இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்தான் சிம்புதேவன். எல்லோரின் ஆல் டைம் பேவரைட் லிஸ்ட்டில் இன்றும் முதலிடத்தில் இருக்கும் இப்படத்தை பார்த்து ரசித்து, வயிறு வலிக்க சிரித்து தரையில் உருண்டவர்கள் ஏராளம். இப்படி முதல் படத்திலேயே முழுக்க முழுக்க காமெடியை முதன்மையாக கொண்டு வெற்றிகண்ட சிம்புதேவன், இரண்டாவதாக 'அறை எண் 305இல் கடவுள்' என்ற ஃபேன்டஸி படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார். அதன் பின்னர், 'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்', 'புலி' மற்றும் 'கசட தபற' உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இப்படி காதல், ஃபேன்டஸி என எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான படங்களை இயக்கிய அதே சிம்புதேவன்தான் அண்மையில் கூட சுதந்திரத்துக்கு முன்பு நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘போட்’ என்றொரு படத்தை இயக்கி வெளியிட்டார். கதையின் நாயகனாக யோகிபாபு நடித்திருந்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளிவந்து சுமாரான வெற்றியையே பெற்றது. இந்த நிலையில், ராணி நேயர்களுக்காக அவர் பிரத்யேகமாக வழங்கிய பேட்டியின் ஒரு பகுதியை இந்த கட்டுரையில் காணலாம்.

உங்களின் முதல் படம் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' முழுக்க முழுக்க அரசு இயந்திரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் வண்ணம் நகைச்சுவையோடு உருவாக்கப்பட்டிருந்து. இந்த சிந்தனை எப்படி உங்களுக்கு தோன்றியது?

எல்லா யோசனைகளுக்கு பின்னாலும் ஒரு சிறு புள்ளிதான் துவக்கமாக இருக்கும். குறிப்பாக 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தில் ஒரு அரசனின் பிம்பத்தை உடைத்து, வேறொரு கோணத்தில் காட்ட முற்பட்ட போது தானாகவே எல்லாம் அமைந்து வந்தது. ஒரு மன்னன் தவறான அரசியல் முறையை கையாளும்போது, அதை மாற்ற ஒருவன் வந்தால் என்ன நடக்குமோ அதைத்தான் நகைச்சுவை கலந்து படமாக நான் எடுத்திருந்தேன். இந்த தருணத்தில் நான் நன்றி சொல்ல விரும்புவது இயக்குநர் சங்கர் அவர்களுக்குத்தான். ஏனெனில், ஓர் தனியார் பத்திரிக்கையில் நான் பணி புரிந்து வந்தபோது, அங்கு வரைந்த கார்ட்டூனின் திரை வடிவமே இந்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம். அந்த கார்ட்டூனை படமாக எடுக்க நான் முடிவு செய்தபோது, எனது சிந்தனைக்கு ஊக்கம் கொடுத்து தயாரிக்கவும் முன் வந்தது இயக்குநர் சங்கர்தான். 30 நாளில் திரைக்கதை எழுதி படப்பிடிப்பிற்கு சென்ற இந்த படத்தின் துவக்க புள்ளி, ஒரு மன்னனின் ஆட்சி முறை குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்கிற முனைப்புதான்.


'சட்டயர்' பாணியில் கருத்துகளை நகைச்சுவை கலந்து முன்வைக்க முற்படுவேன் - இயக்குநர் சிம்பு தேவன்

உங்களின் ஒவ்வொரு படமுமே மக்களுக்கு நல்ல கருத்தினை சொல்லும் படமாக இருந்தாலும், இந்த சமூகத்தை நோக்கி ஒவ்வொரு படைப்புகளின் வாயிலாக பல கேள்விகளை எழுப்பி வருகிறீர்கள். இதற்காக எதிர்ப்போ, அச்சுறுத்தலோ உங்களுக்கு வந்ததுண்டா?

