இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(13.07.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

"ஷோபாவைக் காணோம்" என்று எத்திராஜ் வந்து சொன்ன போது, ஷோபாவின் அப்பாவும் வீட்டில் இருந்தார். நான் அழுவதைப் பார்த்து, "ஏன் அழுகிறாய்? பேசாமல் இரு. ஷோபா பத்திரமாக வீடு வந்து சேருவாள்" என்று அவர் என்னை சமாதானப்படுத்த முயன்றார். என் மனம் அமைதி அடையவில்லை. "நீ இன்னொரு தடவை போய், மரங்களின் அடியில் ஷோபா உட்கார்ந்து இருக்கிறாளா என்று நன்றாகப் பார்த்துவிட்டு வா" என்று எத்திராஜை அனுப்பிவிட்டு, மஸ்தான் வீட்டுக்கு நான் ஓடினேன்.

நசிரினா

வழக்கமாக ஷோபாவுடன் பள்ளிக்கூடம் போகும் நசிரினா, வீட்டுக்குத் திரும்பி இருந்தாள். ஷோபா உன்னோடு வரவில்லையா? என்று அவளிடம் கேட்டேன். "ஷோபாவை தேடிப் பார்த்தேன். காணவில்லை" என்று நசிரினா சொன்னாள். எனக்கு இதயமே நின்றுவிடும்போல இருந்தது.

ராதாகிருஷ்ணன்

ஷோபாவுக்கு குட் ஷெப்பர்டு கான்வென்டில் இடம் கிடைக்க சிபாரிசு செய்தவர், நடன ஆசிரியர் ராதாகிருஷ்ணன். அவரோடு எங்களுக்கு நல்ல பழக்கம் இருந்தது. அவரது வீடும், எங்கள் வீட்டுப் பக்கம்தான்! ஷோபா, ஒருவேளை அங்கு சென்று இருக்கலாம் என்று எண்ணி, ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு ஓடினேன். அங்கேயும் ஷோபா வரவில்லை என்றார்கள். எனக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது.! இதற்கு இடையில், என் கணவரும், ஒரு சைக்கிளில் ஷோபாவைத் தேடி பள்ளிக்கூடத்துக்குப் போனார். வகுப்பு அறையில் அவரும் எத்திராஜும் எல்லா மரத்தடியிலும் பார்த்து இருக்கிறார்கள். ஷோபா இல்லை. மீண்டும், வகுப்பு அறையில் போய் எட்டிப்பார்த்து இருக்கின்றார். வகுப்பு அறை, வெறிச்சோடி கிடந்து இருக்கிறது.!

இப்பொழுது, அவருக்கே ஒரு கலக்கம்! அவர் பள்ளி அலுவலக அறைக்குச் சென்று, வகுப்பு ஆசிரியையிடம் கேட்டு இருக்கிறார். "நேற்று, போர்டில் எழுதிப் போட்ட வீட்டுப்பாடத்தை எழுதாமல் போயிருக்கிறாள்.! இன்றைக்கு, முட்டிக்கால் போட்டு, வீட்டுப் பாடத்தை எழுதிவிட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன். வகுப்பு அறையில் பாடம் எழுதிக்கொண்டு இருப்பாள்" என்று ஆசிரியை சொல்லியிருக்கிறார்.! பிறகு மூவரும், மீண்டும் வகுப்பு அறைக்குப் போயிருக்கிறார்கள்.


நெற்றியில் பெரிய குங்கும பொட்டுடன் ஷோபா

முட்டிக்கால்

“ஷோபா!” என்று ஆசிரியை அழைத்தாராம்.! ஒரு பெஞ்சுக்கு அடியில் இருந்து "என்ன, மிஸ்! என்று ஷோபா குரல் கொடுத்து இருக்கிறாள். போய்ப் பார்த்தால், ஷோபா முட்டிப் போட்டபடியே, தரையில் நோட்டை வைத்து, குனிந்து எழுதிக்கொண்டு இருந்து இருக்கிறாள்.! அவளைப் பார்த்ததும் அவருக்கு ஆத்திரம் ஒரு பக்கம்; பரிதாபம் ஒரு பக்கம்.! "உன்னை எங்கெல்லாம் தேடுவது? அம்மா உன்னைத்தேடி அழுதுகொண்டு, இருக்கிறார்கள்” என்று அவர் அதட்டினாராம். “மிஸ், வீட்டுப் பாடம் எழுதச் சொன்னாங்க. எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று சர்வசாதாரணமாகப் பதில் அளித்து இருக்கிறாள், ஷோபா. நாளையில் இருந்து, ஒழுங்காக வீட்டுப்பாடம் எழுத வேண்டும். இன்றைக்கு எழுதினது போதும். எழுந்து போ!" என்று மிஸ் சொன்னபிறகு தான், ஷோபா எழுந்து வந்தாளாம்! வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தபோது, அம்மா உன் மீது கோபமாக இருக்கிறார்கள். உன்னை நன்றாக உதைக்கப் போகிறார்கள்" என்று அவர் மகளிடம் சொல்லியிருக்கிறார்.

