இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நடிகர்கள் என்றாலே எந்த அளவிற்கு பேரும் புகழும் கிடைக்கிறதோ அதே அளவிற்கு விமர்சிக்கப்படுவதும் உண்டு. ஆனால் அதற்கு ஒருசிலர் விதிவிலக்காக இருப்பார்கள். அவர்களில் ஒருவர்தான் நடிகை மடோனா செபாஸ்டியன். 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து இந்திய அளவில் ரசிகர்களை பெற்றிருக்கிறார். இப்போது ஒரே ஆண்டில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வர போராடும் பலருக்கு மத்தியில் குறிப்பிட்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தாலும் தனக்கான இடத்தை பிடித்திருக்கிறார் மடோனா. குறிப்பாக, கடந்த ஆண்டு வெளியான ‘லியோ’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் ட்வின் சிஸ்டராக நடித்து பலரின் மனதையும் கொள்ளையடித்தார். இவருடைய நடிப்பில் ஆண்டுக்கு ஒரு படம் என்று வெளியானாலும், வெளிநாட்டு பயணங்கள், போட்டோஷூட் என சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ட்ரெண்டிங்கிலேயே இருக்கிறார் இவர். தான் ஏன் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதில்லை? குறிப்பிட்ட கதைகளில் மட்டும் நடிப்பது ஏன்? என்பது குறித்தெல்லாம் பல நேர்க்காணல்களில் அவரே பகிர்ந்திருக்கிறார். திரைப்படங்கள் மீதான மடோனா செபாஸ்டியனின் பார்வை குறித்து இப்பகுதியில் காணலாம்.

மடோனாவின் திரை வளர்ச்சி

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் மடோனா செபாஸ்டியன். சிறுவயதிலிருந்தே டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் 15 வயதிலேயே தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து படிப்பிலும் கவனம் செலுத்திவந்த மடோனாவிற்கு நடிகையாகும் எண்ணம் சிறிதளவும் இல்லையாம். அதனால் தனது இளங்கலை படிப்பை பெங்களூருவில் சென்று படித்தார். மடோனா ஒரு பின்னணி பாடகியும்கூட. ஒரு மியூசிக் மோஜோவில் கலந்துகொண்ட இவருக்கு ‘பிரேமம்’ படத்தின் ஆடிஷனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த அனுபவம் குறித்து நேர்க்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார் மடோனா.


‘பிரேமம்’ படத்தின்மூலம் செலினாக தோன்றி மக்கள் மனதில் இடம்பிடித்த மடோனா

அதில், “நான் 15 வயதிலிருந்தே டிவி ஷோக்களில் ஆக்டிவாக இருந்தேன். அப்போதே நிறையப்பேர் நடிப்பதில் ஆர்வம் இருக்கிறதா? என என்னிடம் கேட்பார்கள். ஆனால் நான் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். ‘பிரேமம்’ படத்தில் நடிப்பதற்கு முன்பே கிட்டத்தட்ட 11 கதைகள் என்னிடத்தில் வந்தன. நடிப்பில் ஆர்வம் இல்லாததால் அதற்கெல்லாம் நான் நோ சொல்லிவிட்டேன். ‘பிரேமம்’ படத்தில் செலக்ட் ஆன பிறகும் நான் ஒரு நடிகையாக உருவாக தயாராகவில்லை. எனக்கு அதற்கான தைரியம் அப்போது இல்லை. முதலில் மரியா கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் என்னிடம் கேட்டார்கள். ஆனால் செலின் கேரக்டரும் என்னுடைய கேரக்டரும் ஒத்துப்போனதால் நான் அந்த கேரக்டர்தான் வேண்டுமென கேட்டேன். அப்போது அவர்கள் ஓகே சொல்லவில்லை. அதன்பிறகு ஒருநாள் அல்போன்ஸ் எனக்கு போன் செய்து, ‘அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாயா? என கேட்டார். அப்போது எனக்கு காய்ச்சல். தலைகூட சீவாமல், என்ன டிரெஸ் போட்டிருந்தேனோ அப்படியே முதல் ஷாட்டில் நடித்தேன். அப்போதே, ‘இந்த படம் உன்னுடைய வாழ்க்கையையே மாற்றப்போகிறது’ என அல்போன்ஸ் என்னிடம் சொன்னார். அதேபோல் நடந்திருக்கிறது” என்று கூறினார்.

