இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகம் முழுவதும் பெரிதும் விரும்பப்பட்ட ‘பேட் மேன்’ ஹீரோ உடல்நலக்குறைவால் காலமான செய்தி பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அப்படியே டோலிவுட் பக்கம் திரும்பினால் குஷ்பு, ஹன்சிகாவைத் தொடர்ந்து சமந்தாவிற்கு கோவில் கட்டி அசத்தியிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர். விஜய்யின் கடைசிப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்ஸ் தொடர்ந்து வெளியாகி அவருடைய ரசிகர்களை ஒருபுறம் மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் மற்றொருபுறம் அவர் நடிப்புத்துறையிலிருந்து விலகுவதால் வருத்தத்தில் இருக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழி படங்கள் குறித்தும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த வாரம் அதிகம் பகிரப்பட்ட சினிமா டாக்ஸ் உங்களுக்காக...

அடுத்தடுத்து கேமியோக்களில் கார்த்தி!

தெலுங்கு நடிகர் நானி ‘சூர்யாஸ் சாட்டர்டே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஹிட் 3’ படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துவருகிறார். இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார் கார்த்தி. ஏற்கனவே சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் கேமியோ ரோலில் கலக்கியிருந்த கார்த்தி, அதனைத் தொடர்ந்து இந்த படத்திலும் கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார்.


நானி ஹீரோவாக நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் கார்த்தி

தற்போது ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவரும் இவர், அந்த படம் முடிந்த கையோடு, ‘ஹிட் 4’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் சூழலில், அதன் லீட் மூன்றாம் பாகத்தில் இருப்பதால், அதில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்க, பிரசாந்தி திபிர்னேனி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகிற மே 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மிரட்ட தயாராகும் டிமான்ட்டி காலனி 3

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஹாரர் - திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதில் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன் மற்றும் வி.ஜே அர்ச்சனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


‘டிமான்ட்டி காலனி’ மூன்றாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதாக அறிவிப்பு

இந்த படமும் ரூ.90 கோடிக்கும் மேல் வசூல்சாதனை புரிந்த நிலையில், தற்போது ‘டிமான்ட்டி காலனி’ மூன்றாம் பாகம் குறித்து அறிவித்துள்ளார் அஜய் ஞானமுத்து. முதல் இரண்டு பாகங்களைவிட மூன்றாம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கவிருப்பதாகவும், இதன் படபிடிப்பு ஜப்பானில் நடைபெறவிருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கொந்தளித்த திவ்யபாரதி

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷும் அவருடைய மனைவி சைந்தவியும் பிரியப்போவதாக கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டனர். இருந்தாலும் தங்களுடைய நட்பு தொடரும் என்றும், இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறியிருந்தனர். சொன்னதைப்போலவே, திரைப்படங்களில் இணைந்து பாடியதுடன், ஜிவியின் மேடை நிகழ்ச்சியிலும் பாடினார் சைந்தவி. இவர்களுடைய புரிதல் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இருவரும் மீண்டும் ஒன்றுசேர வேண்டுமென கோரிக்கை விடுத்துவந்தனர். இதனிடையே ஜி.வி தனது காதல் மனைவி சைந்தவியை பிரிய நடிகை திவ்யபாரதிதான் காரணமென்றும், ‘பேச்சுலர்’ படத்தில் சேர்ந்து நடித்தபோது ஜிவியுடன் நெருக்கம் ஏற்பட்டதாலேயே அவர் தனது மனைவியை பிரிந்ததாகவும் பேச்சுகள் அடிபட்டன.


ஜி.வி பிரகாஷ் - சைந்தவி விவாரகரத்தில் தனக்கு சம்பந்தமில்லை என நடிகை திய்வ பாரதி அறிக்கை

தற்போது மீண்டும் இந்த ஜோடி ‘கிங்க்ஸ்டன்’ படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறது. அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின்போதே திவ்யபாரதி, தனக்கும் ஜிவிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார். ஆனாலும் நெட்டிசன்கள் தொடர்ந்து இதுகுறித்து பேசிவந்த நிலையில், கோபமடைந்த அவர், ஜிவி பிரகாஷின் குடும்ப பிரச்சினைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனவும், திருமணமான ஒருவருடன் தான் டேட்டிங் செய்யமாட்டேன் எனவும் கூறியுள்ளார். மேலும் தான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண் எனவும், தன்னை பற்றி இதுபோன்று வதந்திகளை பரப்புவதை நிறுத்துமாறும், இதுவே தனது முதல் மற்றும் கடைசி அறிக்கை என்றும் கூறியுள்ளார்.

ஜனநாயகனுக்கு ஏறும் டிமாண்ட்!

