இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் திரை இசை உலகில் தவிர்க்க முடியாத ஒரு குரல் என்றால் அது நிச்சயம் பொன்விழா கண்ட பாடகியான எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலாக மட்டும் தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு துள்ளல் பாடல்கள் மட்டுமில்லாது, பக்தி பாடல்கள் வாயிலாகவும் பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்திய `இவரது மயக்கும் குரல் ஒலிக்காத அம்மன் கோயில்களே இல்லை என்று சொல்லலாம். இன்றைய தலைமுறையினருக்கு வேண்டுமானால் எல்.ஆர்.ஈஸ்வரி யார் என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால், அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் முழுவதும் அதிகாலையிலேயே ஒலிக்கும் 'செல்லாத்தா எங்க மாரியாத்தா' என்ற இந்த ஒரு பாடலே சொல்லும் அவர் யார் என்பதை. இப்படி தமிழ் மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் பாடல்களைப் பாடிய எல்.ஆர்.ஈஸ்வரி, அம்பிகையின் ஆற்றல் அதிகரித்து காணப்படும் நவராத்திரி காலத்தில், துன்பம் போக்கும் துர்க்கை அம்மனை போற்றும் விதமாகவும் பல பாடல்களை பாடியுள்ளார். இப்படிப்பட்ட தெய்வ அருள் பெற்ற எல்.ஆர்.ஈஸ்வரி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ஆரம்பகால வாழ்க்கை

பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அன்டனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா தம்பதியருக்கு சென்னையில் 1939-ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி மூத்த மகளாக பிறந்தவர்தான் “லூர்துமேரி ராஜேஸ்வரி” என்ற இயற்பெயர் கொண்ட எல்.ஆர்.ஈஸ்வரி. ஒரு சிறந்த சங்கீத பரம்பரையின் வாரிசு என்பதாலேயோ என்னவோ, இவருக்கு சிறு வயதிலேயே இசை ஆர்வம் என்பது அதிகமாகவே இருந்தது . இந்த சமயம் எல்.ஆர்.ஈஸ்வரியின் தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டுடியோவில் குழு பாடகியாக இருந்தார். கணவனை இழந்த அவர் சினிமாவில் கோரஸ் பாடி, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டே தனது பிள்ளைகளை வளர்த்து வந்ததால், பள்ளிக் கல்வியை முழுமையாக முடித்த எல்.ஆர்.ஈஸ்வரியால் மேற்கொண்டு பட்டப்படிப்பு படிக்க முடியாமல் தனது 16 வயதிலேயே அம்மாவோடு இணைந்து சினிமாவில் கோரஸ் பாட தொடங்கினார். 1954-ஆம் ஆண்டு வெளிவந்த ‘மனோகரா’ படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் “இன்ப நாளிலே இதயம் பாடுதே” என்ற பாடலை ஜிக்கி குழுவினர் பாடினர். அப்பாடலில் தனது அம்மாவுடன் இணைந்து பாடி, ஒரு குழு பாடகியாக தனது இசை பயணத்தை தொடங்கினார் எல்.ஆர்.ஈஸ்வரி. இப்படியே பல படங்களுக்கு குழு பாடகியாகவே பாடி வந்த இவர், ஒரு நாள் ஏ.பி.நாகராஜன் தயாரித்த ‘வடிவுக்கு வளைகாப்பு’ என்ற படத்திற்கு கோரஸ் பாட அவரது அம்மாவுடன் சென்ற போது பாடலின் இடையே “ஹம்மிங்” பாட வேண்டிய பெண் அன்று வராததால், தற்செயலாக அந்தப் பாட்டுக்கு ஈஸ்வரி “ஹம்மிங்” கொடுத்தாராம். இதுதான் அவர் முதன் முதலில் சினிமாவிற்கு கொடுத்த தனி குரல். இதைக் கேட்ட ஏ.பி.நாகராஜனும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் “உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. நீ எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய், பார்!” என்று மிகவும் பாராட்டியது மட்டுமின்றி தொடர்ந்து இருவரும் தங்களது படங்களில் பாடவும் வாய்ப்பளித்தனர்.


இளமையில் எல்.ஆர்.ஈஸ்வரி

சினிமாவில் திருப்புமுனை

ஏ.பீம்சிங் இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் ‘பாசமலர்’. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்து மகத்தான வெற்றி பெற்ற இப்படத்தில் "வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ'' என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார். இந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி, பட்டி தொட்டியெல்லாம் அன்று எதிரொலித்தது. இதன் மூலம் தமிழ்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் எல்.ஆர்.ஈஸ்வரி. மேலும் அதுவரை சிறிய படங்களில் புதுமுக இளம் நடிகைகளுக்கு மட்டுமே பின்னணி பாடி வந்த இவர், தொடர்ந்து, ‘ஊட்டி வரை உறவு’ படத்தில் வரும் ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள், ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் 'பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக் கூடாது', ‘ரகசிய போலீஸ் 115’ படத்தில் கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ, ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் வரும் மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும் , ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தில் கேட்டுக்கோடி உருமி மேளம்,‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தில் முத்து குளிக்க வாரீகளா, ‘சிவந்த மண்' படத்தில் பட்டத்து ராணி பார்க்கும் பார்வை போன்ற பாடல்களை பாடி தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இதில் பட்டத்து ராணி பாடலை கேட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எல்.ஆர்.ஈஸ்வரியை அழைத்து, எவ்ளோ அருமையா பாடியிருக்கம்மா! என்று வியந்து ஒருபுறம் பாராட்ட, இன்னொரு புறம் இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கரும் சென்னைக்கே வந்து எல்.ஆர்.ஈஸ்வரியை நேரில் பாராட்டினாராம். இது தவிர இவர் பாடிய பல்வேறு கிளப் டான்ஸ் பாடல்கள் காலத்தால் என்றும் அழியாதவையாக மாறியதோடு, எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு புகழையும் சேர்த்தன.


