இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் நாளை(17.01.24) கொண்டாடப்படுகிறது.‘சதிலீலாவதி’ படத்தின் மூலம் துணை நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் வறுமையோடு போராடி, பின்னர் புரட்சி தலைவராக, மக்கள் திலகமாக, சிறந்த அரசியல்வாதியாக, வள்ளலாக மக்கள் மனதில் இடம் பிடித்தவராவார். பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் இறந்து 36 ஆண்டுகளை கடந்த பிறகும் இன்றும் அவரை கொண்டாடாதவர்கள் யாரும் இல்லை. அவரை அடையாளமாக ஏற்று தமிழ் சினிமாவிற்கும், அரசியலுக்கும் வந்தவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மக்கள் திலகம் பற்றிய சுவாரஸ்யமான அறிய தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்…

பிறப்பு

  • 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் மேலக்காடு கோபால மேனன், சத்யபாமா தம்பதியருக்கு மகனாக இலங்கையின் கண்டிக்கு அருகே உள்ள நாவலப்பிட்டியில் பிறந்தார்.
  • எம்.ஜி.ஆர் உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரி, ஒரு சகோதரன் என இரண்டு பேர். எம்.ஜி.ஆருக்கு இரண்டரை வயதான போது தந்தை மறைந்துவிட, அவரின் பிரிவை தாங்க முடியாமல் அவரது சகோதரியும் இறந்துவிட்டார்.
  • கணவர், மகள் என்று அடுத்தடுத்து ஏற்பட்ட இருவரின் இழப்பானது எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமாவை வெகுவாக பாதித்திருந்தாலும் இரண்டு மகன்களுக்காக வாழ்ந்தாக வேண்டும் என்று, மனதில் தைரியத்தை வளர்த்து கொண்டு இரண்டு பிள்ளைகளையும் வளர்ப்பதற்காக தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்திற்கு வந்தார்.
  • குடும்பத்தில் நிலவிய வறுமையால் படிப்பை தொடர முடியாமல் எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்ரபாணியும் நாடகக் குழுவில் இணைந்து நடித்து சம்பாதிக்கத் தொடங்கினர். எம்.ஜி.ஆரின் கடின உழைப்புதான் திரையுலகில் அவரை ஒரு சகாப்தமாக உருவாக்கியது.

திரைப்பயணம்


ஜெயலலிதா மற்றும் சரோஜா தேவி ஆகியோருடன் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தின் காட்சிகள்

  • தமிழ் திரையுலகில் ‘சதிலீலாவதி’ என்ற படத்தின் மூலம் ஒரு துணை நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜி.ஆர், கிட்டத்தட்ட நடிக்க வந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு, ‘ராஜகுமாரி’ என்ற படத்தின் மூலம் தனது 30-வது வயதில் ‘கதாநாயகனாக’ அறிமுகமானார்.
  • தன் விடாமுயற்சியாலும், அயரா உழைப்பாலும் முன்னேறிய எம்.ஜி.ஆர், மொத்தம் 136 படங்கள் நடித்துள்ளார். இவருடைய நடிப்பும், இவர் பேசிய வசனங்களும், திரையில் காட்டிய மாயாஜாலங்களும் மக்களை வெகுவாக கவர்ந்தன. அன்று இவரது நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாரும் கிடையாது.
  • எம்.ஜி.ஆரின் நடிப்பையும், வள்ளல் குணத்தையும் பார்த்து, தானும் எம்.ஜி.ஆரை போன்று ஒரு மிகப்பெரிய நடிகராக வேண்டும் என்று திரைத்துறைக்கு வந்தவர்கள் ஏராளம். அதற்கு உதாரணம்தான் மறைந்த நடிகர் விஜயகாந்த்.
  • நடிகர் என்ற அடையாளத்துடன் மட்டும் நின்றுவிடாமல் ‘நாடோடி மன்னன்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

