இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சாதாரண தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று தென்னிந்திய திரையுலகம் கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டாராக ஒருவர் வலம் வருகிறார் என்றால் அது நயன்தாராவால் மட்டுமே சாத்தியமானது. திரையுலகில் நுழைந்து நிறைய வெற்றிப்படங்களை கொடுத்த இவர் ஆரம்ப காலங்களில் பல அவமானங்களையும், நெகட்டிவான விமர்சனங்களையும் சந்தித்துள்ளார். அதற்காக அவர் ஒருநாளும் வருத்தப்பட்டதோ, அப்படியே முடங்கிப்போய் ஓரமாக உட்கார்ந்ததோ கிடையாது. 2003ல் மலையாள திரையுலகிலும், 2005 ஆம் ஆண்டு சரத்குமாரின் 'ஐயா' படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிலும் அறிமுகமான இவர் 20 ஆண்டுகளாக தனியொரு பெண்ணாக அதுவும் சிங்கப்பெண்ணாக இன்றும் கதாநாயகி என்ற அந்தஸ்திலேயே கெத்து காட்டி வருகிறார். அதிலும் அண்மை காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வரும் நயன்தாரா, தற்போது சமையல்கலையை முன்னிறுத்தி வெளிவந்துள்ள ‘அன்னபூரணி’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில், திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் குறித்தும், நயன்தாரா இதுவரை சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.

திக் திக் த்ரில்லர்

பொதுவாகவே பெண்கள் திகில் படங்களையோ, திரில்லர் படங்களையோ பெரிய அளவில் விரும்பமாட்டார்கள். இத்தனைக்கும் பெரும்பான்மையான திகில் படங்களில் பெண்களே பிரதான கதாபாத்திரங்களில் நடித்தாலும், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் திகில் திரைப்படங்களுக்கு வலுவான எதிர்வினைகளை பயம், பதட்டம் மற்றும் வெறுப்பு போன்ற உணர்வுகளோடு வெளிப்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் மன தைரியம் மிக்க பெண்களும், வாழ்க்கையின் எத்தகைய சூழ்நிலையையும் எளிதாக கையாளும் திறமைக் கொண்ட பெண்களும், இத்தகைய திகில் மற்றும் திரில்லர் படங்களில் வரும் காட்சியை சவாலோடு எதிர் கொள்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் தைரியமிக்க நாயகியாக அடையாளம் காணப்படும் நயன்தாராவும் திரில்லர் பட விரும்பிதானாம். அதனால்தான் தனது முதல் சோலோ ஹீரோயின் பெர்ஃபாமன்ஸை 'மாயா' என்கிற திகில் படத்திலிருந்து துவங்கினார். கடந்த 2015ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில், அஸ்வின் சரவணன் என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘மாயா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் துவக்கத்தில் சென்னைக்குப் பக்கத்தில் உள்ள மாயவனம் என்கிற காட்டுக்குள் நடக்கிற மர்மமான நிகழ்வுகள், கணவரை விட்டுப்பிரிந்து ஒருவயது குழந்தையுடன், தோழியின் வீட்டில் தஞ்சம் அடையும் நயன்தாரா என இரண்டு புள்ளிகளும் சந்திக்கும் இடம்தான் ‘மாயா’ படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. பேய் படங்களுக்கே உரிய சகல அம்சங்களுடன் வெளிவந்த இப்படம் அன்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.


நயன்தாரா நடித்த ‘மாயா’, ‘டோரா’, ‘ஐரா’, 'கனெக்ட்' ஆகிய படங்களின் போஸ்டர்கள்

இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு தாஸ் ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘டோரா’ படத்தில் காருக்குள் புகுந்த நாயின் ஆவியுடன் இணைந்து பழிவாங்கும்படியான பவளக்கொடி எனும் கதாபாத்திரத்தில் கலக்கினார். 2019 ஆம் ஆண்டு Hush என்ற ஆங்கிலப் படத்தின் தமிழ் ரீமேக்காக வந்த 'கொலையுதிர் காலம்' படத்தில் தத்து பிள்ளையாக வந்து கொலைகாரர்களிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகளில் நம்மையும் பதற செய்தார். இது தவிர அதே ஆண்டு சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் வெளிவந்த ‘ஐரா’ படத்தில் பவானி, யமுனா என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர், திகிலிலும் மிரட்டியிருந்தார். பிறகு மீண்டும் 'மாயா' பட இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் இணைந்து கடந்த ஆண்டு 'கனெக்ட்' எனும் ஹாரர் த்ரில்லர் படத்தில் நடித்தவர் அதிலும் வெற்றிக் கண்டார். சொல்லப்போனால் நயன்தாரா இதுவரை நடித்துள்ள சோலோ ஹீரோயின் படங்களில் பெரும்பாலானவை திரில்லர் கலந்த திகில் படங்கள்தான். காரணம் அவருக்கு பிடித்த ஜானரே அதுதானாம்.

