இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சொன்ன தேதியில் ரிலீஸாகுமா தங்கலான்?

தமிழ் சினிமாவில் சமூக நீதி பேசும் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கும் படங்கள் மட்டுமல்ல; தயாரிப்பவைகளும் ஏதேனும் ஒரு சமூக பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கும். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ மற்றும் இவர் தயாரித்த ‘ப்ளூ ஸ்டார்’ போன்ற படங்கள் பல பரிமாண விமர்சனங்களை பெற்றன. இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. விக்ரம் படம் என்றாலே அவர் என்ன கெட்டப்பில் தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பு பொதுவாகவே இருக்கும். ‘தங்கலான்’ போஸ்டர் வெளியானதிலிருந்தே அந்த எதிர்பார்ப்பானது மேலும் எகிறியிருக்கிறது என்றே சொல்லலாம். காரணம், நீண்ட தலைமுடி, தாடி மற்றும் மெலிந்த தேகம் என விக்ரமின் மிரட்டலான லுக் அப்படி. பொங்கலுக்கே இந்த படம் ரிலீஸாகும் எனக் கூறப்பட்ட நிலையில், படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் முடிவடையாததால் தள்ளிப்போனது. ஏப்ரலில் ரிலீஸாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ரிலீஸ் தேதி மேலும் தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகின.


‘தங்கலான்’ படத்தில் மிரட்டலான தோற்றத்தில் விக்ரம்

இதனால் ரசிகர்கள் அப்செட் ஆனதை புரிந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன், திட்டமிட்டபடி ஏப்ரலில் படம் வெளியாகும் என்பதை நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இதனால் சற்று வருத்தப்பட்ட ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இப்படத்தில் பார்வதி திருவோத்து, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அரசியல்வாதியின் பேச்சு - ஆக்ரோஷம் கொண்ட திரிஷா

அதிமுக முன்னாள் நிர்வாகி நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய நிலையில் அவர் மீதான கண்டனங்கள் வலுத்து வருகின்றன. சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி ராஜு சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக பணியாற்றியவர். இவர், 2017ஆம் ஆண்டு கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். குறிப்பாக, எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது அங்கு நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறி திரிஷா பெயரை வெளிப்படையாகவே கூறியிருந்தார். இதுகுறித்த வீடியோக்களும் பதிவுகளும் வைரலான நிலையில் திரைத்துறையினரும், பிறரும் ஏ.வி ராஜுவுக்கு எதிராக கண்டனைங்களை தெரிவித்து வருகின்றனர்.


நடிகை திரிஷா மற்றும் ஏ.வி ராஜூ

இந்த சம்பவத்தில் கொதித்தெழுந்த நடிகை திரிஷா, “கவனம் பெறுவற்காக எந்த நிலைக்கும் இறங்கும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். இதுகுறித்து இனி என் சார்பாக, எனது சட்ட வல்லுநர்கள் பதிலளிப்பார்கள்” என்று கடுமையாக எச்சரித்திருந்தார். இந்நிலையில் ஏ.வி ராஜூ தான் திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும் திரிஷா அதை சாதாரணமாக விடுவதாக இல்லை. ஏ.வி ராஜூவுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில், “என்னைப் பற்றி அவதூறாக பேசிய ஏ.வி ராஜூ, 24 மணி நேரத்துக்குள் முன்னணி செய்தி நிறுவனங்கள் மூலமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படி கேட்காவிட்டால் அவர்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறது. இதனை தனது எக்ஸ் தள பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார் திரிஷா.

திருமணத்தில் முடிந்த காதல்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும், நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியும் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தனர். நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருந்த இந்த தம்பதியினர் எங்கு வைத்து தங்கள் திருமணத்தை நடத்தலாம் என்பதில் சற்று குழம்பி போயிருந்தனர்.


ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி திருமண புகைப்படங்கள்

இதனால் வெளிநாடுகளில் லொக்கேஷன் பார்த்துவந்த இந்த ஜோடி, புத்தாண்டை தாய்லாந்தில் கொண்டாடினர். அங்கு வைத்து திருமணம் செய்துகொள்வார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், கோவாவில் வைத்து திருமணத்தை நடத்த முடிவெடுத்திருப்பதாக அறிவித்தனர். அதன்படி, பிப்ரவரி 21ஆம் தேதி ஐடிசி கிராண்ட் ரிசார்ட்டில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது ரகுல் - ஜாக்கி திருமணம். 19ஆம் தேதி இரவிலிருந்து தொடங்கி 3 நாட்களாக ஆடல், பாடல் என கொண்டாட்டம் களைகட்டியது. திருமணத்தின்போது பிங்க் நிற லெஹங்காவில் அழகாக ஜொலிக்கும் ரகுலின் போட்டோஸ் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவர்களுடைய திருமண நிகழ்வில், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தொழிலதிபர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு ஜோடியை வாழ்த்தியுள்ளனர்.