கே.வி ஆனந்துடனான அனுபவம்

‘பிரேமம்’ வெற்றிக்குப்பிறகு, விஜய் சேதுபதி ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், வசூல்ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் அந்த படம் மடோனாவிற்கு தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. அடுத்து மலையாளத்தில் வெளியான ‘கிங் லயர்’ திரைப்படமும் அதேபோல் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதற்கிடையே ‘பிரேமம்’ படத்திற்கு இந்திய அளவில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டதால் அதனை பல மொழிகளில் ரீமேக் செய்தார்கள்.


கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ‘கவண்’ படத்தில் நடித்தபோது நிறைய கற்றுக்கொண்டேன் - மடோனா

அப்படி தெலுங்கு பிரேமம் படத்திலும் செலின் கதாபாத்திரத்தை மடோனாவே ஏற்று நடித்தார். ஏற்கனவே மலையாள செலினாக பரிச்சயமாகியிருந்த இவருக்கு தெலுங்கு ரீமேக் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கே.வி ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘கவண்’ படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்த ‘பவர் பாண்டி’ திரைப்படத்தில் நடித்தார். இரண்டுமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தன. இந்த படங்களில் நடித்த அனுபவம் குறித்து மடோனா கூறுகையில், “தனுஷ் தனக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். சில சீன்களை அவரே நடித்தும் காட்டுவார். அதேபோல், கே.வி. ஆனந்த் சார் படத்தில் நடித்தபோது நிறைய கற்றுக்கொண்டேன். அதற்கு முன்பு நடித்த மற்ற படங்களைவிட அந்த படத்தில் எனது கேரக்டர் முற்றிலும் வித்தியாசமானது. அப்போது ஆனந்த் சார் என்னிடம் வந்து, ‘இந்த கேரக்டர் கொஞ்சம் பரபரப்பான மனநிலைக்கொண்ட பெண்ணுடையது. ஆனால் நீங்கள் மிகவும் மென்மையாக நடிக்கிறீர்கள். கைகளை சற்று ஆட்டி, ஆட்டி பேசவேண்டும்’ என்று சொன்னார். அப்போதுதான் அந்த கேரக்டரையே நான் புரிந்துகொண்டேன். தினமும் ஆனந்த் சார் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். ஒருநாள் நான் அழுதேவிட்டேன். அப்போது சாரிடம் சென்று உங்களிடம் ஒரு நிமிடம் பேசவேண்டுமென்று கூப்பிட்டேன். அவர் பயந்துபோய் என்னவாயிற்று? என கேட்டுக்கொண்டே வந்தார். அப்போது அவரிடம், நீங்கள் மிகவும் டென்ஷனாக என்னிடம் பேசினால் நான் அழுதுவிடுவேன் என்று சொன்னேன். உடனே அவர் என் மனநிலையை புரிந்துகொண்டு அதிலிருந்து என்னிடம் மிகவும் ஸ்வீட்டாக நடந்துகொண்டார்” என்று தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் மடோனா.


மடோனாவை மக்கள் மனதில் நிறுத்திய கதாபாத்திரங்கள்

மனங்களை வென்ற எல்சா தாஸ்!

தொடர்ந்து மலையாளம், தமிழ் என நடித்துவந்த மடோனா, 2021ஆம் ஆண்டு ‘கோட்டிகோபா 3’ படத்தின்மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் மீண்டும் சாய் பல்லவியுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து ஓரிரு படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மடோனா திரையுலகிலிருந்து விலகுகிறார் என பேச்சு அடிபட்ட நிலையில், கடந்த ஆண்டு வெளியான ‘லியோ’ திரைப்படத்தின்மூலம் மீண்டும் வெற்றி நாயகிகளில் ஒருவரானார் மடோனா. அந்த படத்தில் ப்ளாஷ்பேக்கில் மட்டுமே வந்திருந்தாலும் விஜய்யின் இரட்டை சகோதரியாக தோன்றினார். குறிப்பாக, லியோ தாஸ் மற்றும் எல்சா தாஸ் சேர்ந்து ஆடிய, ‘நான் ரெடிதான் வரவா’ பாடல் சமூக ஊடகங்களை தெறிக்கவிட்டது. பொதுவாகவே விஜய் பாடல்கள் என்றாலே மிகுந்த வரவேற்பு இருக்கும். இந்நிலையில் ரீல்ஸ் ட்ரெண்டீஸ் அனைவருமே அதே கெட்டப்பில் அந்த பாடலுக்கு ஆடி, எல்சா தாஸை மிகவும் கொண்டாடினார். ‘லியோ’ திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்? என நீண்ட நாட்களாக ரசிகர்கள் கேள்வி எழுப்பிவந்த நிலையில், மடோனா தனது கதாபாத்திரத்தை மிகவும் சீக்ரெட்டாகவே வைத்திருந்தார். படத்தில் எல்சா தாஸ் கதாபாத்திரத்தை ரசிகர்களே எதிர்பார்த்திராத நிலையில் திடீரென விஜய்யின் சகோதரியாக திரையில் தோன்றி ரசிகர்களை பிரம்மிக்க வைத்தார்.