எனக்கு அது போன்ற எந்த நிகழ்வுகளும் நடந்தது இல்லை. காரணம் நான் எந்த ஒரு விஷயத்தையும் நடுநிலையோடு அணுகக்கூடிய நபர். அதேபோல் 'சட்டயர்' பாணியில் எனது கருத்துகள் நகைச்சுவை கலந்து முன்வைக்கப்படும்போது, சம்மந்தப்பட்ட நபரே அந்த காட்சியை பார்த்து சிரிக்கத்தான் செய்கிறார்கள். இது எனது முதல் படமான 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' தொடங்கி இன்றுவரை தொடர்ந்து வருகிறது. அதோடு நானும் முடிந்த வரை ஒரு விஷயத்தை சொல்லும்போது யாரையும் புண்படுத்தாத வகையில்தான் வசனங்களையும், காட்சிகளையும் எடுத்து வருகிறேன். அதனால் இதுவரை எந்த எதிர்ப்பும், அச்சுறுத்தலும் எனக்கு வந்ததில்லை.


'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படத்தில் அரசன் புலிகேசியாக வரும் நடிகர் வடிவேலு

சமீபத்தில் வெளிவந்துள்ள 'போட்' படம் குறித்து சொல்லுங்கள். அந்த எண்ணமும், சிந்தனையும் உங்களுக்கு எப்படி வந்தது?

இந்த கதை உருவாக மூலக்காரணமாக இருந்தது அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய 'தி ஓல்ட் மேன் அண்ட் தி சீ' என்கிற நாவலே ஆகும். அதை சிறு வயதில் படிக்கும்போதே எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது தவிர ஒருமுறை என் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, 1943 ஆம் ஆண்டுகளில் நடந்த உலகப்போர் சமயத்தில் குண்டுகள் வீசப்பட்டபோது கரையோரம் இருக்கும் மீனவர்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள இரவில் போட் எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்று விடுவார்கள் என்றும், விடிந்தவுடன் கரைக்கு திரும்புவார்கள் என்றும் தகவலும் கிடைத்தது. இதை அடிப்படையாகக் கொண்டே 'போட்' திரைப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டது. இந்த கதையை முதலில் தயாரிப்பாளர் பிரேம்குமாரிடம் கூறியபோது அவருக்கு மிகவும் பிடித்து போனது. தொடர்ந்து நடிகர் யோகிபாபுவிடமும் கூறி கதை ஓகே ஆன பிறகே படம் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து. திருநெல்வேலி அருகில் உள்ள உவரி என்ற பகுதியில் படம் முழுக்க முழுக்க எடுக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. போட், கடல் ஆகிய இரண்டை மட்டுமே சுற்றி எடுக்கப்பட்ட இப்படம் எங்களுக்கே புது அனுபவமாகத்தான் இருந்தது.


'தி ஓல்ட் மேன் அண்ட் தி சீ' என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்ட 'போட்' திரைப்படம்

திரைத்துறைக்குள் நுழைய வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு எப்போது தோன்றியது? உங்களின் துவக்க காலம் எப்படி இருந்தது?

சிறுவயதிலிருந்தே திரைத்துறைக்குள் நுழைய வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு இருந்தது. என் கல்லூரி படிப்பு முடிந்த கையோடு, பிரபலமான தனியார் பத்திரிக்கை ஒன்றில் சப் எடிட்டராகவும், கார்ட்டூனிஸ்டாகவும் பணியில் சேர்ந்த நான் அங்கு பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். அங்கு கிடைத்த அனுபவமும், ஆர்வமுமே என்னை திரைத்துறைக்குள் அழைத்து வந்தது.

நீங்கள் இயக்குநர் சேரனிடம் உதவி இயக்குநராக பணி புரிந்த பிறகே இயக்குநராக மாறி படம் எடுக்க வந்தீர்கள். இயக்குநர் சேரன் முழுக்க முழுக்க குடும்ப படங்களாக எடுக்க கூடிய நபர். உங்களது எந்த படங்களிலுமே அந்த தாக்கம் இருந்ததில்லையே. அது எவ்வாறு சாத்தியமானது?

