இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சுருள் முடி, உருளும் கண்கள், வாஞ்சையான சிரிப்பு என எப்போதும் தன் அழகான அதே நேரம் ஆக்டிவான நடிப்பால் தென்னிந்திய ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகை நித்யா மேனன். ஒருசில நடிகைகளை போன்று திரையுலகில் எப்படிப்பட்ட வேடங்கள் உள்ள படங்களாக இருந்தாலும் சீக்கிரமே முன்னிலை பெற்றுவிட வேண்டும் என்று கிடைத்த வேடங்களை எல்லாம் ஏற்று நடித்து விடாமல், கதை, அந்த கதையில் தனது கதாபாத்திரத்திற்கு உண்டான முக்கியத்துவம் ஆகியவற்றை பொறுத்தே படங்களை தேர்வு செய்து நடிக்கும் பழக்கம் கொண்டவர் இவர். இதனால் நித்யா மேனன் தன்னிடம் கதை சொல்ல வருபவர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வெறும் ஹீரோவை முன்னிறுத்தி கமர்சியல் வெற்றியை மட்டுமே எதிர்பார்த்து வருகிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய இயக்குநராக, தயாரிப்பாளராக இருந்தாலும் அசால்டாக வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு போய்விடுவாராம். அப்படிப்பட்ட இவர் தன் வேடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அத்தனை படங்களுமே இன்றுவரை அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பபட்ட படங்களாகவும், அவருக்கு புகழ் சேர்த்த படங்களாகவும் மட்டுமே இருந்துள்ளன. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷுடன் இணைந்து 'ராயன்' படத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பழைய நித்யா மேனனை நினைவுப்படுத்தும் விதமாக ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து காதல் ரசம் சொட்டச் சொட்ட ஒரு ரொமான்டிக் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார். இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

சினிமா அறிமுகம் நிகழ்ந்தது எப்படி?


குழந்தைப் பருவம் மற்றும் இளமை பருவத்தில் நித்யா மேனன்

ஹனுமான் என்ற ஆங்கில படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நித்யா மேனன், கதாநாயகியாக அறிமுகமானது என்னவோ தனது தாய்மொழியான மலையாளத் திரையுலகில்தான். அதுவும் முதல் படமே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடித்தார். 2008-ஆம் ஆண்டு கே.பி.குமரன் என்பவரது இயக்கத்தில் வெளியான ‘ஆகாச கோபுரம்’ என்ற அந்த படத்தில் ஹில்டா வர்கீஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலேயே அசத்தியிருந்தார். இதனால் தொடர்ந்து பிற மொழிகளிலும் வாய்ப்புகள் வர கன்னடம், தெலுங்கு என தன் திரை பயணத்தை விரிக்க தொடங்கினார். இப்படியான நேரத்தில், இவரின் நடிப்புத்திறனை கண்ட தமிழ் திரையுலகம் இங்கும் அவரை நடிக்க அழைத்தது. அப்படி அவர் கோலிவுட்டில் முதல் முறையாக அறிமுகமான படம்தான் ஜெயேந்திர பஞ்சபகேசன் என்பவரது இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு வெளிவந்த ‘நூற்றியென்பது’ திரைப்படம். இப்படத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து போட்டோ ஜர்னலிஸ்ட் விஜயலட்சுமியாக அறிமுகமானார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஹிட் கொடுக்கவில்லை. இதே ஆண்டில் தமிழில் ‘வெப்பம்’ என்ற மற்றொரு படத்திலும் நடித்திருந்தார். நடிகர் நானியுடன் இணைந்து ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு இப்படம் சுமார் என்ற அளவிலேயே இருந்தது. எப்போதும் ஒரு நடிகை தனது கதை தேர்வுகளில் சாமர்த்தியமாக இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. தொடக்கத்தில் சில சறுக்கல்களையும், சில வெற்றிகளையும் பார்ப்பார்கள். அதன்பிறகுதான் தோல்வி என்ற நிலையில் இருந்து ஒவ்வொரு வெற்றி படிக்கட்டுகளாக ஏற ஆரம்பித்து தன் தொழில் தொடர்பான பல நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் நித்யா மேனனும் திரையுலகில் அறிமுகமான சில நாட்களில், தான் பெற்ற அனுபவ பாடங்களில் இருந்து வெற்றிக்கான சில நுணுக்கங்கள் என்ன என்பதை கற்றுக்கொண்டு அதற்கு ஏற்ற வகையில் கதைக்களங்களை தேர்வு செய்ய ஆரம்பித்தார்.


