இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

“அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது”. “புலிக்கு பிறந்தது பூனையாகுமா?” என்ற பழமொழிகளை பலருக்கும் பொருத்தி பார்த்து கூறுவோம். அந்த வகையில் எந்த இடத்திலும் தன் தந்தையை போன்று துணிச்சல் மிக்க பெண்ணாக, மனதில் பட்டத்தை பட்டென பேசிவிடும் தைரிய லட்சுமியாக, நடிப்பிலும் எந்த குறையும் சொல்லிவிட முடியாதபடி நேர்த்தியான, எந்த பாத்திரத்திற்கும் பொருந்திப்போகும்படியான நடிகையாக வலம் வரக்கூடியவர் வரலட்சுமி சரத்குமார். அம்மாவின் அழகு.... அப்பாவின் கம்பீரம்… என இரண்டையும் ஒருங்கே பெற்றவரான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ‘போடா போடி' என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமான இவர், நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல் தடாலடியாக வில்லி, குணச்சித்திரம், காவல்துறை அதிகாரி என எப்பேர்ப்பட்ட கடினமான பாத்திரப்படைப்புகளாக இருந்தாலும் அதிலும் தனது தனித்துவமான முத்திரையை பதித்து பாராட்டு பெற்று வருகிறார். பிற வாரிசு நடிகைகள் போன்று சரத்குமார் மகள் என்று அலட்டிக் கொள்வதோ , சீன் போடுவதோ, ஓவராக கண்டிஷன் போட்டு இயக்குநரை கடுப்பேற்றுவதோ இல்லாமல் தைரியமான பேச்சு மற்றும் இயல்பான நடவடிக்கைகளால் எப்போதும் பிரபலமாக அறியப்படும் இவர் தற்போது 40வயதை நெருங்கிவிட்ட நிலையில் நிக்கோலஸ் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் அவருடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு தனது திருமணம் குறித்து அறிவித்துள்ள நிகழ்வு திரையுலகில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

வரலட்சுமி சரத்குமாரின் ஆரம்பகாலம்


தந்தை சரத்குமாருடன் நடிகை வரலட்சுமி

கம்பீரமான குரலில் மனதில் பட்டதை பட்டெனப் பேசும் வரலட்சுமி சரத்குமார், 1985 -ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி நடிகர் சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவியான சாயா தேவி தம்பதியருக்கு மூத்த மகளாக சென்னையில் பிறந்தார். இவருக்கு பூஜா சரத்குமார் என்ற ஒரு தங்கையும் உள்ளார். சரத்குமாருக்கும், சாயா தேவிக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் 1990-ஆம் ஆண்டு இருவரும் பிரிய தாய், தந்தை இருவரிடமும் மாறி மாறி வளர்ந்துள்ளார். இவரது மாற்றான் தாய்தான் ராதிகா சரத்குமார். இவருக்கு ரேயான் ஹார்டி ,ராகுல் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் மாற்றான் தாய் பிள்ளைகளாக இருந்தாலும் இருவரிடமும் எந்தவித பாகுபாடுமின்றி வரலட்சுமி மிகுந்த அன்போடு பழகி வருகிறார். தனது பள்ளி படிப்பை சென்னை அடையாறில் உள்ள செயின்ட் மைக்கேல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முடித்தவர், பிறகு சென்னை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்.சி மைக்ரோபயாலஜி பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். இதன் பிறகு அவரது அம்மா சாயா தேவி செய்துவந்த தொழிலை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று, ஸ்காட்லாண்டில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றதுடன், ஒருவருடம் தனது அம்மாவுடன் சேர்ந்து பிசினஸ் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நேரம், வரலட்சுமியை தேடி சினிமா வாய்ப்புகள் வர, அதற்கு முன்னதாக அதுதொடர்பான பயிற்சிகள் ஏதாவது எடுத்துக் கொண்டால்தான் சரியாக இருக்கும் என்று தந்தை சரத்குமாரின் அனுமதி பெற்று, மும்பையில் பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடத்தி வந்த நடிப்பு பள்ளியில் சேர்ந்து 4 மாத காலம் நடிப்பு பயிற்சி பெற்றார்.