நான் பத்திரிக்கையில் பணிபுரிந்தபோதே என்னை நான் தயார்படுத்திக்கொண்டது கார்ட்டூன் மற்றும் நகைச்சுவை சார்ந்த விஷயங்களில் கைதேர்ந்தவனாகத்தான். அதனால் நான் உதவி இயக்குநராக சேரனிடம் சேரும்போது அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்பியது உணர்வுபூர்வமான விஷயங்களை மட்டும்தான். இதனாலேயே அவரை குருவாக ஏற்றுக்கொண்டு 5 ஆண்டுகள் அவருடனேயே பயணித்து, 3 படங்களில் உதவியாளராக பணி புரிந்தேன். இந்த அனுபவமே இப்போது நான் எடுக்கும் ஒவ்வொரு படங்களிலும் உணர்வுபூர்வமான விஷயங்களை காட்சிப்படுத்த கைகொடுத்து வருகிறது. ஒருவேளை நான் எடுக்கும் படங்கள் நகைச்சுவையை கடந்து உணர்வுபூர்வமாக மக்களை நெகிழ வைத்திருந்தது என்றால், அது சேரன் அவர்களுடன் இணைந்து பயணித்த அனுபவத்தின் வாயிலாகவே நிகழ்ந்தது என்பேன்.


என் படங்கள் உணர்வுபூர்வமாக இருக்க காரணம் இயக்குநர் சேரனிடம் கற்றுக்கொண்ட பாடம்தான் - சிம்பு தேவன்

உங்களது ஒவ்வொரு படமுமே சமூகம், அரசியலை கடந்து தேசப்பற்றை பறைசாற்றும் விதமாகவே இருக்கிறதே அதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?

எனது தந்தை ராணுவத்தில் பணிபுரிந்த நபர், அதனாலேயே சிறுவயதிலிருந்தே தேசத்தின் மீது தனி ஒரு பற்று எனக்கு இருக்கிறது. மேலும் எனது அண்ணனும் எழுத்தாளராக கதை, கவிதைகள் எழுதி எனக்குள் ஓர் உணர்வை ஏற்படுத்தினார். இது தவிர நான் பத்திரிகையில் பணிபுரிந்த நேரத்தில் அரசியல் ரீதியான கார்ட்டூன்களுக்கு அதிக கவனம் கொடுத்து என்னுடைய பொறுப்புணர்வை மேம்படுத்தினார்கள். பொதுவாகவே சினிமாக்கள் பொழுதுபோக்கை கடந்து இந்த சமூகத்தின் மீது கேள்விகளை எழுப்பி மாற்றத்தை கொண்டு வரவேண்டியது ஒவ்வொரு படைப்பாளியின் கடமை என நினைப்பவன் நான். அதைத்தான் இப்போது செய்து வருகிறேன்.

இன்று திரைத்துறைக்குள் ஒரு இயக்குநராக நுழைய விரும்பும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

சினிமாவில் ஒரு இயக்குநராக சாதிக்க வரும் இளைஞர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கடுமையான உழைப்பை தயக்கம் இன்றி செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்களது முயற்சியும், உழைப்பும் சிந்தனையாகவும் செயலாகவும் வெளிப்பட வேண்டும். குறிப்பாக நம்மை நாமே அப்டேட் செய்துக் கொள்வது மிக அவசியம். ஏனென்றால் சினிமாவில் எல்லா துறையை காட்டிலும் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. இதில் இயக்குநருக்கான பணி என்பது அபரிமிதமானது. ஒருவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து நாம் இயக்குநர் ஆவதற்குள் பல ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரலாம். அவை அனைத்தையும் கடந்துதான் நாம் இங்கு சாதிக்க முடியும். இதனை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்வது மிக அவசியம்.

Updated On 16 Sept 2024 11:52 PM IST
ராணி

ராணி

Next Story