லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் அறிவிக்கப்பட்டது முதலே படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து வைரலாகி வந்த நிலையில், அண்மையில் வெளியான 'லியோ' திரைப்பட டிரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ள 'லியோ' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒருபுறம் இருக்க, ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த மாதம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனால் இந்திய திரையுலகின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக அடையாளம் பெற்றுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த சுவாரஸ்யமான தொகுப்பை கீழே காணலாம்...
லோகேஷின் ஆரம்ப கால வாழ்க்கை
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மல்டி ஹீரோஸ் கதையை முன்னிறுத்தி தொடர் வெற்றிகளை குவித்து வரும் இவர் கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1986 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி பிறந்தார். தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பொள்ளாச்சியிலே முடித்த லோகேஷ், உயர்கல்வியில் முதுகலை படிப்பிற்காக சென்னை வந்தார். இங்கேயே தங்கி முதுகலை கல்வியை முடித்தவர் பின்னர் வங்கி ஒன்றில் பணியில் சேர்ந்தார். என்னதான் வங்கிப்பணியாக இருந்தாலும் லோகேஷிற்கோ அந்த பனியின் மீது பெரிதாக நாட்டம் இல்லை. காரணம் சிறு வயதில் இருந்தே சினிமா மீது அவருக்கு இருந்த காதல் தான். அதுவும் கமல் படங்களான ‘சத்யா’, ‘விக்ரம்’, ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களின் கேசட்டுகளை வாடகைக்கு எடுத்து வந்து திரும்ப திரும்ப பார்ப்பாராம். அந்த அளவிற்கு தனக்கு பிடித்த சினிமாவிற்குள் சென்று பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் துளிர் விட, அதற்காக தான் பார்த்துக் கொண்டிருந்த வங்கி வேலையை முழுமையாக விட்டு விடலாம் என்று எண்ணி அதனை தனது மனைவியிடம் கூறியுள்ளார். அவரும் நான் வேலைக்குச் சென்று குடும்பத்தை பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் கனவை நோக்கி பயணம் செய்யுங்கள் என்று உற்சாகப்படுத்தி அனுப்ப, அவரும் அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குழந்தை மற்றும் இளமை பருவத்தில்
அப்படிதான் 2011 மற்றும் 12 ஆம் ஆண்டில் இருந்து லோகேஷின் சினிமா எனும் கனவு பயணம் தொடங்கியது. அங்கு ஆரம்பித்த அவரின் இந்த பயணம் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நண்பர்களின் உதவியுடன் 2016 ஆம் ஆண்டு முதலில் அவியல் என்ற பேனரில் களம் என்ற குறும்படத்தை எடுத்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் லோகேஷ் . இதில் பணியாற்றிய போது தான் பிரபு என்பவர் லோகேஷின் கதை எழுதும் விதம் பிடித்து படத்திற்கான கதை எழுது. இணைந்து பணியாற்றலாம். நான் தயாரிக்கிறேன் என கூற மாநகரம் கதையை உருவாக்கியுள்ளார். 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் லோகேஷிற்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஆனாலும் மீண்டும் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக போராட வேண்டியிருந்தது.
மாநகரம் திரைப்படத்தின் போஸ்டர்
அடுத்தடுத்து தொடர் வெற்றிகள்
இன்று லோகேஷின் வளர்ச்சியை பார்க்கும் பலரும் எளிதாக சொல்லி விட்டு செல்வது அவருக்கு என்னப்பா கமல், தளபதி விஜய் போன்றவர்களை எல்லாம் வச்சு இயக்குகிறார். நல்லாதான் சம்பாதிக்கிறார் என்பதுதான். ஆனால் அவை எல்லாம் வெகு சாதாரணமாக நிகழ்ந்துவிடுவதில்லை. மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்த வாய்ப்பு வரும் வரை சும்மா இருக்க கூடாது என்று அமேசான் பிரைமில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘வெள்ளை ராஜா’ என்ற வெப் தொடரில் எழுத்தாளராக பணியாற்றினார். இதற்கிடையில் மன்சூர் அலிகானை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டு கைதி படத்தின் கதையை எழுதி முடிக்க, இந்த நேரம் எதேச்சையாக ஒரு நாள் நடிகர் கார்த்தியை சந்தித்த லோகேஷ் அந்த கதையை அவரிடம் கூறியுள்ளார். நடிகர் கார்த்திக்கும் அந்த கதை மிகவும் பிடித்துவிடவே உடனே நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். அப்படி உருவான ‘கைதி’ படம் 2019ஆம் ஆண்டு வெளிவந்து லோகேஷிற்கு மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. என்னதான் இவரது படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்தாலும், ஓவ்வொரு படத்திற்கும் இடைவெளி எடுத்து, பலகட்ட போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்படி ‘கைதி’ படத்தின் வெற்றிக்கு பிறகும் வாய்ப்புக்காக காத்திருந்த போதுதான் விஜய்யை சந்திக்கக் கூடிய சூழல் ஏற்பட்டு ‘மாஸ்டர்’ படத்தில் ஒப்பந்தம் ஆனார். 2021 ஆம் ஆண்டு லோகேஷ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவந்த இப்படமும், இப்படத்தின் பாடல்களும் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.
