1990-களில் ‘புதுவசந்தம்’ தொடங்கி பல வெற்றி திரைப்படங்களை நமக்கு அளித்து இன்றுவரை குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநராக திகழ்பவர்தான் டைரக்டர் விக்ரமன். இன்றும் சினிமா சார்ந்த பல நிகழ்வுகளை மிக அழகாக எடுத்து பேசி சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் ராணி நேயர்களுக்காக, தன் திரை அனுபவங்கள் மற்றும் தான் இயக்கிய படங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அவர் அளித்த நேர்காணலின் முதல் பகுதி தொகுப்பை இங்கே காணலாம்.
ஆண், பெண் நட்பை அழகாய் எடுத்துக்காட்டிய ‘புது வசந்தம்’ திரைப்படத்தை எடுத்ததன் நோக்கம் என்ன?
1990 கால கட்டங்களில் ஆண், பெண் நட்பு என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. அதிலும், சென்னையை தாண்டிவிட்டால் அப்படியான ஒரு ஆண், பெண் நட்பை பார்க்க முடியாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் அந்த சமயத்தில் இந்த படத்தினை பார்த்த எழுத்தாளர்களான பாலகுமாரன், இந்துமதி, சுப்பிரமணியன் ராஜு, மாலன் போன்றவர்கள் எல்லாம் “இப்படியான ஒரு நட்போடு நல்ல நண்பர்களாகதான் நாங்கள் எல்லோரும் இருந்தோம். இந்த படத்தினை பார்க்கும்போது எங்களுக்கு அந்த பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது” என்று கூறினார்கள். இப்படியாக ஒருசில பேர்தான் களங்கம் இல்லாமல் உண்மையாகவும், புனிதத்தோடும் நட்பாக இருந்து இருக்கிறார்கள். ஆனால் இன்று அப்படியில்லை. என்னுடைய காலத்தில் ஒரு ஆணும், பெண்ணும் சந்தித்துக்கொண்டால் கையெடுத்து கும்பிடுவது வழக்கமாக இருந்தது. பின்னாளில் அது கைகுலுக்கி கொள்ளும் அளவுக்கு மாற்றம் பெற்றது. இன்று, முதல் சந்திப்பிலேயே கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்துக்கொள்ளும் அளவுக்கு சகஜமாகிவிட்டது.
'புது வசந்தம்' திரைப்படத்தை பாராட்டிய தாசரி நாராயண ராவ்
அதேபோன்று தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய லெஜெண்ட்ரி இயக்குநராக அறியப்பட்ட தாசரி நாராயண ராவ் ‘புது வசந்தம்’ படத்தினை பார்த்துவிட்டு ‘இப்படி இருக்குமா என்பது எனக்கு தெரியாது. ஆனால், இப்படி நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் கற்போடு, களங்கம் இல்லாமல் இந்த சமுதாயத்தின் முன்பு நட்போடு இருந்தால் நன்றாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறினார். நான் 35 வருடத்திற்கு முன்பு கூறியது போல இன்று இருக்கும் ஆண்களும், பெண்களும் அப்படியான ஒரு நட்பு பாணியில்தான் இருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவர்களாக இருக்கட்டும், எந்த துறையில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் இன்று மிகவும் சகஜமாக, இயல்பான நட்போடு 99 சதவிகிதம் களங்கமில்லாமல் இருக்கிறார்கள். நட்பை கௌரவப்படுத்த வேண்டும் என்று இந்த படத்தை எடுத்தேன். நான் எடுத்த அந்த படத்தால் பலரும் இன்ஸ்பிரேஷன் ஆனார்கள். அதே பாணியில் இன்றைய தலைமுறையினர் நல்ல நட்போடு இருப்பதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
தொடர்ந்து குடும்ப பாங்கான படங்களாக நீங்கள் எடுப்பதற்கு யார் காரணம்?
