இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பள்ளி பருவத்திலேயே நடிப்பில் ஆர்வம் கொண்டு குறும்படத்தின் மூலம் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி பல குறும்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து பின்னர் ‘சர்தார்’, ‘இரும்புத்திரை’, ‘ஜகமே தந்திரம்’ என்று பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடி, க்ரைம், சீரியஸ் என்று தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்து தற்போது மக்களின் மனதில் இடம்பிடித்து, தான் ஒரு நல்ல நடிகன் என்பதை நிரூபித்துள்ளார் நடிகர் ஷரத் ரவி. சினிமாவில் நடிப்பதற்காக அவர் சந்தித்த கஷ்டங்கள் என்ன? சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது? சினிமாவில் அவரால் மறக்க முடியாத தருணங்கள் என்ன? என்று அவருடைய சினிமா பயணத்தை இன்புற்று பகிர்ந்துள்ளார் நடிகர் ஷரத் ரவி. அவர் அளித்த நேர்காணலை இங்கு காண்போம்.

நெகடிவ், காமெடி என்று சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். உங்களின் நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படிப்பட்டவர்?

நான் எப்போதும் ஜாலியாகதான் இருப்பேன். சீரியசான விஷயத்தை ஜாலியாகவும், ஜாலியான விஷயத்தை சீரியசாகவும் கொண்டு செயல்பட்டால்தான் வாழ்க்கை விறுவிறுப்பாகவும் ஸ்வாரசியமாகவும் இருக்கும். கோபப்படுவதால் வாழ்க்கைக்கு ஒரு பயனும் இல்லை. வாழ்க்கையை ஜாலியாக வாழ நினைப்பவன் நான்.

உங்கள் சினிமா பயணம் தொடங்கியது எப்படி?

என்னுடைய இந்த சினிமா பயணம் என் பள்ளியில் தொடங்கியது என்று சொல்லலாம். நான் படித்த மாண்ட்ஃபோர்ட் பள்ளியில், 70% கலைநிகழ்ச்சிக்கும், 30% மட்டுமே படிப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். அப்படி நான் நான்காம் வகுப்போ, ஐந்தாம் வகுப்போ படித்துக் கொண்டிருக்கையில் எனது பள்ளியில் நடைபெற்ற மாறுவேட போட்டியில் பங்கேற்றேன். என் அம்மா எனக்கு வெறும் வித்தியாசமான ஆடையை மட்டும் அணிந்து விடாமல், அதோடு ஒரு பெரிய வசனத்தையும் கூற வைத்தார். ஏறக்குறைய 30 முதல் 40 பள்ளிகள் பங்கேற்ற அப்போட்டியில் செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கைகளால் 3 வது பரிசை பெற்றேன். அந்த ஆர்வமும், ஊக்கமும்தான் என்னை சினிமாவில் ஈடுபடுத்தியுள்ளது என்று நம்புகிறேன்.

சினிமாவில் காலடி எடுத்து வைக்க நீங்கள் சந்தித்த போராட்டங்கள் என்ன?

நான் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த போது எனது நண்பன் விக்ரம் ஸ்ரீதரன் இந்துஸ்தான் கல்லூரியில் படித்து கொண்டிருந்தான். எனது நண்பன் பிராஜெக்டுக்காக ‘உதிரம்’ எனும் குறும்படத்தை இயக்கினான். நான் நன்றாக நடிப்பேன் என்று அறிந்த என் நண்பன் அவன் இயக்கிய குறும்படத்தில் நடிக்க வாய்ப்பளித்தான். இப்படி எனது நண்பனுக்கு உதவ தொடங்கி நடிப்பில் ஆர்வம் கொண்டு இன்னும் பல குறும்படங்களில் நடித்தேன். எனது நடிப்புக்கு கிடைத்த கைத்தட்டல்கள் என்னை இன்னும் சிறப்பாக நடிக்க ஊக்கப்படுத்தியது. சினிமாவின் மேல் கொண்ட காதலாலும், ஸ்நேகத்தாலும் நான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தேன்.


நடிகர்கள் தனுஷ், ஜெய், பாபி சிம்ஹா உள்ளிட்டோருடன் நடிகர் த் ரவி நடித்த திரைப்பட காட்சிகள்

நீங்கள் சினிமாவில் ஈடுபடுவதற்கு உங்கள் குடும்பத்தின் ஆதரவு எப்படி இருந்தது?

ஒரு ஆதரவும் இல்லை. வழக்கம் போல நன்றாக படிக்க வைத்து நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். குடும்பமே கூட்டாக சேர்ந்து பயங்கரமாக திட்டினார்கள். ஆனால், என்னுடைய ஆர்வம் வேறாக இருந்தது. என்னுடைய ஆர்வமும் நோக்கமும் அவர்களுக்கு புரிய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அவர்களின் விருப்பத்துக்கு மாறாக நடப்பதால் ஒரு 5 வருடத்திற்கு திட்டுவார்கள். ஆனால், நாம் நம் நோக்கத்தில் சரியாக இருந்து நாம் நினைத்ததை அடைந்து நல்ல நிலைமைக்கு வரும் போது நிச்சயம் பெருமைப்படுவார்கள். அப்படி பல நாட்கள் என் குடும்பம் என்னை திட்டி இருந்தாலும் என் நடிப்பையும் வளர்ச்சியையும் கண்டு இப்போது பெருமைப்படுகிறார்கள். நாம் நம் இலக்கை அடைய பொறுமையாக இருக்க வேண்டும். அந்த பொறுமையும் காலமும் நிச்சயம் ஒரு நாள் நமக்கான மரியாதையை தேடி தரும்.

