காலத்தால் அழியாத ஒரு காவியம்… மறைந்தும் நம் மனதை விட்டு அகலாத ஒரு அகல் விளக்கு… தமிழ் திரையுலகு கொண்டாடி தீர்த்த ஒரு தலைசிறந்த பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர்… இவை அனைத்திற்கும் மேலாக மிகச் சிறந்த ஓவியர் என பன்முகங்களைக் கொண்டவர்தான் கவிஞர் வாலி. வரிகளால் நம் மனங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் வாலியை பற்றி ஒற்றை வரிகளில் விளக்கிவிட முடியாத அளவுக்கு ஒரு கால பொக்கிஷம் என்று கூட சொல்லலாம். ஏனென்றால் திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் தொடங்கி ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என இப்போதுள்ள நடிகர்கள் வரை கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திரையுலகில் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி தமிழ் ரசிகர்களை தன் வரிகளால் இளமையுடன் வைத்திருந்த வாலியின் 93-வது பிறந்தநாள் இன்று (29.10.2024). அவர் மறைந்திருந்தாலும், அவர் எழுதிய பாடல் வரிகளால் இன்றும் நம் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் வாலியை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.
ரங்கராஜன், கவிஞர் வாலியாக மாறியது எப்படி?
கருப்பு வெள்ளை காலம் தொங்கி டிஜிட்டல் காலம்வரை இளமை மாறாமல் காலத்திற்கு ஏற்ப ரசிகர்களின் ரசனை அறிந்து பாடல்களை எழுதி நம்மை ரசிக்க வைத்த வாலி 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் சீனிவாச அய்யங்கார் - பொன்னம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். வாலியின் கவிதை, ஓவியம் இரண்டாலும் ஈர்க்கப்பட்ட இவரது நண்பர் பாபுதான் வாலியைப்போன்று சிறந்த ஓவியாராக வர வேண்டும் என்று ரங்கராஜன் என்றிருந்த இவரது பெயரை வாலி என மாற்றி வைத்தாராம். அப்படி வாலியான ரங்கராஜனை அவரது வகுப்பு ஆசிரியரான தேசிகர் என்பவர் ஒருநாள் அழைத்து உனக்குத்தான் வால் இல்லையே; பிறகு ஏன் உன் பெயரை வாலி என வைத்துக் கொண்டாய் என்று கேட்கவும் சுற்றி இருந்த மற்ற மாணவர்கள் அனைவரும் சத்தமாக சிரித்துவிட்டார்களாம். இதனால் மிகவும் கடுப்பாகி போன வாலி உடனே அடுத்த நாள் ஒரு காகிதத்தை கையில் எடுத்துக்கொண்டு நேராக ஆசிரியரிடம் சென்று கொடுத்தாராம். அதை வாங்கி படித்த ஆசிரியர் தேசிகருக்கு ஆச்சரியம். ஏனென்றால் அந்த காகிதத்தில் வாலி அப்போதே “வால் இல்லை என்பதற்காக நான் வாலியாகக்கூடாதா? காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா? என்று எழுதியிருந்தது அவரை வெகுவாக கவர்ந்துவிட்டது. இதனால் அந்த நிமிடமே வாலியை ஆசிரியர் மனமுவந்து பாராட்டிய விதம், வாலிக்கு தமிழ் மீது இருந்த பற்றை இன்னும் அதிகப்படுத்தியது.
முதுமை மற்றும் இளமை தோற்றத்தில் கவிஞர் வாலி
இதனால் சிறுவயதிலேயே கவிதை மற்றும் நாடகங்கள் எழுதுவதில் அதீத ஆர்வம் கொண்ட வாலி தான் ஸ்ரீரங்கத்தில் இருந்த போதே ‘நேதாஜி’ என்ற கையெழுத்து பத்திரிகையை நடத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வருவதற்கு முன்பாக திருச்சி அகில இந்திய வானொலியில் வேலைக்கு சேர்ந்தவர் அங்கு, நாடகங்களுக்கு கதைகள் எழுதிக் கொடுத்து வந்துள்ளார். இந்த நேரம் அவரின் கவிதை ஊற்று ஆறாய் பெருக்கெடுத்ததே காவிரி ஆற்றங்கரைக்கு அருகே கொள்ளிடத்திற்கு செல்லும் வழியில் இருந்த கல் மண்டபத்தில்தானாம். கவிதை எழுதுவதற்கான பெரும்பாலான நேரங்களை அங்குதான் செலவிடுவாராம். இதற்கிடையில் வரைவதிலும் ஆர்வம் கொண்ட வாலி 10-ஆம் வகுப்பை முடித்த கையோடு சென்னைக்கு வந்து ஓவியக்கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் படித்துள்ளார். இப்படி கவிதை, நாடகம், ஓவியம் என்று தன் கலைப்பயணத்தை தொடங்கியவர் அடுத்தபடியாக சினிமாவுக்குள் நுழைந்து ஒரு தனி ராஜாங்கமே நடத்த வேண்டும் என்ற கனவோடு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார். 1958-ஆம் ஆண்டு சென்னையில் வந்து காலடி எடுத்து வைத்தவர் நேராக திருவல்லிக்கேணியில் இருந்த தன் நண்பரின் அறைக்குச் சென்று அங்கேயே தங்கி சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு தேட ஆரம்பித்தார்.
