இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

04-05-1975 தேதியிட்ட 'ராணி' இதழில் வெளியானது

`என் இசை மட்டும் அல்ல. என் வாழ்க்கையெல்லாம் அந்த முருகனுக்கே' என்று சதா சர்வகாலமும் முருகனையே தியானித்துக் கொண்டு இருக்கிறார், திருமதி கே.பி.சுந்தராம்பாள். அவர் எங்கே கச்சேரி செய்யச் சென்றாலும் அங்கேயெல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது இனிய இசையைக் கேட்கக் கூடுகிறார்கள். ஆனால், வீட்டில் தவமுனி போல சுந்தராம்பாள் தனிமையாக வாழுகிறார். எந்நேரமும் முருகா! முருகா! என்று வாய்விட்டு கூப்பிட்டுக்கொண்டு தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறார்.


68 வயது

கே.பி.சுந்தராம்மாளுக்கு இப்பொழுது 68 வயது ஆகிறது. ஆனால், அவரது குரல் இன்னும் பதினெட்டு வயது போல இளமையாக இனிமையாக இருக்கிறது. `கணீர்' என்ற வெண்கலக் குரலில் பாடத் தொடங்கினார் என்றால், ரசிகர்கள் மெய்மறந்து கேட்கிறார்கள்! திரைப் படங்களில் அவரது பாடல் இடம்பெற்றால் அதுவே அந்தப் படத்துக்கு ஒரு வெற்றியாக ஆகிவிடுகிறது. `சிறந்த பாடகி யார் என்று என்னிடம் கேட்டால், கே.பி.சுந்தராம்பாள் என்றுதான் சொல்லுவேன்' என்று அறிஞர் அண்ணா ஒருமுறை கூறினார். அந்த இன உணர்ச்சி மற்றவர்களிடம் இல்லாததால், கே.பி.சுந்தராம்பாளின் இசைப் புகழ் வெளிநாடுகளுக்குப் பரவாமல் அந்த இசை ஞானி தனது இசைத் தமிழ் செல்வத்தை எட்டுத் திக்கிலும் சென்று பரப்ப முடியாமல். குடத்துக்குள் வைத்த குத்துவிளக்கு போல தமிழ்நாட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். நியாயமாகக் கிடைக்க வேண்டிய புகழ் கூடக் கிடைக்கவில்லை. `முருகா' என்று வீட்டோடு இருக்கும் கே.பி.சுந்தராம்பாளைக் காண `ராணி' நிருபர் சென்றார்.


விளம்பரம் விரும்பாதவர்

விளம்பரத்தின் மீது விருப்பம் இல்லாத கே.பி.சுந்தராம்பாள், இதுவரை எந்தப் பத்திரிகைக்கும் பேட்டி அளித்தது இல்லை. நல்ல பெண்மணிகளை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவது மற்ற பெண்மணிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நிருபர் வற்புறுத்திக் கூறினார். அதன்பின் பேட்டி அளிக்க சுந்தராம்பாள் சம்மதித்தார். அவரது வீட்டின் முன் அறையில் காலஞ்சென்ற அவருடைய கணவர் திரு எஸ்.ஜி.கிட்டப்பா அவர்களின் படம் மாலை சூடப்பட்டு மாட்டப்பட்டு இருந்தது. மற்றொருபுறம் அவருடைய பாட்டியின் படம் இருந்தது. அவர் 110 வயது வரை வாழ்ந்துவிட்டு காலமானாராம். மற்றொருபுறம் விநாயகர் படம், முருகனின் அறுபடை வீடு படம் ஒன்றும் பழநி ஆண்டவர் படம் ஒன்றும் மாலைகளுடன் காட்சி அளித்தன. அவருடைய வீடு மிகவும் எளிமையாக அமைதியாக இருந்தது! சுந்தராம்பாளின் 95 வயது தாயார், அவருடைய சொந்த ஊரான கொடுமுடியில் தன் மகனுடன் [சுந்தராம்பாளின் தம்பி ] வசித்து வருகிறார்.

கண்ணீர்

‘இங்கே சென்னையில் உங்களுடன் யாரும் இல்லையா?’ என்று `ராணி' நிருபர் கேட்டார். ‘என் மாமா இருந்தார். அவர் சில மாதத்துக்கு முன்பு காலமாகி விட்டார். என்னை உருவாக்கியதே அவர்தான். தாய்ப்பசுவை இழந்த கன்றைப் போல, என் மாமாவை இழந்து நான் அனாதை ஆகிவிட்டேன்’ என்று கண்ணீர் வடித்தார் சுந்தராம்பாள்.

