கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும், ஜோதிகாவும் இணைந்து நடித்திருக்கும் புதிய மலையாள திரைப்படமான ‘காதல் - தி கோர்’ நாளை வெளியாகவுள்ள நிலையில் குவைத் மற்றும் கத்தார் நாடுகள் இந்த திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளன.

தனது எதார்த்தமான நடிப்பினால் மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மம்முட்டியும், தமிழ் சினிமாவின் ஃபாண்டஸி பெண்ணாக விளங்கும் ஜோதிகாவும் இணைந்து அசத்தியுள்ள மலையாள திரைப்படம்தான் ‘காதல் - தி கோர்’. இப்படம் ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் ஸ்கரியாவால் எழுதப்பட்டு ஜியோ பேபியால் இயக்கப்பட்டுள்ளது. மம்முட்டி கம்பெனி தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடிகர் மம்முட்டியே இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் மாத்யூஸ் புலிக்கன் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் ஜிசு சென்குப்தா, முத்துமணி, ஜோஜி ஜான், சின்னு சாந்தினி என பல மலையாள திரை பிரபலங்களும் நடித்துள்ளனர்.

2022இல் படப்பிடிப்பு தொடங்கி வெற்றிகரமாக போஸ்ட் புரொடக்‌ஷன் முடிந்து நாளை படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த திரைப்படமானது மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் கத்தார் நாடுகளின் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கு காரணம் இத்திரைப்படம் ஓரின சேர்க்கையை முன்னிலைப்படுத்தியுள்ளதே. சமீப காலமாகவே இவ்விரு நாடுகளும் அவர்களின் கருத்தியல்களுக்கு பொருந்தாத பல இந்திய திரைப்படங்களை தடை செய்துவரும் நிலையில் இந்த திரைப்படமும் அவர்களின் கருத்தியலுக்கு மாறாகவே அமைந்துள்ளதால் தடை செய்யப்பட்டுள்ளது.


படத்தின் பிரமோஷனுக்காக பரபரப்பாக வேலை சென்று கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் கொச்சியில் படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் மம்முட்டி, ஜோதிகா உள்பட படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் மம்முட்டி, ‘படங்களுக்கு விமர்சனங்கள் எழுவது பொதுவானதே. இதை தடை செய்வதால் திரையுலகம் காப்பாற்றப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், திரைப்படங்களை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கென சொந்த கருத்துக்கள் வைத்திருப்பது மிக அவசியம். ஒரு படத்தை விமர்சிப்பது வேறு, கேலி செய்வது வேறு இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. எனவே, திரைப்படத்திற்கு எழும் விமர்சனங்களை தடை செய்வதால் திரையுலகை காப்பாற்ற முடியாது’ என்று திரைப்படத்திற்கு எழும் விமர்சனங்கள் குறித்து தனது கருத்தை பதிவு செய்தார்.

Updated On 27 Nov 2023 5:59 PM IST
ராணி

ராணி

Next Story