இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்த வாரம் வெளியான சினிமாக்களில் அதிக கவனம் பெற்ற படம் குறித்தும், நடிகர் - நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை கிசுகிசுக்களில் பரவலாக பேசப்பட்டது குறித்தும், புதிய படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படத்தின் அப்டேட் குறித்தும் இப்பகுதியில் காணலாம்.

அதிதி - சித்தார்த் ரகசிய திருமணம்?

நடிகர் சிதார்த்தும், நடிகை அதிதி ராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டே இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரிசையாக பல திரை பிரபலங்கள் காதல் திருமணம் செய்துவந்தாலும் இந்த ஜோடி தங்கள் திருமணம் குறித்து வாய் திறக்காமல் இருந்தனர். இந்நிலையில் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. சித்தார்த் - அதிதி ராவ் இருவருமே திருமணமாகி தங்கள் துணையை பிரிந்தவர்கள். அதிதி தனது 21 வயதிலேயே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து, கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்துவிட்டார். சித்தார்த்தும் மேக்னா என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து, அவரும் கருத்து வேறுபாட்டால் 2007ஆம் ஆண்டு அவரை பிரிந்துவிட்டார்.


நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த்தின் காதல் டு நிச்சயதார்த்த அறிவிப்பு புகைப்படம்

44 வயதான சித்தார்த் இதற்கு முன்பே பல நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டிருந்தாலும் ‘மஹாசமுத்திரம்’ திரைப்படத்திற்கு பிறகு, அதிதி ராவுடன் நெருக்கம்காட்டிவந்தார். குறிப்பாக, விருது நிகழ்ச்சிகள், திருமணம் என பல கொண்டாட்டங்களுக்கு இருவரும் ஒரே காரில் ஜோடியாகவே வந்த நிலையில், ஒரு கட்டத்தில் சித்தார்த் அதிதியுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடத் தொடங்கினார். இந்நிலையில்தான் இருவரும் தெலங்கானாவிலிருக்கும் ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோவிலில் வைத்து ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக தெலுங்கு சினிமா உலகில் பரவலாக பேசப்பட்டது.

அதனையடுத்து இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.

பாராட்டுக்களை அள்ளிக்குவிக்கும் ‘ஆடுஜீவிதம்’

பிரபல மலையாள எழுத்தாளர் பென்யமின் யாம் எழுதி, புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘ஆடுஜீவிதம் - தி கோட் லைஃப்’. இப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது மிகவும் அதிகமாக இருந்தது. நடிகர் பிருத்விராஜ் லீட் ரோலில் நடித்திருக்கும் இத்திரைப்படம், மார்ச் 28ஆம் தேதியன்று மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் இந்தி என பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸானது. முதல் நாளிலேயே இந்திய அளவில் ரூ.7.50 கோடி வசூல் செய்த இப்படம் உலகளவில் ரூ.14 முதல் ரூ.15 கோடிவரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மலையாளத் திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இப்படத்தை ப்ளெஸ்ஸி இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். அமலா பால் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.


‘ஆடுஜீவிதம் - தி கோட் லைஃப்’ திரைப்பட போஸ்டர்

கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்ற இளைஞர் வேலைக்காக அரபு நாடுக்கு சென்று, அங்கு முதலாளியால் ஏமாற்றப்பட்டு வனாந்தரத்தில் ஆடுமேய்க்க விடப்படுகிறார். வெறும் ஆடுகளுடன் மட்டுமே வாழும் நஜீப் எந்த அளவிற்கு மனதளவில் பாதிக்கப்படுகிறார் என்பதை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது ‘ஆடுஜீவிதம்’. நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் போன்றோர் இப்படத்தை வெகுவாக பாராட்டியிருக்கின்றனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துவரும் இப்படம், இயக்குநர் ப்ளெஸ்ஸியின் 14 வருட உழைப்பிற்கு கிடைத்த பலன் என்றே சொல்லலாம்.

14 வருடங்களுக்குப்பின் படம் இயக்கும் சசிகுமார்

‘சுப்பிரமணியபுரம்’ படத்தின்மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சசிகுமார். அந்த படத்தை தயாரித்ததும் அவர்தான். ஆனால் அடுத்தடுத்த திரைப்படங்களால் ஏற்பட்ட கடன் காரணமாக, இயக்கத்தை கைவிட்டு நடிப்பில்மட்டுமே கவனம் செலுத்திவந்தார் சசிகுமார். இந்நிலையில் 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இவர் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பாரதி ராஜா மற்றும் பாலா ஆகியோர் இயக்க முயன்று கைவிட்ட ‘குற்ற பரம்பரை’ என்ற படத்தின் கதையை வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சசிகுமார்.