உங்கள் நடிப்புக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் எது?

தரணிதரன் இயக்கிய ‘பர்மா’ திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்ற ‘கூகுள்’ காட்சியை கண்டு பலரும் எனக்கு வித்தியாசமாக நன்றாக இருக்கிறது என்று வாழ்த்து கூறினார்கள். அதுவே என்னுடைய முதல் அங்கீகாரமாக கருதுகிறேன்.

எந்த நடிகருடன் நிச்சயம் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

நிச்சயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடன்தான். நான் அவருடைய தீவிர ரசிகன். சிறுவயது முதலே அவருடைய படத்தை பார்த்துதான் வளர்ந்தேன். அவருடன் நடிப்பதற்கு ‘பேட்ட’ திரைப்பட ஆடிஷனில் கலந்து கொண்டேன். ஆனால் தேர்வாகவில்லை. நிச்சயம் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய பல நாள் கனவு. அது விரைவில் கைகூடும் என்று நம்புகிறேன்.

படப்பிடிப்பின் போது இவரை போல இருக்க வேண்டும் என்று நீங்கள் பார்த்து வியந்த நடிகர் யார்?

தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்திக் என்று பல நடிகர்கள் உள்ளனர். நான் இணைந்து நடித்த ஒவ்வொரு நடிகர்களிடமிருந்தும் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நடிகரும் எனக்கு ஒவ்வொரு விஷயத்திலும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்கள். இதுவரை நான் நடித்திருக்கும் எந்த படத்தின் கதாநாயகனும் ஹீரோ என்ற தலைக்கனம் இல்லாமல் இணை நடிகரான எனக்கு மிகுந்த மரியாதையை அளித்திருக்கிறார்கள்.


வித்தியாசமான தோற்றங்களில் நடிகர் ரத் ரவி

சினிமா துறைக்கு எதிர்ப்பு தெரிவித்த உங்கள் குடும்பம் உங்கள் சினிமா வெற்றியை கண்டு என்ன கூறினார்கள்?

தறுதலையாக போவேன் என்று திட்டிய என் பெற்றோர்கள் ஒருவழியாக நான் ஒரு நடிகன்தான் என்று ஒப்பு கொண்டார்கள். அதுவும் பலரால் பேசப்பட்ட ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் 100 வது நாள் வெற்றி விழா விருது பெற்ற போதும் என் குடும்பம் நம்பவில்லை. ‘ஜகமே தந்திரம்’ படத்தில் பேசப்பட்ட கதாபாத்திரத்திற்கு பின்புதான் நான் நடிகன் என்பதை ஒப்புக்கொண்டனர்.

கார்த்திக் சுப்புராஜ், மித்ரன் என்று பல இயக்குநர்களுடன் பணிபுரிந்திருப்பீர்கள்... உங்களுக்கு பிடித்த நெருக்கமான இயக்குநர் யார்?

பொதுவாகவே நடிகர்கள் இயக்குநர்களுடன் இணைந்திருந்தால் மட்டுமே இயக்குநர்கள் எந்தவிதமான காட்சியை எதிர்பார்க்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். சில இயக்குநர்கள் இக்காட்சி இப்படித்தான் அமைய வேண்டும் என்று தெளிவுற விளக்கி அவர்கள் நினைத்தது வரும் வரை நடிக்க வைப்பார்கள். இன்னும் சில இயக்குநர்கள் வெளிப்படையாக எப்படி வேண்டுமென்று சொல்ல மாட்டார்கள். அதனால் எப்போதுமே ஒரு நடிகனாக நாம் இயக்குநரை அறிந்து புரிந்து செயல்படுவது நல்லது. அந்த வகையில் மித்ரன், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இயக்குநர்களுடன் நான் நெருக்கமாக இருந்திருக்கிறேன். என் நடிப்பு படிப்படியாக உயர்ந்ததற்கான காரணமாகவும், என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நபர்களாகவும் இவ்விருவரும் என்றும் இருப்பார்கள்.

காதல் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்துள்ளதா?

ஆம். நிச்சயமாக! காதல் கதாபாத்திரம் எனக்கு நடிக்க வருமா? வராதா? என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஆனால், ரொமாண்டிக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ‘மாயா’ திரைப்படத்திலும், ‘ஆகாஷ் வாணி’ வெப் தொடரிலும் சில காட்சிகளில் ரொமாண்டிக்காக நடித்திருக்கிறேன். ஆனால், கூடிய விரைவில் முழுமையான ரொமாண்டிக் கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று நம்புகிறேன்.

