இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வெள்ளித்திரை, சின்னத்திரை, சோசியல் மீடியா என எதை எடுத்துக்கொண்டாலும், அதில் உள்ள நடிகர், நடிகைகள், பொதுமக்கள் என பலர் போடும் போஸ்ட், பேட்டிகளையெல்லாம் பின்னுக்குத்தள்ளி முன்னேறி செல்லும் அளவுக்கு எப்போதும் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்னில் இருப்பவர்தான் வனிதா விஜயகுமார். இவரை இணைய வாசிகள் பெரும்பாலும் சர்ச்சை நாயகி, வைரல் ஸ்டார் என்றும் அழைப்பதுண்டு. அதற்கு முக்கிய காரணங்களாக தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட சொத்து பிரச்சினை, மகன் பிரிவு தொடங்கி அவரது திருமணங்கள் வரை பல நிகழ்வுகள் சொல்லப்பட்டன. இப்படி எப்போதும் சர்ச்சைகளை சுற்றியே பயணித்து வந்த வனிதாவுக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான `பிக்பாஸ்' நிகழ்ச்சி அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தந்தது மட்டுமின்றி அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது. ஆனாலும், அவரை சுற்றிய கல்யாண சர்ச்சைகள் மட்டும் ஓய்ந்தபாடில்லை. பீட்டர் பால் உடனான திருமண முறிவுக்கு பிறகு அமைதியாக படங்களில் கவனம் செலுத்தி பிசியான நடிகையாக வலம்வரும் நடிகை வனிதா விஜயகுமார் மீண்டும் 4-வதாக தனது பிறந்த நாளான அக்டோபர் 5-ஆம் தேதி நடன கலைஞரும், நடிகருமான ராபர்ட் மாஸ்டரை திருமணம் செய்துகொள்ள போவதாக ஒரு செய்தி உலா வந்தது. இப்படி எப்போதும் வனிதாவை சுற்றி நிலவும் பல சர்ச்சையான நிகழ்வுகள் குறித்தும், அவர் கடந்துவந்த பல இக்கட்டான சூழல்கள் குறித்தும் இந்த கட்டுரையில் காணலாம்.

வனிதாவின் பாசப் போராட்டம்


‘சந்திரலேகா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர், நடிகையான விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகள் என்ற அடையாளத்துடன் நமக்கெல்லாம் பரிட்சயமானவர்தான் வனிதா விஜயகுமார். 1995-ஆம் ஆண்டு விஜய்யின் ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான வனிதாவுக்கு முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்காவிட்டாலும் அப்படத்தில் இடம்பெற்ற “அல்லாஹ் உன் ஆணைப்படி” பாடல் இவரை மிகவும் பிரபலப்படுத்தியது. இதனால் தொடர்ந்து தமிழில் ‘மாணிக்கம்’, தெலுங்கில் ‘தேவி’, மலையாளத்தில் ‘ஹிட்லர் பிரதர்ஸ்’ என வரிசையாக நடிக்க தொடங்கி புகழ்பெற ஆரம்பித்தார். இந்த நேரம் நடிகர் ஆகாஷ் என்பவரை காதலிக்க ஆரம்பித்த வனிதா, அவரை இருவீட்டாரின் சம்மதத்துடன் 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களின் காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக விஜய் ஸ்ரீ ஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இந்த தம்பதிகள் வாழ்வில் யார் கண்பட்டதோ திடீரெனெ கொஞ்சம் கொஞ்சமாக எழ ஆரம்பித்த கருத்து வேறுபாடு ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடித்து மீடியா வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது. ஒருவருக்கு காலமும், நேரமும் சரியாக அமையவில்லை என்றால், அவரின் வாழ்க்கை எவ்வளவு தலைகீழாக மாறி போய்விடும் என்பதற்கு உதாரணம்தான் வனிதா விஜயகுமாரின் வாழ்க்கை.


