இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியன் 2 தாத்தா

படப்பிடிப்பில் விபத்து, கொரானா தொற்று என்று தள்ளி தள்ளி போன இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை ஒரு வழியாக முடித்து விட்டார் இயக்குனர் ஷங்கர். தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் தாத்தா ‘சேனாபதி’ கதாபாத்திரத்தின் புதிய தோற்றத்தை படக்குழு வெளியிட்டது. அதில் முதல் பாகத்தில் பார்த்த தாத்தாவை விட முதுமை கூடிய தோற்றத்தில் இருக்கிறார் கமல். ஜனவரி மாதம் தைப்பொங்கலை முன்னிட்டு இந்தியன் 2 வெளியாகும் எனத் தெரிகிறது.


இந்தியன் 2 தாத்தா தோற்றத்தில் கமல்ஹாசன்

ரங்கோலி

அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை, அவனது தந்தை தனியார் பள்ளியில் சேர்ப்பதால் உருவாகும் சிக்கல்களைப் பற்றி பேசும் படம்தான் ‘ரங்கோலி’. இயக்குநர் வசந்த் சாயிடம் உதவி இயக்குநராக இருந்த வாலி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் பேரனான ஹமரேஷ் இதில் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் நாயகப்பாத்திரத்தை தனது வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கிறார் இயக்குநர் வாலி மோகன்.


‘ரங்கோலி’ திரைப்படம் போஸ்டர்

கிருஷ்ணா நடிக்கும் திரில் படம்

கே.பாலசந்தரிடம் உதவியாளராக இருந்த ரிஷி திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பல்லவபுரம் மனை எண் 666’. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த கிருஷ்ணா இத்திரைப்படத்தில் கதாநாயகனாகிறார். இவர் ஏற்கனவே ஈரம், அனந்தபுரத்து வீடு, அழகிய அசுரா ஆகிய திரைப்படங்களில் நடத்திருக்கிறார். இந்த படத்தின் கதையை எஸ்.முத்து பழனியப்பன் எழுதியுள்ளார். திரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு மாருதி நம்பி இசையமைத்திருக்கிறார்.


‘பல்லவபுரம் மனை எண் 666’ திரைப்படத்தில் கிருஷ்ணா

அர்ஜூன் இயக்கும் பான் இந்தியா படம்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு அர்ஜுன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பான் இந்தியா படமாக உருவாகிறது. இதில் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பிரகாஷ்ராஜ், ஜெயராம் நடிக்கும் இந்தப் படத்தில் அர்ஜுனும் ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இப்படத்துக்கு ‘கேஜிஎஃப்’ படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் இசையமைக்கிறார்.


ஐஸ்வர்யா, அர்ஜுன் மற்றும் நிரஞ்சன்

ஒரே வாரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்

சிங்கப்பூரை சேர்ந்த எழுத்தாளர் மில்லத் கதை, வசனம் எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆந்தை’. ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒரே வாரத்தில் எடுத்து முடித்துள்ளனர் படக்குழு. இந்தப் படத்தில் விகாஸ், யாழினி முருகன், பயில்வான் ரங்கநாதன் நடித்துள்ளனர். சைக்கோ திரில்லர் வகையான இந்தப் படத்தை நவீன் மணிகண்டன் இயக்கியுள்ளார்.


‘ஆந்தை’ திரைப்படம் போஸ்டர்

பிரமயுகம்

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி 70 வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து நடித்து வருகிறார். தற்போது வித்தியாசமான கதையம்சத்துடன் ஹாரர் திரில்லராக உருவாகி வரும் ‘பிரமயுகம்’ என்ற படத்தில் நடிக்கிறார். நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ‘பூதகாலம்’ மலையாள படத்தை இயக்கிய ராகுல் சதாசிவன் இயக்குகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பான் இந்தியா படமாக உருவாகும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.


‘பிரமயுகம்’ திரைப்படம் போஸ்டர் மற்றும் மம்மூட்டி

Updated On 29 Aug 2023 12:36 AM IST
ராணி

ராணி

Next Story