திருமணம்


மனைவி ஜானகியுடன் எம்.ஜி.ஆர்

  • எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள். முதலாவதாக தங்கமணி என்பவரை 1939-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் எம்.ஜி.ஆர். திருமணம் ஆகி சில காலங்கள் கழித்து குழந்தைபேறுக்காக தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த தங்கமணிக்கு பிரசவத்தின் போது குழந்தை இறந்தே பிறக்க, சிறிது நாட்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் 1942-ம் ஆண்டு இறந்துவிட்டார்.
  • முதல் மனைவி இறந்து சிறிது நாட்களிலேயே தாயின் வற்புறுத்தலால், சதானந்தவதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட எம்.ஜி.ஆருக்கு அந்த திருமணமும் நீடிக்கவில்லை. 1962-ம் ஆண்டு சதானந்தவதியும் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். கிட்டத்தட்ட திருமணம் ஆகி 20-ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். மனைவி சதானந்தவதி இரண்டு முறை கருவுற்றும் அது நிலைக்காமல் போனதால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது.
  • அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் தன்னுடன் நடித்த நடிகையான ஜானகி மீது காதல் ஏற்பட்டு மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். ஜானகியை எம்.ஜி.ஆர் திருமணம் செய்துகொண்டபோது அவர் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை விபத்தில் பலி கொடுத்து ஒரு குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
  • மூன்று மனைவிகளை திருமணம் செய்தும் எம்.ஜி.ஆருக்கென்று ஒரு நேரடி வாரிசு இல்லாமல் போனது அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. அந்த வருத்தத்தை தனக்கு நெருக்கமானவர்களிடம் பெரிய குறையாக சொல்லி எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


அரசியல்

  • அறிஞர் அண்ணா மீது உள்ள பற்றால் 1952 இல் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியில் சேர்ந்த எம்.ஜி.ஆர், பின்னர் அரசியலில் முழுமையாக இறங்கி மக்களுக்கு தொண்டுகளை ஆற்ற தொடங்கினார். சினிமாவில் இவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு காரணமாக அந்த கட்சியில் உள்ள முக்கியமான பொறுப்புகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
  • பேரறிஞர் அண்ணாவின் மறைவைத் தொடர்ந்து அக்கட்சியை மு.கருணாநிதி கைப்பற்றி ஆட்சி அமைத்தார். அவருடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் விளைவாக 1972ல் திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என்ற கட்சியை தொடங்கினார்.

இருவேறு தருணங்களில் எடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள்

முதலமைச்சர் மற்றும் நலத்திட்டங்கள்

  • 1977ல் தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்காக மதிய உணவுத் திட்டம், இலவச மருத்துவ வசதிகள், இலவச சீருடை திட்டம், இலவச மின்சாரத் திட்டம், பெண்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
  • 1977, 1980, 1984 ஆகிய மூன்று தேர்தல்களில் எம்.ஜி.ஆர் தொடர்ந்து வெற்றி வாகை சூடி 10 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தார். இதில் 1984-ஆம் ஆண்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் தேர்தல் களத்திற்கே செல்லாமல், மக்களை சந்திக்காமல் வெற்றி பெற்றார். மக்களை சந்தித்து வாக்கு கேட்காமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை எம்.ஜி.ஆரை மட்டுமே சேரும். அவரின் இந்த தொடர் வெற்றி எம்.ஜி.ஆர் மீது மக்கள் கொண்ட அன்பின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட்டது.
  • எம்.ஜி.ஆர் தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக, தமிழை மாநிலத்தின் அலுவல் மொழியாக நிறுவி, அரசியலிலும், பொது வாழ்வின் மற்ற அம்சங்களிலும் அதன் பயன்பாட்டை ஊக்குவித்தார்.

