இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நம் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான ஒன்று ஜல்லிக்கட்டு. ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போதும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உட்பட பல இடங்களில் ஜல்லிக்கட்டு என சொல்லப்படும் ஏறுதழுவல் நிகழ்வு நடைபெறும். காளைகளை அடக்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் உள்ள வீரம், பெருமை, விளையாட்டுத் திறன் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி ஒரு போட்டியாக விளையாடப்படும் இந்த ஜல்லிக்கட்டு, காலம் காலமாக நம் தமிழர்களின் பெருமையை உலகறிய செய்து வருகிறது. இது உயிருக்கு ஆபத்தான விளையாட்டாக இருந்தாலும், உயிரையும் துச்சமாக நினைத்து சீறி வரும் காளைகளோடு மோதி அதை வெல்லும் போது கிடைக்கும் பெருமை மற்றும் பாராட்டே ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் ஒவ்வொரு ஆண்மகனின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இப்படி பெருமை மிகு தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு குறித்த பல தகவல்கள் நமது வரலாற்று பதிவுகளில் இடம் பெற்றிருந்தாலும், இன்றைய மாடர்ன் யுகத்திலும் சினிமா எனும் ஊடகத்தின் வாயிலாக ஜல்லிக்கட்டின் பெருமை தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் அன்றும் - இன்றும் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு காட்சிகளின் சுவாரஸ்ய தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

அன்றைய சினிமாவில் 'ஜல்லிக்கட்டு'

ஒரு காலத்தில் சிங்கத்துடனும், புலியுடனும் சண்டைபோட்டு ஜெயித்துக்காட்டிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், 'மாட்டுக்கார வேலன்' படத்தில் மாட்டுக்காரராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார். மாடுகளை தமிழர்கள் தெய்வமாக வணங்கி வருவதை அப்படத்தில் வெளிப்படுத்திய எம்.ஜி.ஆர், ஜல்லிக்கட்டு காளைகளுடன் மோதும்படியான காட்சிகளிலும் நடித்துள்ளார். 1956 ஆம் ஆண்டு தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'தாய்க்கு பின் தாரம்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் முத்தையன் என்ற கதாபாத்திரத்தில் வருவார். இதில் எம்.ஜி.ஆருக்கு தாயாக கண்ணாம்பாவும், மாமாவாக பாலையாவும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் முத்தையன் தந்தை ஒரு ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் போது அதனுடன் மோதி உயிரை விடுவார். பின்னர் அதே காளையை படத்தின் கிளைமாக்ஸில் எம்.ஜி.ஆர் அடக்கி, தான் ஒரு கோழையில்லை என்பதை நிரூபிப்பார். அந்த சமயம் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் இந்த காட்சி படத்தின் பிரதான அம்சங்களில் ஒன்றாக பேசப்பட்டதோடு, தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஜல்லிக்கட்டு நிகழ்வை பிரமாதமாக திரையில்காட்டிய முதல் ஹீரோ என்ற பெருமையும் எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இதே போல் நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து ''அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் அடங்காத காளையையெல்லாம் அடக்கிக்காட்டியவன் நான்'' என்று ஆவேசமாக பேசும் வசனம் அன்று திரையரங்கில் விசில் சத்தங்களை எகிற வைத்ததோடு, தமிழர்களின் வீரத்தையும் திரையில் உரக்கச் சொல்லியது. இருந்தும் பெரியளவில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் மோதும்படியான நிகழ்வுகளில் நடித்திராத சிவாஜி, பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படத்தில் மட்டும் ஒரு காட்சியாக இடம்பெற செய்திருந்தார். இதில் படத்தின் ஆரம்பத்தில் ஜெமினி கணேசன் காளையை அடக்கும் படியான நிகழ்வை மன்னராக வரும் சிவாஜி கணேசன் ரசித்துப் பார்க்கும்படி காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.