திரைப்படங்களில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் காட்சிகள்

அம்மன் பாடல்களின் நாயகி

ஈஸ்வரியின் திருநாமத்தை பாடி வரும் இந்த ராஜேஸ்வரி கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். சினிமாவில் திரைப்பின்னணி பாடகியாக மட்டுமே பயணித்து வந்த இவர் 1985 களுக்குப் பிறகு தான் அம்மனுக்கான பாடல்களை பாடத் தொடங்கினார். அதிலும் விரகதாபம்.. காமெடி கலாட்டா.. கிளப் டான்ஸ்.. மெலோடி என்று எல்லா வகையான பாடல்களையும் பாடி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தவர், அதற்கு நேர்மாறாக எல்லா வகையான ஆன்மீக பாடல்களையும், குறிப்பாக அம்மன் பாடல்களை பாடி தன் வசீகரிக்கும் குரலால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பக்தர்களையும் கட்டிப்போட்டார். இதில் அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீங்கள் எங்கு திரும்பினாலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒலிக்காத அம்மன் பாடல்களே இருக்காது எனும் அளவிற்கு புகழ் பெற்ற எத்தனையோ பாடல்கள் இன்றைக்கும் கேட்கப்பட்டு வருகிறது. அதிலும் திருவிழாக்களில் மைக்செட்காரர்கள், பக்தர்களை ஈர்க்கக் கையாளும் முதல் வழி, எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் இடம்பெறும் பாடல்களைத்தான். மாரியம்மன் கோயிலிலிருந்து `செல்லாத்தா... செல்ல மாரியாத்தா’ எனும் காந்தக் குரலைக் கேட்டதும், சற்று நேரம் தூங்கலாம் என்று இருப்பவர்கள் கூட உற்சாகமாக எழுந்து அன்றைய தினத்தின் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த அளவிற்கு புகழ் வாய்ந்த இப்பாடலைத் தாண்டி இன்னும் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். இதன் மூலம் அம்மன் பாடல்களின் நாயகி என போற்றப்படும் அளவிற்கு புகழ்பெற்ற எல்.ஆர்.ஈஸ்வரி, தமிழ்நாட்டில் பெரும்பாலும் சென்று பாடாத கோவில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகள் நடத்தினார். அப்படி அவர் பாடிய சாகாவரம் பெற்ற ஆயிரக்கணக்கான பக்தி பாடல்கள், லட்சக்கணக்கான ரசிகர்களை அவருக்குத் தேடித்தந்தன.


பாடல் ரெக்கார்டிங்கின் போது எல்.ஆர்.ஈஸ்வரி

மறக்க முடியாத அம்மன் பாடல்கள்

அம்பிகையின் வடிவங்களில் மிகவும் சக்தி வாய்ந்த வடிவமாக கருதப்படுவது துர்கையின் வடிவம். தீய சக்திகளான அரக்கர்களிடம் இருந்து, உலகத்தை காப்பதற்காக அனைத்து தெய்வங்களும் தங்களிடம் உள்ள சக்திகளை அன்னைக்கு அளித்ததாகவும், துர்கா தேவி அந்த சக்திகளைக் கொண்டு ஒன்பது நாட்கள் தவம் இருந்து அசுரனை வதம் செய்ததாகவும் புராணங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட இந்த நவராத்திரி நாளில் கேட்கும் வகையில், மெய்யுருக பாடுகிற எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலும், அவரின் பாடல்களும் ஆடி மாதம் மட்டுமல்ல எப்போது கேட்டாலும் நம் உள்ளங்களை பக்திப் பரவச நிலைக்கு கொண்டு சென்றுவிடும். அந்த அளவிற்கு எல்.ஆர்.ஈஸ்வரிக்கு புகழ் வாங்கி கொடுத்த எத்தனையோ பாடல்கள் இன்றும் கிராமம் தொடங்கி நகரம் வரை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இன்றும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன.


எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் அம்மன் புகைப்பட காட்சி

அந்த வகையில், ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம், கண்ணபுர நாயகியே, ஈஸ்வரியே மகமாயி, செவப்பு சேலை கட்டிக்கிட்டு, முத்துமாரி அம்மனுக்கு என நவராத்திரி விழாவையும் சிறப்பிக்கும் விதமாக துர்க்கை அம்மனையும் போற்றி எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். இது தவிர பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும் விதமாக தாயே கருமாரி - எங்கள் தாயே கருமாரி , மாரியம்மா எங்கள் மாரியம்மா, அம்பிகையைக் கொண்டாடுவோம், அங்காளம்மா எங்கள் செங்காளம்மா, கருணை உள்ளம் கொண்டவளே கருமாரி, கற்பூர நாயகியே கனகவல்லி, வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள், அம்பிகையைக் கொண்டாடுவோம் என எண்ணற்ற அம்மன் பாடல்களை பாடி பக்தியில் நம்மை திளைக்கச் செய்துள்ளார். இதனாலேயே அம்மன் பாட்டு என்றாலே L.R. ஈஸ்வரி அம்மாதான் என்று சில வினாடிகளில் மனதில் வந்து நின்றுவிடும் இவர் எத்தனை காலங்கள் கடந்தாலும் நீங்கா நினைவுகளோடு அம்மனோடு அம்மனாக நம் உள்ளங்களில் என்றும் நிறைந்து இருப்பார்.

Updated On 31 Oct 2023 12:13 AM IST
ராணி

ராணி

Next Story