நாகேஷால் கிடைத்த முதல் வாய்ப்பு
வாலியின் திரைவாழ்க்கைக்கு ஏணிப்படிகளாக இருந்த நடிகர் நாகேஷ் & எம்ஜிஆர்
சினிமாவில் பயணப்பட நினைத்து சென்னையை நோக்கி வரும் அனைவருக்கும் உடனே அதற்கான கதவுகள் திறந்து விடுவது இல்லை. பல அலைக்கழிப்புகள், அவமானங்கள், காத்திருப்புகள், சகிப்புத்தன்மை, தொடர் போராட்டங்கள் இப்படி பலவற்றையும் கடந்துதான் சினிமா என்னும் கூட்டுக்குள் நுழைய முடியும். அப்படி நுழைந்து சாதித்தவர்கள் ஏராளம் என்றால், உயர உயர ஏறிய ஏணியில் இருந்து சட்டென கீழே விழுந்து மீண்டும் எழ முடியாமல் போனவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில்தான், வாலி எனும் மகா கலைஞனும் பல போராட்டங்களை, அவமானங்களை சந்தித்து தன் கலை பயணத்தை தொடங்கினார். அதுவும் அவருக்கு அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. தன் தேடலை விரித்து வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த போது தான் எதிர்பாராதவிதமாக சென்னை தியாகராய நகர் கிளப் ஹவுஸில் பல நபர்கள் கவிஞர் வாலிக்கு அறிமுகமாகி நண்பர்களாக கிடைத்தார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் நகைச்சுவை நடிகர் நாகேஷ். ஆரம்பத்தில் மறைந்த பாடகர், சிம்ம குரலோன் டி.எம்.சௌந்தரராஜனின் உதவியுடன் பாடல்களை எழுத ஆரம்பித்தவர், பிறகு நடிகர் நாகேஷின் உதவியுடன் ‘நல்லவன் வாழ்வான்’ என்ற திரைப்படத்தில் 'சிரிக்கின்றாள்… இன்று சிரிக்கின்றாள்', ‘அன்புக்கரத்தால்’ ஆகிய இரண்டு பாடல்களை எழுத்தினார். இப்பாடலுக்கு முன்பாக 1959-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அழகர்மலைக்கள்வன்’ என்ற படத்தில் “நிலவும் தரையும் நீயம்மா” என்ற பாடலை எழுதியிருக்கிறார் என்றாலும், ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் இடம்பெற்ற பாடல்கள்தான் வாலியின் முதல் பாடலாக எல்லோராலும் அறியப்பட்டது. இதில் குறிப்பாக, 'சிரிக்கின்றாள்… இன்று சிரிக்கின்றாள்' என்ற பாடலை கேட்ட பேரறிஞர் அண்ணா வாலியை வெகுவாக பாராட்டினாராம். அண்ணா மட்டுமல்ல சாரதா ஸ்டுடியோவில் இருந்த எம்ஜிஆரும் பாடல் கம்போசிங் செய்யப்பட்ட அறைக்கு நேரடியாக வந்து பார்வையிட்டாராம். அதுதான் எம்ஜிஆருடன் வாலிக்கு ஏற்பட்ட முதல் அறிமுகம். இப்படி முதல் முயற்சியிலேயே அண்ணா, எம்ஜிஆர் என்ற இரண்டு ஜாம்பவங்களின் பாராட்டு வாலிக்கு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாம். இந்த பாராட்டே வாலி என்னும் கலைஞனை அடுத்தடுத்த நிலைகளுக்கும் கொண்டு செல்ல உதவியாக இருந்ததாம்.
