இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிவிட்டது. காரணம், பெரிய திரையில் நடிக்கும்போது கிடைக்கும் வரவேற்பை விட, சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது அபரிமிதமாக இருக்கும். அதற்கு உதாரணம்தான் நடன கலைஞரும், நடிகையுமான “மெட்டி ஒலி” சாந்தி . ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற இந்த ஒற்றை பாடலால் ஓவர் நைட்டில் புகழ் உச்சத்திற்கு சென்றவர். சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பாக 1990-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் உச்ச நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் கிட்டத்தட்ட மூவாயிரம் பாடல்களுக்கு பின்னணி நடன கலைஞராகவும், 500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றிய பெருமையை பெற்றவர். உச்ச நட்சத்திர ஹீரோக்களோடு நடனம் ஆடும்போது எப்போதும் தன் உயரத்தால் தனித்துவமாக தெரிந்து யாருப்பா இந்த டான்சர் என்று பார்க்கும் அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு தன் அழகான நடனத்தால் கட்டிப்போட்ட சாந்தி அரவிந்த் இப்போது சின்னத்திரையிலும் நேர்மறை, எதிர்மறை கதாபாத்திரங்களை ஏற்று ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அவர் திரையில் உச்ச நட்சத்திரங்களோடு பணியாற்றிய தன் அனுபவங்கள் குறித்தும், தற்போது நடித்துவரும் சீரியல்களின் அனுபவங்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார். அந்த நேர்காணலின் தொகுப்பை இங்கே காணலாம்.

நிறைய போராட்டங்களுக்கு பிறகு மிகப்பெரியதொரு உச்சத்தை அடைந்திருக்கும் நீங்கள், உங்களின் குடும்பம் பற்றி எங்களோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?

அம்மா, இரண்டு அக்காக்கள், நான், இதுதான் என் குடும்பம். இவர்கள்தான் என் உலகமும்கூட. நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போதே அப்பாவுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அம்மா தனியாக பிரிந்து வந்துவிட்டார். எங்கள் நான்கு பேரையும் அம்மா வீட்டு வேலைகள் செய்து மிகவும் சிரமப்பட்டுதான் வளர்த்தார். அம்மாவுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எனது மூத்த அக்காவும், சின்ன அக்காவும் ஏழு வயதிலேயே வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். கோயில் திருவிழாக்களில் கலந்துகொண்டு நடனம் ஆடிவிட்டு வருவார்கள். அதன்மூலம் கிடைக்கும் வருமானம் அம்மாவுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இப்படி அவர்கள் மூவரும் சேர்ந்து குடும்ப கஷ்டம் என்றால் என்ன என்பது தெரியாத அளவுக்கு என்னை வளர்த்தார்கள். என்னை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்பது அவர்களின் கனவாக இருந்தது. ஆனால், வீட்டில் அக்கா, அம்மா படும் சிரமங்களை எல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு 8-ஆம் வகுப்பிற்கு பிறகு நாமும் குடும்பத்திற்காக சப்போர்ட் செய்ய வேண்டும். அதனால் நாமும் நடனம் கற்றுக்கொண்டு அதில் பயணித்தால் என்ன என்று தோன்றியது. அம்மா ஓகே சொன்னாலும், அக்காக்களுக்கு விருப்பம் இல்லை. பிறகு, எப்படியோ போராடி அவர்களின் அனுமதி பெற்று நாடகத்துறையில் நுழைந்தேன். இப்படித்தான் எனது சினிமா பயணம் தொடங்கியது.


நடிகை சாந்தியின் தாய் மற்றும் இரண்டு சகோதரிகளின் பழைய புகைப்படம்

நடனம் எப்படி கற்றுக் கொண்டீர்கள்?