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2026ஆம் ஆண்டு தேர்தல்தான் தனது இலக்கு என்று ஏற்கனவே விஜய் அறிவித்துள்ள நிலையில், படத்தின் வேலைகளை முடிப்பதில் முழு கவனம் செலுத்திவருகிறார். படத்தின் இயக்குநர் ஹெச். வினோத்திடம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அடுத்த ஆண்டு தேர்தலுக்காக கட்சிப்பணிகளில் முழு வீச்சுடன் செயல்படவேண்டும் என்று விஜய் கூறியதையடுத்து இன்னும் ஓரிரு வாரங்களில் விஜய்யின் பகுதி முழுவதும் முடிக்கப்படவிருப்பதாக சொல்லப்படுகிறது. படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் படம் ரிலீஸாகும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாற்றி, போஸ்டர் வெளியிடப்பட்டது.


விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் குறித்து வெளியாகி இருக்கும் மாஸ் அப்டேட்

இதனிடையே விஜய்யின் பிறந்தநாளையொட்டி முதல் சிங்கிள் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனிடையே படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல ஓடிடி நிறுவனம் ‘ஜனநாயகன்’ படத்தை ரூ.120 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே ஓடிடி நிறுவனங்களின் விற்பனை மற்றும் வருமானம் குறைந்துவருவதாக சொல்லப்படும் நிலையில் விஜய் என்ற பெயருக்காகவே இப்படம் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சமந்தாவுக்கு கோவில்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம்வருபவர் சமந்தா. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகாவிட்டாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் அன்பும், வரவேற்பும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் பாலிவுட் வெப் சீரிஸான சிட்டாடலில் நடித்து அங்கும் ரசிகர்களை உருவாக்கியுள்ளார். உடல்நலக்குறைவால் நடிப்பதிலிருந்து விலகியிருந்த சமந்தா தற்போது மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கமிட்டாகி வருகிறார்.


நடிகை சமந்தாவிற்கு கோவில் கட்டியிருக்கும் ஆந்திரா ரசிகர்

இந்நிலையில் ஆந்திராவின் தெனாலி மாவட்டத்தைச் சேர்ந்த சமந்தாவின் ரசிகர் ஒருவர் அவருக்கு கோவில் கட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். சமந்தாவின் உருவசிலையை வைத்து அந்த கோவிலுக்கு பூஜை செய்வதுடன், ‘சமந்தா கோவில்’ என்று பெயர் வைத்துள்ளார். சமந்தாவின் இந்த கோவிலை காண ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் குஷ்பு, ஹன்சிகா போன்றோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய நிலையில், ஆந்திராவில் சமந்தாவுக்கு கட்டப்பட்டிருக்கும் கோவில் தற்போது இணையங்களில் டிரெண்டாகி வருகிறது.

பேட் மேன் நடிகர் மரணம்

பிரபல ஹாலிவுட் ஹீரோ வால் கில்மர் தனது 65வது வயதில் காலமானார். ‘பேட் மேன்’ படத்தின்மூலம் உலக புகழ்பெற்ற இவர், 1984ஆம் ஆண்டு வெளியான ‘டாப் சீக்ரெட்’ என்ற படத்தின்மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 90களில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த இவர், 2015ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையெடுத்தார். அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர் தனது வாழ்க்கைக்கதையையே ஆவணப்படமாக எழுதி, இயக்கினார்.


‘பேட் மேன்’ கதாபாத்திரம் மூலம் பிரபலமடைந்த நடிகர் வால் கில்மர் மரணம்

இவருடைய கெரியரில் திருப்புமுனையாக அமைந்த ‘டாப்கன்’ திரைப்படத்தை தழுவி 2022ஆம் ஆண்டு உருவான ‘டாப்கன்: மேவரிக்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கடைசியாக நடித்திருந்தார். மீண்டும் தொண்டை புற்றுநோய் மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், ஏப்ரல் 2ஆம் தேதி காலமானார். தனது மனைவியை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்துவந்த வால் கில்மரின் மறைவுக்கு உலகெங்கும் உள்ள ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் "அவர்கள் ரவிக்குமார்" மரணம்

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகர் ரவிக்குமார், 70-களில் பல மலையாள படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். 'உல்லாச யாத்ரா' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரவிக்குமார், தமிழிலும் சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவர்கள் படத்தில் அவர் நடித்த பிறகு, "அவர்கள் ரவிக்குமார்" என்றே அழைக்கப்பட்டார்.


‘அவர்கள்’ படம் மூலம் தமிழில் பரிச்சயமான நடிகர் ரவிக்குமார் மரணம்

அதன்பிறகு மலபார் போலீஸ், ரமணா, மாறன், விசில், சிவாஜி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்ததுடன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரவிக்குமார், ஏப்ரல் 4ஆம் தேதி காலமானார்.

Updated On 8 April 2025 12:02 AM IST
ராணி

ராணி

Next Story