‘விண்ணைத் தாண்டி வருவாயா 2’ திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.
திரையுலகில் காதல் திரைப்படங்கள் இயக்குவதில் கைத்தேர்ந்தவராக வலம் வருபவர் தான் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு திரையில் வெளிவந்த திரைப்படம் தான் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இத்திரைப்படமானது தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியானது. இது மிகச்சிறந்த வெற்றிப்படமாகவே அமைந்திருந்தது. அதிலும் வெளிவந்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகளைக் கடந்தாலும்கூட இளைஞர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் காதல் திரைப்படங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது.
சிம்பு மற்றும் ஜிவிஎம்-ன் கூட்டணி
சிம்பு மற்றும் ஜிவிஎம்மின் கூட்டணியானது 2010ஆம் ஆண்டு வெளியான 'விண்ணைத் தாண்டி' வருவாயா திரைப்படத்திற்கு பிறகு ‘அச்சம் என்பது மடமையடா’,‘வெந்து தணிந்தது காடு’ போன்ற படங்களில் இணைந்தது. ஆனால் அவை இரண்டுமே ஆக்ஷன் திரைப்படங்களாகவே சிம்புவிற்கு அமைந்தன. ஆனால் அதற்கு முன்னதாகவே கொரோனா முதல் அலையின்போது, கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு மற்றும் த்ரிஷா மூவரும் இணைந்து ‘கார்த்திக் டயள் செய்த எண்’ என்ற குறும்படத்தை வெளியிட்டனர். அக்குறும்படத்திற்கு பிறகு சினிமா ரசிகர்கள் மத்தியில் 'விண்ணைத் தாண்டி வருவாயா 2' விரைவில் உருவாகும் என எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
விண்ணைத் தாண்டி வருவாயா 2
பொதுவாகவே சினிமாவைப் பொறுத்தவரையில் எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் சரி, அது மக்கள் மத்தியில் ஹிட் அடிக்கும் அளவிற்கு சிறந்த திரைப்படமாக இருக்குமேயானால் அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும், ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் எழுவது வழக்கம் தான். அந்தவகையில் 'விண்ணைத் தாண்டி வருவாயா 2' படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது சமூக வலைதளங்களில் ஏராளமான குறுஞ்செய்திகள் மூலம் அதிகளவில் பரவிக்கொண்டே தான் இருக்கிறது.
சமீபத்தில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கவுதம் வாசுதேவ் மேனன், “நான் ரெடி தான் இதை சிம்புக்கிட்ட சொல்லி கேளுங்க” என்று கூறியுள்ளார். அதாவது சிம்புவும் ரெடி என்று சொன்னால் 'விண்ணைத் தாண்டி வருவாயா 2' திரைப்படம் வருவதற்கு வாய்ப்பிருப்பது தெரியவந்துள்ளது.