அப்பா, அம்மா இருவருமே ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். வேலை நிமித்தமாக இங்குவந்து செட்டில் ஆனதால், நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே வடபழனியில்தான். எனது வீடு அங்குதான் இருந்தது. நான் வளர்ந்த தெருவில் எப்போதுமே பறை மோளம் வாசிப்பது, அதற்கு நடனம் ஆடுவது என்று அதை பார்த்தே வளர்ந்ததால் என் ரத்தத்திலேயே நடனம் என்பது ஊறிப்போய் இருந்தது. அதிலும் அக்காக்கள் இருவரும் நடனம் கற்றுக்கொள்ள செல்லும்போது நானும் அதை வேடிக்கை பார்ப்பதற்காக செல்வேன். அப்படி அவர்கள் இருவரும் நடனம் கற்றுக்கொள்வதை பார்த்து அங்கேயே நானும் ஆடி காண்பிப்பேன். உடனே அக்காவுடைய டான்ஸ் மாஸ்டர், வேடிக்கை பார்க்கும் அவள் கற்றுக்கொள்ளாமலேயே எவ்வளவு அழகாக நடனம் ஆடுகிறாள் பாருங்கள் என்று பாராட்டுவார். இப்படி பார்த்ததை வைத்து கற்றுக்கொண்டதன் அடிப்படையில்தான் சினிமாவில் நடனம் ஆட வந்தேன். ஆட வந்த ஒரு வருடத்திலேயே பிஸியான நடன கலைஞராக மாறிவிட்டேன். அதுமட்டுமின்றி டான்ஸ் மாஸ்டருக்கு உதவியாளர் என்ற இடத்தையும் பெற்றுவிட்டேன். அதனால் படிப்பை மேற்கொண்டு தொடர முடியாமல் 10-ஆம் வகுப்போடு நிறுத்திக்கொண்டேன்.

முதல்முறை உங்களை பெரிய திரையில் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது? அதை எங்களோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், கார்த்திக் நடிப்பில் "கிழக்கு வாசல்"தான் நான் பணியாற்றிய முதல் படம். அப்போது 8-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஸ்கூல், டீச்சர்ஸ், நண்பர்கள் யாருக்கும் தெரியாமல்தான் சினிமாவில் பாடல்களுக்கு நடனமாடி வந்தேன். ஒருமுறை விஜிபி-யில் படப்பிடிப்பு ஒன்றில் நடனம் ஆட தயாராக நின்று கொண்டிருக்கும்போது எனது பள்ளியில் இருந்து என்னுடைய நண்பர்கள் எல்லோரும் சுற்றுலா வந்திருந்தார்கள். அவர்கள் என்னை பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் நான் போய் ஒளிந்துகொண்டேன். இப்படி இருந்த சமயத்தில் பெரிய திரையில் நாம் வருகிறோம் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. நடனமும் பெரிதாக ஆடமாட்டேன். ஒருசில காட்சிகளில் சும்மா ஓடுவேன். அவ்வளவுதான் எனது நடனம் இருக்கும். பிறகு நாட்கள் செல்ல செல்லத்தான் நாமும் திரையில் வருகிறோம். அது எப்படி இருக்கிறது என்பது குறித்த புரிதல் எனக்கு வர ஆரம்பித்தது. அதுவும் சந்தோஷமாகத்தான் இருந்தது.


'மின்னலே' திரைப்பட பாடல் காட்சியில் நடனம் ஆடிய தருணம் குறித்து பேசிய சாந்தி அரவிந்த்

முதல் முறையாக நன்கு அடையாளம் கிடைக்கும்படி நீங்கள் ஆடிய நடனம் எது?

தெலுங்கு சினிமாவில் தாரா என்ற பெரிய டான்ஸ் மாஸ்டரிடம் பணியாற்றினேன். அப்போது அவர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் பாடல் ஒன்றை கோரியோகிராபி செய்தார். அதில்தான் நான் முழுமையாக நடனம் ஆடினேன். அதன் பிறகுதான் தொடர்ந்து ஹெவியான நடனம் எல்லாம் ஆட ஆரம்பித்தேன். நான் அப்போது ஒல்லியாக இருப்பேன் என்பதால் அங்கு எனக்கு பாம்பு சாந்தி, பல்லி சாந்தி என்று பட்ட பெயரெல்லாம் வைத்து அழைக்க ஆரம்பித்தார்கள்.

நீங்கள் முதன்முதலாக வாங்கிய சம்பளம்?

