
கடந்த வாரம் நடிகர் நடிகைகளின் கோலாகல தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக ஊடகங்களை கலர்ஃபுல்லாக்கின. இந்நிலையில் தமிழில் வெளியான ‘பிரதர்’, ‘அமரன்’, ‘ப்ளடி பெக்கர்’ ஆகிய மூன்று படங்களில் ‘அமரன்’ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துவருகிறது. அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்கள் குறித்தும் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வார திரைத்துளியில் அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
கடவுளே அஜித்தே!
தமிழ்நாட்டில் அஜித்துக்கு இருக்கும் ரசிகர்களை பற்றி சொல்லத் தேவையில்லை. அவருடைய படம் வெளியானாலும், ஆகாவிட்டாலும் அஜித் ரசிகர்கள் எப்போதும் அவரை கொண்டாடத் தவறமாட்டார்கள். இப்படி சமீப நாட்களாக ‘கடவுளே அஜித்தே’ என்ற கோஷம் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. முதலில் விளையாட்டாக ஆரம்பித்து, பின்னர் மற்ற நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் நிகழ்ச்சிகளிலும் இந்த கோஷத்தை எழுப்பி வந்தனர் அஜித் ரசிகர்கள்.
வெளிநாட்டு மெட்ரோவில் எழுப்பப்பட்ட ‘கடவுளே அஜித்தே’ கோஷம்
இந்நிலையில் வெளிநாட்டில் ஒரு மெட்ரோவில் பயணம் செய்தபோது நிறைய வெளிநாட்டவர்கள் ‘கடவுளே அஜித்தே’ என்ற கோஷத்தை எழுப்பிய வீடியோ இணையங்களில் பரவி டிரெண்டாகி வருகிறது. இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் தல புகழ் உலகெங்கும் பரவி வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸிங் பங்கேற்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் அஜித்.
பஞ்ச் டயலாக்ஸ் குறித்து துல்கர்!
மலையாள சூப்பர் ஹீரோவான துல்கர் சல்மான் ‘சீதா ராமம்’ படம் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானவர். துல்கரின் நடிப்பு அபரிமிதமாக இருந்தாலும், அவருடைய படங்களில் மாஸான பஞ்ச் டயலாக்குகள் எதுவும் இதுவரை இடம்பெற்றதில்லை. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு இவர் நடிப்பில் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் வெளியானது. இப்பட நிகழ்ச்சியின்போது, அவருடைய படங்களில் பஞ்ச் டயலாக்குகள் இடம்பெறாதது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
பஞ்ச் டயலாக்ஸ் குறித்து துல்கர் சல்மான் கருத்து
அதற்கு, பெரிய சூப்பர் ஸ்டார்கள் மட்டுமே பஞ்ச் டயலாக்குகள் பேச தகுதியானவர்கள் என தான் நினைப்பதாகவும், புதுமுக நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் பஞ்ச் வசனம் பேசினால், இதுபோன்ற டயலாக்குகளை கூற அவர்கள் இன்னும் வளரவேண்டும் என ரசிகர்கள் நினைப்பார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் அதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்பதால், தான் பஞ்ச் டயலாக்ஸ் பேச இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம் என்றும் கூறியிருக்கிறார்.
அம்பானி குழுமத்துடன் நயன்!
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நயன்தாரா, திருமணமாகி குடும்பம், குழந்தைகள் என செட்டிலாகிவிட்டாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். நடிப்புபோக, டீ, நாப்கின் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் என பிசினஸிலும் மற்றொருபுறம் கவனம் செலுத்திவருகிறார். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட்டில் கால்பதித்த நயன், தொடர்ந்து அங்குள்ள பெரும்புள்ளிகளின் நட்பை வளர்த்து வருகிறார்.
இஷா அம்பானியுடன் கைகோர்க்கும் நயன்தாரா
இந்நிலையில் தனது 9 ஸ்கின் காஸ்மெட்டிக்ஸை விற்பனை செய்ய அம்பானி மகள் இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டிஜிட்டல்தளம், ரீடெய்ல் என அனைத்திலும் முன்னணியில் இருக்கும் அம்பானி நிறுவனத்துடன் நயன் கைகோர்த்திருப்பதால், அவருடைய ப்ராடக்ட்ஸ் அனைத்தும் எளிமையாக அனைவருக்கும் கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
லோகியின் நெக்ஸ்ட் ப்ளான்ஸ்!
ரஜினியின் ‘கூலி’ படத்தில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் பெரிய ஹீரோக்களிடமிருந்தும் அழைப்புகள் வந்துகொண்டே இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இருந்தாலும் ஏற்கனவே தான் அறிவித்ததுபோல தனது பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களை எடுத்துவிட்டுதான் அடுத்த வேலையில் இறங்கப்போவதாக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம் லோகி.
லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்களின் ப்ளான்
அதன்படி 2019ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம்தான் லோகியின் லிஸ்ட்டில் அடுத்து இருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கப்போகிறாராம். அதற்கு ‘விக்ரம் ரிட்டர்ன்ஸ்’ என பெயர்கூட வைத்துவிட்டதாக தகவல்கள் கசிகின்றன. இருப்பினும் இவையெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது அவருடைய அடுத்தடுத்த அறிவிப்புகளின்மூலம்தான் தெரியவரும்.
ப்ரைமில் வேட்டையன்!
ரஜினி நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்ட திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் மஞ்சு வாரியார், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், ராணா டகுபதி போன்ற பான் இந்தியா ஸ்டார்கள் இடம்பெற்றிருந்தனர். ‘லால் சலாம்’ எதிர்பார்த்த வெற்றிபெறாத நிலையில், ‘வேட்டையன்’ படம், ‘ஜெயிலர்’ அளவிற்கு மாஸ் ஹிட்டடிக்கும் என்று சொல்லப்பட்டது.
அமேசான் ப்ரைமில் ‘வேட்டையன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
படமும் அதற்கேற்றார்போல் எந்தவித ஏமாற்றத்தையும் அளிக்கவில்லை என்றாலும் கதை கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என்று சொல்லப்பட்டது. அதன்படி, வருகிற நவம்பர் 8ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்தியாவின் பணக்கார பாடகர்!
உலகளவில் பிரபலமானவர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கிட்டத்தட்ட 2000 பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் இவர் 30 ஆண்டுகளாக திரைத்துறையில் அயராது உழைத்துவருகிறார். இதுவரை 7 தேசிய விருதுகள் மற்றும் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கும் ரஹ்மான்தான் இந்தியாவின் பணக்கார பாடகராம். இதுவரை பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடாத இவர், ஒரு படத்திற்கு இசையமைக்க 8 முதல் 10 கோடிவரை சம்பளம் வாங்குகிறாராம்.
இந்தியாவின் பணக்கார பாடகர் ஏ.ஆர்.ரஹ்மான்
மேலும் ஒரு மேடை நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.2 கோடிவரை வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது. ரஹ்மானின் மாத வருமானம் சராசரியாக ரூ.3 முதல் 4 கோடி எனவும், ஆண்டு வருமானம் ரூ.50 முதல் 60 கோடி வரை இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பல சொகுசு கார்கள் உட்பட ரூ.1700 கோடி மதிப்பிலான சொத்துகள் ரஹ்மானிடம் இருக்கிறதாம்!