வரலட்சுமியின் முதல் திரைப் பிரவேசம்


'போடா போடி' திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் 'சல்சா' நடனம் ஆடும் வரலட்சுமி

ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக அம்மாவுக்கு துணையாக பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்த வரலட்சுமியை நோக்கி நிறைய திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி அவரது 18-வது வயதில் அதாவது 2003-ஆம் ஆண்டு ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் வரலட்சுமிதான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தந்தை சரத்குமார் இப்போதைக்கு சினிமா வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்து என்று கூறியதால் அந்த வாய்ப்பு கைவிட்டுப்போய் பிறகு அந்த வேடத்தில் ஜெனிலியா நடிக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்ல இந்த வாய்ப்பிற்கு பிறகு 2004-ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேலின் 'காதல்' மற்றும் 2008-ஆம் ஆண்டு வெங்கட்பிரபுவின் 'சரோஜா' ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்து அவற்றையும் தவறவிட்டாராம் வரலட்சுமி. இருப்பினும் இப்படி தொடர் வாய்ப்புகள் வருவதை பார்த்து எப்படியோ தந்தை சரத்குமாரிடம் பேசி சம்மதம் வாங்கி நடிப்பு தொடர்பான பயிற்சியையும் முடித்து திரைத்துறைக்குள் நுழைந்துள்ளார் இவர். அந்த வகையில் 'சல்சா' எனும் புகழ்பெற்ற நடனத்தில் நன்கு பயிற்சி பெற்ற வரலட்சுமிக்கு, அந்த நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘போடா போடி’ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதனை மறுக்காமல் ஏற்று நடித்த வரலட்சுமிக்கு அப்படம் தமிழ் சினிமாவில் அவருக்கென்று நல்ல அடையாளத்தினை ஏற்படுத்திக்கொடுத்தது. 2012-ஆம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் சல்சா நடன கலைஞர் நிஷாவாக, ஒரு குழந்தைக்கு அம்மாவாக போல்டாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வரலட்சுமி. முதல் படத்திலேயே அம்மா கதாபாத்திரம், குழந்தையின் பிரிவு, காதல், திருமணம், உறவுகளில் சிக்கல் என பல உணர்வுகளை வெளிப்படுத்தும் படியான வேடம் ஏற்றிருந்த வரலட்சுமி, அப்பா சரத்குமாரையே நடிப்பில் மிஞ்சும் அளவுக்கு இப்படத்தில் நடிப்பில் மிளிர்ந்திருந்தார்.


‘மத கஜ ராஜா’, ‘மானிக்யா’, ‘ரன்னா’ ஆகிய படங்களில் நடிகை வரலட்சுமி தோன்றிய காட்சிகள்

இதற்கிடையில் இதே 2012-ஆம் ஆண்டில் சுந்தர்.சி இயக்கத்தில், ‘மத கஜ ராஜா’ என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மசாலா படமாக எடுக்கப்பட்ட இதில் வரலட்சுமி, விஷாலுடன் இணைந்து அஞ்சலி, பிரகாஷ் ராஜ் மற்றும் நிதின் சத்யா ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் ஏதோ சில காரணங்களால் வெளிவராமலேயே போய்விட்டது. இந்த நேரத்தில் வரலட்சுமியும் விஷாலும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கன்னடத்தில் ‘மானிக்யா’, ‘ரன்னா’ ஆகிய படங்களில் நடித்தவருக்கு ‘மானிக்யா’ திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததோடு, கன்னட ரசிகர்களிடையே வரலட்சுமிக்கு நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. இந்த நிலையில், இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தில் நடித்தார். தமிழ்நாட்டின் நடனம், கூத்து போன்றவற்றை மையக் கருவாக கொண்டு 2016-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் சூறாவளி என்ற கதாபாத்திரத்தில் கரகாட்டப் பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அறிமுகப் படத்தில் மாடர்னான சல்சா நடன கலைஞராக நடித்தவரால், நம் கிராமிய மனம் வீசும் கரகாட்ட கலைஞராக நடிக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக ஆட்டக்கலைஞர்களுக்கே உரிய உடல்மொழியுடன் அட்டகாசமாக நடித்திருந்த வரலட்சுமி, சசிகுமாருடன் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கியிருந்தார். இருப்பினும் இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை.