மக்கள் திலகத்தின் வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்கு பல ஹிட் பாடல்களை எழுதிய வாலி
இதன்பிறகு எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களுக்கு வாலி பாடல் எழுதி அவரின் நன்மதிப்பை மட்டுமின்றி நாடு கொண்டாடடும் கவிஞராகவும் மாறினார். எம்ஜிஆருக்காக ‘படகோட்டி’ படத்தில் அவர் எழுதிய அத்தனை பாடல்களும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன. இதுதவிர ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்க வீட்டுப்பிள்ளை’, ‘எங்கள் தங்கம்’, ‘ரிக்ஷாக்காரன்’ என எம்.ஜி.ஆரின் அத்தனை வெற்றிப்படங்களுக்கும் கருத்தாழமிக்க பாடல்களை எழுதி அவரின் அரசியல் நகர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் பேருதவியாக இருந்தார் வாலி. மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டுமில்லாது துவக்க காலங்களில் தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா ஸ்ரீனிவாசன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்களும் கவிஞர் வாலியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஏணிப்படிகளாக இருந்துள்ளனர். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இயக்குநர் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘கற்பகம்’ படத்தில் வாலியின் கைவண்ணத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதற்கு பிறகு கற்பக விருட்சமாக தன் வெற்றிப்பயணத்தை தொடர ஆரம்பித்த வாலி மக்கள் திலகத்திற்கு மட்டுமல்ல நடிகர் திலகத்திற்கும் பல பாடல்களை எழுதியுள்ளார். 1964-ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட அந்த நட்பு பல படங்களில் தொடர்ந்தது. அதில் ‘மன்னிக்க வேண்டுகிறேன்’, ‘மல்லிகை முல்லை பூ பந்தல்’, ‘நான் தன்னந்தனி காட்டு ராஜா’ ‘வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா’, ‘காதல் சரித்திரத்தை படைக்க வாருங்கள்’, ‘நெஞ்சிருக்கும் எங்களுக்கு’, ‘மகாராஜா ஒரு மகாராணி’, அப்பப்பா நான் அப்பனல்லடா’, ‘நாற்பது வயது நாய் குணம்’ என சுமார் 80-பாடல்களை எழுதி அவை அனைத்துமே வெற்றிப்பாடல்களாக அமைய செய்து அவரின் ரசிகர்களையும் பரவசப்படுத்தியுள்ளார். இப்படி எம்ஜிஆர், சிவாஜி என அப்போதைய உச்சநட்சத்திரங்களுக்கு பாடல் எழுதி வந்த வாலியை பார்த்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு சவால் விடுத்தாராம். அதுஎன்னவென்றால் நான் அசந்துபோவது மாதிரி ஒரு பல்லவியை நீங்கள் எழுதி கொடுத்தால் நான் என்னுடைய கையில் இருக்கும் மோதிரம், கைகடிகாரம் இரண்டையும் உனக்கே கொடுத்துவிடுவதாக கூறினாராம். அவர் அப்படி கூறியதுதான் தாமதமோ என்னவோ உடனே 'காற்று வாங்கப் போனேன் - ஒரு கவிதை வாங்கி வந்தேன்! என்று கையில் கொடுத்தாராம். அதைப்படித்து பார்த்த எம்எஸ்வி அப்படியே அசந்து போய், அடுத்தநிமிடமே சொன்னதுபோல் தன் கையில் இருந்த இரண்டையும் கழற்றிக்கொடுத்துவிட்டாராம். அந்த பாடல்தான் 1965-ஆம் ஆண்டு எம்ஜிஆரின் நடிப்பில் வெளிவந்த கலங்கரை விளக்கம் படத்தில் இடம்பெற்று இன்றும் பலரின் மனங்களில் கலங்கரை விளக்கமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
இசைஞானியுடன் தொடங்கிய பயணம்
'குணா' திரைப்படத்தில் வாலி எழுதிய "கண்மணி அன்போடு காதலன்" பாடல் காட்சி
1960-கள் தொடங்கி 80-கள் வரை எத்தனையோ இசையமைப்பாளர்களின் மெட்டுகளுக்கு பாட்டெழுதி வந்த கவிஞர் வாலி அப்போது இசை என்னும் ராஜாங்கத்தை தமிழ் சினிமாவில் அரங்கேற்ற தொடங்கியிருந்த இசைஞானி என்னும் இசை அரக்கனுடன் கைகோர்த்து காலத்தால் அழிக்கமுடியதா பல காவியப்பாடல்களை எழுதினார். அதிலும் ரஜினி, கமல் என இல்லாமல் 90 காலகட்டங்களில் முன்னணியில் இருந்த பல ஹீரோக்களின் படங்களுக்கும் தன் கற்பனை திறனை நீரோடை போல ஓடவிட்டு எழுதி வெற்றிக் கொடுத்திருக்கிறார். அப்படி சத்யா படத்தில் “வலையோசை”, பாலச்சந்தரின் புது புது அர்த்தங்கள் திரைப்படத்தில் “கல்யாண மாலை”, மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரங்கள் படத்தில் “ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா”, கோபுர வாசலிலே படத்தில் “தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது தம்பி”, தர்மத்தின் தலைவன் படத்தில் “தென்மதுரை வைகை நதி”, குணா திரைப்படத்தில் “கண்மணி அன்போடு காதலன்” போன்ற காதல், சோகம், தாலாட்டு, தத்துவம், பாசம், விரக்தி என எத்தனையோ ஜானரிலான கருத்தாழமிக்க பாடல்களை எழுதி காலத்திற்கு தகுந்தாற்போன்று ரசிக்கவைத்திருக்கிறார்.
