இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(16.04.1989 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

தி.மு.கழகத்துக்குத் தேர்தல் பிரசாரம் செய்த நடிகை ராதிகா, தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவாரா? அல்லது, அரசியலுக்கு முழுக்குப் போடுவாரா? அவரே பதில் அளிக்கிறார், படியுங்கள்!

நிருபர்: நீங்கள் கதாநாயகியாக நடித்து வெளிவந்துள்ள "தென்றல் சுடும்" படத்தின் டைட்டிலில் திரைக்கதை - உரையாடல் எழுதிய கலைஞரை 'எங்கள் குடும்பத்தலைவர் கலைஞர் டாக்டர் கருணாநிதி' என்று போட்டிருக்கிறீர்களே, இதில் வேறு முக்கியத்துவம் ஏதும் உண்டா?

ராதிகா: கலைஞர், தமிழ் நாட்டு மக்களுக்கெல்லாம் தலைவராகத் திகழுகிறார். எங்கள், குடும்பத்தோடு நெருங்கிப் பழகுகிறார். இதைத்தவிர அதற்கு வேறு காரணம் இல்லை. இன்னொன்று "தென்றல் சுடும்" படம் எனது சொந்தப்படம் அல்ல. அதன் தயாரிப்பாளர் பாபு தெலுங்குக்காரர். இங்கே அவருக்கு யாரையும் அதிகம் தெரியாது. அதனால், அவருக்கு சிலரை அறிமுகப்படுத்தி வைத்தேன். அவ்வளவே! சொந்தப்படம் எடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. எடுக்கவும் மாட்டேன்.

நிருபர்: தி. மு. க.வுக்காக தேர்தல் பிரசாரம் செய்தீர்கள். முழுநேர அரசியலில் ஈடுபடுவீர்களா?

ராதிகா: எனக்கு அரசியல் தெரியாது. அரசியல் தேவையும் இல்லை. கலைஞர் கருணாநிதி மீதுள்ள பற்றின் காரணமாக மேடை ஏறி பேசினேன். வேறு எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது. என் திறமை என் கையில்! அதனால்தான் பத்து ஆண்டாக என்னால் சினிமாவில் நிலைத்து நிற்க முடிகிறது!


வெவ்வேறு தோற்றங்களில் நடிகை ராதிகா

நிருபர்: நடிகைகளுக்கு அரசியல் தேவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

எல்லாரும் பெண்களே!

ராதிகா: நடிகர்- நடிகைகளும் மனிதப் பிறவிகள்தானே! சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தானே! எங்களை ஏன் பிரித்துப் பார்க்கிறார்கள்? நாங்கள் படிக்கவில்லையா? எங்களுக்கு அறிவு இல்லையா? உலக விஷயங்கள் எங்களுக்குத் தெரியாதா? அமெரிக்காவில் ரீகனும், தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் என்.டி.ராமராவும் ஆட்சி நடத்திய பிறகும், நடிகர்- நடிகைகளுக்கு அரசியல் தேவையா என்று கேட்பவர்களை என்ன செய்வது? பெண்களை, குடும்பப் பெண்கள்- நடிகைகள் என்று பிரித்துப் பேசுவதே எனக்குப் பிடிக்கவில்லை. எல்லாரும் பெண்கள்தான்! எத்தனையோ பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். நாங்கள் சினிமாவில் நடிக்கிறோம். இதில் நடிகைகளை குறைத்து மதிப்பிட என்ன இருக்கிறது?

எங்கேயும் நல்லதும் நடக்கும்; கெட்டதும் இருக்கும். வேலைக்குப் போன ஒரு பெண் கெட்டுப் போனாள் என்பதற்காக, வேலைக்குப் போகிற எல்லாரையும் நாம் இழிவாக நினைப்பது இல்லையே! சினிமா தொழில் செய்பவர்களை மட்டும் ஏன் மட்டமாகப் பார்க்கிறார்கள்! ஒரு பெண், கம்பெனிக்கு வேலைக்குப் போகிறாள்; இன்னொருவள் ஸ்டூடியோவுக்கு போய் நடிக்கிறாள் என்றால். இதில் யார் உசத்தி! முகத்தில் அரிதாரம் பூசியதால் மட்டும் ஒரு பெண் வேறு பிறவி ஆகிவிடுவாளா? நடிகைகளை மட்டும் குறைத்துப் பார்க்கிறார்களே, தவறு எங்கேதான் நடக்கவில்லை? சினிமாவில்தான் தவறு நடக்கிறது; வேறு எங்கேயும் நடக்கவில்லை என்று யாராவது அடித்துச் சொல்ல முடியுமா?


தங்கை நிரோஷாவுடன் நடிகை ராதிகா

நிருபர்: “கைவீசு அம்மா கைவீசு" என்ற படத்தில் நீங்களும் நிரோஷாவும் (தங்கை) சேர்ந்து, அக்கா-தங்கையாகவே நடிக்கிறீர்களே, இது நீங்களாகத் தேடிப் பெற்ற வாய்ப்பா? நாடி வந்த வாய்ப்பா?

ராதிகா: கதை சொன்னார்கள். பிடித்து இருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டோம். நாங்கள் இருவரும் அனாதைகள்! நான் ஆசிரியை. நிரோஷா கல்லூரி மாணவி... இப்படி கதை போகிறது!

நிருபர்: தொடர்ந்து சேர்ந்து நடிப்பீர்களா?

ராதிகா: நல்ல கதை, வேடம் கிடைத்தால். நிச்சயமாக சேர்ந்து நடிப்போம்.

நிருபர்: நீங்கள் எத்தனையோ பாத்திரங்களில் நடித்து விட்டீர்கள். குறிப்பிட்ட ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?

ராதிகா: எந்த பாத்திரம் கிடைத்தாலும், அதை நல்லபடியாகச் செய்யவேண்டும். அதுதான் ஒரு நடிகையின் கடமை. எனக்குப் பிடித்த வேடம் என்று நடிக்கத் தொடங்கினால், அதை ரசிகர்கள் பார்க்க வேண்டுமே!

நிருபர்: இப்பொழுது வேறு மொழிப் படங்களில் நடிக்கிறீர்களா?

ராதிகா: இந்த ஆண்டு (1989) இரண்டு தெலுங்குப் படத்திலும், இரண்டு இந்திப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறேன்.

Updated On 25 March 2024 11:54 PM IST
ராணி

ராணி

Next Story