இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(21.09.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

கோவையில் இருந்து எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், வேறு இரண்டு நண்பர்களுடன் ஒரு வேலையாக சென்னைக்குக் காரில் வந்தார். அவர்கள் வேலை முடிந்து கோவைக்குப் புறப்படும்பொழுது, ஷோபாவின் அப்பாவிடம் "ஊருக்கு வருகிறீர்களா?" என்று கேட்டார். அப்போது ஷோபா அப்பா, ஒரு வேலையாக கோவைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதனால், காரில் புறப்படத் தயார் ஆனார். அப்பா புறப்படவும், மகளுக்கும் ஆசை வந்துவிட்டது. "டாடா நானும் வருகிறேன்" என்றாள், ஷோபா. குழந்தை ஆசைப்படுகிறாளே என்று, அவளையும் அழைத்துப் போனார்.

"பிரேக்" இல்லை

கார் ஈரோட்டைத் தாண்டியபோது, இருட்டத் தொடங்கியது. பலத்த மழையும் பிடித்துக்கொண்டது. காரை ஓட்டிய நண்பர், அந்த மழையிலும் மணிக்கு 50 மைல் வேகத்தில் காரை செலுத்தினார். திடீர் என்று கார் கட்டுக்கு அடங்காமல், அங்கும் இங்கும் ஓடத்தொடங்கியது. “பிரேக்” பிடித்தும், கார் நிற்கவில்லை. எல்லோருடைய கதையும் முடிந்தது என்றே அனைவரும் நினைத்தார்கள். ஷோபாவின் அப்பா, அவளை கையில் தூக்கி ஏந்திக்கொண்டு, “கடவுளே! நான் போனாலும் பரவாயில்லை.. என் மகளை எப்படியாவது காப்பாற்று" என்று வேண்டத் தொடங்கினார். அப்போது கூட ஷோபாவின் முகத்தில் பயமோ, கலக்கமோ தெரியவில்லை. கல்லுப் பிள்ளையார் மாதிரி அசையாமல் இருந்தாள்.


கார் விபத்தில் இருந்து தப்பித்த ஷோபா

உயிர் பிழைத்தாள்

நல்லவேளை, அப்போது எதிரே லாரியோ, பஸ்ஸோ வரவில்லை. கார் திடீர் என்று ரோட்டில் இருந்து விலகி, ரோடு ஓரமாக இருந்த நீரோடைக்குள் “குபீர்” என்று பாய்ந்தது. காரில் இருந்தவர்கள் எல்லோரும் தண்ணீருக்குள் விழுந்தார்கள். ஆனால், கடவுள் அருளால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஷோபாவின் அப்பா, அவளைத் தூக்கி ஏந்தியபடியே தண்ணீருக்குள் நின்றார். சிறிது நேரத்தில், பக்கத்து கிராமத்தில் இருந்து ஆட்கள் ஓடிவந்தார்கள். எல்லோருமாகச் சேர்ந்து, காரை நீரோடையில் இருந்து வெளியே எடுத்தார்கள். அடுத்த அரை மணி நேரத்தில், கார் ரிப்பேர் பார்க்கப்பட்டது. பிறகு எல்லோரும் அதே காரில் கோவைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். இந்த விபத்துக்குப் பிறகு, ஷோபாவின் வாழ்க்கையில் ஆபத்தான நிகழ்ச்சி எதுவும் ஏற்பட்டது இல்லை... அவள் எங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டதைத் தவிர.

வின்சென்ட்

1971-ல் ஷோபா சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவள் கேரளா முழுவதும் அறிமுகமானபோது, இருந்த இடம் தெரியாமல் இருந்தவர்கள்; இன்றைக்கு “ஷோபாவுக்கு நான் நடிப்புச் சொல்லிக் கொடுத்தேன், அதனால்தான் அவளுக்குப் பரிசு கிடைத்தது” என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இதைக் கேட்கவும், படிக்கவும் அசிங்கமாக இருக்கிறது. என் மகளுக்கு நானே கூட நடிப்புச் சொல்லிக் கொடுக்கவில்லை. அவளுக்குப் பயிற்சி அளிக்கும் அளவுக்கு நான் நடிப்பில் சிறந்து திகழவில்லை. ஷோபாவைப் பொறுத்தமட்டில், நடிப்பு அவளோடு பிறந்த ஒன்றாக இருந்தது. ஆனால் சின்ன வயதில் ஷோபாவுக்கு நடிப்புச் சொல்லிக் கொடுத்தவர்கள் உண்டு என்றால், அது டைரக்டர் சேதுமாதவனும், டைரக்டர் வின்சென்டும்தான்.

மகள் போல

சேதுமாதவனும், வின்சென்டும் ஷோபாவின் வாழ்க்கையில் மிகவும் அக்கறை செலுத்தினார்கள். அவள் சிறந்த நடிகையாக வேண்டும் என்று விரும்பினார்கள். வின்சென்டுக்கு ஷோபாவை நிரம்பப் பிடிக்கும். அவளை சொந்த மகள் போலவே வைத்துக்கொள்வார். வின்சென்ட் டைரக்டு செய்த "கெந்தர்வச்சேத்திரம்” என்ற படத்தில் ஷோபா நடித்தாள். சின்ன பாத்திரம்தான் என்றாலும், படப்பிடிப்பு முடியும்வரை, வின்சென்டை விட்டு அவள் பிரிந்ததே இல்லை. ஷோபா நடிக்கவேண்டிய காட்சி இல்லாவிட்டாலும், அவளைத் தன் அருகே வைத்துக்கொள்வார் வின்சென்ட்.