இதற்கு பிறகு அடுத்த தலைமுறை இசை ரசிகர்களையும் கவரும் வகையில் வயதாகியிருந்தாலும் தன் எழுத்திற்கு என்றும் வயதாகுது என்பதை நிரூபிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்த்த வாலி அவரது இசையில் எழுதிய முதல் பாடல் ஜென்டில்மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற “சிக்கு புக்கு ரயிலே”. இதனை தொடர்ந்து, விஜய், அஜித், சூர்யா என காதலன் திரைப்படத்தில் “முக்காலா முக்காப்புலா”, இந்தியன் படத்தில் “கப்பலேரி போயாச்சு”, காதல் தேசம் படத்தில் “முஸ்தபா முஸ்தபா”, காதலர் தினம் படத்தில் “ஓ மரியா”, அன்பே ஆருயிரே படத்தில் “ஆறரை கோடி”, சில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தில் “முன்பே வா”, சிவாஜி படத்தில் “அதிரடிக்காரன்”, அழகிய தமிழ் மகன் படத்தில் “எல்லா புகழும்” என எண்ணற்ற காலத்தால் மறக்க முடியாத என்றும் இளைஞர்களை துள்ளலாட்டம் போட வைக்கும்படியான பாடல்களை இளமை மாறாமல் தந்து உற்சாகப்படுத்தினார்.
விஜய்யின் 'அழகிய தமிழ் மகன்' படத்தில் வாலி எழுதிய “எல்லா புகழும்” பாடல் காட்சி
நடிப்பும், தனிப்பட்ட வாழ்க்கையும்
5 முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்ற கவிஞர் வாலி, பாடலாசிரியர் என்பதை தாண்டி ‘கடவுள் அமைத்த மேடை’, ‘சிட்டுக்குருவி’, ‘கலியுக கண்ணன்’, ‘ஒரு செடியில் இரு மலர்கள்’ உட்பட 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். மேலும் சிறுகதை, கவிதை, உரைநடை என 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதி வரவேற்பை பெற்ற வாலி எழுத்தைத் தாண்டி நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார். இயக்குநர் கே.பாலசந்தரின் நன்மதிப்பை பெற்ற வாலி இயல்பாகவே நகைச்சுவை உணர்வு மிக்கவர். இதனால் வாலியை தன் படங்களில் நடிக்க வைக்க முடிவு செய்தவர் அதன்படி ‘பொய்க்கால் குதிரை’, ‘பார்த்தாலே பரவசம்’ ஆகிய படங்களில் நடிக்க வைத்தார். இதனை தொடர்ந்து சுரேஷ் கிருஷ்ணா, கமல்ஹாசன் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஹே ராம்’, ‘சத்யா’ ஆகிய படங்களிலும் நடித்தார்.
தன் பாடல் வரிகளால் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கும் வாலிப கவிஞர் வாலி
இப்படி நடிப்பு, பாடல், வசனம் என எல்லா தளங்களிலும் பட்டையை கிளப்பிய வாலிக்கு 1973-ஆம் ஆண்டு சிவாஜியின் ‘பாரதவிலாஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “இந்திய நாடு என்வீடு” என்ற பாடலை எழுதியதற்காக தேசிய விருது வழங்கபட்டபோது அதனை ஏற்க மறுத்துவிட்டாராம். பிறகு மத்திய அரசு கடந்த 2007-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தன் எழுத்தால் பலரையும் காதலிக்க வைத்த வாலி ரமண திலகம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு பாலாஜி என்ற ஒரு மகன் உள்ளார். மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி தனது 81-வது வயதில் இம்மண்ணுலகைவிட்டு மறைந்த கவிஞர் வாலி இன்றும் தன் வரிகளால் அனைவரது நெஞ்சங்களிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். தன் எழுத்துக்களால் பலரது வாழ்க்கையையும் மலர செய்த கவிஞர் வாலியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வதில் பெருமைப்படுகிறது ராணி.