'வெள்ளை ராஜா' வெப் சீரிஸில் பாபி சிம்கா, 'கைதி' படத்தில் கார்த்தி மற்றும் 'மாஸ்டர்' விஜய்
இதனால் திரையுலகம் கொண்டாடும் இளம் இயக்குனர்களின் பட்டியலில் இடம்பெற்ற லோகேஷ், உடனே தனது கனவு நாயகன் மற்றும் மானசீக குருவாக தான் வெகு தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்த கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்து இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ‘விக்ரம்’ படத்தினை எடுத்து ஆச்சர்யத்தையும், வியப்பையும் ஏற்படுத்தினார். தன்னை பார்த்து, ரசித்து வளர்ந்த ரசிகர் ஒருவர், நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படியொரு வெற்றி மகுடத்தை தனக்கு பரிசாக அளித்ததை நினைத்து உலக நாயகன் கமல்ஹாசனும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானதோடு, கார் ஒன்றையும் லோகேஷிற்கு பரிசாக வழங்கி கவுரவித்தார். விக்ரம் படத்தின் வெற்றியை கமல் மட்டுமின்றி இருவரின் ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர். இந்த நிலையில் தான் தளபதி விஜய்யுடன் மீண்டும் கை கோர்த்துள்ள லோகேஷ் தற்போது ‘லியோ’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். மல்டி ஸ்டார் கதைக்களமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 19 ஆம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுவரை தொடர் வெற்றியை பதிவு செய்த லக்கேஷ் இப்படத்திலும் பதிவு செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இயக்குனர் லோகேஷுக்கு, நடிகர் கமல் கார் பரிசளித்த போது
லோகேஷ் உருவாக்கிய புதிய உலகம்
பொதுவாகவே "சினிமாட்டிக் யுனிவர்ஸ்" எனப்படுவது ஒரு படத்தில் இருக்கும் கதாபாத்திரம், வேறொரு படத்திலும் அதே பெயரில் இடம்பெற்று அந்த படத்தின் கதைக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருப்பது போல ஒரு நிகழ்வை உருவாக்கி, அடுத்த கட்டத்திற்கு படத்தை எடுத்து செல்லும் முயற்சியின் ஒரு தொடர் சங்கிலியை தான் இந்த பெயரில் அழைக்கிறார்கள். அந்த வகையில், “சினிமாட்டிக் யுனிவர்ஸ்” மற்றும் “மல்டி யுனிவர்ஸ்” என்கிற விஷயங்கள் தற்போது மக்களிடையே பெரும் கவனத்தை பெற்று வருகிறது. இந்த மாதிரியான வழக்கம் "மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்" போல ஹாலிவுட் திரைப்படங்களிலேயே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் என்ற இயக்குனரின் வருகைக்கு பின்னர் தமிழ் சினிமாவிலும் இப்படியான ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. மாநகரம் படத்தில் ஆரம்பித்த லோகேஷ் கனகராஜின் இந்த முயற்சி, அடுத்தடுத்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களிலும் தொடர்ந்தது. இப்படங்கள் அனைத்திலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததோடு, சில கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த படங்களிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு எடுத்துக்காட்டாக ‘கைதி’ படத்தின் கிளைமேக்ஸில் தில்லியை கண்டதும் அடைக்கலம் அதிர்ச்சியடைவதும், விக்ரமின் கிளைமேக்ஸில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை புகுத்தி அதில் அடைக்கலம், அன்பு இடம்பெற்றிருக்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருந்ததையும் சொல்லலாம். இதனால் LCU என்கிற பெயரில் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்கிற வார்த்தை சமீபகாலமாக டிரெண்ட் ஆகி வரும் நிலையில், தற்போது விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கியுள்ள ‘லியோ’ படமும் LCU வில் இணைந்துள்ளதா என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
லோகேஷ் கனகராஜின் "மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்" பாணி திரைப்படங்கள்
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 'லியோ'
