(05.12.1971 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
சென்னை நகர இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்திரா காந்தி பிறந்தநாள் தின விழாவில் எம்.ஜி.ஆர். பேசினார்.
அவர் கூறியதாவது: பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் ஒரு தேசியத் திருவிழா ஆகும். தேசியம் என்பது நமது நாடு, நம்முடைய மக்கள் என்ற உணர்வுடன், நம்முடைய மக்கள் அனைவரும் சிறக்க வேண்டும் என்ற பற்றும் பாசமும் கொண்டு உழைப்பதாகும். இந்த தத்துவத்தை எழுத்தில் வடிக்கலாம், பேசலாம். ஆனால் அதன் அடிப்படையான நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட்ட ஒரு தத்துவத்தின் உருவமாக பிரதமர் இந்திரா இன்று விளங்குகிறார்.
வெவ்வேறு தோற்றங்களில் காட்சியளிக்கும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
இதே பிரதமர் இந்திராவை கடந்த தேர்தலின்போது பெரிய தலைவர்கள் சிலர் தரக்குறைவாக தாக்கினார்கள். லால்பகதூர் சாஸ்திரிக்குப் பிறகு இந்த நாட்டை ஆள்வதற்கு யார் தகுதியுள்ளவர் என்று பார்த்து மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அதனைக் கண்ட பின்னரும் கடுமையான சொற்களில் பிரதமரைத் தாக்கினார்கள்.
“ஒரு பெண் ஆள்வதா?” என்று கேட்டார்கள். நம்மைப் பெற்றெடுத்த தாயாக ஒரு பெண் இருக்கும்போது தாய்க் குலத்தை சார்ந்த ஒரு தாய் இந்த நாட்டை ஆளக் கூடாதா என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் கேட்டேன். இன்றுவரை அதற்கு யாரும் பதில் அளிக்கவில்லை. கட்டுப்பாட்டை மீறினார் என்று குற்றம் சாட்டினார்கள். கட்டுப்பாடு என்பது என்ன? நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான். தேசிய உணர்வை இழந்து பண்பை இழந்து செயல்பட்டால், அது எப்படி கட்டுப்பாடு ஆக முடியும்?
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆருடன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
பிரதமர் இந்திரா போன்ற முற்போக்காளர்களின் கொள்கை வெற்றி பெறவில்லை என்றால் – அவர்களின் திட்டம் சரிந்தது என்றால், இந்தியாவில் ஜனநாயகம் செத்துப் போய்விடும். இத்தகைய ஆபத்தைத் தடுக்கிற வகையில்தான் பிரதமர் இந்திராவின் முற்போக்கு நடவடிக்கைகளுக்கு திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவளித்து வருகிறது.