பிச்சைக்காரன் 2, கொலை என்று அடுத்தடுத்த திரைப்படத்தை தந்த விஜய் ஆண்டனியின் அடுத்த படமான ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த வாரம் செப்டம்பர் - 19 ஆம் தேதி மன உளைச்சலின் காரணமாக தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.. குறிப்பாக தனது மூத்த மகள் மீது அளவற்ற பாசம் கொண்ட விஜய் ஆண்டனிக்கு ரசிகர்கள் பலரும் நேரிலும், இணையதளத்தின் வாயிலாகவும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் இவர் நடித்திருக்கும் அடுத்த படமான ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் அவருடைய சமூக வலைதள பக்கமான முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-டியூப் பக்கங்களில் நேற்று வெளியானது. இதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு ‘நாங்கள் இருக்கிறோம் நீங்கள் இன்னும் வலிமையாக கம் பேக் கொடுங்கள்’ என்று பதிவிட்டு அவரை வரவேற்றுள்ளனர்.
இந்த ‘ஹிட்லர்’ திரைப்படத்தை இயக்குனர் தனா இயக்குகிறார். விவேக் - மேர்வின் இசையில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படம் ஒரு அரசியல் திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.