தன் இரண்டு மகள்களுடன் அழகான ஒரு தருணத்தில் வனிதா

2005-ஆம் ஆண்டு முதல் கணவரை வனிதா பிரிந்த நிலையில், இரண்டு பிள்ளைகளும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. வனிதாவும் முதல் கணவர் ஆகாஷை பிரிந்த இரண்டு வருடத்திலேயே ஆனந்த் ஜெயராஜன் என்ற தொழிலதிபரை 2007-ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஜெயனிதா என்ற மகளும் பிறக்க, வனிதாவால் தன் மகன் ஸ்ரீ ஹரியை பிரிந்து இருக்க முடியவில்லை. இதனால், தன் பிள்ளைகள் இருவரும் தன்னுடன்தான் இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த வழக்கு வனிதாவுக்கு சாதகமாக முடிந்தாலும் மகன் ஸ்ரீ ஹரியோ அம்மா வனிதாவுடன் செல்ல மறுப்பு தெரிவித்து தாத்தா விஜயகுமார், அப்பா ஆகாஷ் ஆகியோருடன் சென்றுவிட்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வனிதா தன் முதல் கணவருடன் மோத தொடங்கினார். தந்தை விஜயகுமார், அம்மா மஞ்சுளா இருவரும் மருமகன் ஆகாஷ் பக்கமே நிற்க, வனிதா தனியாளாக காவல் நிலையத்தை முற்றுகை இடுவது, முதல் கணவர் ஆகாஷ் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பது என ஒட்டுமொத்த மீடியாவையும் பரபரப்பாக்கினார். தினசரி பத்திரிகைகளை திறந்தாலே வனிதாவின் செய்திதான் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. ஆனாலும், எவ்வளவு போராடியும் வனிதாவால் மகன் விஜய் ஸ்ரீ ஹரியை தன்னுடன் அழைத்து போக முடியவில்லை. மகனின் பிரிவை தாங்க முடியாமல், தன் இரண்டாவது கணவரை பிரிய முடிவு செய்த வனிதா, மகனுக்காக இந்த முடிவை எடுப்பதாகவும் கூறியிருந்தார். இரண்டாவது கணவர் ஜெயராஜனைப் பிரிந்ததோடு, முதல் கணவர் ஆகாஷுடன் மீண்டும் சேர்ந்து வாழவும் விருப்பம் தெரிவித்தார். மகனின் பிடிவாதம் இருவரையும் எப்படியோ மீண்டும் சேர்த்துவிட்டது என்று நினைத்து குடும்பத்தில் இருந்தவர்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில், மீண்டும் வனிதா சொத்து பிரச்சினையை கிளப்பி கோர்ட், கேஸ் என்று அப்பா விஜயகுமார், அம்மா மஞ்சுளாவுடன் மோத தொடங்கினார். ஆனால், அந்த மோதல் நடந்து முடிவதற்குள்ளாகவே அம்மா மஞ்சுளாவும் மறைய ஒட்டுமொத்த குடும்பமும் வனிதாவை ஒரே அடியாக ஒதுக்கி வைத்தது. அம்மாவின் இறப்பில் பங்குபெற்ற வனிதாவை அங்கு யாருமே கண்டுகொள்ளவில்லை. அன்றில் இருந்து யாருடைய உதவியும் இன்றி தனியொரு பெண்மணியாக தன் இரண்டு மகள்களையும் வளர்த்து வருகிறார் வனிதா. ஆனாலும், மகனுக்காக அவர் நடத்தும் பாசப்போராட்டம் மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

திருமண சர்ச்சையும், பிக்பாஸ் தந்த மாற்றமும்


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மகள்கள் ஜோவிகா & ஜெயனிதா வருகைதந்த தருணம்

