'லியோ' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'தலைவர் 171' திரைப்படத்திற்கான அப்டேட்டை வழங்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ்.
லோகேஷ் மற்றும் சூப்பர் ஸ்டாரின் கூட்டணி
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே உச்சம் தொட்ட இயக்குநராக சினிமாத் துறையில் வளம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து வெளிவந்த 'கைதி', 'மாஸ்டர்' மற்றும் 'லியோ' போன்ற திரைப்படங்களின் வெற்றியானது இயக்குநர் லோகேஷுக்கு, அளவற்ற பெயரையும், புகழையும் தேடித் தந்தது. மேலும் இதுவரை இவர் இயக்கியுள்ள ஐந்து திரைப்படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சனங்கள் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு அசைக்க முடியாத ஆதரவையும், இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி இருக்கிறது.
அடுத்தகட்டமாக லோகேஷின் தொடர் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட்டணியில் இணைகிறார் இயக்குநர் லோகேஷ். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 171’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தலைவர் 171
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர் 171’ திரைப்படமானது, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்று முன்னதாகவே படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் தலைவர் 171க்கான அப்டேட் குறித்து கேட்டபொழுது "படத்தின் ஷூட்டிங் 2024 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவிருக்கிறது. அடுத்த வாரத்தில் இருந்து திரைக்கதையை அமைக்க இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த அறிவிப்பானது ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் லோகேஷ் மற்றும் நடிகர் கமல் ஹாசனின் கூட்டணியில் வெளிவந்த ‘விக்ரம்’ திரைப்படமானது நடிகர் கமலுக்கு சிறந்ததொரு வெற்றிப்படமாக அமைந்திருந்தது. அதைப்போலவே ‘தலைவர் 171’ திரைப்படமானது சூப்பர் ஸ்டாருக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.