குச்சி மிட்டாய்

"டாடா! அப்படின்னா... எனக்கு இப்பவே "லாலிபாப்” (குச்சிமிட்டாய்) வாங்கிக் கொடுத்துவிடுங்கள்" என்று கேட்டாளாம் ஷோபா. அவரும் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்! குச்சி மிட்டாயை சூப்பிக்கொண்டே, ஷோபா வீட்டுக்கு வந்தாள். அவளைக் கண்டதும் இவ்வளவு நேரம் தவிக்கவிட்டுவிட்டாளே என்ற கோபம் எனக்கு.!

அடியும் அழுகையும்

ஒரு கையால் ஷோபாவை பிடித்துக்கொண்டு, “உன்னை எங்கெல்லாம் தேடுவது?” என்று நாலு அடி கொடுத்தேன். ஆனால், அடிபட்ட ஷோபா அழவில்லை. அவளைப் பார்க்கப் பார்க்க எனக்குதான் அழுகை வந்தது.! தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, இனிமேல் இப்படி செய்யாதே, ஷோபா. உன்னை இழந்து என்னால் வாழ முடியாது” என்று அழுதேன். ''சரி மம்மி!" என்று அவள் என் கண்ணீரைத் துடைத்தாள்.


சந்திரபாபுவின் அறிமுகத்தால் ஷோபாவுக்கு கிடைத்த சினிமா வாய்ப்பு

தங்கப்பதுமை

அன்று ஏனோ வீட்டில் பழைய கலகலப்பு இல்லாமல் இருந்தது.! அதைப்போக்க "இன்று எல்லோரும் சினிமாவுக்குப் போகலாம்” என்று ஷோபா அப்பா சொன்னார். சினிமா என்றால், ஷோபாவுக்கு “குஷி” ஆச்சே.! "மம்மி! நான் சீக்கிரமா வீட்டுப்பாடம் எழுதிவிடுகிறேன்" என்று, ஓடிப்போய் அவள் இடத்தில் அமர்ந்து வீட்டுப் பாடம் எழுதத்தொடங்கினாள். அப்போது, சன் தியேட்டரில் சிவாஜி கணேசன்- பத்மினி நடித்த "தங்கப்பதுமை" என்ற படம் நடந்துகொண்டு இருந்தது. மாலைக் காட்சிக்கு அந்தப் படத்துக்கு மூவரும் சென்றோம். ஷோபா மிகவும் மகிழ்ச்சியோடு பார்த்தாள். படத்தோடு அன்றைய நிகழ்ச்சியையும் மறந்துவிட்டோம்.

நடிகர் சந்திரபாபு

இந்த நேரத்தில், சிரிப்பு நடிகர் சந்திரபாபுவிடம், ஷோபா அறிமுகம் ஆனாள். ஒளிப்பதிவாளர் மஸ்தானும், சந்திரபாபுவும் நல்ல நண்பர்கள். ஒருநாள் மஸ்தான், சந்திரபாபுவின் வீட்டுக்கு சென்றபோது, ஷோபாவையும் அழைத்துப் போயிருக்கிறார்! ஷோபாவின் அழகும் சுறுசுறுப்பும், சந்திரபாபுவுக்கு. நிரம்பப் பிடித்துவிட்டது. சந்திரபாபுவின் இந்த அறிமுகம்தான், ஷோபா, சினிமாவில் நுழைவதற்கு முதல் படிக்கட்டாக அமைந்தது.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்….!

Updated On 16 Sep 2024 6:24 PM GMT
ராணி

ராணி

Next Story