ஜல்லிக்கட்டு இடம்பெற்ற எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள்

1960-70களில் 'நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், அவை பெரியளவில் கவனிக்கப்படவில்லை. பின்னர் 1980ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில், எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 'முரட்டுக்காளை' படத்தில் வரும் ஜல்லிக்கட்டு மோதல் காட்சி நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. படத்தின் டைட்டிலிலேயே 'முரட்டுக்காளை' என வைத்து விட்டதால், ரஜினி அறிமுகமாகும் முதல் காட்சியே காளையை அடக்கும் படியாக அமைக்கப்பட்டிருக்கும். இதில் படத்தின் வில்லனாக வரும் ஜெய்சங்கர் தன்னுடைய காளையை யார் அடக்குகிறார்களோ அவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் பரிசாக வழங்கப்படும் என்றும், தனது தங்கையையும் திருமணம் செய்து கொடுக்கப் போவதாகவும் அறிவிப்பார். அப்போது பல நபர்கள் முயன்றும் ஒருவராலும் அந்த காளையை அடக்க முடியாமல் போய்விடும். பின் ரஜினியைப் பார்த்து கேலி செய்யும் விதமாக ஜெய்சங்கர் நடந்து கொள்ளவே, அதை பார்த்து பொறுக்க முடியாத ரஜினி காளையை அடக்கக் களத்திற்கு வருவார். பின்னர் சில நிமிட போராட்டங்களுக்குப் பிறகு வெற்றிகரமாகக் காளையை அடக்கும் ரஜினி, பரிசுக்காகவோ, உங்கள் தங்கைக்காகவோ நான் இந்த காளையை அடக்கவில்லை... உங்கள் ஆணவத்தை அடக்கத்தான் வந்தேன் என ஸ்டைலாகக் கூறி அங்கிருந்து செல்ல 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடல் ஆரம்பிக்கும். கெத்தாக ரஜினி ஆடி பாடும் அந்த பாடல், இன்றுவரை தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத சூப்பர் ஹிட் காட்சியாக இருந்து வருகிறது.


'வீரபாண்டிய கட்டபொம்மன்' மற்றும் 'சேரன் பாண்டியன்' படத்தின் ஜல்லிக்கட்டு காட்சிகள்

இதன் பிறகு 1991 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த 'சேரன் பாண்டியன்' படத்தில் ஊரிலுள்ள அனைத்து பெரிய மனிதர்களின் காளைமாடுகளும் வரிசையாக அவிழ்த்துவிடப்படும். அப்போது ஊர் தலைவரான பெரிய கவுண்டரின் காளையை யாரும் அடக்கியிருக்க மாட்டார்கள், பல ஆண்களும் அதனுடன் மோத தயங்கி நிற்பார்கள். அந்த சமயம் கே.எஸ்.ரவிக்குமாரின் சூழ்ச்சியால் களத்திற்கு வரும் ஆனந்த்பாபு காளையை அடக்க முயன்று முடியாமல் திண்டாடுவார். உடனே ஆனந்த்பாபுவை காப்பாற்ற களமிறங்கும் சரத்குமார், காளையை அடக்கிக் காட்டுவார். ஆனால், அதை தாங்கிக் கொள்ள முடியாமல் பெரிய கவுண்டராக வரும் விஜயகுமாரோ துப்பாக்கியை எடுத்து அந்த காளையை சுட்டுக் கொன்று விடுவார். இதே போல் 1994 ஆம் ஆண்டு பிரபுவின் 100வது படமான 'ராஜகுமாரன்' படத்திலும் வாடிவாசலில் இருந்து வெளியே வரும் எல்லா மாடுகளையும் வீரர்கள் அடக்கிவிட ஒரு மாடு மட்டும் பிடிபடாமால் அனைவரையும் பந்தாடும். அப்போது படத்தின் வில்லனான நாசர், தன்னுடைய ராஜகாளையை அடக்க ஊரில் ஆம்பளையே இல்லையா என கேலி செய்வார். உடனே படத்தின் நாயகனான பிரபு, தான் அந்த காளையை அடக்குவதாக சொல்லி களத்திற்கு வருவார். முதலில் ஒரு சில அடிகளை வாங்கினாலும் கடும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் காளையை அடக்கிவிடுவார் பிரபு. பின்னர் இதே போன்றதொரு காட்சி அதே சமயத்தில் புதுமுக நாயகனை முன்னிறுத்தி வெளிவந்த 'நெஞ்ச தொட்டு சொல்லு' படத்திலும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.

இன்றைய சினிமாவில் 'ஜல்லிக்கட்டு'

நமது கலாச்சாரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் நமது கிராமப்புற பண்பாடுகள் மறக்கடிக்கப்பட்ட போதிலும், 'ஜல்லிக்கட்டு' மீது இருந்த மவுசு மட்டும் குறையாமல் இருந்தது. அதில் குறிப்பாக இன்றைய சினிமாவில் 'ஜல்லிக்கட்டு' என்று சொன்னவுடன் நமக்கெல்லாம் டக் என நினைவுக்கு வருவது 'விருமாண்டி' திரைப்படமாகத்தான் இருக்கும். பொதுவாகவே ஜல்லிக்கட்டில் வீரர்கள் வாடிவாசலில் நின்று வெளியே வரும் ஒவ்வொரு காளையின் திமிலை பிடித்து அடக்குவதுதான் வழக்கம். ஆனால் கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த 'விருமாண்டி' படத்திலோ நாயகன் கமல் வாடி வாசலில் காத்திருக்காமல், போஸ்ட் கம்பத்தில் இருந்து குதித்து, நாயகி அபிராமியின் கம்பீரமான காளையை முட்டி, மோதி மல்லுக்கட்டி அடங்குவார். அந்த சமயம் ‘விருவிருமாண்டி விருமாண்டி’ என்று கோரஸாக பின்னணியில் பாடல் பாட கமல் சேஷ்டையுடன் காளையை அடக்கும் அந்த காட்சி பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். இந்த படத்தில் பல முக்கிய காட்சிகளில் காளை மாடு பயன்படுத்தப்பட்டிருந்ததோடு, இதற்காக தனி பயிற்சியும் உலகநாயகன் கமல்ஹாசன் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதற்கு பிறகும் நமது மண் சார்ந்த பல திரைப்படங்கள் வெளிவந்த போதும், பெரியளவில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் படமாக்கப்படவில்லை. காரணம் அந்த சமயம் விலங்குகள் நல வாரியம் கொடுத்த அதிகபடியான கெடுபிடிகள்தான். இதனால் சென்சாருக்கு பயந்து பல படங்களில் ஜல்லிக்கட்டு காட்சிகள் வைக்கப்படாமல் இருந்த போதிலும், இன்றைய மாடர்ன் யுகத்திற்கு ஏற்றார் போல் CG உதவியுடன் ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.