தைரிய நாயகியாக

திரில்லர் படங்களில் ரத்தம் சொட்ட சொட்ட ஆவிகளுடனும், கொலைகாரர்களுடனும் சண்டைபோட்டு வென்ற நயன்தாரா, நியாயத்திற்காகவும், பாசத்திற்காகவும் போராளியாக மாறி கையில் ஆயுதம் எடுக்கவும் தயங்கவில்லை. அதற்கு முதல் பிள்ளையார் சுழி போட்ட படமாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி கண்ட திரைப்படம்தான் 'அறம்'. 2017 ஆம் ஆண்டு கோபி நயினார் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியர் மதிவதனி என்னும் கதாபாத்திரத்தில் வந்து நடிப்பில் மிளிர்ந்திருந்தார். ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் நிகழ்வை மையமாகக் கொண்டு வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்த அதேவேளையில் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘நான் ஒரு ஜனநாயகவாதி’, ‘என்னால் மக்களைக் குறைசொல்ல முடியாது’, ‘எனக்கு பவர் பாலிடிக்ஸ் தெரியாது’, ‘ஓர் அடிமையால் இன்னொரு அடிமைக்கு சேவை செய்ய முடியாது’ என மதிவதனியாக வரும் நயன்தாரா பேசும் வசனங்கள் என்றும் பொருத்திப் பார்க்கக்கூடிய அறம் சார்ந்த அரசியல் பார்வையாக வெளிப்பட்டன. இதனாலேயே இப்படம் பல்வேறு விருதுகளை வென்றதோடு, நயன்தாராவிற்கும் பாராட்டும், விருதும் கிடைத்தது.


தைரியம் மிக்க பெண்ணாக நயன்தாரா நடித்த திரைப்படங்கள்

இதன் பிறகு 2018 ஆம் ஆண்டு ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த 'இமைக்க நொடிகள்' படத்தில் துப்பாக்கி ஏந்திய ஐபிஎஸ் அதிகாரியாக அஞ்சலி எனும் கதாபாத்திரத்தில் வந்து தன் தம்பியை காப்பாற்ற போராடியவர், ஃப்ளாஷ் பேக் காட்சியில் தன் கணவரை கொன்றவர்களை பழிவாங்கும் போது மிரள வைத்திருந்தார். இதேபோல் 2022 ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான 'O2' படத்தில் பார்வதி எனும் கதாபாத்திரத்தில் வரும் நயன்தாரா, சுவாச நோயால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் சிலிண்டருடன் வாழ்ந்து வரும் சிறுவனுக்கு தாயாக நடித்து உருக வைத்தார். ஒரு தாய் தன் குழந்தையின் நலனை உறுதிப்படுத்த எந்த எல்லைக்கும் செல்வாள் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இப்படம், முழுக்க முழுக்க மண்ணுக்குள் புதைந்த பேருந்துக்குள் நடக்கும் உயிர் போராட்டமாக நொடிக்கு நொடி சுவாரஸ்யம் கலந்த ஆக்‌ஷனுடன் எடுக்கப்பட்டிருந்தது.