மறைவு

  • 1980 களின் நடுப்பகுதியில் அவரது உடல்நிலை குன்றத் தொடங்கியது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆளாகி சிகிச்சை மேற்கொண்டார். இந்த நிலையில் டிசம்பர் 24, 1987 இல், தனது 70 வயதில் அவர் மறைந்தார். எம்.ஜி.ஆரின் இறப்பை கேட்டு தமிழக மக்கள் மீளா துயரத்திற்கு ஆளாகினர். அவரின் நினைவை போற்றும் விதமாக மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்றும் நினைவிடமாக உள்ளது.
  • எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி, பிரபல நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு 1988-ல் சிறிது காலம் தமிழக முதல்வராகப் பதவி வகித்தார்.

எம்.ஜி.ஆர் மறைவின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

விருதுகள்

  • எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து பல்வேறு விருதுகளை பெற்றிருந்தாலும், அரசியல் மற்றும் திரைப்படத்துறையில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, 1988-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
  • கிருபானந்த வாரியாரால் பொன்மனச் செம்மல் என்ற சிறப்பு பெயரை பெற்ற எம்.ஜி.ஆர், புரட்சி நடிகர், மக்கள் திலகம், வாத்தியார், புரட்சித்தலைவர், இதய தெய்வம் என்றும் சிறப்பு பெயர்களை பெற்றுள்ளார்.
  • எம்.ஜி.ஆர் ஒரு திறமையான கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். பல தமிழ் இதழ்கள் அவரது எழுத்துக்களை சிறப்பித்துள்ளன.

எம்.ஜி.ஆருக்கு பிடித்த உணவுகள்

  • எம்.ஜி.ஆர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார்.
  • கருவாட்டு குழம்பு, இறால் குழம்பு என்றால் மிகவும் இஷ்டம்.
  • எம்.ஜி.ஆர் சாப்பிடும் போது, சாப்பாட்டில் தினமும் ஏதாவது ஒரு வகை கீரை கட்டாயம் இருக்க வேண்டும்.
  • இனிப்பு மற்றும் கார வகைகளில் பாஸந்தி, முந்திரி பகோடா ஆகியவை அவரது ‘ஃபேவரைட்’.
  • இவை எல்லாவற்றையும் விட என்னதான் வித விதமாக தினமும் சாப்பிட்டாலும் தவறாமல் சோற்றில் தண்ணீர் ஊற்றிவைத்திருந்து நீராகாரம் பருகுவது என்றால் அவருக்கு அவ்வளவு இஷ்டமாம்.

எம்.ஜி.ஆருக்கு பிடித்த செல்லப் பிராணிகள்


எம்.ஜி.ஆர் வளர்த்த ராஜா சிங்கம்

  • தனது வீட்டிலேயே ராஜா-ராணி என்ற பெயரில் இரண்டு சிங்கங்களை வளர்த்தார் எம்.ஜி.ஆர்.
  • தான் வளர்த்த ராஜா சிங்கம் இறந்த போது, அதன் நினைவை போற்றும் விதமாக, அதனுடைய உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, படம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார்.
  • சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியையும் வளர்த்தார்.

மக்கள் திலகம் (மக்கள் நாயகன்) என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர், தமிழகத்தில், திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும், தமிழக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் இன்றும் போற்றப்படுகிறார். எம்.ஜி.ஆர், தான் வாழ்ந்த காலத்தில் யாரிடமும் தனிப்பட்ட விரோதம் பாராட்டியதில்லை. எதிர்க்கட்சியினரையும் அரவணைத்தே சென்ற எம்.ஜி.ஆர், அவர்களோடு நட்போடு இருந்ததற்காக அரசு அதிகாரிகளை என்றும் புறக்கணித்ததோ, பழிவாங்கியதோ இல்லையாம். தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் கூறும் நியாயமான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பழக்கம் கொண்டவர். அதனால்தானோ என்னவோ இன்றும் எம்.ஜி.ஆர். எல்லோராலும் கொண்டாடப்படுகிறார்.

Updated On 23 Jan 2024 12:06 AM IST
ராணி

ராணி

Next Story