வில்லியாக முத்திரை பதித்த வரலட்சுமி


‘கசாபா' திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டியுடன் வரலட்சுமி சரத்குமார்

தமிழில் ‘தாரை தப்பட்டை படம் வெளிவந்த அதே ஆண்டில் மலையாளத்தில் அறிமுக இயக்குநரான நிதின் ரெஞ்சி பணிக்கர் என்பவரின் இயக்கத்தில் ‘கசாபா' என்ற படத்தில் நடித்து அங்கு அறிமுகமானார் வரலட்சுமி. இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு ஜோடியாக கமலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த வரலட்சுமியின் மிரட்டலான நடிப்பு மலையாள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் மீண்டும் மம்மூட்டியின் அடுத்த படமான ‘மாஸ்டெர்பீஸ்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. துப்பறியும் கதையாக 2017-ஆம் ஆண்டு அஜய் வாசுதேவ் என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ஸ்ட்ரிக்ட்டான காலேஜ் ப்ரொஃபசராக மம்மூட்டி நடிக்க, வரலட்சுமி ஐபிஎஸ் அதிகாரி பவானி துர்கா என்ற கனமான வேடத்தில் நடித்திருந்தார். இப்படி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிப்படங்கள் அனைத்திலும் நடிக்க ஆரம்பித்த வரலட்சுமி தமிழில் 'விக்ரம் வேதா' ,'சத்யா' ,'நிபுணன்', 'மிஸ்டர் சந்திரமௌலி', 'எச்சரிக்கை' ஆகிய படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த நேரம்தான் நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஷாலுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து லிங்குசாமி இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடித்தார். இப்படத்தில் முழுக்க முழுக்க பேச்சி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வந்து நடித்தவர், விஷாலுக்கு நிகராக நடிப்பில் அதகளப்படுத்தியிருப்பார். அதிலும் கணவனை இழந்த ஒரு பெண் எந்த அளவுக்கு தைரியமாக, வீரமாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக படத்தில் இறுதியாக வரும் சண்டைக்காட்சியில் வரலட்சுமி தலையை அள்ளிக்கட்டிக்கொண்டு அருவாவை சுழற்றி காட்டும் காட்சியகட்டும், “வாடா பெண்கள்னா மயிலு, குயிலுன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா! நாங்களும் சிங்கம்தான்! பெண் சிங்கம்டா… ஆம்பளைங்க வீசுனா மட்டும்தான் அருவா வீசும்ன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா! எங்க வீட்டு அருவா பொம்பளைங்க வீசினாலும் வீசும்” என்று வீர வசனம் பேசி விஷாலை நோக்கி, அருவாவை சுழற்றி வீசும் காட்சியகட்டும் நிஜமாகவே நடிப்பில் மிரட்டியிருப்பார்.


‘சண்டக்கோழி 2’ படத்தில் பேச்சியாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வரும் வரலட்சுமி

இந்த சூப்பரான வில்லி கதாபாத்திரம் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றுத்தர தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜயுடன் ‘சர்க்கார்’ படத்திலும் வில்லி வேடத்தில் நடித்த இவர், கோமலவள்ளி என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக பலரையும் மிரட்டியிருந்தார். தொடர்ந்து தனுசுடன் ‘மாரி 2’, ஜெய்யுடன் ‘நீயா 2’, ‘வெல்வெட் நகரம்’, ‘டேனி’, விமலுடன் ‘கன்னி ராசி’ வினய்யுடன் ‘அம்மாயி’, அப்பா சரத்குமாருடன் ‘பாம்பன்’, வைபவுடன் ‘காட்டேரி’, ‘கன்னித்தீவு’, சமந்தாவுடன் ‘யசோதா’ என வரிசையாக நடித்தார். இதற்கிடையில் பிற மொழிப்படங்களில் நடித்து அங்கும் தன் முத்திரையை விடாமல் பதித்து வந்தவர், தற்போது தனுஷ் தானே இயக்கி நடித்துவரும் அவரது 50-வது படமான ‘ராயன்’ திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். அதேபோன்று மலையாளத்தில் ‘கலர்ஸ்’, தெலுங்கில் ‘சபரி’ ஆகிய படங்களிலும் நடித்து வரும் இவர், தொடர்ந்து பிஸியான நடிகையாகவே வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