நடிகை நயன்தாராவை வைத்து படம் இயக்கவிருக்கும் சசிகுமார்

அதனைத் தொடர்ந்து நயன்தாராவை வைத்து அடுத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே நயனிடம் கதை கூறியதில், அவரும் ஓகே சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலுடன் இணையும் சிம்பு - Thug Life

‘நாயகன்’ என்ற க்ளாசிக் படத்திற்கு பிறகு மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. அதனாலேயே இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே அடுத்தடுத்த அப்டேட்ஸுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தின் பூஜைக்குப் பிறகு கடந்த ஆண்டு கமல் பிறந்தநாளை முன்னிட்டு, நவம்பர் 6 அன்று படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. துல்கர் சல்மான், திரிஷா, ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்திருப்பதாக கூறப்பட்டது. படப்பிடிப்பும் நடைபெற்று வந்த நிலையில், மக்களவை தேர்தலில் பிஸியாகியுள்ளார் கமல்ஹாசன். இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் பிற நடிகர்களின் கால்ஷீட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அதனை உறுதி செய்யும்விதமாக படத்திலிருந்து முதலில் விலகினார் துல்கர். இந்நிலையில் அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.


‘தக் லைஃப்’ திரைப்பட போஸ்டர் - நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர் சிம்பு

அதே சமயம் துல்கர் நடித்த ரோலில் தற்போது சிம்பு கமிட்டாகி இருப்பதாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் கமல் 3 கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாகவும், அதில் சிம்புவின் ரோல் அதிக முக்கியத்துவம் பெறும் என்றும் கூறப்படுகிறது. எப்படியாயினும் தேர்தலுக்கு பின்னர்தான் கமல் மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வார் எனக் கூறப்படும் நிலையில், மற்ற நடிகர்களின் பகுதிகளை தற்போது மணிரத்னம் ஷூட் செய்து வருவதாக கூறப்படுகிறது. ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘இந்தியன் 2’ மற்றும் ‘தக் லைஃப்’ போன்ற படங்கள் கமலிற்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் என கூறப்படுகிறது.

நடிகர் டேனியல் பாலாஜி மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

ராதிகா சரத்குமாரின் ‘சித்தி’ சீரியல் மூலம் நடிப்புத்துறையில் அறிமுகமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. ஆரம்பத்தில் சினிமாத் துறையில் புரடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றிய டேனியல் அடுத்து ‘ஏப்ரல் மாதத்தில்’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததோடு நடிப்புத்துறையில் நுழைந்தார். அதன்பிறகு அவரது வாழ்க்கைப்பயணமே மாறியது. ‘வேட்டையாடு விளையாடு’, ‘பொல்லாதவன்’ போன்ற படங்களில் இவருடைய வில்லன் கதாபாத்திரங்களை யாராலும் மறக்கமுடியாது. மேலும் ‘காக்க காக்க’, ‘பைரவா’, ‘பிகில்’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். 48 வயதான டேனியல் பாலாஜிக்கு மார்ச் 29ஆம் தேதி இரவு அவரது வீட்டில் திடீரென நெஞ்சு வலி ஏற்படவே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் டேனியல் பாலாஜி.


சமீபத்தில் மாரடைப்பால் காலமான வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்த பாலாஜி, கொரோனாவால் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து அப்போது வீடியோ ஒன்றின்மூலம் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்த இவர் திடீரென மறைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜி, பிரபல நடிகர் முரளியின் நெருங்கிய உறவினராவார். கடந்த ஓரிரு ஆண்டுகளில் நடிகர்கள் பலர் அடுத்தடுத்து திடீர் மரணமடைவது திரையுலகினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகிலேயே முதன்முறையாக...

இரண்டு நாய்களை மட்டுமே முக்கிய கதாபாத்திரமாக வைத்து முழுநீள திரைப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறது கார்த்திகேயன் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட். ‘கிளவர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நடந்து முடிந்திருக்கிறது. உலக திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக படம் முழுக்க இரண்டு நாய்களை மட்டுமே நடிக்கவைத்திருப்பதாக இப்படத்தின் இயக்குநர் செந்தில்குமார் சுப்ரமணியம் கூறியுள்ளார். மேலும் தனது குட்டி நாயை திருடிச் சென்ற ஒரு சைக்கோ திருடனிடமிருந்து அம்மா நாய் எப்படி குட்டியை மீட்கிறது என்ற பாசப்போராட்டத்தை கதைக்களமாக கொண்டு இப்படத்தை உருவாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.


‘கிளவர்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படம்

ஏற்கனவே நடிகர் நடிகைகளுடன் முக்கிய கதாபாத்திரமாக நாய், குரங்கு, மாடு போன்றவை நடித்து பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் நாய்களை மட்டுமே கதையின் முக்கியப் பாத்திரங்களாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்பதால் கதை விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On 8 April 2024 11:50 PM IST
ராணி

ராணி

Next Story