஆர்வம் இருக்கு. அப்பப்போ சில கதைகள் தோணும். எழுதி வெச்சிருக்கேன். இன்ஜினியரிங் படிக்கும்போது எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என சொன்னேன். எதுவாக இருந்தாலும் படித்து முடித்த பிறகு செய்துகொள் என்று அப்பா ஆதரவாக சொன்னார்கள்.

வருங்காலத்தில் உங்களை ஒரு இயக்குநராக பார்க்க வாய்ப்பு இருக்கா?

கடவுள் அருளால் நடந்தால் நல்லா இருக்கும். கண்டிப்பா வாய்ப்பு இருந்தா பண்ணலாம். ஒரு படத்தை இயக்குவது எளிதான விஷயம் இல்லை. அதற்கு நிறைய பொறுமையும், அனுபவமும் வேண்டும். ஹீரோவாக கூட நடித்து விடலாம். இயக்குநராவது ரொம்ப கடினம்.


தன் குருநாதரும், இயக்குநருமான கே.எஸ்.ரவிக்குமாருடன் நடிகர் விஜய் கனிஷ்கா

நடிக்க போறேன்னு சொன்னதும் வந்த விமர்சனங்களை எப்படி பார்க்குறீங்க?

கண்டிப்பாக விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும், அதை பொருட்படுத்தக்கூடாது. என்னை நான் ஒரு பணியாளராகத்தான் பார்க்கிறேன். என்னுடைய பாஸ் கே.எஸ். ரவிக்குமார் சார். அவருக்கு விசுவாசமா இருக்கணும்னு நினைக்கிறேன். என்னோட வேலையை சரியாக செய்யணும். ஸ்பாட்டுக்கு போனா யாராக இருந்தாலும் நடிகர்தான். நம்ம வேலைய நம்ம சரியா பண்ணாதான் அதற்கான மரியாதை கிடைக்கும். அங்க போய் எதுவும் சொதப்பிட கூடாதுன்னு இருந்தேன்.

நடிகர் சரத்குமார், கவுதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இந்த படத்திற்குள் வந்தது எப்படி?

நடிகர் சரத்குமார் சார் கிட்ட கே.எஸ். ரவிக்குமார் சார் கேட்டபோது அவர் எதுவும் யோசிக்காம சரின்னு சொல்லிட்டாரு. சரத்குமார் சார் இந்த படத்திற்காக நிறைய ஊக்கமளித்தார். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ் மேனன் இருவரிடமும் நானும் இயக்குநர் கே.கார்த்திகேயனும் சேர்ந்து சென்றுதான் கதை சொன்னோம். இருவரும் கதை கேட்டு ஓகே சொல்லிடாங்க.

குடும்பம் சார்ந்த படங்களதான் அப்பா பண்ணிருக்காங்க.. நீங்க அதிரடி படம் தேர்வு செய்ததற்கு காரணம்?

இப்போ ட்ரெண்டிங் என்ன இருக்குன்னு பார்த்தோம். பார்வையாளர்கள் இப்போ இந்த மாதிரியான படங்களைத்தான் விரும்புறாங்க. இந்த படம் அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும். ஒரு நல்ல பெர்ஃபாமராக இந்த படத்தில் நான் தெரிவேன். ஹீரோவாக இருப்பதை தாண்டி ஒரு நல்ல பெர்ஃபாமராக இருப்பதுதான் முக்கியம்.

சண்டை காட்சிகள் நிறைந்த படமாக இருக்கிறதே... யார் பயிற்சி அளித்தார்கள்?

பவர் பாண்டியன் மாஸ்டரிடம் நான் பல வருடங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்தேன். எனக்கு எல்லா விதமான ஸ்டண்ட் ட்ரெய்னிங்கும் கொடுத்தார். இந்த படம் தொடங்குவதற்கு முன்னால் 4 மாதங்களுக்கு சிறப்பு பயிற்சி மீண்டும் செய்தேன். முக்கியமா இந்த படத்தில் நம்ம அடிக்கிறத விட, அடி வாங்குறதுதான் அதிகம். தப்பா ஏதாவது பண்ணி அடி வாங்கக்கூடாது. அதனால் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்னு பயிற்சி எடுத்துக்கிட்டேன்.


தந்தையும், இயக்குநருமான விக்ரமனுடன் நடிகர் விஜய் கனிஷ்கா

இந்த படத்தின் இயக்குநர்கள் பற்றி சொல்லுங்க...

இயக்குநர்கள் இரண்டு பேரும் எனக்கு நல்ல நண்பர்கள்தான். ஷூட்டிங் ஸ்பாட் அப்படித்தான் இருக்கும். எல்லாம் டீம் ஒர்க்தான்.. அவர்கள் எதாவது கருத்துகளை கேப்பாங்க... என்னோட கருத்தை சொல்ல எனக்கு முழு உரிமை கொடுத்தாங்க. டிஸ்கஷன் டைம்ல கூட எல்லாரும் சேர்ந்து ஒர்க் பண்ணிருக்கோம். எனக்கான ஃப்ரீடத்த இயக்குநர்கள் கொடுத்தாங்க. சில டயலாக் இப்படி மாத்திக்கலாம்னு சொல்லும்போதும் சரின்னு சொல்லிருக்காங்க.

ஹீரோவாக மட்டும்தான் நடிப்பீங்களா? இல்ல எந்த கதாபாத்திரம் வேண்டுமானாலும் பண்ணுவீங்களா?