வரலட்சுமி தந்த திருமண அதிர்ச்சி


நிக்கோலஸ் சச்தேவுடன் வரலட்சுமிக்கு நடந்த நிச்சயதார்த்தத்தின் புகைப்படங்கள்

நடிப்பை தாண்டி பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் வரலட்சுமி தனது சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களையும், வலிகளையும் கூட அவ்வப்போது பகிரும் நபராக இருந்து வருகிறார். குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான விஷயங்களில் எப்போதுமே தனது கோபத்தை வெளிப்படுத்தும் வரலட்சுமி, இத்தகைய குற்றம் புரிபவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் எனவும் பல முறை கூறியுள்ளார். இப்படி எப்போதுமே தெளிவான பேச்சையும், சிந்தனையையும் கொண்டவரான இவர் 40 வயதை நெருங்கிய நிலையிலும் திருமணம் செய்யாமல் இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அவர் நடிகர் விஷாலைத்தான் காதலிக்கிறார். அவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற பேச்சுகள் எல்லாம் கூட சமூக வலைதளங்களில் பரவி வந்தன. ஆனால், இது எதற்குமே பதிலளிக்காமல் தனது நடிப்புத் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தி வந்த வரலட்சுமி திடீரென்று யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது மார்ச் 5-ஆம் தேதி அன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு நிக்கோலஸ் சச்தேவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தது மட்டுமின்றி இருவருக்கும் பெரியோர்களின் சம்மதத்துடன் மார்ச் 1-ஆம் தேதி அன்று நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரின் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தது மட்டுமில்லாமல் இதனை எப்படி எடுத்துக்கொள்வது என்பது தெரியாமல் சிலர் பாசிட்டிவாகவும், சிலர் நெகட்டிவாகவும் தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். காரணம் நிக்கோலஸ் சச்தேவ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது மட்டுமில்லாது அவருக்கு டீனேஜ் வயதில் ஒரு மகளும் உள்ளார் என்பதுதான். எப்போதும் எல்லா விஷயங்களிலும் மிகவும் தைரியமான முடிவுகளை எடுக்கும் வரலட்சுமி தனது திருமண விஷயத்திலும் இப்படியொரு முடிவை எடுத்திருப்பதுதான் மிகவும் ஆச்சரியமாக பலரால் பார்க்கப்படுகிறது.

யார் இந்த நிகோலஸ் சச்தேவ்


மகள் காசா மற்றும் முதல் மனைவி கவினாவுடன் நிக்கோலஸ் சச்தேவ்

நிக்கோலஸ் சச்தேவ் மும்பையைச் சேர்ந்தவர். இவர் தனது பெற்றோர்கள் 1970-ஆம் ஆண்டில் இருந்து நடத்தி வந்த ஆர்ட் கேலரியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறார். இந்த ஆர்ட் கேலரியில் பல கோடிகள் மதிப்பிலான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது மட்டுமின்றி ஐஸ்வர்யா ராய், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர், நடிகைகளும் இங்கு வந்து செல்வது வழக்கமாம். இவர் கடந்த 16 வருடங்களுக்கு முன்பே கவினா என்ற மாடலை திருமணம் செய்துகொண்டார். இவரின் முதல் மனைவி கவினா மாமியாரின் உதவியுடன் பல்வேறு அழகிப்போட்டிகளில் கலந்துகொண்டு பட்டங்களையும் வென்றுள்ளார். இவர்களுக்கு 15 வயதில் காசா என்ற மகளும் உள்ளார். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நடிகை வரலட்சுமியுடன், நிக்கோலஸ் சச்தேவிற்கு அறிமுகம் ஏற்பட்டு இருவரும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்ததாகவும், தற்போது அந்த நட்பு திருமணம் வரை வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரின் இந்த திருமண முடிவு சிலருக்கு சற்றே நெருடலை ஏற்படுத்தினாலும், திரைப்படமாகட்டும், சொந்த வாழ்கையாகட்டும் எப்போதுமே தடாலடி முடிவெடுக்கும் வரலட்சுமி சரத்குமார் இதுவரை வெற்றியையே சந்தித்துள்ளார். அந்த வகையில் காதலிக்க வயதோ, கண்களோ தேவையில்லை. நல்ல மனமிருந்தால் போதும் என்று சொல்வதைப்போல் தற்போது இந்த ஜோடிகள் இருவரும் மனம் ஒத்து திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்துள்ளனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் தொடங்கியுள்ள இந்த திருமண நிகழ்வு அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி நீண்ட ஆயுளுடன் நீடிக்க வாழ்த்துவோம்.

Updated On 18 March 2024 11:50 PM IST
ராணி

ராணி

Next Story