ஒரு படம் வெளிவரும்போது ஏற்படுத்தும் தாக்கத்தை விட, நீண்ட காலத்திற்கு பிறகு வேறு ஒருவர் அதே சாயலிலோ அல்லது அதனை தொடர்புப்படுத்தியோ படத்தினை எடுத்து வெற்றி கண்டுவிட்டால், தோற்றுப்போன படமும் அங்கு தனது வெற்றி முத்திரையை பதித்து கொண்டாடப்பட்டுவிடும். அப்படியாகத்தான் தற்போது மலையாளத் திரையுலகில் குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘மஞ்சுமல் பாய்ஸ்’ என்கிற படம் வெளிவந்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. காரணம் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘குணா’ படத்தின் குகையும், அப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்மணி அன்போடு காதலன் பாடலும்தான். அது தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
'குணா' கமலை மறக்க முடியுமா!
கமல் படத்திற்கு எப்போதுமே ஒரு ராசி உண்டு. அது என்னவெனில் அவரின் சில படங்கள் ரிலீஸாகும்போது, பெரிதாக கவனிக்கப்படாமல், கொண்டாடப்படாமல் இருக்கும். ஏன் கமலின் ரசிகர்களே கூட அதை கடந்து சென்றிருப்பார்கள். பிறகு பல வருடங்கள் கழித்து, அதேபடத்தை மீண்டும் பார்க்கும்போது கொண்டாடித் தீர்ப்பார்கள். இதற்கு உதாரணமாக ‘அன்பே சிவம்’, 'ஹேராம்’, 'ஆளவந்தான்’ போன்ற திரைப்படங்களை சொல்லலாம். அந்த வரிசையில் தற்போது 'மஞ்சுமல் பாய்ஸ்' படத்திற்கு கிடைத்த வரவேற்பின் தொடர்ச்சியாக 'குணா' திரைப்படமும் பல ஊடகங்களாலும், சமூக ஊடகங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மிக மோசமான தந்தை, அதைவிட மிக மோசமான தொழில் செய்யும் தாய் இருவருக்கும் மகனாக பிறக்கும் குணா ஒழுக்க மீறல்கள் நிறைந்த பகுதியில் வளர்ந்தாலும், இதெல்லாம் தப்பு என்கிற மனநிலையும், அந்தத் தவறுக்கு கடவுளைச் சரணடைவதுதான் சரியான முடிவு என்கிற தெளிவு பெற்றவனாகவும் இருக்கிறான். இருந்தும் இந்த சமூகம் அவனை மனநிலை பாதிக்கப்பட்டவனாக பார்க்கிறது. இத்தகைய பாவங்கள் நிறைந்த சூழலில் இருந்து தன்னை காப்பாற்ற அம்பிகை வருவாள், அவளே என் அபிராமி என காத்திருக்கும் குணாவிற்கு அவளின் காட்சியும் கிடைக்கிறது. இருந்தும் குணாவின் உணர்வை புரிந்துக் கொள்ளாத அபிராமியோ அவனுக்கு பிடிபடாமல் இருக்க, ஆந்திரத்திலிருந்து தமிழகத்தின் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு அவளை கடத்திவந்து தனது அன்பெனும் மழையில் நனைய செய்கிறான் குணா.
