இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பல தடைகளை கடந்து எப்போது ரிலீஸ் ஆகும் என அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து ஒருபுறம் காத்திருக்க, அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கொடுக்கும் விதமாக படத்தின் ரிலீஸ் தேதி அமையலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் 'இந்தியன் 2' ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்பொழுது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இது குறித்த சுவாரஸ்யமான தகவலை கீழே காணலாம்....

இந்திய திரையுலகை அதிர வைத்த 'இந்தியன்'

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் 'இந்தியன்'. சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்த்கர், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஊழல், லஞ்சத்திற்கு எதிராக சுதந்திரப் போராட்ட தியாகி நடத்தும் போராட்டம் என்ற ஒன் லைனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தில், காதல், சென்டிமென்ட், சண்டைக் காட்சிகள், பிரமாண்ட நடனங்கள் என அனைத்தும் சரியான விகிதத்தில் முறையாக கலந்து கொடுக்கப்பட்டிருந்ததால், இப்படம் அன்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக, வயதான ஒருவர் லஞ்சம் வாங்கும் நபர்களை தேடிச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்கிறார், என்ற செய்தியுடன் துவங்கும் இந்த படம், அடுத்தடுத்து ஏன் அந்த வயதானவர் கொலை செய்கிறார்?, எல்லா வயதான நபர்களாலும் இப்படி கொலை செய்ய முடியாதே, அப்படியென்றால் இந்த நபர் யார்?, சுதந்திர போராட்ட தியாகி என்றால், காந்தி வழி வந்தவருக்கு ஏன் இத்தனை கோபம்?, வயதானவராக இருந்தும் எப்படி ஆரோக்கியமான நபர்களை தாக்கி இவரால் கொலை செய்ய முடிகிறது? போன்ற பல கேள்விகளை முன்வைத்து, அதில் கிடைக்கும் பதில்களையே படத்தின் திரைக்கதையாக உருவாக்கியிருந்த விதம் அன்று புதுமையான திரை மொழியாகப் பார்க்கப்பட்டது. அதிலும், படத்தின் பிளாஷ்பேக் கதை, கேரளாவின் வர்மக்கலை குறித்து சொல்லப்பட்ட தகவல், கிளைமாக்ஸில் மகனென்றும் கூட பார்க்காமல் நியாயத்திற்காக கொலை செய்யத் துணியும் தந்தையின் துணிச்சல் போன்ற விஷயங்கள் அந்த சமயம் பலராலும் ரசிக்கப்பட்டது. இதனாலேயே இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றதோடு, தமிழ் தவிர இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்திக் காட்டியது. மேலும் இத்திரைப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக தேசிய விருதை நடிகர் கமல்ஹாசன் பெற்றதோடு, 69-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக 'இந்தியன்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது.


'இந்தியன்' முதல் பாகத்தின் திரைப்பட காட்சிகள்

'இந்தியன் 2' அறிவிப்பும்... அடுத்தடுத்து வந்த சிக்கலும்...

2015 ஆம் ஆண்டே ‘இந்தியன் 2’ திரைப்படத்தை இயக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயம் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் மிகவும் பிஸியாக இருந்ததால் ‘இந்தியன் 2’ படத்தின் பணிகள் தாமதமாக, முதலில் தயாரிப்புக்காக பேச்சுவார்த்தை நடத்தியிருந்த ஸ்ரீ சூர்யா மூவீஸின் ஏ.எம்.ரத்னம் மற்றும் ஆர்ட் டைரக்டர்கள் ஆகியோர் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். பின்னர் லைகா நிறுவனம் ‘இந்தியன் 2’ படத்தினை தயாரிக்க முன்வர 21 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கமல்ஹாசனின் விளம்பரப்படங்கள் வெளியிடப்பட்டு தயாரிப்பு பணிகள் தொடங்கின. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற படப்பிடிப்பு பணிகளின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டு உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.


