இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஆண்களால் மட்டுமே சாதிக்க முடியும் என்றிருந்த தமிழ் சினிமாவில், கடந்த பல ஆண்டுகளாகவே பெண்களை பிரதானமாக வைத்து கொண்டாடும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதற்கான முதல்படி 1940களிலேயே தொடங்கிவிட்டது. உதாரணமாக 1947 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மிஸ் மாலினி’ திரைப்படத்தினை சொல்லலாம். ஏனென்றால், பெண்களுக்கான முக்கியத்துவத்தை அதன் தலைப்பிலேயே தொடங்கிவைத்த முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். இதன்பிறகு அவ்வப்போது ஒன்றிரண்டு படங்கள் வந்தாலும், கே.பாலச்சந்தர் என்ற இயக்குநரின் வருகைக்குப் பிறகு பெண்களுக்கான முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்திடும் வகையில், தனது படங்களில் பெண் கதாநாயகிகளை துணிச்சல்மிக்கவர்களாக காண்பித்து அவர்களுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தினார். அந்த தாக்கம்தான் பாரதிராஜா தொடங்கி இன்றைய தலைமுறை இயக்குநர் வரை ஏதோ ஒரு வகையில், பெண்களின் முக்கியத்துவம் தொடர்பான கருத்துகள் திரைப்படங்களில் பதியப்பட்டு கொண்டேதான் இருக்கிறது. அதற்கு உதாரணமாக, சமீபத்தில் நான்கு நாயகிகளை முன்னிறுத்தி திரைக்கு வந்து, மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கண்ணகி’ படத்தினை சொல்லலாம். இப்படத்திற்கு முன்னரும் பெண்களை முன்னிறுத்தி எத்தனையோ படங்கள் வெளி வந்துள்ள போதும், இந்த 'கண்ணகி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எப்படிப்பட்ட தாக்கத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இயக்குநர்கள் கண்ட புரட்சி பெண்கள்

பொதுவாகவே தமிழ் சினிமாக்களில் பெண்கள் ஒரு ஸ்டீரியோ டைப் கதாபாத்திரங்களாகவே 1960 துவங்கி 90-களின் இறுதி வரை பல படங்களில் காட்சிப்படுத்தபட்டிருப்பர். குறிப்பாக பணக்கார பெண் ஒருவர் உழைத்து நேர்மையாக வாழும் ஆண் ஒருவரை காதலிப்பார். ஆனால் தொடக்கத்தில் திமிராக காட்டப்படும் அந்த பெண், ஹீரோ பாடம் எடுத்த பிறகு குடும்ப குத்துவிளக்காக மாறிவிடுவார். இப்படித்தான் எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொடங்கி பிந்தைய ரஜினி, கமல் காலம்வரை பல படங்களில் பெண் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அதிலும் படித்த பெண் என்றாலே அவர் திமிரு பிடித்தவராகத்தான் இருப்பார் என்கின்ற பிம்பம் தமிழ் சினிமாவில் காலங்காலமாக கட்டமைக்கபட்ட ஒன்றாக இருந்து வந்தது. இதற்கு உதாரணமாக 'பட்டிக்காடா பட்டணமா', 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களை சொல்லலாம். இருப்பினும் சில இயக்குநர்கள் அவ்வப்போது பெண்மையின் பெருமையை பேசிவந்தாலும், 1970-களுக்கு பிறகு வந்த இயக்குநர்கள் அந்த பிம்பங்களை முற்றிலுமாக உடைத்தனர். அதில் குறிப்பாக இயக்குநர் கே.பாலச்சந்தர், மகேந்திரன், துரை, எஸ்.பி முத்துராமன், பாரதிராஜா, ஆர்.சி.சக்தி, ருத்ரைய்யா போன்றவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் மட்டும் அல்லாமல் ஸ்ரீதர், ஏ.சி.திருலோகச்சந்தர், பீம்சிங் போன்ற அதற்கு முந்தைய தலைமுறை இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவந்த பல படங்களும் பெண்மையின் பன்முகங்களை காட்ட முயற்சி செய்திருந்தன.