திரையில் இவர்களுடைய ஜோடி செம்ம ஜோடி என்று யாரை சொல்வீர்கள்?

ரஜினி-மீனா; ரஜினி-ஷோபனா; கமல்-குஷ்பு; சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா; தனுஷ்-த்ரிஷா; விஜய்-அசின்; விஜய்-த்ரிஷா ஜோடிகள் பார்க்க பொருத்தமாக இருக்கும். குறிப்பாக தனுஷ் மற்றும் விஜய் கூட யார் ஜோடியாக இருந்தாலும் அந்த கெமிஸ்ட்ரி பார்க்கவே பக்காவாக இருக்கும்.

‘சர்தார்’, ‘ஹீரோ’ என்று வரிசையாக க்ரைம் மற்றும் சீரியசான திரைப்படங்களில் நடிக்கிறோமே என்ற எண்ணம் ஏற்படவில்லையா?

எல்லாம் என் முக ராசி என்று நினைக்கிறேன். பார்க்க சீரியசாக இருந்தாலும் நான் நகைச்சுவையானவன் என்று இன்னும் யாருக்கும் தெரியவில்லை. என் முக பாவனைக்கு சீரியசான கதாபாத்திரம் பொருந்துவதால் என்னமோ நான் தொடர்ந்து க்ரைம் மற்றும் சீரியசான திரைப்படங்களில் நடிக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால், எனக்கு சீரியசான கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் பிடிக்கும். அதே அளவிற்கு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கவும் பிடிக்கும். தொடர்ந்து சீரியசான கதாபாத்திரத்தில் நடிக்கும் நான் விரைவில் நகைச்சுவையிலும் நடிப்பேன்.

உங்களுக்கு லவ் ப்ரொபோசல்ஸ் வந்ததுண்டா?

ம்ம்ம் அதிக லவ் ப்ரொபோசல்ஸ் வந்திருக்கிறது. ஆனால், நான் சுமாரான பையன் என்பதால் நான் எதையும் ஏற்றதில்லை.


நடிகர் ரத் ரவி ராணி ஆன்லைன் யூடியூப் தளத்திற்கு பேட்டியளித்த தருணம்

வாழ்க்கையில் மறக்க முடியாத நல்ல நிகழ்வு கெட்ட நிகழ்வு எது?

மறக்க முடியாத நல்ல நிகழ்வு என்றால் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்புதான். ஒவ்வொரு காட்சி முடிந்த பின்பும் அடுத்தென்ன அடுத்தென்ன என்று பரபரப்பாகவும், ஸ்வாரசியமாகவும் இருக்கும். இயக்குநர், நடிகர்கள், துணை நடிகர்கள் என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பது, ஜாலியாக பேசுவது என்று அந்த படப்பிடிப்பில் மறக்க முடியாத பல நல்ல தருணங்கள் இருக்கிறது. வருத்தப்படக்கூடிய நிகழ்வு என்றால் ‘மாயா’ திரைப்படத்தின் போது நடந்த ஒரு நிகழ்வுதான். இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியின் படப்பிடிப்பின் போது என்னால் நடக்க முடியாத அளவுக்கு பயங்கர காய்ச்சல். இயக்குநர், தயாரிப்பாளர் என்று பலரும் உறுதுணையாக இருந்தாலும் நான் அப்போது ஒருவரின் காரில்தான் ஸ்பாட்டிற்கு பயணம் செய்வேன். காய்ச்சல் இருக்கும் அந்த நாளில் மாடியில் இருந்து தொங்கியபடி இருக்கும் காட்சியை படம்பிடிக்க வேண்டும். சரி, ஒரு 10 நிமிடம் ஓய்வெடுத்து நடிக்கலாம் என்று நினைத்தேன்.

அப்போது அந்த கார் ஓட்டுநர் இந்த காரிலேயே கொஞ்சம் உறங்குங்கள் என்று கூறினார். நானும் மாத்திரை உண்டு அரை மணி நேரம் உறங்கினேன். அப்போது ஒருவர் வந்து இங்கெல்லாம் படுக்க கூடாது வேறு இடத்திற்கு சென்று உறங்கு என்று கூறினார். அது என்னை மிக மிக வருத்தியது. மழை நேரம், கேரவனில் இடம் இல்லை என்று சொல்லியும் அவர் என்னை அப்படி நடத்தியது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. அந்த சமயத்தில் நான் வெறும் 2, 3 படங்களில்தான் நடித்திருந்தேன். இந்த ஒரு சம்பவம் வருத்தத்தை அளித்தாலும் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும், நாமும் பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஊக்கம் அளித்தது. கஷ்டங்களும், போராட்டங்களும் இருந்தால் மட்டுமே சினிமாவின் மேல் இருக்கும் அன்பும், காதலும் அதிகரிக்கும். அப்படி அதிகரித்ததால்தான் நான் இன்று பல படங்களில் நடிக்கிறேன்.

Updated On 18 Dec 2023 6:46 PM GMT
ராணி

ராணி

Next Story