லியோ திரைப்படத்தில் எல்சா தாஸாக விஜய்யுடன் நடித்தபோது

‘லியோ’ படம் அனுபவம் குறித்து மடோனா கூறுகையில், "1500க்கும் மேற்பட்ட டான்சர்களுடன் சேர்ந்து ஆடும்போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆரம்பத்திலிருந்து அந்த கதாபாத்திரத்தை சீக்ரெட்டாகவே வைத்திருந்தாலும் ஆடியோ லாஞ்ச்சின்போது அதில் பங்கேற்று அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் அது நடைபெறாததால் சீக்ரெட்டாகவே வைத்துவிட்டார்கள். இந்த படத்தில் நடித்தது முழுக்க முழுக்க வித்தியாசமான அனுபவமாக இருந்தது. விஜய் சாருக்கு கொடுத்த என்ட்ரி போலவே எனக்கும் மாஸ் என்ட்ரி வைத்திருந்தார்கள். முதலில் இந்த படத்தில் நடிக்க என்னை அழைத்தபோது one-line கதை மட்டும்தான் என்னிடம் சொல்லியிருந்தார்கள். என்ன மாதிரி கேரக்டர் என்றும் முன்பே சொல்லவில்லை. ஷூட்டிங்குக்கு வந்தபிறகுதான் ஒவ்வொரு சீனாக சொன்னார்கள். எனக்கும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. சண்டைக் காட்சிகளில் நடிக்க அன்பறிவ் மாஸ்டர் மிகவும் உதவியாக இருந்தார்.

இதுபோன்ற ஒரு கதையில் விஜய் சாருடன் சேர்ந்து நடித்ததையே பெரிய விஷயமாக பார்க்கிறேன். அப்போது கேரளாவில்கூட இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். லோகேஷ் என்னிடம் கதை சொன்னபோது, ‘விஜய்யின் சகோதரியாக நடிக்கப்போகிறீர்கள்’ என்று சொன்னார். ‘மற்ற படங்களைப்போல பாவமான தங்கச்சி கதாபாத்திரமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நம்பி வாங்க’ என்று சொன்னார். நான் விஜய்யுடன் நடிக்கிறேன் என்று அம்மா தவிர யாரிடமும் சொல்லவில்லை” என்று பகிர்ந்திருந்தார்.


ரசிகர்களை கிறங்கடிக்கும் மடோனாவின் போட்டோஷூட் புகைப்படம்

சோஷியல் மீடியாக்களில் கலக்கும் மடோனா

எப்போதும் தன்னை ஒரு சைலண்ட் கேரக்டர் என சொல்லும் மடோனா, எப்போதும் தனது சகோதரி மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதையே அதிகம் விரும்புவாராம். வெளியே செல்வதற்கும் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுவதற்கும் தனக்கு மிகவும் பயமாக இருக்கும் என சொல்லும் இவர் எப்போதும் தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாகவே இருக்கிறார். குறிப்பாக, பிற நடிகைகள் கால்ஷீட்டுகளுக்கு மத்தியில், கொஞ்சம் ரிலாக்ஸாகலாம் என வெளிநாடுகளுக்கு செல்லும் நிலையில், இவர் வெளிநாட்டு பயணங்களுக்கு நடுவில்தான் தனது கால்ஷீட்டையே கொடுக்கிறாராம். அந்த அளவிற்கு எப்போதும் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சென்றுவரும் மடோனா, அங்கிருந்து பல்வேறு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனது ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். அதுபோக, பாடல் பாடி போஸ்ட் செய்வது, போட்டோஷூட் என எப்போதும் தனக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டும் செய்துவருகிறார் என இவரை புகழ்கின்றனர் நெட்டிசன்கள். அதனால்தான் என்னவோ வதந்திகளிலிருந்து சற்று தள்ளியே இருக்கிறார் மடோனா.

Updated On 10 Jun 2024 11:59 PM IST
ராணி

ராணி

Next Story