
தமிழ் சினிமா என்றால் அதன் முகவரி கோடம்பாக்கம் தான் என்ற பிம்பம் தமிழகத்தில் கட்டமைக்கப்படுவதற்கு முன்பே தோன்றியது தான் இந்த 'மாடர்ன் தியேட்டர்ஸ்'. தமிழ் திரையுலகின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றான இந்த பழமையான 'மாடர்ன் தியேட்டர்ஸ்' ஏராளமான திரைக் கலைஞர்களின் தாய் வீடாகவும், மறைந்த முதலமைச்சர்கள் மு.கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜானகி ராமச்சந்திரன் மற்றும் என்.டி. ராம ராவ் என நான்கு பேரையும் திரைத்துறையில் அடையாளம் காட்டிய பெருமை மிக்க தளமாகவும் இன்றுவரை உள்ளது. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தற்போது என்ன மாதிரியான நிலையில் உள்ளது… அதனை உருவாக்கிய பெருமைமிக்கவர் யார்.., அவர் திரைத்துறையில் நிகழ்த்தி காட்டிய சாதனைகள் என்ன? போன்ற பல சுவாரஷ்யமான தகவல்களை இங்கே காணலாம்.
மாடர்ன் தியேட்டர்ஸை உருவாக்கிய டி.ஆர்.சுந்தரம்
மலைசூழ் மாநகரமான சேலம் மாவட்டம், திருச்செங்கோட்டில் 1907 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி தொழிலதிபர் ராமலிங்கம் என்பவருக்கு 5வது மகனாக பிறந்தவர் தான் இந்த டி.ஆர்.சுந்தரம். இவரின் தந்தை ராமலிங்கம் நூற்பாலைகளில் நூலை வாங்கி, மொத்த வியாபாரம் செய்து வந்தவர் ஆவார். தன்னை போலவே மகனையும் இதே ஜவுளித்துறையில் பெரிய ஆளாக கொண்டுவர வேண்டும் என்று ஆசைப்பட்ட ராமலிங்கம், மகன் சுந்தரத்தை சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்த்துவிட்டார். அவரும் அங்கு பி.ஏ மற்றும் பி.எஸ்.சி ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டங்களை பெற்று பின்னர், ஜவுளித் தொழிலில் மேற்படிப்பை கற்பதற்காக இங்கிலாந்து வரை சென்று படித்து வந்தார். அப்போது ஆங்கில கலாச்சாரத்தால் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்டார் சுந்தரம். இதனால் டி.ஆர்.சுந்தரத்திற்கு ஜவுளித் தொழில் மீது பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை. அவரின் ஆர்வம் முழுவதும் சினிமாவின் மீதுதான் இருந்தது. அதனால் 1932 ஆம் ஆண்டு சேலத்தில் ஏஞ்சல் பிலிம்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து 'வஸ்திராபரணம்', 'துருவன்' , 'நல்ல தங்காள்' ஆகிய படங்களை கூட்டாகத் தயாரித்தார் டி.ஆர்.சுந்தரம். அப்போது படப்பிடிப்பு பணிக்காக மும்பை, கொல்கத்தா போன்ற வட மாநிலங்களுக்கு சென்று வர வேண்டியிருந்தது.
இந்த நிலையை மாற்ற நினைத்த சுந்தரம் ஏற்காடு மலை அடிவாரத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி அங்கு மாடர்ன் தியேட்டர்ஸை தொடங்க முடிவு செய்தார். பின்னர் தியேட்டர் வளாகத்தில் நுழைந்தால், அங்கயே ஒரு முழு திரைப்படத்தையும் தயாரிப்பதற்கான மிகப்பெரிய படப்பிடிப்புத் தளம், உள்ளரங்கம், படத்தொகுப்பு தளம், பாடல் பதிவு செய்யும் அறை, இசைக்கோர்ப்புப் பகுதி, நடிகர், நடிகைகளுக்கான தனி அறை என்று அத்தனை தொழில்நுட்ப வசதிகளையும் ஏற்படுத்தி 1935-ல் "மாடர்ன் தியேட்டர்ஸ்" நிறுவனத்தை உருவாக்கினார்.