என்னுடைய முதல் படத்தின் டைட்டில் கார்டில் எடுத்ததும் இயக்குநர்கள் ஸ்ரீதர், பாலசந்தர், பாக்கியராஜ், மணிரத்னம், ஃபாசில், கே.விஸ்வநாத், மகேந்திரன் உள்ளிட்ட எட்டு இயக்குநர்களின் பெயரை போட்டு, என்னுடைய துரோணர்களுக்கு இந்த விக்ரமனின் குருவணக்கம் என்று கை பூ போடுவது போன்று காட்சிப்படுத்தி தான் கார்டு போட்டிருப்பேன். அவர்களுடைய இன்ஸ்பிரேஷன் நமக்கு இருக்கும். இல்லை என்று சொல்ல முடியாது. இருந்தாலும் நான் குடும்ப பாங்கானா படம் எடுத்து இருக்கிறேனா என்றால் அப்படியானதொரு முத்திரை குத்திட்டாங்க. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய நண்பர் வி.சேகர் கூட குடும்ப பிரச்சினைகளை மட்டுமே மையமாக வைத்து படம் எடுத்திருக்கிறார். அவரும், நானும் நல்ல நண்பர்கள். அவர் அளவுக்கு நான் படம் எடுக்கவில்லை. நான் இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரியான கன்டென்ட் எடுத்துக்கொண்டுதான் படம் செய்வேன்.
இயக்குநர் வி.சேகர் - சூரியவம்சம் படக்காட்சி
புது வசந்தம் படத்தில் கூட நான் குடும்ப பின்னணி பற்றி பேசியிருக்க மாட்டேன். நான்கு நண்பர்கள் அவர்களை சுற்றித்தான் கதையை எடுத்திருப்பேன். அதற்கு அடுத்து ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘கோகுலம்’, ‘பூவே உனக்காக’ போன்ற படங்கள் கூட குடும்ப கதைகள் என்று சொல்லிவிட முடியாது. இவையெல்லாம் காதல் படங்கள்தான். அதில் குடும்பமும் சேர்ந்து இருக்கும். வானத்தை போல முழுக்க முழுக்க குடும்ப படம்தான். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. அதேபோன்று சூரியவம்சம் படத்தில் கூட காதல், காதல் தோல்வி, மனைவியை முன்னுக்கு கொண்டுவரும் கணவன் என வெவ்வேறு ஜானர்களில் கதை நகரும். நூறு சதவிகிதம் நான் குடும்ப இயக்குநரா என்றால் இல்லை. இளைஞர்களுக்கு தகுந்த காதல் படங்களைத்தான் நான் எடுத்து இருக்கிறேன். அதில் குடும்ப கதையும் கொஞ்சம் டாமினேட் பண்ணியிருந்ததால் அது மக்களுக்கு பிடித்து போய் என்னை குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநராக மாற்றிவிட்டார்கள் அவ்வளவுதான்.
‘நினைத்தது யாரோ’ திரைப்படத்தில் முக்கிய இயக்குநர்கள், நடிகர்கள் என 38 பேரை சிறப்பு தோற்றத்தில் கொண்டு வந்து இயக்கி இருப்பீர்கள். அது எப்படி சாத்தியமானது?