'குணா' படத்தில் குணாவாக வரும் கமல் மற்றும் அபிராமியாக வரும் நடிகை ரோஷினி
இந்த நேரத்தில் சித்தப்பா துவங்கி சில்லறைகளை சுரண்ட வரும் சில மனித மிருங்கள்வரை பலரும் குணாவின் காதலுக்கு அச்சுறுத்தலாக இருக்க, அந்த மலையில் குணாவுக்கும், அபிராமியாக அவன் நினைத்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு என்னவானது, இருவரும் சேர்ந்தார்களா, இந்த வஞ்சகம் நிறைந்த உலகம் அவர்களை வாழவிட்டதா என்பதை அன்பையும் உணர்வுகளையும் இயல்பாகக் குழைத்த அழகான காதல் அடையாளமாக உருவாகி வெளிவந்த திரைப்படம்தான் ‘குணா’. 1991 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தபோது அதே சமயத்தில் வெளிவந்த ரஜினியின் தளபதிக்கு ஈடு கொடுக்க முடியாமல் சறுக்கியது. இருந்தும் 'கண்மணிக்காக அன்போடு காதலன் எழுதிய அந்த கடிதம்' வரலாற்றில் என்றோ ஒருநாள் மீண்டும் வாசிக்கப்பட்டு நிச்சயம் சாதனை புரியும் என்று எதிர்பார்த்தவர்களுக்கான நாளை ’மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் இன்று நிஜமாக்கிக்காட்டியுள்ளது. இப்படத்தின் மூலம் குணா கமல் மட்டும் அல்ல, கொடைக்கானலில் பிரபல சுற்றுலா தலமான குணா குகையும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
குணா குகை ரகசியம்
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று என்றால் அது இந்த குணா குகைதான். 1821 ஆம் ஆண்டு அமெரிக்கரான பி.எஸ்.வார்டு என்பவர் இந்த இடத்தை கண்டுபிடித்ததாக வரலாறு கூறுகிறது. அவ்வளவாக பிரபலமடையாமல் இருந்த இந்த குகைக்கு டெவில்ஸ் கிச்சன் அதாவது பேய்களின் சமையலறை என்ற பெயரும் கூட உண்டு. காரணம் ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த குகை தொடர்பாக பல்வேறு அமானுஷ்ய கதைகள் புழக்கத்தில் இருந்தது மட்டுமின்றி, புராண கதைகளில் ஒன்றான மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது அந்த இடத்தில் மறைந்து உணவு சமைத்து சாப்பிட்டதாகவும் அதனாலேயே அந்த இடத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த குகை அன்றைய காலங்களில் நன்கு அறியப்பட்ட இடம் என்றாலும், உலக அளவில் மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்து பிரபலம் அடைந்தது என்னவோ கமல்ஹாசன் நடித்து 1991-ஆம் ஆண்டு வெளிவந்த ‘குணா’ திரைப்படத்திற்கு பிறகுதான். “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல” என்று இந்த குகையில் அமர்ந்து கமல்ஹாசன் பேசிய வசனம், இந்த இடத்தினை காதலர்களின் சின்னங்களில் ஒன்றாகவே மாற்றியது.
கொடைக்கானலில் உள்ள குணா குகை
இதனால் ‘குணா’ படத்தின் வருகைக்கு பிறகு இந்த இடத்தினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. அதுமட்டுமின்றி அப்படி சென்றுவரும் சுற்றுலா பயணிகளில் சிலர் தெரியாமல் தவறி விழுவதும், சிலர் தெரிந்தே தங்களை தாங்களே மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகளும் அதிகரிக்க தொடங்கின. இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பு வேலிகள் அங்கு அமைக்கப்பட்டன. இருந்தும் அவ்வப்போது ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி 2006-ஆம் ஆண்டு அந்த குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ள ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்தால் இந்த ‘குணா குகையும்’, ‘குணா’ படமும் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
யார் இந்த 'மஞ்சுமல் பாய்ஸ்'?