டி.ஆர்.சுந்தரம் மற்றும் மாடர்ன் தியேட்டர்ஸின் முகப்புத் தோற்றம்
சிகரங்களின் துவக்கப் புள்ளி 'மாடர்ன் தியேட்டர்ஸ்'
சமூக சீர்திருத்தத்தை விரும்பாமல் தரமான பொழுதுபோக்குப் படங்களை தயாரிக்க விரும்பிய டி.ஆர்.சுந்தரம் தனது முதல் தயாரிப்பாக "சதி அகல்யா" என்ற படத்தை தயாரித்தார். பிற்காலத்தில் கவர்ச்சிக் கன்னியாகத் திகழ்ந்த இலங்கைக் குயில் தவமணிதேவி கதாநாயகியாக நடித்து 1937-இல் வெளிவந்த இப்படம் வெற்றிபடமாக அமைந்தது. இதையடுத்து, "பத்மஜோதி" என்ற படத்தையும் "புரந்தரதாஸ்" என்ற கன்னடப் படத்தையும் தயாரித்த இந்த நிறுவனம், 1938ல், "பாலன்" என்ற மலையாளப் படத்தையும் தயாரித்தது. வெற்றிகரமாக ஓடிய இந்த படம் தான் மலையாள மொழியின் முதல் பேசும் படம் ஆகும். பிறகு 1938 ஆம் ஆண்டில் டி.கே.சம்பங்கி என்ற பிரபல நாடக நடிகரை கதாநாயகனாக நடிக்க வைத்து டி.ஆர்.சுந்தரம் தயாரித்த "மாயா மாயவன்" என்ற படம் தமிழ் சினிமாவின் முதல் சண்டை படமாக அமைந்தது.
மாடர்ன் தியேட்டர்ஸ் லோகோ
இதனை தொடர்ந்து 1940 ஆம் ஆண்டு பி.யூ.சின்னப்பா நடித்து வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமின்றி, தமிழில் முதல் முதலாக வெளிவந்த இரட்டை வேடப்படம் என்ற பெருமையையும் பெற்றது. 1944-ல் 'பர்மா ராணி', 1946-ல் 'சுலோச்சனா', 1947-ல் 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி', 1948-ல் 'ஆதித்தன் கனவு',1949-ல் 'மாயாவதி', 1950-ல் எம். என். நம்பியார் நடித்து வெளியான துப்பறியும் கதையான 'திகம்பர சாமியார்', 1951-ல் 'சர்வாதிகாரி',1952-ல் 'வளையாபதி', 1960-ல் 'பாக்தாத் திருடன்', போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம், 1952ல் இந்தியாவின் முதல் ஆங்கிலப் படமான 'தி ஜங்கிள்' என்னும் படத்தை எடுத்து மாபெரும் வெற்றி கண்டது. பின்னர் 1956-ல் எம்.ஜி.ஆர், பானுமதி நடிப்பில் வெளிவந்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தையும் தயாரித்ததன் மூலம் தென் இந்தியாவில் முதன் முதலாக வண்ணப்படத்தைத் தயாரித்த நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றது.