ஷோபாவின் வாழ்க்கையில் மிகுந்த அக்கறை காட்டிய இயக்குநர் கே.எஸ். சேதுமாதவன்

அவளை தன் கை அணைப்புக்குள் வைத்துக்கொண்டு "கேமரா”வின் கோணத்தை சரி பார்ப்பார். அதை ஷோபாவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருப்பாள். சிலநேரம், ஷோபாவே அவர் கை அணைப்புக்குள் போய் நின்றுகொள்ளுவாள். எங்களுக்கு அவள் டைரக்டருக்கு தொல்லை கொடுக்கிறாளோ என்று தோன்றும்! ஒருநாள், ஷோபா அப்படி நிற்கும்பொழுது, ஷோபா அப்பா டைரக்டரிடம் சென்று, "ஷோபா உங்களுக்கு அதிகம் தொந்தரவு கொடுக்கிறாள் போல இருக்கு" என்றார். "நோ... நோ... ஷோபா நிற்பதால் எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. அவள் அருகே நின்றால்தான் எனக்கு "மூடு" வருகிறது என்று கூறி, ஷோபாவை விட மறுத்துவிட்டார் வின்சென்ட். "கெந்தர்வச்சேத்திரம்" படத்தின் படப்பிடிப்பு ஆலப்புழையில் நடந்தது. அப்பொழுது எல்லாம் வின்சென்டும், பிரேம்நசீரும் ஷோபாவும் சேர்ந்துதான் சாப்பிடுவார்கள்.

படப்பிடிப்பு முழுவதும் தன் சொந்த குழந்தையை சீராட்டி, பாராட்டி வளர்ப்பது போல ஷோபாவையும் பார்த்துக் கொண்டார், வின்சென்ட். படப்பிடிப்பு முடிந்து, ஆலப்புழையில் இருந்து சென்னைக்குத் திரும்புவதற்கு ஷோபாவுக்கும் அவள் அப்பாவுக்கும் ரயிலில் 3-வது வகுப்பில் டிக்கெட் எடுத்திருந்தார்கள். வின்சென்ட் மற்றும் உள்ளவர்களுக்கு முதல் வகுப்பு டிக்கெட். ஷோபா அப்பா சிறு வயதில் இருந்தே வசதியாக வாழ்ந்தவர். ரயிலில் 3-வது வகுப்பில் பயணம் செய்து பழக்கம் இல்லாதவர். இது டைரக்டர் வின்சென்டுக்குத் தெரியும். உடனே கம்பெனி மேனஜரை அழைத்து, "ஷோபாவுக்கும் மேனனுக்கும் (ஷோபாவின் அப்பா) முதல் வகுப்பு டிக்கெட் எடுத்தால்தான் நான் முதல் வகுப்பில் ஏறுவேன்" என்று கண்டிப்பாகச் சொன்னார். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ஷோபாவுக்கும் அவள் அப்பாவுக்கும் முதல் வகுப்பு டிக்கெட் வந்தது.

கை விரல்


ஷோபா மீது மிகுந்த பாசம் காட்டிய இயக்குநர் ஏ.வின்சென்ட்

ரயிலில், வின்சென்டும் ஷோபாவும் அடுத்த அடுத்த அறையில் இருந்தார்கள். வழியில் ஷோபா சிறுநீர் கழிக்கச் சென்றபோது, 'பாத்ரூம்" கதவில், ஒரு கை விரல் நசுங்கிவிட்டது. அதிகமாக அல்ல. சிறிய காயம்தான்! அதை அறிந்த வின்சென்ட் அன்று இரவு முழுவதும் ரயிலில் தூங்கவே இல்லை. ஷோபாவின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டு, நசுங்கிய விரலை ஊதி விட்டுக்கொண்டே இருந்தார். அடிக்கொரு தடவை. "ஷோபா கண்ணு! விரல் வலிக்குதா?" என்று கேட்பார். அந்த அளவு அவர் ஷோபா மீது பாசமாக இருந்தார்.

அதனால் வின்சென்ட் மீது எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. எங்கள் குடும்ப நண்பரில் ஒருவர் ஆனார். அதன்பிறகு, வின்சென்ட் பெயரைச் சொல்லிக் கொண்டு, ஷோபாவை ஒப்பந்தம் செய்ய யார் வந்தாலும் எவ்வளவு பணம் என்று பேசாமல் நடிக்க ஒப்புக்கொள்வோம்! அந்த அளவுக்கு வின்சென்ட் மீது நாங்கள் நம்பிக்கை வைத்து இருந்தோம். அவரும் எங்கள் மீது அன்பும் மரியாதையும் வைத்து இருந்தார். எங்கள் இடையே அப்போது தொடங்கிய அந்த நட்பு இன்றும் இருந்து வருகிறது.

வின்சென்ட், சேது மாதவன் போன்ற பண்பாளர்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்து வாழ்ந்தது போலத்தான், பின்னால் ஒருவர் மீது நம்பிக்கை வைத்தோம்! அந்த நம்பிக்கை, கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்து கட்டியது போல ஆகிவிட்டது.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்…

Updated On 18 Nov 2024 6:42 PM GMT
ராணி

ராணி

Next Story