‘மாலினி 22 பாளையங்கோட்டை’ திரைப்படத்தில் ஸ்ரீ பிரியா இயக்கத்தில் செவிலிய பெண்ணாக நடித்த நித்யா மேனன்

அப்படி தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்த நடிகையும், தயாரிப்பாளருமான ஸ்ரீபிரியாவுடன் கைகோர்த்த நித்யா மேனன், அவரின் இயக்கத்தில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்ற படத்தில் நடித்தார். அப்படத்தில் தன் நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்திய நித்யா மேனன், மாலினி என்ற செவிலிப்பெண் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார். தன்னை பாலியல் வல்லுறவு செய்த துரோகிகளை அடையாளம் கண்டவுடன் அவர்களை தானே தண்டிக்கும் காட்சிகளில் தன் எதார்த்தமான நடிப்பால் அதகளம் செய்திருப்பார். இப்படத்தில் அவரின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டால் தமிழ் சினிமாவில் நித்யா மேனனுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது மட்டுமன்றி அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. நித்யா மேனனும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று எவ்வளவு பிசியாக நடித்தாலும் தமிழில் வரும் வாய்ப்புகளை மட்டும் தவற விடுவதில்லை. காரணம் தமிழ் திரையுலகில் அவரின் பாத்திர வடிவமைப்புக்கு ரசிகர்கள் கொடுக்கும் முக்கியத்துவம்தான். அதனாலேயே தமிழில் இருந்து அவரை யார் அணுகினாலும் கதை கேட்டு பிடித்திருந்தால் உடனே நடிக்க ஒத்துக்கொள்வாராம். அப்படி ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘காஞ்சனா 2’, ‘24’, ‘ஓ காதல் கண்மணி’, ‘இரு முகன்’, ‘மெர்சல்’ என வரிசையாக நடித்தவருக்கு, 2017-ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மெர்சல்’ படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

‘மெர்சல்’ தந்த வெற்றியும்... நடிப்பு ராட்சசியாக மாறிய தருணமும்


'மெர்சல்' திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் கையில் குழந்தையுடன் நித்யா மேனன்

‘மெர்சல்’படத்தில் ஐஸ்வர்யா வெற்றிமாறன் என்ற வலுவான கதாபாத்திரத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்த நித்யா மேனன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த ஒரு படம் இன்னும் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று அமரவைத்தது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான சமயத்தில், அந்த ட்ரெய்லரில் நித்யா மேனன் பேசியிருக்கும் “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல அடங்காத ஒரே காளை… வாடிவாசல் தொறந்ததுமே வந்துடுவான் பாரு" என்ற டயலாக் முடிந்து கியூட்டாக தளபதி என்று சொல்லிய வசனம் விஜய்யின் ரசிகர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கவர்ந்தது. இதனாலேயே பட்டிதொட்டியெல்லாம் நித்யா மேனனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதனால் மிகவும் மகிழ்ந்துபோன நித்யா மேனன் இப்படத்தில் விஜய்யுடன் பணியாற்றியது குறித்து ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் ஏற்கனவே அட்லி தனது ‘ராஜா ராணி’, ‘தெறி’ ஆகிய படங்களுக்காக என்னை அணுகியிருந்தார். அதில் எனக்கு பெரிய ஸ்கோப் இல்லாததுபோல் உணர்ந்தேன். ஆனால், மெர்சல் கதையை என்னிடம் அட்லி கூறியபோது எனக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதுபோல் தோன்றியது. உடனே அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும் விஜயையும் எனக்கு மிகவும் பிடிக்கும். தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு நடிகருடன் இப்படியான ஒரு வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றியது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அவருடன் நடித்த அனுபவம் எனக்கு புதிதாக இருந்ததுடன், விஜய்யுடன் பணியாற்றியதை மிகவும் பாதுகாப்பானதாக உணர்ந்தேன் என்று கூறியிருந்தார்.


