(14-7-85 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
சரிதா, திருமணம் ஆனபிறகு கணவனை தள்ளி வைத்துவிட்டு நடிக்க வந்தார். பிறகு "விவாகரத்து" பெற்றார். ஜீவிதாவும், 'சரிதாவை போல ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று செய்திகள் வெளிவந்தன!
திருமணம் இல்லை
இதை அடியோடு மறுத்தார், ஜீவிதா. "நான் சென்னையிலேயே வளர்ந்தவள். என்னை சிறுவயதில் பார்த்தவர்கள், படிக்கும்போது அறிந்தவர்கள் இப்போதும் என்னை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல், நான் எப்படி திருமணம் செய்துகொள்ள முடியும்?" என்று கேட்டார், ஜீவிதா.
ஒரு பேட்டியின் போது, ஜீவிதாவிடம் கேட்ட கேள்விகளும் கிடைத்த பதில்களும் வருமாறு:-
நிருபர் :- உங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறப்படுகிறதே, உண்மையா?
ஜீவிதா :- அதில் எள்ளளவும் உண்மை இல்லை.
நிருபர் :- ஒரு பின்னணி பாடகருக்கும் உங்களுக்கும் திருமணம் நடந்ததாக அவரே சொல்லியிருக்கிறாரே!
ஜீவிதா :- அவர் ஏன் அப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்பதும் எனக்குப் புரியவில்லை.
நிருபர் :- நீங்கள் திருமணமே செய்யவில்லை என்கிறீர்கள்! அவர் (பின்னணிப் பாடகர்) திருமணப் படத்தைக் காட்டுகிறேன் என்கிறாரே!
இருவேறு தோற்றங்களில் நடிகை ஜீவிதா
ஜீவிதா :- சார், இந்தக் காலத்துல யாரும் எப்படியும் படம் எடுத்துக் காட்டலாம். அந்த அளவு போட்டோ கலை வளர்ந்து இருக்கிறது. தலையை மாற்றியோ அல்லது இரண்டு தனித்தனிப் படங்களை ஒன்று சேர்த்தோ, எத்தனையோ வகை படங்களை உருவாக்கலாம். இதனால் எல்லாம், நடக்காத ஒன்று, நடந்ததாகிவிடுமா?
நிருபர் :- அப்படியென்றால் நீங்கள் அவர் மீது நடவடிக்கை எடுப்பது தானே!
ஜீவிதா :- என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன். நீங்களே சொல்லுங்களேன், என்ன செய்யலாம் என்று! எனக்கு இதில் உள்ள வருத்தமெல்லாம், அந்தச் செய்தியை எழுதுபவர்கள், என்னிடம் வந்து, இந்தத் தகவல் உண்மையா, பொய்யா என்று கேட்டு எழுதியிருக்கலாமே என்பதுதான்! என்னைப் போன்று வளரும் நடிகைகளை இதுபோன்ற செய்திகள் எவ்வளவு பாதிக்கின்றன தெரியுமா?
கிசு கிசு பொய்யா?
நிருபர் :- பத்திரிகையில் வரும் கிசுகிசுக்கள் எதுவுமே பொய்த்தது இல்லை. இதற்கு, சமீபத்திய உதாரணம் சுரேஷ் - அனிதா திருமணம்! நீங்கள், கிசுகிசு கூடாது என்கிறீர்களா?
ஜீவிதா :- கிசுகிசுக்கள் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அதற்கும் ஓர் எல்லை வேண்டும் என்கிறேன். நீங்கள் “கிசுகிசு" என்ற பெயரில் எதையாவது எழுதுகிறீர்கள். படித்தவர்கள் அவற்றை பெரிது படுத்துவது இல்லை. “கிசுகிசு” என்றே நினைக்கிறார்கள். ஆனால், படிக்காத பாமர மக்கள் அந்த “கிசுகிசு”க்களை அப்படியே உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். உதாரணத்துக்கு ஒன்று சொல்லுகிறேன். என் வீட்டுக்குப் பக்கத்தில் ரிக்ஷாக்காரர்கள், பால்காரர்கள் பலர் இருக்கிறார்கள். நான் படப்பிடிப்புக்கு வெளியே போகும்போதும், படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போதும் அவர்கள் என்னை பார்ப்பார்கள். அந்தப் பார்வையில் எத்தனை வித்தியாசம் தெரியுமா?
என்னைப்பற்றி நல்ல செய்திகளை பத்திரிகையில் படிக்கும்போது, அவர்கள் என்னைப் பார்க்கும் பார்வை உயர்வாக இருக்கும். கிசுகிசு போன்ற செய்திகளைப் படிக்கும்போது, என்னை எதையோ பார்ப்பது போல பார்க்கிறார்கள். இதற்குக் காரணம் கிசுகிசுக்களை அவர்கள் உண்மை என்றே நம்பிவிடுவதுதான்! அதனால்தான், எங்களை பாதிக்காத அளவில் கிசுகிசுக்கள் இருக்க வேண்டும் என்கிறேன்!
1985-ஆம் ஆண்டு வெளிவந்த ’வீட்டுக்காரி’ என்ற படத்தில் ஜீவிதாவின் தோற்றம்
சுரேஷ் திருமணம்
நிருபர் :- சுரேஷ்- அனிதா திருமணத்தை முன்நின்று நடத்திவைத்தது நீங்கள் தானே?
ஜீவிதா :- எதை ஆதாரமாக வைத்து இதைச் சொல்லுகிறீர்கள்? அனிதா எனக்கு பள்ளிக்கூடத் தோழி. "திருமணத்துக்கு வா" என்று அழைத்தாள். சென்றேன். தோழியின் திருமணத்துக்குச் சென்றது, எப்படி திருமணத்தை நடத்திவைத்தது ஆகும்? இப்படித்தான் ஒன்றை, இரண்டாக எழுதுகிறார்கள்.
தொல்லையா?
நிருபர் :- நீங்கள், தயாரிப்பாளர்களுக்கு அதிகத் தொல்லை கொடுப்பதாகச் சொல்லப்படுகிறதே!
ஜீவிதா :- ஒரு நடிகையோ, நடிகரோ செய்வது மட்டும் வெளியே தெரிகிறது. தயாரிப்பாளர்கள் செய்வது எதுவும் வெளியே வருவது இல்லை. ஒரு படத்துக்கு ஒப்பந்தம் ஆனதும், அவர்கள் கேட்கும் "கால்ஷீட்டு"களை கொடுக்கிறேன். ஆனால், அந்த கால்ஷீட்டுகளை அவர்கள் பயன்படுத்துவது இல்லை. வேறு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, ஒரு நாள் வாங்க, இரண்டு நாள் வந்து நடித்துக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். என்னால், எப்படி சார் போகமுடியும்? ஆனால் இதையெல்லாம் அவர்கள் வெளியே சொல்லுவது இல்லை. அவர்களே தவறு செய்துவிட்டு எங்கள் மீது பழியைப் போடுகிறார்கள்!
டக் டக்
பொதுவாக நடிகைகளிடம் கேள்வி கேட்டால் வார்த்தையை மென்று விழுங்குவார்கள். ஆனால், ஜீவிதா அப்படி அல்ல. என்ன கேள்வி கேட்டாலும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக "டக் டக்" என்று பதில் அளிக்கிறார். பேட்டியின் போது துணைக்கு அம்மாவையோ, அப்பாவையோ வைத்துக் கொள்ளுவது இல்லை.