முதல் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிவிட்டேன். இந்த படம் மே 31 ரிலீஸ் ஆகுது. மக்கள் ஆதரவு எப்படி இருக்குன்னு பாக்கணும். என்னோட மனசுல ஹீரோவாக மட்டும்தான் பண்ணனும்னு இருக்கு. 6 வருடமா இதுக்காக மட்டும்தான் காத்திருந்தேன். ஹீரோவாக மட்டும் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

ஹீரோவாகவில்லை என்றால் வேறு எந்த துறையை தேர்வு செய்திருப்பீர்கள்?

ஹீரோவாக முயற்சி செய்துகொண்டே இருந்திருப்பேன். ரொம்ப காலமா இதற்காக மட்டும்தான் வெயிட் பண்ணேன். இன்னும் ஒரு 5 வருடங்களுக்கு கூட காத்திருந்திருப்பேன். உதாரணத்திற்கு விஜய் சேதுபதி சார், சிவகார்த்திகேயன் சார் அவங்க கனவை நினைவாக்கிட்டாங்க. அந்த மாதிரி நானும் முயற்சி செய்திருப்பேன்.

படத்திற்கு நிறைய ப்ரோமோஷன் பண்ணிருக்கீங்க... ரஜினி சார், விஜய் சார எல்லாம் மீட் பண்ணப்போ என்ன சொன்னாங்க?

எல்லாருமே டீஸர் & ட்ரெய்லர் பார்த்துவிட்டு ரொம்ப அப்ரிஷியேட் பண்ணாங்க. இயக்குநர்கள் நல்லா பண்ணிருக்காங்கன்னு சொன்னாங்க. என்னோட ஒர்க் பார்த்துட்டு நல்ல ஃப்யூச்சர் இருக்குனு சொன்னாங்க. விஜய் சார், அப்பாவ 10 செகண்டுக்கு கட்டி பிடிச்சுட்டு விடவே இல்லை. உங்க பையனுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு சொன்னாரு.


நடிகர் விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்துகொண்டபோது

சரத்குமார் சார்கூட நடித்த அனுபவம், அவரை பற்றி ஏதாவது சொல்லுங்க?

சரத்குமார் சார் சக நடிகர் அப்படிங்கறது விட, ஒரு நல்ல நண்பராகவும், ஒரு மெண்டராகவும் இருந்தாரு. முதல் நாள் ஷூட் பண்ணும்போது நல்லா நடிக்கிற, உனக்குள்ள ஒரு ஸ்பார்க் இருக்குன்னு சொன்னாரு. விஜய் சாருக்கு ஆரம்ப காலகட்டத்தில் விஜயகாந்த் சார் எப்படியோ அப்படித்தான் எனக்கு சரத்குமார் சாருன்னு நான் தைரியமா சொல்வேன்.

அப்பா இயக்கத்தில் நீங்க நடிக்க வாய்ப்பு இருக்கா?

கண்டிப்பாக நடிப்பேன். நீங்க எல்லாம்தான் ஒரு ஆடியன்ஸா அப்பா கிட்ட கேட்கணும். உங்க பையன வைத்து படம் பண்ணுவீங்களான்னு.

நீங்க ஹீரோ ஆனதுல அப்பாவுக்கும், அம்மாவுக்கும் எப்படி இருக்கு?

நான் ஹீரோ என்பதைவிட நல்ல ஒழுக்கத்தோடு இருக்கேன்னு நிறைய பேரு சொன்னது அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். அதனாலேயே அப்பா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அம்மா இப்போ நல்லா இருக்காங்க. ஹெல்த் கொஞ்சம் பெட்டரா இருக்கு. அவங்களும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. எப்ப பையனோட படத்தை தியேட்டர்ல பார்க்க போறோம் என்கிற எதிர்பார்ப்புல இருக்காங்க.

இரண்டு பெரிய இயக்குநர்கள் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. சமுத்திரக்கனி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் பற்றி சொல்லுங்க...

சமுத்திரக்கனி சார் கூட ஒரு நாள்தான் ஷூட் இருந்தது. பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. கௌதம் சார் கூட நிறைய காட்சிகள், நிறைய நாட்கள் ஒர்க் பண்ண முடிந்தது. அவரு என்னோட வேலையை பார்த்துவிட்டு ரொம்ப நல்லா பண்றீங்க, படம் வேலை முடிஞ்சதும் ஒரு நாள் என்னோட ஆஃபீஸ் வாங்க, காஃபியோட பேசலாம்னு சொன்னாரு.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சார் பத்தி சொல்லுங்க..

கே.எஸ். ரவிக்குமார் சார் எனக்கு ஒரு காட்ஃபாதர் மாதிரிதான். இந்த படம் வேறு ஒரு இயக்குநர் இயக்க வேண்டி இருந்தது. படத்தின் பூஜைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவரு வேணாம்னு விட்டுட்டாரு. அப்போ கே.எஸ்.ரவிக்குமார் சார் அதை பத்திலாம் எதுவும் யோசிக்காம நான்தான் உன்ன ஹீரோவாக அறிமுகம் பண்ணுவேன்னு பண்ணாரு. அவரு இல்லைன்னா இன்னைக்கு இந்த படம் இல்லை. ஹீரோவாக நான் வெற்றி அடைவதை விட ஒரு தயாரிப்பாளராக கே.எஸ். ரவிக்குமார் சார் ஜெயிக்கணும்.

Updated On 3 Jun 2024 6:11 PM GMT
ராணி

ராணி

Next Story