நிருபர்: நீங்கள் எத்தனை வயதிலிருந்து பாடுகிறீர்கள்? உங்கள் குரு யார்?

சுந்தராம்பாள்: நான் என்னுடைய 6-வது வயதிலிருந்து பாடிக்கொண்டு இருக்கிறேன். என் குரு, முருகன்தான். எனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாமே முருகன்தான்! என் தாயார் முருக பக்தி உடையவர். அவர் கருவில் வளர்ந்த எனக்கு அவர் [முருகன்] மீது பக்தி ஏற்பட்டுவிட்டது.

நிருபர்: உங்களுக்கு முருகன் மீது அப்படி அளவற்ற பக்தி ஏற்பட்டதற்கு என்ன காரணம்?

முருகன் வந்தான்

சுந்த: ஒரு காரணமா? நிறைய காரணங்கள் உள்ளன! ஒரு சம்பவத்தை கூறுகிறேன். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, நான் கடலூரில் கோவலன் நாடகத்தில் நடித்துக்கொண்டு இருந்தபொழுது திடீர் என்று என் தொண்டை அடைத்துக் கொண்டது. பாட முடியவில்லை. பின்பு பேசவும் முடியவில்லை. நாடகத்தை அப்படியே நிறுத்திவிட்டு, நான் சென்னைக்கு வந்துவிட்டேன். யார் எது கேட்டாலும் எழுதியே பதில் சொல்லி வந்தேன். அப்பொழுது சென்னையில் தொண்டை வைத்திய நிபுணர் ஆக இருந்த திரு.சங்கரநாராயண பிள்ளையிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படி எல்லோரும் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். முருகனையே நம்பி இருந்தேன். ஒருநாள் விடியற்காலை 3 மணியளவில் ஒரு சிறுவன் என் முன்னே தோன்றினார் `நான் பழனியில் இருந்து வந்திருக்கிறேன். வாயைத்திற' என்று கூறினான். நான் வாயைத்திறக்க, தன் வேலினால் என் தொண்டையைத் தொட்டு, ‘இப்பொழுது பேசு’ என்றான். எனக்கு `முருகா' என்றுதான் பேசவந்தது. `பழனிக்கு வந்து தேன் அபிஷேகம் செய்’ என்று கூறிவிட்டு மறைந்து விட்டான். அதன்பின்பு சென்னையில் ஒரு நாடகமும், கோயம்புத்தூரில் ஒரு நாடகமும் நடத்திவிட்டு நான் நேராக பழனிக்குச் சென்று 16 டின் நிறைய தேன் வாங்கி அபிஷேகம் செய்தேன். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் என் வாழ்வில் நடந்துள்ளன. அதிலிருந்து முருகன் மீது தீவிர பக்தி ஏற்பட்டுவிட்டது. `முருகனைத் தவிர வேறு தெய்வங்களை வணங்குவது இல்லையா?’ என்று கேட்டதற்கு, `அப்படி அல்ல. எல்லா தெய்வங்களையும் வணங்குவேன். திருப்பதி, குருவாயூருக்கு அடிக்கடி சென்று வருகிறேன். நாகூர் ஆண்டவனைக் கூட வணங்குவது உண்டு. கிறிஸ்தவ கோவிலுக்கு போவேன். அங்காள பரமேசுவரி என் குலதெய்வம்! முருகனும் மகமாயியும் என் கண் கண்ட தெய்வங்கள்! மற்ற எல்லோரையும் `கடவுள்' என்று எண்ணி வணங்குவேன். முருகன் மீது அளவிலா பக்தி அவ்வளவுதான். நான் எந்தக் கச்சேரியிலும் முதலில் விநாயகர் மீது பாடலை தொடங்கி பின்பு முருகன் மீது பாடுவேன். தியாகராஜ கீர்த்தனைகளும் பாடுவேன். மீரா பஜனும் பாடுவேன்’ என்றார் சுந்தராம்பாள்.

மருந்து இல்லை

நிருபர்: உங்கள் குரல் இந்த வயதிலும் `கணீர்' என்று இருக்கிறதே... அதற்காக மருந்து எதுவும் சாப்பிடுகிறீர்களா?

