இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த வாரம் முழுக்க எந்த சோஷியல் மீடியா பக்கம் போனாலுமே கண்களில் பட்டது அம்பானி வீட்டு திருமணம்தான். உள்ளூர் பிரபலங்கள் முதல் உலக பிரபலங்கள்வரை பலரும் கலந்துகொள்ள நிகழ்ச்சிகள் களைகட்டின. குறிப்பாக, சினிமா நட்சத்திரங்கள் விலைமதிப்புமிக்க ஆடைகளை அணிந்துவந்து அசத்தினர். இது ஒருபுறமிருக்க, அடுத்தடுத்து என்னென்ன படங்கள் வெளியாக தயாராக உள்ளது என்ற லிஸ்ட் வெளியாகி ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறது. இந்த வாரம் திரைத்துளியில் அதிகம் பகிரப்பட்ட சினிமா பதிவுகளை பார்க்கலாம்.

‘அமரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாய் பல்லவி, புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன.


சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘அமரன்’ படம் தீபாவளி ரேஸில் போட்டியிடுகிறது

அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே அஜித்தின் ‘விடாமுயற்சி’ மற்றும் ரஜினியின் ‘வேட்டையன்’ ஆகிய படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், இந்த மூன்று படங்களிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி படப்பிடிப்பில் நடந்த சோகம்

கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சாலிகிராமத்தில் ‘சர்தார் 2’ படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், அதில் பணியாற்றிய சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


‘சர்தார் 2’ திரைப்படத்தில் மாறுபட்ட தோற்றங்களில் நடிகர் கார்த்தி

இந்நிலையில் ஏழுமலையின் இறப்பால் சோகத்தில் இருக்கும் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் கார்த்தி, அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கதறியழுத காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த இரண்டுமே ஹிட்தான்!

‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்றாலும் அதிகப்படியான எதிர்மறை விமர்சனங்களையே பெற்றுவருகிறது. இருப்பினும் ‘இந்தியன் 3’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்திசெய்யும் என ஏற்கனவே இயக்குநர் ஷங்கர் கூறியிருந்த நிலையில், கமலும் அதே நம்பிக்கையில்தான் இருக்கிறாராம். இந்த பாகம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.


‘தக் லைஃப்’ திரைப்பட போஸ்டரில் கமல்ஹாசன்

இதற்கிடையே கமல் - மணிரத்னம் கூட்டணியில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கமலுடன் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா என பெரிய பட்டாளமே இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பானது மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இந்த படமும் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இரண்டு படங்களின்மீதும் கமல் அதீத நம்பிக்கை வைத்திருப்பதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பாலிவுட் செல்லும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ இயக்குநர்

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் திரைப்படங்களில் ஒன்றானது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்து தமிழில் தனுஷை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், அதை கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் செழியன் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.


பாலிவுட்டில் படம் இயக்குவதாக அறிவித்திருக்கும் இயக்குநர் சிதம்பரம்

இந்நிலையில் சிதம்பரம் அடுத்து பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறார். Phantom ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அந்த படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் ரீமேக் இல்லை எனவும், அது புதிய கதை எனவும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மனம்திறந்த சமந்தா

நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு தனியாக வாழ்ந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருந்த சமந்தாவுக்கு திடீரென மயோசிட்டிஸ் என்னும் நோய் ஏற்பட்டது. அதனால் உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததாக ஏற்கனவே சமந்தா நேர்க்காணல்களில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் விவாகரத்துக்கு பிறகு கடந்த 3 வருடங்களாக தனது வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பது பற்றி பகிர்ந்திருக்கிறார்.


இப்போது உலகில் ஆன்மிகம் அதிகம் தேவைப்படுகிறது - நடிகை சமந்தா

“கடந்த மூன்று வருடங்களில் நடந்த எதுவும் நடந்திருக்கக்கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் வாழ்க்கை என்ன கொடுக்கிறதோ அதை டீல் செய்துதான் ஆகவேண்டும். இப்போது நான் மிகவும் வலிமையாக உணர்கிறேன். ஏனென்றால் நான் தீயை கடந்திருக்கிறேன். இப்போது உலகில் ஆன்மிகம் அதிகம் தேவைப்படுகிறது. அதுதான் என்னுடைய வலிகளை போக்க நல்ல நண்பனாக இருந்து வலிமை கொடுக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

அட்லீக்கு அடித்த அதிர்ஷ்டம்!

சமீபத்தில் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடந்தது அம்பானி வீட்டு திருமணம். அந்த திருமணத்தில் பல பிரபலங்கள் பங்கேற்றாலும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களில் அனைவரின் கவனத்தையும் பெற்றார் இயக்குநர் அட்லீ. கிட்டத்தட்ட 5 உடைகளில் மாறி மாறி வலம்வந்த அட்லீ - பிரியா தம்பதி சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அட்லீக்கு ஏன் இவ்வளவு மவுசு? என பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், தற்போது அதற்கான பதில் கிடைத்திருக்கிறது.


அம்பானி வீட்டு திருமணத்தில் மனைவி பிரியாவுடன் இயக்குநர் அட்லீ

‘ஜவான்’ படத்தின் வெற்றியால் பாலிவுட்டின் முன்னணி இயக்குநராக உருவெடுத்திருக்கும் அட்லீதான், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு ஸ்பெஷல் அனிமேஷன் வீடியோ ஒன்றை இயக்கியிருக்கிறாராம். திருமண விழாவில் சுமார் 10 நிமிடங்கள் ஒளிபரப்பான அந்த வீடியோவிற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பின்னணி குரல் கொடுத்திருக்கிறாராம். பல முன்னணி இயக்குநர்கள் பாலிவுட்டில் இருந்தாலும் அம்பானி குடும்பம் அட்லீக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருப்பது திரையுலகினருக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On 29 July 2024 11:47 PM IST
ராணி

ராணி

Next Story