வித்தியாசமான தோற்றம்

எப்போதுமே ஒரு முழுமையான நடிகர் என்பவர், புதுவிதமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதோடு, வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து அதில் ஜெயித்துக்காட்ட வேண்டும். அந்த வகையில் நடிகை நயன்தாரா அம்மாவாக, அதிகாரியாக, ஆளுமையாக என பல ரோல்களில் திரில்லர், ஆக்‌ஷன் போன்ற பல ஜானர்களில் நடித்த அதே வேளையில், வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயங்கவில்லை. அதில் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த 'கோலமாவு கோகிலா' படத்தில் குடும்ப கஷ்டத்திற்காக கஞ்சா விற்கும் இளம்பெண் வேடம் ஏற்று பலரின் கவனம் பெற்றார். ஏடிஎம்மில் காவலாளியாக பணிபுரியும் அப்பா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக போராடும் அம்மா, கல்லூரியில் படிக்கும் தங்கை ஆகியோரைக் கொண்ட சாதாரண குடும்பத்தை காப்பாற்ற போராடும் இளம்பெண் கோகிலா வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையோடு ஒரு 'டார்க் காமெடி' படமாகா கொடுத்திருந்த விதம் பலரால் ரசிக்கபட்டது. குறிப்பாக இந்த படத்தில் யோகிபாபுவிற்கும், நயன்தாராவுக்கும் இடையே இருக்கும் காதல் கெமிஸ்ட்ரி இன்று பார்த்தாலும் குபீர் சிரிப்பை உண்டாக்கும்.


வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பில் மிளிர்ந்த நயன்தாரா

பிறகு 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்தில் அம்மனாக நடித்திருந்த நயன்தாரா, கடவுள் என்பது யார், மக்கள் எப்படிப் பார்க்க வேண்டும், போலிச் சாமியார்கள் கடவுள் பெயரை வைத்து என்ன செய்கிறார்கள் போன்ற விஷயங்களை நகைச்சுவை கலந்த அறிவுரையாக கூறி நடித்து அசத்தினார். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவதுதான் இப்படத்தின் ஒன் லைன் என்றாலும், அதற்குள் குடும்பம், அன்பு, ஆசை போன்ற பல விஷயங்களை புகுத்தி கதை சொன்ன விதம் இப்படத்திற்கு வெற்றியை பெற்று தந்தது. இவைகள் தவிர 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஐரா’படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்தவர், அதில் வரும் கருப்பு நிற பவானி கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கலங்க வைத்தது போலவே, 2021 ஆம் ஆண்டு வெளிவந்த 'நெற்றிக்கண்' படத்திலும் இரட்டை வேடம் ஏற்று அதில் வரும் துர்கா எனும் பார்வையற்ற கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருந்தார்.

அன்னபூரணியாக நயன்தாரா

ஒவ்வொரு படத்திலும் வெரைட்டியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தன் ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள படம்தான் 'அன்னபூரணி'. நயன்தாராவின் 75வது படமான இதில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சமையல் சேவை புரியும் ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்தவரான அன்னபூரணி, மிகப்பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரின் கனவு நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. லட்சியத்தை ஜெயித்துக்காட்ட கரண்டி பிடிப்பது, குடும்ப பின்னணியை தாண்டி அசைவ உணவு சமைப்பது, அப்பாவின் அங்கீகாரத்திற்காக ஏங்குவது என பல விதமான உணர்வுகளை மிக சிறப்பாக வெளிப்படுத்தி அன்னபூரணியாகவே தோன்றிய நயன்தாரா, வழக்கம் போல இந்த படத்திலும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்துள்ளார்.


அன்னபூரணியாக வெற்றி நடைபோடும் நடிகை நயன்தாரா

குறிப்பாக, புடிச்சத பண்ணா லட்சத்தில் ஒருத்தர் இல்ல, லட்சம் பேர் சூப்பர் ஸ்டார் ஆகலாம் என்று நயன்தாரா சொல்லும் வசனம் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக இருப்பதோடு, அவருக்கும் கனகச்சிதமாக பொருந்துகிறது. தமிழ் சினிமாவின் ஒரே லேடி சூப்பர் ஸ்டார் நான்தான் என்பதை இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ள நயன்தாரா, அடுத்ததாக இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாகவே அருண்ராஜா சமூக அக்கறையுள்ள படங்களைதான் தொடர்ந்து கொடுத்து வருவதால், தற்போது நயன்தாராவுடன் இணைந்து பணியாற்ற உள்ள இப்படம், மற்றுமொரு 'அறம்' திரைப்படமாக அமையலாம் என நயன்தாராவின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுதவிர சமீபத்தில் கேமராவிற்கு பின்னால் நின்று படம் எடுப்பது போல் ஒரு புகைப்படத்துடன் 'TRUST the MAGIC of New beginnings' என்று நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகியுள்ளதால், கூடிய விரைவில் இயக்குநராகவும் நயன்தாராவை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Updated On 12 Dec 2023 12:15 AM IST
ராணி

ராணி

Next Story