'அலிபாபாவும் 40 திருடர்களும்' திரைப்பட காட்சி
இது தவிர 'மந்திரி குமாரி', 'பொன்முடி', 'தாய் உள்ளம்', 'திரும்பிப்பார்', 'இல்லற ஜோதி', 'சுகம் எங்கே', 'கதாநாயகி', 'மகேஸ்வரி', 'பாசவலை', 'ஆரவல்லி', 'பெற்ற மகளை விற்ற அன்னை', 'வண்ணக்கிளி', 'கைதி கண்ணாயிரம்', 'குமுதம்', 'கொஞ்சும் குமரி', 'வல்லவனுக்கு வல்லவன்', 'வல்லவன் ஒருவன்', 'இரு வல்லவர்கள்' போன்ற பல வெற்றி படங்களை தொடர்ந்து தயாரித்த இந்நிறுவனம், ஒரு காலத்தில் ஆண்டுக்கு மூன்று படங்களையாவது உருவாக்கி வந்ததாம். சென்னைக்கு வெளியே தொடங்கப்பட்ட சினிமா ஸ்டுடியோவாக இருந்தும், நீண்ட காலம் இயங்கி, அதிக படங்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்க முடிந்ததற்கான காரணம், அந்நிறுவனம் கடைபிடித்த கடமை ,கண்ணியம், கட்டுப்பாடான கொள்கைகளே ஆகும். அதிலும் வேலை பார்த்த ஊழியர்களுக்கும் குறித்த தேதியில் ,முறையாக சம்பளம் வழங்குவது, படத் தயாரிப்பிற்காக மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் நடிகர், நடிகைகள், மற்ற கலைஞர்கள் தங்கி பணிபுரிய, தனி குடியிருப்புகளும் கட்டிக் கொடுக்கப்பட்டது. மேலும் எடுத்த அத்தனை படங்களையும் கடன் பெறாமல் தன் சொந்தப் பணத்திலேயே தயாரித்தது போன்ற காரணங்களும் இந்நிறுவனம் வெகு நாட்கள் இயங்க உறுதுணையாக இருந்தது.
மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தின் 'மந்திரி குமாரி'
பட தயாரிப்பை நிறுத்திய மாடர்ன் தியேட்டர்ஸ்
மற்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம், டி.ஆர்.சுந்தரத்தின் மறைவிற்கு பின்னர் தான் பல சறுக்கல்களை சந்திக்க ஆரம்பித்து. திடீர் மாரடைப்பால் 1963 ஆகஸ்ட் 29 ஆம் தேதி, சேலத்தில் மரணமடைந்த டி.ஆர்.சுந்தரம் முழுமையாகத் தயாரித்த கடைசிப் படம் என்றால் அது 'கவிதா' தான். சுந்தரத்தின் மறைவிற்குப் பிறகு அவரது மகன் ராமசுந்தரம் தொடர்ந்து படங்களைத் தயாரித்தார். 'வல்லவன் ஒருவன்', 'எதிரிகள் ஜாக்கிரதை', 'காதலித்தால் போதுமா', ஜெய்சங்கரை வைத்து பல துப்பறியும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களான, 'நான்கு கில்லாடிகள்', 'கருந்தேள் கண்ணாயிரம்' என ஓரளவு வெற்றி படங்களை தயாரித்தார்.
ராமசுந்தரம் தன் தந்தை அளவுக்கு இல்லாவிட்டாலும், சினிமா உலகின் நெளிவு சுளிவுகளை ஓரளவுக்கு தெரிந்து வைத்திருந்தார் .இருத்தும் 1970-களுக்குப் பிறகு அவர் எடுத்த 'தேடி வந்த லட்சுமி', 'வல்லவன் வருகிறான்', 'காளி கோவில் கபாலி', 'துணிவே தோழன்', 'அன்று முதல் இன்று வரை', 'வெற்றி நமதே' ஆகிய படங்கள் சுமாரான வெற்றியை பெற்றதோடு, சில படங்கள் தொடர் தோல்வியையும் சந்திக்க ஆரம்பித்தது. இதனால் சுந்தரம் தயாரித்த படங்களை மிகவும் குறைந்த விலைக்கு விநியோகஸ்தர்கள் கேட்க, மாடர்ன் தியேட்டர்ஸின் வருவாய் மிகவும் குறைய ஆரம்பித்தது. மேலும் சோர்வடைந்த ராமசுந்தரம் மேற்கொண்டு படம் தயாரித்தால் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை தெரிந்துகொண்டு, சுதாரிப்போடு 1982-ஆம் ஆண்டு 'வெற்றி நமதே' என்ற படத்தோடு தனது தயாரிப்புப் பணியை நிறுத்திக் கொண்டார்.