'இறுதிச் சுற்று’, 'அருவி', ‘அறம்’, ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களின் பெண் கதாநாயகிகள்

இருப்பினும் 1990 களுக்கு பிறகு பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி வெளிவரும் படங்களின் வரவு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்ததோடு, பெண்கள் மீதான வெறுப்பு, காதல் தோல்விக்கு பெண்களை குற்றம் சுமத்துவது, காதலிக்க மறுக்கும் பெண்களை குற்றவாளியாக்குவது போன்ற அபத்தமான காட்சிகளை காட்டும் சில படங்கள் வெளிவந்தன. மேலும் காதலிக்கவும், டூயட் பாடவும், கவர்ச்சிக்காட்டவுமே பெண் கதாபாத்திரங்கள் வைக்கப்பட்டது போன்ற உணர்வும் அந்த சமயம் நமக்கு ஏற்பட்டது. இதனால் பெண்களின் கனமான பாத்திரங்களுக்கான முக்கியத்துவம் குறைய ஆரம்பித்து விட்டதோ என்ற மனநிலை வந்த சமயத்தில்தான், தற்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி பெண் சமூகத்திற்கு ஏற்றார் போல் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வரத்தொடங்கியுள்ளன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 2016 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘இறுதிச் சுற்று’, அறிமுக இயக்குநரான அருண்பிரபு இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான 'அருவி', மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற முயற்சிக்கும் மதிவதனி என்கிற மாவட்ட ஆட்சியரின் போராட்டமாக வெளிவந்த ‘அறம்’, 2019 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘காற்றின் மொழி’ போன்ற எண்ணற்ற படங்களை சொல்லலாம். அந்த வரிசையில் தற்போது நான்கு பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி வெளிவந்துள்ள ‘கண்ணகி’ திரைப்படமும் இணைந்துள்ளது.

‘கண்ணகி’ தலைப்பு ஏன்?


கண்ணகி படத்தின் போஸ்டர் மற்றும் இயக்குநர் யஷ்வந்த் கிஷோர்

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா ஆகிய நான்கு பெண்களை முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து வெளிவந்துள்ள திரைப்படம்தான் ‘கண்ணகி’. அறிமுக இயக்குநரான யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில், ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் நான்கு நாயகிகளுடன் மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ட்ரைலரையே டிரம்ப் கார்டாக பயன்படுத்தி மக்களை திரையரங்கை நோக்கி ஈர்த்துள்ள இப்படம், தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.‘கண்ணகி’ என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மதுரையை எரித்த கண்ணகியாகத்தான் இருக்கும். கண்ணகி என்ற தலைப்பை கேட்டவுடன் ஒருவேளை கண்ணகியுடன் தொடர்புப்படுத்திதான் இந்த கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்குமோ? என்ற கேள்வி எழுந்திருக்கலாம். ஆனால் அதுதான் இல்லை. மதுரையை எரித்த கண்ணகிக்கும், படத்தின் கதைக்கும் துளிகூட தொடர்பும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு ஏன்? படத்திற்கு இந்த தலைப்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதுகுறித்து அறிமுக இயக்குநரான யஷ்வந்த் கிஷோர் சில தினங்களுக்கு முன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, ''கண்ணகிக்கும் இந்த படத்தின் கதைக்கும் தொடர்பு இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன். அப்புறம் ஏன் இந்த தலைப்பு என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். பொதுவாக எனக்கு கண்ணகியை மிகவும் பிடிக்கும். நம் இலக்கியத்தில் கண்ணகிக்கு என்று அதிக முக்கியத்துவம் உண்டு. ஒரு பெண் நேருக்கு நேர் நின்று நியாயம் கேட்பது வேறு மொழி இலக்கியத்தில் இருக்கிறதா என்றெல்லாம் எனக்கு தெரியாது. அவரைப்போன்ற துணிச்சலுடன் நியாயம் கேட்கும் நான்கு பெண்கள் தொடர்பான கதையை மையமாக வைத்து படத்தினை எடுத்திருப்பதாலேயே, இந்தத் தலைப்பை படத்திற்கு வைத்தேன். இந்தப் படம் கண்டிப்பாக வேறொரு அனுபவத்தை படம் பார்க்க வருபவர்களுக்கு கொடுக்கும் என்று நம்புகிறேன்'' என கூறினார்.

‘கண்ணகி’ படத்தின் கதை என்ன?