கலையரசனின் 'பேட்டை காளி', விஜய் சேதுபதியின் 'கருப்பன்', கமலின் 'விருமாண்டி' படங்களின் காட்சிகள்

அந்த வகையில், வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான 'அரவான்' படத்தில் எதிர்பாராதவிதமாக காளையை அடக்க செல்லும் பசுபதியை மாடு முட்டித் தள்ளிவிடும். அதைப் பார்த்து பொறுக்க முடியாமல் கதாநாயகன் ஆதி அந்த காளையை அடக்க முன் வருவார். அப்போது ஆதியை நீ வெளியூர்க்காரன் கலந்து கொள்ளாதே என பசுபதி தடுக்க, யாருடா வெளியூர்க்காரன் நானும் இந்த ஊரில் பிறந்து வேறு ஊரில் வளர்ந்தவன் என மாஸாக பேசி காளையின் திமிலை பிடித்து அடக்கி அசத்துவார். இந்த காட்சி பார்க்க விறுவிறுப்பாக இருப்பதுடன் நவீன தொழில்நுட்பமும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கும். இதே போல் 2017 ஆம் ஆண்டு விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'கருப்பன்' படத்திலும் ஜல்லிக்கட்டு காட்சி அற்புதமாக CG உதவியுடன் படமாக்கப்பட்டிருக்கும். குறிப்பாக இப்படத்தில் ரோபோ மாடல் முறையை பயன்படுத்தி கேமரா ட்ரிக்ஸ் மூலம் எடுக்கப்பட்ட அந்த ஜல்லிக்கட்டு காட்சியின் மேக்கிங் வீடியோ அந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் வெளியிடப்பட்டதோடு, அந்த வீடியோவும் வைரலானது. இவைகள் தவிர புகழ் பெற்ற பான் இந்தியா படமான 'பாகுபலி' திரைப்படத்திலும் ஜல்லிக்கட்டுக்கு நிகராக அனிமேஷன் உதவியுடன் காளையை அடக்கும் கம்பீரமான காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோக்களே காளைகளை அடக்கி வந்த நிலையில், இதில் வில்லன் ராணாவோ மிகப்பெரிய காளை ஒன்றை தனியாளாக எதிர்கொண்டு அடக்கும் படியான காட்சியை மிக பிரம்மாண்டமாக CG உதவியுடன் இயக்குநர் ராஜமெளலி படமாக்கி இருப்பார்.


வெற்றிமாறனின் 'வாடிவாசல்', அமீரின் 'சந்தனத்தேவன்' பட போஸ்டர்கள்

மேலும் பேட்டைக்காளி, மதுரை வீரன், காரி என எத்தனையோ படங்களில் மாடு வளர்ப்பு, ஜல்லிக்கட்டு காளைகளின் சிறப்பு, ஜல்லிக்கட்டு நடத்த எத்தகைய சிரமங்களை எதிர்க்கொள்ள வேண்டும், அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என பல விஷயங்கள் இன்றைய சினிமாவில் விவாதிக்கப்பட்டுள்ளதோடு, ஜல்லிக்கட்டின் பெருமையையும் திரையில்காட்டி நமது படைப்பாளர்கள் மெய் சிலிர்க்க செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இயக்குநர் அமீரின் இயக்கத்தில் 'சந்தனத்தேவன்', இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள 'வாடிவாசல்' என அடுத்தடுத்த படங்கள், நமது ஜல்லிக்கட்டின் சிறப்பை உலகளவில் பறைசாற்றி தமிழர்களை பெருமைப்படுத்த தயாராகி வருகின்றன.

Updated On 23 Jan 2024 12:07 AM IST
ராணி

ராணி

Next Story