'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் நித்யா மேனன்

இப்படத்திற்கு கிடைத்த புகழால் மீண்டும் தமிழில் 2020-ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் கம்பீரமான வேடத்தில் கமலா தாஸ் ஐ.பி.எஸ்-ஆக நடித்து அசத்தியிருந்தார். இதில் நித்யா மேனனின் நடிப்பையும், தைரியமான அணுமுறையையும் பார்த்து வியந்துபோன மிஸ்கின், நித்யாவை நடிப்பு ராட்சசி என்று மனதார பாராட்டியது மட்டுமின்றி அவள் என் சகோதரி என்றும் கூறியிருந்தார். மேலும் நித்யாவிடம் எவ்வளவு வேண்டுமானாலும் நடிப்பை தைரியமாக கேட்டுவாங்கலாம். அந்த அளவுக்கு நடிப்பு களஞ்சியம் போல் வித விதமான பாவங்கள் அவளிடம் வெளிப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இப்படி நடிப்பு ராட்சசி என்று பாராட்டுப்பெற்ற நித்யா மேனன், அடுத்ததாக தமிழில் நடிப்பு அசுரன் என்று போற்றப்படும் நடிகர் தனுஷுடன் இணைந்து ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்தார். 2022-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் தனுஷின் பால்யகால தோழியாக ஷோபனா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் கட்டிப்போட்டார். இன்னும் சொல்லப்போனால் தனுஷிற்கு நிகராக போட்டிபோட்டு நடித்து படத்தின் மொத்தத்தையும் தாங்கி பிடித்திருப்பார். சினிமாத்தனம் இல்லாத எதார்த்தத்தோடு தனுஷுடன் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் தன் செல்ல சேட்டைகளாலும், சில்லறை சிரிப்புகளாலும் ரசிக்க வைத்திருப்பார். மேலும் சில காட்சிகளில் எப்போதும் உடனிருக்கும் தோழனான தனுஷை பிரிந்து செல்லும் போதெல்லாம் படம் பார்த்த 90ஸ் கிட்ஸ்கள் இப்படியொரு தோழி, காதலி யாருக்கும் கிடைத்திருக்க மாட்டர்கள் என்று சொல்லிவிட்டுப் போகும் அளவுக்கு ஒவ்வொருவரையும் தனது இயல்பான நடிப்பால் கலங்க வைத்துவிட்டு போயிருப்பார். அந்த அளவுக்கு ரசிகர்களை மட்டுமல்லாது உடன் நடித்த ஹீரோவான தனுஷையும் கவர்ந்த நித்யா மேனன் குறித்து திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது பேசிய தனுஷ், நடிகை நித்யா மேனன் ஒரு நல்ல நடிகை என்பதைத் தாண்டி, அவர் எனக்கு மிகச்சிறந்த தோழியும் கூட. சில முடிவுகளை நான் எடுப்பதற்கு முன்பாக அவரிடமும் இது சரியாக இருக்குமா என்று கேட்பேன். அந்த அளவுக்கு நல்ல திறமையான நடிகை என்று பாராட்டியிருந்தார்.

காதல் நாயகியாக மீண்டும் நித்யா மேனன்

கடந்தாண்டு தெலுங்கில் குமாரி ஸ்ரீமதி என்னும் வெப் சீரிஸிலும், மாஸ்டர் பீஸ் என்னும் மலையாள வெப் சீரிஸிலும் நடித்திருந்த நித்யா மேனன் தமிழில் மீண்டும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்துவரும் அவரின் 50-வது படமான ராயனில், அவருக்கு ஜோடியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குநராக இருந்த காமினி என்பவரது இயக்கத்திலும் நடித்து வருவதாக தெரிகிறது. இதில் நித்யா மேனனுடன் நடிகர்கள் வினய் ராய், நவ்தீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிஜிஎன் நிறுவனம், ராம்கி, ஆதித்ய அஜய் சிங் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் காதலில் தோல்வி அடைந்த பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆண்களின் காதலை மட்டுமே மையப்படுத்தி பெரும்பாலான படங்கள் வந்துள்ள நிலையில், பெண்களின் காதல் தோல்வியை மையமாக கொண்டு ஒரு படம் வருவது என்பது தமிழ் சினிமாவில் புதிதாக பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது. இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் நடிகர் ஜெயம் ரவியுடன் நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி நித்யா மேனனின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில், உருவாகியுள்ள இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடிக்க இவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் நடிகை நித்யா மேனன்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்த நிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 30 வினாடிகள் கொண்டு வெளியாகியிருக்கும் இந்த வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் பாடல் ஒலிக்க, ஜெயம் ரவி, நித்யா மேனன் இருவரும் இருக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த கிளிம்ப்ஸ் வீடியோவை தொடர்ந்து டீசர் மற்றும் படத்தின் பாடலுக்கான சிங்கள் ட்ராக் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் 1964-ஆம் ஆண்டு நடிகர் ரவிச்சந்திரன், காஞ்சனா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தினை இந்த படத்தின் தலைப்பு நினைவு படுத்துவதுபோல் உள்ளதால் காலங்களுக்கு ஏற்றார்போல் காதல் கதையை மாற்றியமைத்து இப்படம் அதே சாயலில் உருவாகியிருக்குமோ என்ற எண்ணத்தையும் தூண்ட வைக்கிறது. இதுதவிர ஏற்கனவே நடிப்பு ராட்சசி என்று கொண்டாடப்படும் நித்யா மேனன் 'ஓ காதல் கண்மணி' படத்திற்கு பிறகு மீண்டும் அதே இளமையுடன் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய ஒரு படத்தில் நடித்திருப்பது அவரது ரசிகர்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மீண்டும் பழைய நித்யா மேனனை திரையில் பார்க்கபோவதை எண்ணி சிலாகித்து வருகின்றனர். எது எப்படியிருந்தாலும் தமிழ் சினிமாவில் மீண்டுமொரு வித்யாசமான காதல் காவியத்தை நித்யா மேனன் படைப்பார் என்று நம்புவோம்.

Updated On 17 Jun 2024 6:13 PM GMT
ராணி

ராணி

Next Story