'இந்தியன் 2' படப்பிடிப்பின் போது விபத்து மற்றும் நடிகர்கள் விவேக், மனோபாலா, மாரிமுத்து மறைவு

இதையடுத்து, இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் கொரோனா லாக்டவுன் போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு மேலும் தள்ளிப்போக இந்த சமயம் முதல் முறையாக கமலுடன் கைகோர்த்த நகைச்சுவை நடிகர் விவேக்கும் திடீர் மாரடைப்பால் இறந்து போனார். இவரைத் தொடர்ந்து இந்தியன் முதல் பாகத்தில் நடித்திருந்த நெடுமுடி வேணு, நடிகர் மனோபாலா மற்றும் சமீபத்தில் எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து என இதுவரை மொத்தம் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் இந்த தொடர் இறப்பாள் அதிர்ச்சியான நெட்டிசன்கள் இது சபிக்கப்பட்ட படம் என்று இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டனர். இப்படி படப்பிடிப்பு தளத்தில் விபத்து… நடிகர்களின் இறப்பு.. நெகட்டிவான விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து ஒரு வழியாக இந்த ஆண்டு படத்தின் பணிகள் மும்மரமாக தொடங்கியது. முக்கியமான காட்சிகள் தைவானின் தைபே, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளன. அண்மையில் சென்னையில் அமைக்கப்பட்ட செட்டில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளன.


'இந்தியன் 2' படகாட்சிகளை நடிகர் கமலுக்கு விளக்கும் ஷங்கர் மற்றும் பட போஸ்டர்

தொடங்கியது 'இந்தியன் 2' டப்பிங் பணி

'இந்தியன் 2' திரைப்படம் பல ஆண்டுகளாக உருவாகி வரும் நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி விடும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுபோல்தான் படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு அறிவிப்புகளும் இருக்கின்றன. காரணம் தற்போது தான் படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. அதற்கான அறிவிப்பை படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது ட்விட்டர் அதாவது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டனர். அதில் டப்பிங் ஸ்டூடியோவிற்கு உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோர் காரில் வந்து இறங்கும் காட்சிகளும், டப்பிங் தியேட்டரில் இருவரும் பேசிக் கொண்டு டப்பிங் பணிகளை மகிழ்ச்சியோடு செய்யும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் படத்தில் வரும் இந்தியன் தாத்தா தொப்பி போட்டுக் கொண்டு இருக்கும் ஒரு சின்ன ஷாட்டும் அந்த வீடியோவில் ரசிகர்களுக்காக ரிவீல் செய்திருந்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, படத்தின் போஸ்ட் புரொடக்சனின் இறுதி வேலையான டப்பிங் பணிகளை ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆரம்பித்திருப்பது கமலின் ரசிகர்களிடத்தில் மகிழ்ச்சியையும், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


'இந்தியன் 2' டப்பிங் பணியின் போது கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர்

எப்போது ரிலீஸ் ஆகிறது 'இந்தியன் 2' ?

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கியிருந்தாலும், படம் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லால் சலாம்’ படத்துடன் போட்டி போட்டுக்கொண்டு ‘இந்தியன் 2’ படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் தான் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. காரணம் ‘இந்தியன் 2' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால்தானாம். எப்படியும் இப்பணிகள் அனைத்தும் முழுமையாக முடிய 10 மாத காலங்கள் ஆகும் என்பதாலையே ஆகஸ்ட் 15ஆம் தேதியை படக்குழுவினர் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை படத்தின் பணிகள் விறுவிறுவென முடிக்கப்பட்டு, பொங்கல் ரிலீசுக்கு தயாரானால் ‘இந்தியன் 2’ படத்துடன் ரஜினியின் ‘லால் சலாம்’, சிவகார்த்திகேயேனின் ’எஸ் கே 21’ மற்றும் சூர்யாவின் ’கங்குவா’ ஆகிய படங்கள் போட்டி போடக் காத்திருக்கின்றன. இதில் ரஜினியின் ‘லால் சலாம்’ படத்துடன் கமலின் ‘இந்தியன் 2’ போட்டி போட்டால் 2023 பொங்கலுக்கு விஜய் மற்றும் அஜித்தின் வாரிசு, துணிவு ஆகிய படங்கள் வெளிவந்து அமர்க்களப்படுத்தியதை விட பிரமாண்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இருந்தும் இதற்கான வாய்ப்பு பெரிய அளவில் இல்லை என கூறப்படுவதுடன், இந்தியன் 2-விற்கு முன்பே ரஜினியின் ‘லால் சலாம்’ ரிலீஸ் ஆகி அடுத்த ஆண்டின் முதல் வசூலை துவங்கிவிடும் என சொல்லப்படுகிறது. எது எப்படியிருந்தாலும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் 'இந்தியன் 2' படம் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தினால் சந்தோசம்தான்.


'இந்தியன் 2' திரைப்பட போஸ்டர்கள்

Updated On 25 Oct 2023 4:52 AM GMT
ராணி

ராணி

Next Story