
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ‘ஜவான்’ திரைப்படம் 1000 கோடி வசூல் பெற்று பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து பின்னர் ‘ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. இவரது முதல் திரைப்படமே 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்தது. பின்னர் தளபதி விஜய்யை வைத்து ‘தெறி’ என்ற மாஸ் கமர்ஷியல் படத்தை கொடுத்து விஜய் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார்.
பின்னர் மீண்டும் விஜயுடன் இணைந்த ‘மெர்சல்' திரைப்படம் சுமார் 300 கோடி மெகா வசூலை பெற்றுது. மீண்டும் விஜயுடன் இணைந்து பிகில் என்ற பிளாக்பஸ்டர் மெகா ஹிட் திரைப்படத்தை இயக்கினார். என்னதான் ஹிட் படங்களைக் கொடுத்தாலும், அட்லீயின் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் விமர்சனங்களும் கூடவே வரும். அதுவும் குறிப்பாக நெட்டிசன்கள் இவர் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் பழைய படங்களின் சாயலில் இருக்கிறது என்று விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
நடிகர் ஷாருக்கானுடன் அட்லீ
சமீபத்தில் பாலிவுட்டின் கிங் கான் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ‘ஜவான்’ என்ற திரைப்படமானது கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தை ஷாருக்கானும் அவரது மனைவி கௌரி கான் தயாரித்திருந்தனர். படம் திரையிடப்பட்டவுடன் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வெறும் 18 நாட்களில் 1000 கோடி வசூலை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் உள்ள இயக்குநர்களில் 1000 கோடி வசூல் திரைப்படத்தை இயக்கிய முதல் இயக்குநர் என்ற பெருமை அட்லீயை சேரும்.
ஜவான் வெளியான பின்பு அவர் அளித்த நேர்காணலில் தனக்கு ஹாலிவுட் வட்டாரத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்ததாக தெரிவித்திருந்தார் . தனது விடாமுயற்சியால் விஸ்வரூப வசூலை பெற்ற அட்லீ விரைவில் ஹாலிவுட்டிலும் இயக்குநராக கால் பதிப்பாரா என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
