இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சினிமா என்றாலே விமர்சனங்களும் கிசுகிசுக்களும் இல்லாமல் இருக்காது. மார்ச் மாதம் தொடங்கிவிட்ட நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகவுள்ள படங்கள் குறித்த அப்டேட்ஸும் அவற்றின் ட்ரெய்லர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கின்றன. இந்த வாரம் கோலிவுட் முதல் பாலிவுட் வரை கவனம் ஈர்த்த சில செய்திகள் உங்களுக்காக...

நயனுடன் இணையும் அருண் விஜய்!

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில், யார் கதாநாயகி என்பதில் தொடங்கி அதன் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் கடந்த ஆண்டில் அவ்வப்போது வெளிவந்துகொண்டே இருந்தன. ஒருவழியாக இரண்டாம் பாகத்திலும் நயன்தாராவே நடிக்கப்போவதாகவும், ஆனால் இந்த முறை சுந்தர் சி படத்தை இயக்கப்போவதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. குறிப்பாக, இந்த பாகத்தில் ப்ளாஷ்பேக் காட்சிகளும் இடம்பெறவிருப்பதால் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் சாமி படம் என்ற பெயரையும் பெற்றது ‘மூக்குத்தி அம்மன் 2’.


மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்கும் அருண் விஜய்

படத்தின் பட்ஜெட் போன்றே வில்லனும் ஸ்ட்ராங்காக இருக்கவேண்டுமென ஆசைப்பட்ட சுந்தர் சி, நயனுக்கு எதிராக அருண் விஜய்யை இறக்கியிருக்கிறாராம். அவர் அதிக சம்பளம் கேட்டபோதிலும் அவருக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும், விரைவில் ஷூட்டிங்கில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இந்த படத்தில் இன்னும் யார் யாரெல்லாம் இணைகிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களும் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

110 கிலோவா! - அசந்த சாம் ரசிகர்கள்!

விவாகரத்துக்கு பிறகு உடல்நல குறைபாடு, சினிமாவிலிருந்து ப்ரேக் என தனது ரசிகர்களை வருத்தமடைய செய்த சமந்தா, இந்தியில் ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து பாலிவுட்டிலும் பிரபலமானார். இதற்கிடையே தனது முன்னாள் கணவரான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டதில் சமந்தா மனமுடைந்திருப்பதாக பேசப்பட்டது. குறிப்பாக, அவர்களுடைய திருமண அறிவிப்புக்கு பிறகு சமந்தா மிகவும் எடை குறைந்து மெலிந்து காணப்பட்டார். இதனால் சமந்தா ரசிகர்கள் சோபிதாவை சோஷியல் மீடியாக்களில் ரோஸ்ட் செய்துவந்தனர்.


110 கிலோ எடையை தூக்கி மாஸ் காட்டிய சமந்தா

இதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாத சமந்தா, தொடர்ந்து தனது வேலை மற்றும் ஃபிட்னெஸில் கவனம் செலுத்தி வருகிறார். தன்னை ஒல்லி என்று சொன்னவர்களுக்கு, உங்களுடைய எலும்புகளை முறிக்கும் பலம் எனக்கு இருக்கிறது என்று கூறி பதிலடி கொடுத்தார். இந்நிலையில் 110 கிலோ எடையை அவர் தூக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டிருந்தார். அதை பார்த்த சமந்தா ரசிகர்கள் ‘கம் ஆன் சாம்’ என்று அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

‘ஜெயிலர் 2’ - மாஸ் அப்டேட்!

நெல்சன் - ரஜினி கூட்டணியில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் நெல்சன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, பட அறிவிப்பையே டீஸராக வெளியிட்டு மாஸ் கிளப்பியது சன் பிக்சர்ஸ் நிறுவனம். நெல்சன் - அனிருத் - ரஜினி என்ற கூட்டணியைத் தவிர படத்தில் யார்யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள்? என்பது குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில், முதல் பாகத்தில் கேமியோ ரோலில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டாரான சிவ ராஜ்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்டது.


ஜெயிலர் 2 படத்தின் போஸ்டர்

ஆனால் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துவந்த இவர் ஓய்வில் இருப்பதாகவும், அதனால் தற்போது படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் ரஜினிக்காக அவர் தனது முடிவை மாற்றியிருப்பதாகவும், ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

யேசுதாஸ் உடல்நலம் - மகன் விளக்கம்

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இந்தியாவின் மிகச்சிறந்த பின்னணி பாடகர்களில் ஒருவராக திகழ்கிறார் யேசுதாஸ். குறிப்பாக பத்மபூஷன் விருது வென்றிருக்கும் இவர் தமிழில் பாடிய ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’, ‘கண்ணே கலைமானே’ போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை. 86 வயதான இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.


பாடகர் யேசுதாஸ் நலமுடன் உள்ளார் - மகன் விஜய் யேசுதாஸ்

இந்நிலையில் தனது அப்பா அமெரிக்காவில் நலமுடன் உள்ளதாகவும், அவருக்கு எந்தவித உடல்நலக் குறைபாடும் இல்லையென்றும், அவரைப் பற்றி பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் யேசுதாஸின் மகனும் பின்னணி பாடகருமான விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார். இதன்மூலம் யேசுதாஸ் குறித்து பரவிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

‘அமரன்’ இயக்குநருடன் தனுஷ்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த நிலையில், அடுத்து யாரை வைத்து என்ன மாதிரியான கதையை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் இவர் தனது அடுத்த படத்திற்கு தனுஷுடன் கைகோர்க்கிறார். தனுஷின் 55வது பட பூஜையில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இவர், இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.


தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி

இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரிக்கிறார். தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அவரே இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகிவரும் ‘குபேரா’ படத்திலும் நடித்துவருகிறார். கூடவே பாலிவுட்டிலும் நடிக்கிறார்.

மீண்டும் இணையும் ஷாருக் - தீபிகா?

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாலிவுட்டின் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது ‘பதான்’. இந்த படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக, படம் முழுக்க படுகவர்ச்சி காட்டிய தீபிகா குறித்து பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. அதன்பிறகு குழந்தைப்பேறுக்கு ரெடியான தீபிகா கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் சினிமாவிலிருந்து ப்ரேக் எடுத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.


பதான் 2 படத்தின்மூலம் மீண்டும் இணையும் ஷாருக் - தீபிகா

அதிலும் குறிப்பாக, ‘பதான்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த படத்திலும் ஷாருக் - தீபிகா ஜோடிதான் இடம்பெற போகிறது எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த படத்திற்கான கதையை ஆதித்யா சோப்ரா எழுதி முடித்துவிட்டதாகவும், ஆனால் அடுத்த ஆண்டுதான் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Updated On 4 March 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story