இப்படி ஒரு அமைதியான பெண்ணை இனி எங்கேயும் பார்க்க முடியாது எனும் அளவுக்கு மிகவும் பயந்த சுபாவம் உடைய பெண்ணாக தொடக்கத்தில் இருந்த வனிதாதான், தன் முதல் திருமணத்தில் சந்தித்த கசப்பான அனுபவங்களால் அடப்பாவி பெண்ணாக மாறி போனார். முதல் திருமண விவாகரத்து, மகனுக்காக நடத்திய பாசப் போராட்டம், மீடியாக்கள் முன்பாக தாய் தந்தையை தலைகுனியச் செய்த நிகழ்வு இவை எல்லாமே வனிதாவை, வீட்டுக்கு அடங்காத பெண்ணாகவே சித்தரித்தன. அதற்கு மிக முக்கிய காரணம் அவர் செய்து கொண்ட முதல் இரண்டு திருமணத்தால் வந்த சர்ச்சைகள்தான். அம்மா மஞ்சுளாவின் மறைவுக்கு பிறகு இந்த சர்ச்சைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ தொடங்கியிருந்த வனிதா பெரிதாக மீடியா வெளிச்சமே இல்லாமல் இப்போது என்ன செய்கிறார் என்று எல்லோரும் தேட ஆரம்பித்திருந்த நேரத்தில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்து சீசன் 4-ல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த சீசனில் கலந்து கொண்ட வனிதாவை அதுவரை திட்டிக் கொண்டிருந்த பார்வையாளர்களும், பொதுமக்களும் அவரின் இரு மகள்கள் வருகைக்கு பின் உண்மையிலேயே வனிதா தனியொரு பெண்மணியாக தன் பிள்ளைகளை மிகச்சிறப்பாக வளர்த்திருக்கிறார் என்று பாராட்டி கொண்டாடும் அளவுக்கு புகழ் பெற்றார். ‘பிக்பாஸ்’ சீசன் 4-ல் தன் இரண்டு மகள்களால் கிடைத்த புகழ் வெளிச்சம் அவரை அடுத்தடுத்த நிலைகளுக்கு அழைத்துச் சென்றது.


வனிதா, பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டபோது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த வனிதா அதே தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தான் செய்து காண்பித்த சிறப்பான சமையல்களால் டைட்டில் வின்னராக மாறினார். அந்த நிகழ்ச்சியில் அவரின் சமையலுக்கு கிடைத்த வரவேற்பால் தனியாக ஒரு குக்கிங் சேனலையும் யூடியூபில் தொடங்கிய வனிதா அதன் மூலம் மேலும் புகழ் பெற தொடங்கினார். எந்த மீடியாவும், பொதுமக்களும் வனிதாவை நெகட்டிவாக விமர்சனம் செய்தார்களோ, அதே சமூக ஊடங்களும், பார்வையாளர்களும் அவர் மீது கொஞ்சம் கரிசனத்துடன் கூடிய அன்பை வெளிப்படுத்த தொடங்கினர். இதனால் எல்லா தளங்களிலும் மீண்டும் ஒரு ரவுண்ட் வந்து கலக்க ஆரம்பித்தார் வனிதா. நிறைய பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தன் மனதில் பட்டதை பேசுவது என மீண்டும் பரபரப்பாக வலம் வந்த வனிதா, இந்த நேரம் தன் யூடியூப் சேனலில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். வனிதாவின் இந்த திடீர் அறிவிப்பால் சிலர் மோசமான விமர்சனங்களையும், சிலர் தங்களது வரவேற்பையும் தெரிவித்தனர். இருப்பினும் தான் செய்யும் எந்தவொரு செயலையும் ஒளிவு மறைவின்றி மிகவும் தைரியமாக செய்யும் பழக்கம் கொண்ட வனிதா தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை பொருட்படுத்தாது 2020-ஆம் ஆண்டு பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வு மீண்டும் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தவே, இதுவும் எவ்வளவு நாளைக்கு என்று பார்ப்போம் என மற்றவர்கள் கூறியது போல திருமணமாகி மூன்றே மாதத்தில் அவரையும் பிரிந்தார். உடல் சுகத்திற்காக திருமணம் செய்து கொண்டால் இப்படித்தான் ஆகும் என்று சிலரும், இப்படி கணவருக்கு அடங்கி போக முடியாத அடங்கா பிடாரிகளுக்கு எதற்கு திருமணம் என்று சிலரும் வசைவுகளை அள்ளி வீச இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத வனிதா அடுத்தடுத்த நிகழ்வுகளை நோக்கி நகர ஆரம்பித்தார். இந்தவேளை வனிதாவை பிரிந்த பீட்டர் பாலும் குடிக்கு அடிமையாகி விவாகரத்தான சிறிது நாட்களிலேயே மறைந்தும் போனார்.