90 கால கட்டங்களில் ஒரு பாடல் காட்சி மூன்று நாட்கள் எடுக்கப்படும். மூன்று நாட்களுக்கு ஆயிரத்து 200 ரூபாய் சம்பளமாக தருவார்கள். அதுதான் நான் பெற்ற முதல் சம்பளம். என் சம்பளத்தை எனக்கு அப்பா மாதிரி இருந்து வழிநடத்திய சின்ன அக்காவிடம்தான் சென்று கொடுப்பேன். இன்று பெரிய அக்கா, சின்ன அக்கா இருவருமே என்னோடு இல்லை. அவர்கள் இறந்து 12 வருடங்கள் ஆகிறது. என்னை வளர்த்த அவர்களின் பிள்ளைகள், என் பிள்ளைகள் என அனைவரையும் நான்தான் பார்த்துக்கொள்கிறேன். இப்போது எனக்கு 6 பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை என்றுமே நான் பிரித்து பார்க்க மாட்டேன். நாங்கள் எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் மிகவும் சப்போர்ட் செய்து கொள்வோம். அது அம்மா எங்களுக்கு சொல்லி கொடுத்தது. என் 6 பிள்ளைகளில் மூன்று பேருக்கு திருமணம் ஆகிவிட்டது.


'சக்திவேல்' சீரியலில் திருமண காட்சியில் சாந்தி அரவிந்த் நடித்த தருணம்

நடனத்துறையில் உங்களுக்கு மிகவும் பிடித்த டான்ஸ் மாஸ்டர் என்றால் யாரை சொல்லுவீர்கள்?

எனக்கு முதலில் பிடித்தது சுசித்ரா மாஸ்டர்தான். சுசித்ரா, பிருந்தா மாஸ்டர் இவர்கள் இருவரும் ரகு மாஸ்டரிடம் பணியாற்றி கொண்டிருந்தார்கள். நான் திரைக்கு வந்த ஒரு வருடத்திலேயே என்னை உதவி நடன கலைஞராக மாற்றியது சுசித்ரா மாஸ்டர்தான். என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் அவங்கதான். ஆண்களுக்கு நிகராக வேலை பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். எப்பவும் எனர்ஜிடிக்கா இருப்பாங்க. ஒரு உதவியாளரா எப்படி பணியாற்ற வேண்டும் என்று அவங்ககிட்ட இருந்துதான் கற்றுக்கொண்டேன். இரவு மூணு மணிக்கெல்லாம் எழுப்பி நடனம் சொல்லி கொடுப்பாங்க. என்னோட முதல் டான்ஸ் குருநாதர் அவர்கள்தான். அவர்களுக்கு பிறகு லலிதா மணி, சின்னி பிரகாஷ், தருண், பிரபு, பிருந்தா இப்படி நிறைய குருநாதர்கள் எனக்கு இருக்காங்க. இவர்களில் என்னை தனியாக அடையாளப்படுத்தி காட்டியது பிரபு தேவா மாஸ்டர்தான். அதற்கு முன்னெல்லாம், நான் மிக உயரமாக இருப்பதாக கூறி எல்லோரும் என்னை பின்னாடி தூக்கி போட்டுவிடுவார்கள். எனக்குள் ஒரு ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. நன்றாக ஆடுகிறோம், ஆனால் பின்னாடியே தூக்கி போடுகிறார்களே என்று. ஆனாலும், நடனத்தை ரொம்பவே நேசித்து ஆடுவேன். அதனால்தான் என்னவோ என்னோட நடனம் பிரபு மாஸ்டர் கண்ணில் பட்டு அவருடைய “திருப்பதி ஏழுமலை வெங்கடேசா” என்கிற பாடலில், என்னை முன்னாடி நிற்கவைத்து ஆடவைத்தார். அதற்குபிறகு நான் தனியாக தெரிய ஆரம்பித்தேன். தொடர்ந்து பிரபு மாஸ்டரோட நிறைய பாடல்களில் தனியாக தெரியும் மாதிரி ஸ்டெப்ஸ் எனக்கு கொடுக்க ஆரம்பித்தார்கள். பிரபு மாஸ்டருக்கு பிறகு பிருந்தா மாஸ்டர் அதை செய்தார்கள். என்னை திரையில் அடையாளம் காட்டிய பெருமை இவர்கள் இருவரைத்தான் சேரும்.

Updated On 19 Aug 2024 11:41 PM IST
ராணி

ராணி

Next Story