இயக்குநர் மணிரத்தினம் தவிர பிற இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களான மகேந்திரன், பாரதிராஜா, மணிவண்ணன்,பாக்யராஜ், ஆர். சுந்தர்ராஜன், ரா. பார்த்திபன், அமீர், எழில், கைலாசம் பாலசந்தர், பாலாஜி சக்திவேல், எம். எஸ். பாஸ்கர், சேரன், சித்ரா லட்சுமணன், ஜெயம் ரவி, கதிர், கேயார், ஏ. ஆர். முருகதாஸ், பாண்டியராஜன், பிரபுதேவா, பிரபு சாலமன், பிரமீட் நடராஜன், சுப்பு பஞ்சு, சுந்தர் சி, நடிகர் சூர்யா, வெங்கட் பிரபு, பி. வாசு, நடிகர் விமல், நடிகர் விவேக், சமுத்திரக்கனி, ரமேஷ் கண்ணா, கே. எஸ். ரவிக்குமார், சாந்தனு பாக்யராஜ், எஸ். எஸ். ஸ்டான்லி, சந்தான பாரதி, ஷங்கர், மோகன் ராஜா என 38 பேர் ‘நினைத்தது யாரோ’-வில் சிறப்பு தோற்றத்தில் வந்து நடித்து கொடுத்தார்கள். யாரையும் நேரில் சென்று அழைக்கவில்லை. ஒரு போன்கால்தான். பாரதிராஜா, நடிகர் சூர்யா மட்டும் ஒருநாள் முன்பாகவே தேதி கொடுத்துவிட்டதால் அவர்கள் காட்சி மட்டும் முன்பே எடுத்துவிட்டேன். மற்ற அனைவரையும் மறுநாள் கமலா தியேட்டருக்கு வர வைத்து எடுத்தேன். இதில் ஹைலைட்டான நிகழ்வு என்னவென்றால் “வந்திருந்த பிரபலங்கள் ஒவ்வொருவரையும் நடந்து வந்து ஹீரோவுக்கு கைகொடுப்பது போன்று காட்சி எடுத்திருந்தேன். அந்த சமயம் பாலசந்தருக்கு கொஞ்சம் வயது ஆகியிருந்ததால் அவரை மட்டும் ரெண்டு ஸ்டெப் மட்டும் வந்து கைகொடுத்தால் போதும் என்று சொன்னேன். உடனே அவர் “என்னய்யா என்னை வயசானவன்னு நெனச்சியா.. நான் நடந்து வந்து நீ சொல்றபடிதான் நடிப்பேன்” என்று எல்லோரையும் போல் நடந்துவந்து கைகொடுத்துவிட்டுதான் போயிருப்பார். அந்த படத்தினுடைய இறுதி காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடித்திருந்தது. இன்றைக்கு பார்த்தாலும் அப்படியான ஒரு நிகழ்வு வேறு யாராலும் சாத்தியமா என்றால் நிச்சயமாக இல்லை. நான் சாத்தியப்படுத்தியதற்கு என்மீது எல்லோரும் வைத்திருந்த அன்புதான் காரணம்.
38 நட்சத்திரங்களை ஒன்றாக இணைத்த ‘நினைத்தது யாரோ’ திரைப்படம்
நீங்கள் இயக்கிய படத்திலேயே உங்களுக்கு பிடித்த படம் எது?
நான் இயக்கிய படங்கள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடித்த படங்கள்தான். சில படங்கள் ஓடாமல் போயிருக்கிறது. அதற்காக அவை பிடிக்காது என்றெல்லாம் அர்த்தம் இல்லை. ‘புதிய மன்னர்கள்’ படம் எனக்கு மிகவும் பிடித்துதான் இயக்கினேன். ஆனால், ஸ்கிரீன் பிளேவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி எடுத்து இருக்கலாம். தவறு செய்துவிட்டேன். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அந்த படத்தை பார்த்துவிட்டு ரீ ரெகார்டிங் முன்பாக கூறியது என்னவென்றால், “சார் அழகான தீம் வைத்து படத்தை எடுத்து இருக்கிறீர்கள். இடைஇடையே பழைய பாடல்களை போட்டு காமெடி என்ற பெயரில் சிலவற்றை காண்பிக்கிறீர்கள். அது நன்றாக இல்லை. இந்த படத்தினுடைய வேகம், எமோஷன்ஸ் எல்லாவற்றையும் கெடுப்பது போன்று இருக்கிறது. அதை கொஞ்சம் எடுக்க முடியுமா பாருங்களேன்” என்று கூறினார். அவரின் அந்த பேச்சை அன்றைக்கு நான் கேட்டிருக்க வேண்டும். ஒருவேளை கேட்டிருந்தால் படம் ஓடியிருக்கும். மக்களுக்கு பிடிக்கும் என்று நினைத்தது என்னுடைய தவறு. தண்ணீர் தண்ணீர் படத்தில் எல்லாம் இடையில் சின்ன சின்ன காமெடிகள் இருந்தாலும் கூட சீரியஸாக சொல்ல வேண்டிய விஷயங்களை சரியாக பதிவு செய்திருப்பார்கள். அதனாலேயே அந்த படம் நன்றாக ஓடியது.