பரபரப்பை ஏற்படுத்திய பட அறிவிப்பு


ராபர்ட் மாஸ்டருடன் சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய வனிதா

எப்போதும் பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சம் இல்லாத வனிதா ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றால் கூட தன் பேச்சாலும், நடவடிக்கைகளாலும் அங்கு ஒரு சலசலப்பை ஏற்படுத்திவிட்டு வந்துவிடுவார். சமீபத்தில் வெளிவந்த பிரசாந்தின் ‘அந்தகன்’ திரைப்படம் துவங்கி பல படங்களில் இரண்டாம் நிலை கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான அங்கீகாரத்தை தக்க வைத்துள்ள வனிதா இன்னும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது மிகவும் பிஸியான நடிகையாக வலம்வரும் வனிதா, 4-வதாக மீண்டும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு தகவல் கடந்த வாரம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி, அதில் கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு Save The Date October 5 என குறிப்பிட்டிருந்தார். இது திருமண அழைப்பிதழ் போல் இருந்ததால் மீண்டும் வனிதாவுக்கு திருமணம் என செய்திகள் வெளியாகின. அதேசமயம் வனிதாவும், ராபர்ட்டும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். அந்த படம் குறித்த அறிவிப்பு அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகலாம் எனவும் சொல்லப்பட்டது.

ஏற்கனவே வனிதா இரண்டாவது கணவர் ஆனந்த் ஜெயராஜனை பிரிந்த பிறகு, 2015-ஆம் ஆண்டு ராபர்ட் மாஸ்டர் சொந்தமாக இயக்கி, நடித்த ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அப்போதே இருவரும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் செய்திகள் உலா வந்தன. பிறகு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணம் செய்துகொள்ளாமல் நண்பர்களாகவே இருந்து பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில்தான், ‘பிக்பாஸ்’ சீசன் 6-ல் கலந்து கொண்ட ராபர்ட், வனிதாவின் உதவியுடன்தான் இந்த நிகழ்ச்சிக்குள் வந்ததாக கூறி மீண்டும் தொடர்பில் இருப்பதை உறுதிப்படுத்தினார். வனிதாவும் தன் பங்குக்கிற்கு நான் உதவி செய்தால்தான் ராபர்ட் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குள்ளயே போனார் என்று தெரிவித்தார். இப்படி இருவரும் மாறி மாறி தொடரும் தங்களின் நட்பை உறுதிப்படுத்தி வந்த நிலையில்தான் இப்படியொரு அறிவிப்பு வெளிவந்து மீண்டும் ஒரு புயலை திரைவட்டாரத்தில் ஏற்படுத்தியது.


‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ படம் குறித்து ராபர்ட்டுடன் இணைந்து வனிதா அறிவித்த தருணம்

வனிதாவின் பிறந்த நாளான அக்டோபர் 5 அப்படி என்னதான் நடக்கப்போகிறது என ஒட்டுமொத்த ஊடகங்களும் காத்திருந்த நேரத்தில்தான் வீடியோ ஒன்று வெளியானது. அதில் வனிதாவும், ராபர்ட்டும் தோன்றி சொல்லிடலாமா என வனிதா கேட்க, அதற்கு வேண்டாம் என்று ராபர்ட் மறுக்க மாறி மாறி ரொமான்ஸ் செய்தவாறு ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வருகின்றனர். பிறகு ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ என்கிற படத்தின் போஸ்டர் இடையில் தோன்றி இதற்கு தான் இவ்வளவு பில்டப்பா என நினைக்க தோன்றும் அளவுக்கு தங்கள் படத்தை ப்ரமோஷன் செய்துள்ளனர். அந்த போஸ்டர்தான் சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாவில் பகிரப்பட்ட புகைப்படம். என்னது வனிதாவுக்கு மீண்டும் திருமணமா! என்கிற அதிர்ச்சி செய்து படத்தின் போஸ்டர் வெளிவந்து புஸ்வானம் ஆனாலும், அதிலும் ஒரு மகிழ்ச்சி இடம் பெற்றிருந்தது. அது என்னவெனில் அப்படத்தை தயாரித்து இயக்குவது வனிதா விஜயகுமார்தான். இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி தற்போது பாராட்டுகளும், வாழ்த்துகளும் அவருக்கு குவிந்து வருகின்றன.

Updated On 14 Oct 2024 9:56 PM IST
ராணி

ராணி

Next Story