சுந்த: எனக்கு இப்பொழுது 68 வயது ஆகிறது. நான் கணீர் என்று பாடுவது முருகன் அருள். தினமும் பச்சை தண்ணீரில்தான் குளிக்கிறேன். பச்சை தண்ணீர்தான் குடிக்கிறேன். இருவேளை உணவு, இரு வேளை காபிதான். பழைய சோறு, கம்பஞ்சோறு, களி முதலியவை எனக்கு பிடித்த உணவு. நான் டாக்டரிடம் போனது இல்லை. எனக்கு முருகன்தான் டாக்டர்! எனக்கு இயற்கை வைத்தியம்தான். கச்சேரிக்கு செல்லும் பொழுதுகூட குளிர்ந்த தண்ணீர் குடித்துவிட்டுச் செல்லுவேன். மாத்திரை, கஷாயம் சாப்பிடுவது இல்லை. என் குரல் `கணீர்' என்று இருப்பது முருகனின் அருள் அவ்வளவுதான். இந்த வயதிலும் நான் வேகமாக ஓடுவேன்! வீட்டு வேலைகள் செய்வேன். நானே சமையலும் செய்வேன்.

நிருபர்: தனித்திருந்து வாழும் என்ற பாட்டில் `என்ன என்ன' என்று அடுக்கிக்கொண்டு போகிறீர்களே... அது உங்கள் சொந்த கற்பனையா?

சுந்த: ஆமாம். பாட்டு அமைத்தவர் என்ன என்பதை ஒரே ஒருமுறை பாடும்படிதான் அமைத்தார். நான் அப்படி மேடையில் கச்சேரி செய்யும்பொழுது ‘என்ன’ என்று ஓரே ஒருமுறை பாடியதும் மக்கள் ரசிக்கவில்லை. அதையே `என்ன, என்ன, என்ன' என்று 3 முறை 4 முறை பின்பு பலமுறை பாடவும் ரசிகர்கள் ரசித்து கைதட்டி, நிரம்பப் பாராட்டினார்கள். அநேகம் பேருக்கு ஆவேசம்கூட வந்துவிட்டது! அதன்பின் தொடர்ந்து கச்சேரிகளில் அப்படியே பாடி வருகிறேன்.

நிருபர்: நீங்களே இசை அமைத்துப் பாடுவீர்களா?

சுந்த: மற்றவர் இசை அமைத்தும் நான் பாடுவேன். நானே இசை அமைத்தும் பாடுவேன். சமீபத்தில் அம்பாளின் மீது இசை அமைத்து பாடி இருக்கிறேன். நானே, எதுகை, மோனை அமைத்து பாடியது கேட்டு சில பெரியவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

வேறுபாடு என்ன?

நிருபர்: அந்தக் கால சினிமா இசைக்கும் இந்தக் கால சினிமா இசைக்கும் வேறுபாடு என்ன?

சுந்த: அந்தக்கால இசையிலும் இரு பொருள்பட பாடல்கள் உண்டு. உதாரணமாக, தும்பிக்கையான் என்றால் `மூலிகைகள்' என்ற பொருளும் உண்டு, விநாயகர் என்ற பொருளும் உண்டு. ஆனால் இந்தக் காலத்திலும் இரு பொருள்கள்பட பாடல்கள் உள்ளன. அவற்றிற்கு அர்த்தம் சொல்லப் போனால்... என்று சிரித்தார்.

நிருபர்: நீங்கள் எத்தனை படங்களின் நடித்து இருக்கிறீர்கள்?

சுந்த: நான் சுமார் 11 படங்களில் நடித்து இருக்கிறேன். எல்லாமே பக்தி வேடந்தான்! என் கணவர் இருக்கிறவரை அவருடன் நாடகங்களில் நடித்து வந்தேன். பட்டிதொட்டி எல்லாம் எனக்கு மாபெரும் புகழை தேடித் தந்தது அவ்வையார்தான்! இப்பவும் நான் வெளியூர் சென்றால் மக்கள் என்னை அவ்வையாராக நினைத்து மதித்து வணங்குகிறார்கள்! நானும் சென்ற இடங்களில் எல்லாம் அவர்களுக்கு விபூதி பூசி ஆசிர்வதிக்கிறேன். நான் சென்ற இடம் எல்லாம் மக்கள் என்னை அன்புடன் வரவேற்கிறார்கள். அவர்களுடைய அளவற்ற அன்பை என்னால் மறக்கவே முடியாது!

Updated On 8 Aug 2023 4:34 AM GMT
ராணி

ராணி

Next Story