மாடர்ன் தியேட்டர்ஸின் படப்பிடிப்பு அரங்குகள்
தரமான படங்களை தொடர்ச்சியாக தயாரித்து கொண்டிருந்த ஒரு பெரிய நிறுவனம் தயாரிப்பு பணியை நிறுத்திய நிகழ்வு அன்று சினிமா உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. 1937-ல் சதி அகல்யாவில் தொடங்கி 1982 -ல் எடுக்கப்பட்ட வெற்றி நமதே வரை சுமார் 45 ஆண்டுகள் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களின் எண்ணிக்கை 136. இதில் 102 தமிழ் படங்கள், 1 இந்திப் படம், 1 ஆங்கிலப் படம், பல கன்னட, மலையாள படங்களும் அடங்கும். டி ஆர் சுந்தரத்தின் மறைவிற்கு பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகத்தை கவனித்து வந்த அவரது மகன் ராமசுந்தரமும் 1993-ல் உயிழந்தார். இவரது மறைவிற்குப் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாக பொறுப்புகளை அவரது மனைவி கலைவாணி கவனிக்க ஆரம்பித்தார். அதன்படி கம்பெனி வருவாயை பெருக்கும் வகையில் மாடர்ன் தியேட்டர்ஸின் ஒத்திகை மண்டபம் இருந்த இடத்தில் தற்பொழுது நவீன வசதிகளுடன் கூடிய டி ஆர் எஸ் கல்யாண மண்டபத்தை கட்டினார். இதுதவிர மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடத்தில் சுந்தர் அடுக்கு மாடி குடியிருப்புகளையும் கட்டியுள்ளார்.
இன்றும் நினைவுகளை தங்கி நிற்கும் மாடர்ன் தியேட்டர்ஸ்
தென்னிந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்த முதல் நிறுவனம் இதுதான். முதல் பேசும் படம், முதல் திகில் படம், முதல் சமூகப் படம், முதல் இரட்டை வேடம், முதல் விளம்பரப் படம், முதல் மலையாளப் படம், முதல் சிங்களப் படம், தமிழகத்தின் முதல் ஆங்கிலப் படம் என்று அத்தனை சாதனைகளுக்குமான முதல் விதையும் இங்குதான் விதைக்கப்பட்டது. இப்படி பல முதல் சிறப்புகளை மட்டுமல்ல மு.கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி எம்ஜிஆர், என்டிஆர், என நான்கு முதலமைச்சர்களின் முதல் படங்களை உருவாக்கிய பெருமையும் இந்த நிறுவனத்திற்கு உண்டு.
'மாடர்ன் தியேட்டர்ஸ்' முன்பு செல்பி எடுத்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அப்படிப்பட்ட தன் புதுமையான தயாரிப்புகளால் மக்களை மகிழ்வித்த இந்த ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ தமிழ் சினிமா வளர்ச்சியின் ஒரு அடையாளமானது மட்டுமின்றி ,தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அடையாளமாகவும் மாறிப்போனது. ஒரு காலத்தில் சினிமாவின் தலைமை பீடமாகத் திகழ்ந்த அந்தப் பிரதேசத்தின் நினைவுகளை, திரும்பிப் பார்க்க தமிழ் சினிமா ஆர்வலர்கள் இப்போதும் தவறுவதில்லை. அந்த வகையில், இன்றைய தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி அன்று ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்திற்காக சேலம் சென்றிருந்த போது வழியில் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலை கண்டு, உடனே காரை நிறுத்த சொல்லி செல்பி எடுத்துக் கொண்டார். மாடர்ன் தியேட்டரை ஞாபகப்படுத்தும் ஒரே அடையாளமாக இன்று மிச்சமிருப்பது மாடர்ன் தியேட்டர்ஸின் இந்த கம்பீரமான முகப்புப் பகுதி மட்டுமே.