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘லியோ’. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். சர்வதேச அளவில் வருகிற 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22-ஆம் தேதி படத்தின் முதல் சிங்கிளான ‘நா ரெடி’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி லைக்குகளையும் அள்ளிக் குவித்தது. படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விஜய்யின் குட்டி ஸ்டோரிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக வந்த அறிவிப்பு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த படத்தின் டிரெய்லர் கடந்த 5 ஆம் தேதி மாலை வெளியானது. 2.43 நிமிடம் ஓடும் டிரெய்லரில் விஜய் தொடங்கி அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் என காட்சிகள் மிரள வைக்கின்றன. டிரெய்லரில் ஆரம்பம் முதல் முடிவு வரை விஜய் பேசும் வசனங்கள் மாஸ்ஸாக இருந்தன. மேலும் விஜய்யின் மிரட்டல் தோற்றமும், காஷ்மீரின் அழகும், அனிருத்தின் பிஜிஎம்-மும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளன. “ஊரை ஏமாத்தலாம்… உலகை ஏமாத்தலாம்… என்னை ஏமாத்த முடியாது” என்று இடம்பெறும் வசனம் நம் கவனத்தை ஈர்க்கிறது. டிரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே பல கோடி பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், வரும் 19 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ‘லியோ’ திரைப்படம் வெளிவர உள்ளதை முன்னிட்டு படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் படம் வெற்றி பெற வேண்டி சில தினங்களுக்கு முன்பு தனது உதவியாளர்களுடன் திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரையாகச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது கோவிந்தா.. கோவிந்தா என்று முழக்கமிட்டவாரே லோகேஷ் கனகராஜ் பாதயாத்திரை சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய்யின் 'லியோ' திரைப்பட காட்சிகள் மற்றும் ஆடியோ லான்ச் காட்சி
இனி நடிப்பு... தயாரிப்பு... தான்
தற்போது இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலரும் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்கியுள்ள லோகேஷ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171 திரைப்படம், கார்த்தியின் 'கைதி 2' மற்றும் சூர்யாவுடன் ஒரு படம் என மிகவும் பிஸியாக இருக்கிறார். இவ்வாறு பிசியாக இருக்கும் லோகேஷ் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் தயாரிக்கும் முதல் படத்தை லோகேஷின் நெருங்கிய நண்பரும், மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியவருமான ரத்னகுமார் என்பவர்தான் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாலிவுட்டிலும் மூன்று முக்கிய ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருதாகவும் கூறப்படுகிறது. அதேபோன்று இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றை தாண்டி நடிகராக களமிறங்கவும் வாய்ப்பிருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் லோகேஷ் மற்றும் அவரது நண்பர் ரத்னகுமார்
இந்த தகவல்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது நமக்கு தெரியாவிட்டாலும் கொஞ்சம் இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த லோகேஷ் "நான் இந்த துறையில் நீண்ட காலம் பயணித்து அதிக படங்கள் எடுக்க வேண்டும் என்றெல்லாம் விரும்பவில்லை. 10 படங்களுக்கு மேல் இயக்க மாட்டேன். அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தற்போது 5வது படமாக லியோவை இயக்கியுள்ளேன். எனக்கு படத்தின் எண்ணிக்கையை விட விஜய் அண்ணாவுடன் இருப்பது மிகவும் பிடிக்கும். மக்களுக்கு பிடிப்பதால் இப்போது தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறேன்" என்று கூறியிருந்தார். எது எப்படி இருந்தாலும் ரசிகர்களின் மனதறிந்து சூப்பர் ஹிட் படங்களையாக கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ், ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வெற்றி பெற வாழ்த்துவோம்.