‘புதிய மன்னர்கள்’ திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்க சொல்லி அறிவுறுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்
அதேபோன்று அரசியல் படம் எடுக்கும்பொழுது துணிந்து இந்த கட்சியைதான் சாடுகிறேன் என்று சொல்லி எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால்தான் அந்த கட்சிக்கு பிடிக்காதவர்கள் எல்லாம் அந்த படத்திற்கு ஆதரவு தருவார்கள். படமும் பெரிய வெற்றிபெறும். ஆந்திராவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி பெரும்பாலான படங்கள் அப்படிதான் வெற்றி பெற்றிருக்கின்றன. நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்றால் நான் எந்த கட்சியை ஆதரிக்கிறேன்? எந்த கட்சியை எதிர்க்கிறேன்? என்பதே தெரியாமல் படத்தினை எடுத்துவிட்டேன். அதனாலேயே அந்த பாடம் நிறைய பேருக்கு திருப்தியளிக்காமல் போய்விட்டது. ஆனால் இன்று அந்த படத்தை பார்க்கும் நிறைய பேருக்கு அது பேவரைட் பிலிம். என் மகன், ‘புதிய மன்னர்கள்’ மாதிரி மீண்டும் ஒரு படம் இயக்குங்க அப்பா... அரசியல் தொடர்புடைய கதை எப்போது எடுத்தாலும் மக்களுக்கு பிடிக்கும் என்று அடிக்கடி சொல்லுவார்.
பூவே உனக்காக விஜய், இன்றைக்கு இருக்கும் விஜய் வித்தியாசம் என்ன? பாடல்களை பற்றியும் சொல்லுங்கள்...
எனக்கு பிடிக்கிற மாதிரியான டியூன் வரும்வரை எத்தனை நாட்கள் ஆனாலும் விடமாட்டேன். புதிய மன்னர்கள் படத்தில் எல்லாம் ரஹ்மான் டியூன் போட்டு சிடியில் கொடுத்துவிடுவார். அதில் மாற்றங்கள் சொன்னாலும் உடனே மாற்றிக்கொடுத்துவிடுவார். அதேபோன்று எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி போன்றவர்கள் எல்லாம் எங்களுடைய அலுவலகத்திலேயே அமர்ந்து கம்போசிங் செய்வார்கள். திரும்ப திரும்ப வேலை வாங்கினாலும் அதை கொடுத்துவிடுவார்கள். நான் ஒரு சாதாரண ரசிகன். விமர்சகர் என்று நினைத்தெல்லாம் எந்த படத்தையும் பார்க்க மாட்டேன்.
பூவே உனக்காக படத்தின் பாடல் காட்சி
அதேமாதிரி எனக்கு விஜயுடைய இன்றைய வளர்ச்சி எந்த வகையிலும் ஆச்சரியம் அளிக்கவில்லை. நிச்சயமாக அவர் இவ்வளவு பெரிய உயரத்தை தொடுவார். அடுத்த ஒரு 10 வருடத்தில் தமிழ் சினிமாவை இவர்தான் ஆட்சி செய்வார். நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பார் என்று அன்றே நான் பல பேட்டிகளில் கூறியிருந்தேன். அப்படி சொன்ன முதல் ஆளும் நான்தான். அது அவரின் அப்பா அம்மாவுக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே அவர்களுக்கும் என்னை மிகவும் பிடிக்கும்