'கண்ணகி' படத்தின் நான்கு கதாநாயகிகள் வெவ்வேறு சூழலில் இடம்பெறும் காட்சிகள்

நான்கு பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பதுதான் 'கண்ணகி' படத்தின் கதை. இதில் முதலில் காட்டப்படும் அம்மு அபிராமி, நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருக்கிறார். அதற்கு காரணம் அவரது அம்மாவாக வரும் நடிகை மௌனிகா. ஏனென்றால் தனது மகள் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று, அவளை பார்க்கவரும் ஒவ்வொரு மாப்பிள்ளையையும் நிராகரித்து விடுகிறார். இதில், அபிராமியின் அப்பாவாக வரும் மயில்சாமி ஒரு கம்யூனிஸ்ட்வாதி. அவர்தான் மகளின் ஒரே நம்பிக்கை. இன்னொரு புறம் வித்யா பிரதீப் திருமணமானவர். இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறி அவரது கணவர் மற்றும் மாமியார் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்ல, அவருக்கோ திருமணத்தின் புனிதத்தன்மை மீது இருக்கும் நம்பிக்கையால், விவாகரத்து தர மனமில்லாமல் போராடுகிறார் . அதேபோன்று கீர்த்தி பாண்டியன் தனது காதலருடன் ஏற்பட்ட உறவால் கர்ப்பமாக இருக்கிறார். அதனால் காதலருடன் சேர்ந்து, கருவை கலைக்க முடிவெடுத்து மருத்துவமனைக்கு செல்லும்போது, அவர் சந்திக்கும் பிரச்சினைதான் மற்றொரு கதை. நான்காவதாக வரும் ஷாலின் ஜோயா கதாபாத்திரத்திற்கோ திருமணத்தின் மீது துளிக்கூட நம்பிக்கை இல்லை. அதனால் தன்னுடைய ஆண் நண்பருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வரும்போது உறவில் சிக்கல் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இப்படி இந்த நான்கு பேரின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து என்ன ஆனது என்பதை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி படத்தின் திரைக்கதை மற்றும் கிளைமேக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், இன்றைய சமுதாய நிலையில் இருக்கும் பெண்களின் மனநிலையை நான்கே பெண்களை வைத்து இப்படம் அப்பட்டமாக காட்டியுள்ளதோடு, அவர்களின் உணர்வுகளையும், வலிகளையும் பதிவு செய்துள்ள விதம் பாராட்டும்படியாக உள்ளது.

படத்தில் பிளஸ் மைனஸ் என்ன?


மறைந்த நடிகர் மயில்சாமி மற்றும் கீர்த்தி பாண்டியன் இடம்பெற்ற பட போஸ்டர்

அம்மு அபிராமி, வித்யா பிரதீப், கீர்த்தி பாண்டியன், ஷாலின் ஜோயா ஆகிய நான்கு நடிகைகளை மட்டுமே முன்னிறுத்தி வெளிவந்துள்ள 'கண்ணகி' படத்தில் நால்வருமே தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் குணசித்திர கதாபாத்திரத்தில் வரும் மறைந்த நடிகர் மயில்சாமி, நடிகை மெளனிகா உட்பட பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். டெக்னிக்கல் விஷயத்தை பொறுத்தவரை பின்னணி இசை பலமாக இருந்தபோதும் பாடல்கள் கைகொடுக்கவில்லை. அதே போல் ஒளிப்பதிவு கண்ணுக்கு உறுத்தாமல் இருந்தாலும், வசனமே பிரதானமாக உள்ளதால் விஷுவலாக படம் எந்தவொரு பெரிய தாக்கத்தையும் கொடுக்கவில்லை. இருப்பினும் வசனங்கள் 'ஒருத்தருக்கு ஒருத்தி என்பதை விட ஒருத்தருக்கு ஒருத்தர்னு சொல்லுங்க' போன்ற பளீர் வரிகளால் ஆங்கங்கே ஈர்க்கிறது. இதில் பெரிய சிக்கலே திரைக்கதையில் பல இடங்களில் இயக்குநர் காட்சி மொழியாக வெளிப்படுத்தாததுதான். குறிப்பாக இரண்டாம் பாதி முழுவதும் ஸ்லோ மோஷனில் செல்வதால், சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லி முடிக்காமல் படம்பார்க்க வந்தவர்களை டயர்ட் ஆக்கி விடுகிறார். இதில் படத்தின் நீளத்தை குறைத்து, இரண்டாம் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பை அதிகப்படுத்தி இருந்தால் ‘கண்ணகி’ நிச்சயம் நம்மை பெரியளவில் கவர்ந்திருப்பாள். இருப்பினும் இயக்குநரின் முயற்சிக்காகவும் நடிகர்களின் உழைப்புக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.

Updated On 26 Dec 2023 12:56 AM IST
ராணி

ராணி

Next Story