'மஞ்சுமல் பாய்ஸ்' படத்தில் வரும் நடிகர்கள் பெரிய இரும்பு கேட் ஒன்றின் முன்பு நிற்கும் காட்சி
நண்பர்கள் ஒன்றாக இணைந்துவிட்டாலே அன்று திருவிழாதான். அதிலும் ஆண் நண்பர்களை சொல்ல வேண்டுமா என்ன?. அப்படியான ஒரு ஆண் நண்பர்கள் குழுதான் இந்த மஞ்சுமல் பாய்ஸ். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்து வளர்ந்தவர்கள். வழக்கம் போல் எல்லா நண்பர்களை போலவும் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பிறகு மாலையில் ஒன்றாக சேர்ந்து அரட்டை அடிப்பது, பொழுதை கழிப்பது இவர்களது வழக்கம். அப்படி ஒருமுறை இவர்களின் சந்திப்பின் போது கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவர முடிவு செய்தவர்கள், அதன்படி கடந்த 2006-ஆம் ஆண்டு கொச்சியில் உள்ள மஞ்சுமல் என்கிற இடத்தில் தமிழ்நாட்டின் கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா வந்தவர்கள் கமலின் குணா படத்தினை பார்த்திருந்ததால் அந்த குணா குகையையும் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அப்படி 2006 ஆம் ஆண்டு கொடைக்கானல் குணா குகைக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்குள்ள குழியில் விழுந்த சுபாஷ் என்பவரை, சிஜு என்பவர்தான் போராடி மீட்டுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி தங்கள் சொந்த ஊருக்கு வந்தவர்கள் இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் அவர்கள் வேலையை கவனிக்க தொடங்கியுள்ளனர். ஆனாலும் இதுகுறித்த செய்தி அன்றைய பத்திரிகைகளில் வெளிவந்து எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டியது. அப்படி குணா குகைக்குள் விழுந்த நண்பனை எப்படி வீரத்துடன் காப்பாற்றினார்கள் என்பதனை அடிப்படையாகக் கொண்டுதான் தற்போது மஞ்சுமல் என்ற பெயரிலேயே படம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
100 கோடி வசூல் சாதனை
'மஞ்சுமல் பாய்ஸ்' படத்தின் போஸ்டர்
2024-ஐ பொறுத்தவரையில் மலையாளத் திரையுலகில் வெளிவரும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன், நல்ல வசூல் சாதனையும் நிகழ்த்தி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ள ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. சிதம்பரம் எஸ்.பொதுவால் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்தில் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரியளவில் வரவேற்பை பெற்றுவரும் இப்படம் இதுவரை உலக அளவில் ரூ.100 கோடியை எட்டியுள்ளது. குறிப்பாக தமிழக மார்க்கெட்டையும் வென்று, 7 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாகவும், குறுகிய நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்த மலையாள படங்களில் ஒன்றாகவும் இப்படம் பேசப்படுகிறது.
மஞ்சுமல் பாய்ஸை சந்தித்த உலகநாயகன்
சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள 'மஞ்சுமல் பாய்ஸ்' திரைப்படத்தினை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் படத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர். கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமலின் குணா படப்பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு இதில் பயன்படுத்தியுள்ளது. அதற்கான உரிமையை இசைஞானி இளையராஜாவிடம் இருந்து பெற்றுத்தான் படக்குழு படத்தில் பயன்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் ‘குணா’ படம் வெளிவந்து 32 வருடங்களை கடந்த நிலையிலும் இன்றும் எதாவது ஒரு காட்சியை பார்க்கும்போது நெஞ்சுக்குள் ஏதோ ஒரு வலியை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட இந்த படத்தினை கொண்டாடும் வகையில் வெளிவந்துள்ள ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தினை பார்த்த உலக நாயகன் கமல்ஹாசன், படத்தின் இயக்குநர் சிதம்பரத்தையும் அவரது படக்குழுவையும் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவினரிடம் பேசிய கமல் “இந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் பெயரை உங்களது படத்தில் போட்டதற்காக அல்ல. காதல் என்பது நண்பர்களுக்குள்ளும் வரும் என்பதனை இப்படம் சொல்லியிருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இயக்குநர் சந்தான பாரதி மற்றும் நடிகர் கமல்ஹாசனுடன் 'மஞ்சுமல் பாய்ஸ்' பட இயக்குநர் சிதம்பரம்
உலக நாயகனின் இந்த சந்திப்பிற்கு பிறகு ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரத்தை நடிகர்கள் தனுஷ் மற்றும் சியான் விக்ரம் இருவரும் தனித்தனியாக அழைத்து சந்தித்து அவர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இப்படி ஒட்டுமொத்த திரைத்துறையினரின் பாராட்டுகளையும் பெற்றுவரும் மலையாள இயக்குநர் சிதம்பரம், அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து இயக்க வாய்ப்பிருப்பதாக ஒரு தகவலும் பரவி வருகிறது. இதனால் இயக்குநர் சிதம்பரம் தமிழிலும் இதுபோன்ற ஒரு படத்தினை எடுத்து வெற்றி கொடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.