டி50-இல் இணைந்த எஸ்.ஜே சூர்யா

பொதுவாகவே எஸ்.ஜே சூர்யா ஒரு படத்தில் இருக்கிறார் என்றாலே என்ன கதாபாத்திரத்தில் எப்படி மிரட்டப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். ‘நடிப்பு அரக்கன்’ என பெயர்பெற்ற எஸ்.ஜே சூர்யா - சிம்பு கூட்டணியில் உருவான ‘மாநாடு’ மற்றும் எஸ்.ஜே சூர்யா - விஷால் கூட்டணியில் உருவான ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் ஹீரோ யார்? என்ற கேள்விதான் அதிகம் இருந்தது. அந்த அளவிற்கு எஸ்.ஜே சூர்யா தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருந்தார். அடுத்து எஸ்.ஜே சூர்யா யாருடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வரவிருக்கிறது ‘டி.50’. ஆம் தனுஷின் 50 வது படம் குறித்து அப்டேட்ஸ் வந்திருந்த நிலையில் இப்படத்திற்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளது.


ராயன் பட போஸ்டர்கள்

இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை தன்வசம் ஈர்த்திருக்கிறது. காரணம் அந்த போஸ்டரில் எஸ்.ஜே சூர்யாவும் இடம்பெற்றிருக்கிறார். தனுஷே இயக்கி நடிக்கும் இப்படம் தமிழ், தெலுக்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷின் அண்ணன், செல்வராகவனும் இணைந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், “ஒருநாள் உங்களை வைத்து இயக்குவேன் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதற்கு செல்வராகவனும், “வாய்ப்பிற்கு நன்றி இயக்குநர் சார்! இது ஒரு காவியமாக இருக்கும். உங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்” என்று பதிலளித்திருக்கிறார். இத்திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என பட நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

முத்தையா இயக்கத்தில் விஜய்?

‘கொம்பன்’, ‘மருது’, ‘புலிக்குத்தி பாண்டி’ மற்றும் ‘விருமன்’ போன்ற கிராமத்து கதைகளை சிறப்பாக இயக்கி பெயர் பெற்றவர் இயக்குநர் முத்தையா. இவருடைய அடுத்த படத்தில் தனது மகன் விஜய்யை கதாநாயகனாக அறிமுகம் செய்கிறார். பொதுவாகவே நடிகர்களும், இயக்குநர்களும் தங்கள் வாரிசுகளை திரையுலகில் அறிமுகம் செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த வரிசையில் முத்தையாவும் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் முத்தையாவுக்கு ஜோடியாக தர்ஷினி மற்றும் பிரிகிடா சகா ஆகியோர் நடிக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய ஜென்மார்ட்டின் இசையமைக்கிறார். இந்த படமும் கிராமிய பின்னணி கொண்டதுதான் என்கின்றனர். ஹீரோ புதுமுகம் என்பதால் படத்தில் வரும் பிற முக்கிய கதாபாத்திரங்களையும் புதுமுகங்களாகவே இறக்க இயக்குநர் திட்டமிட்டிருக்கிறாராம்.


இயக்குநர் முத்தையா மற்றும் நடிகர் விஜய்

ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலில் இறங்கிவிட்ட நிலையில், கைவசம் இரண்டு படங்களை வைத்திருக்கிறார். குறிப்பாக அவருடைய கடைசிப்படத்தின் இயக்குநர் யாராக இருக்கும் என்ற கேள்விதான் உலா வந்துகொண்டிருக்கிறது. முதலில் வெற்றிமாறன்தான் இயக்குகிறார் என கூறப்பட்ட நிலையில் கார்த்திக் சுப்பராஜ் அந்த வரிசையில் இணைந்தார். பிறகு தெலுங்கு இயக்குநரும் சேர்ந்துகொண்டார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த இயக்குநர் முத்தையா என்று செய்திகள் உலாவந்த நிலையில் ரசிகர்கள் கதைக்களம் எப்படி இருக்கும் என நினைத்து செய்திகளை பார்த்தால் இந்த விஜய் அந்த விஜய் இல்லை என தெரிந்து ஏமாந்து போயுள்ளனர்.

Updated On 4 March 2024 11:52 PM IST
ராணி

ராணி

Next Story