இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(15.06.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

ஷோபா எனக்கு முதல் குழந்தை. ஒரே குழந்தையும்கூட. இதனால், பாசத்தைக் கொட்டி ஷோபாவை வளர்த்தேன். அவளைப் பிரிந்து கொஞ்ச நேரம் கூட என்னால் இருக்க முடியாது. ஷோபா என்பது அவள் பிறந்த பொழுதே நாங்கள் வைத்த பெயர். சினிமாவுக்காக வைத்த பெயர் அல்ல.

கலை ஆர்வம்

ஷோபாவிடம் குழந்தைப் பருவத்திலேயே கலை ஆர்வம் என்பது இருந்தது. நான் நடிகை என்பதால், அதை நன்கு உணர முடிந்தது. பாம்பின் கால் பாம்பு அறியும் அல்லவா? தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும் என்பார்கள்! நடிப்பில் என் மகள், எதிர்காலத்தில் என்னையும் மிஞ்சிப் போவாள் என்பதை அப்போதே என்னால் உணர முடிந்தது. அது எப்படி என்றால்...

சினிமா

எனது திருமணத்துக்குப் பிறகு, நான் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். வீட்டில் சும்மா இருந்ததால், போரடித்தது. அதனால், நிறைய சினிமா பார்ப்பேன். நான் எங்கு சென்றாலும் ஷோபா இல்லாமல் போகமாட்டேன். அவளை என் இடுப்பில் தூக்கிக் கொள்வேன். சினிமாவுக்குப் போனாலும் ஷோபாவை தூக்கி செல்வேன்.


இருமாறுபட்ட தோற்றங்களில் நடிகை ஷோபா

ஷோபா நடனம்

சினிமா பார்ப்பது என்றால், ஷோபாவுக்குக் கொள்ளை மகிழ்ச்சி! தியேட்டரில் படம் ஓடத் தொடங்கியதும், அவள் என் மடியில் இருந்து இறங்கி விடுவாள். பிடித்து வைத்தாலும் மடியில் உட்கார மாட்டாள். மத்தியில் உள்ள பாதையில்போய் நின்றுகொள்வாள். படத்தில் கதாநாயகி ஆடிப்பாடும் காட்சி வந்துவிட்டால் போதும் ஷோபா நின்ற இடத்திலேயே கதாநாயகியைப் போலவே கையைக் காலை ஆட்டுவாள். தானும் ஆடுவதாக அவளுக்கு நினைப்பு! பாடலில் உள்ள சில வார்த்தைகளை சத்தம் போட்டு சொல்லுவாள். அவளும் பாடுகிறாளாம்! அதைப்பார்த்து மற்றவர்கள் சிரிப்பார்கள். படம் முடியும்வரை இதே வேடிக்கைதான்!. ஷோபாவிடம் குழந்தைப் பருவத்திலேயே ஆட வேண்டும்; பாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. எங்கே பாட்டுச் சத்தம் கேட்டாலும், ஷோபா தலை அசைப்பாள். கையைக் காலை தூக்கிப் போடுவாள். அந்தப் பாட்டை வாய்க்குள் முணுமுணுப்பாள்.

பிடிவாதம்

ஆனால், யாராவது அவளை அழைத்து, "ஷோபா கண்ணு, கொஞ்சம் ஆடேன்" என்றால், ஆடிக்காட்ட மாட்டாள். பாடச் சொன்னாலும் மறுத்துவிடுவாள்! குழந்தைப் பருவத்திலேயே ஷோபாவிடம் இப்படி ஒரு பிடிவாத குணம் இருந்தது. அவளாக நினைத்தால்தான் எதையும் செய்வாள். மற்றவர்கள் சொல்லி செய்யமாட்டாள். இதற்காக யாரும் ஷோபாவை வெறுத்தது இல்லை. கன்னத்தில் செல்லமாகக் கிள்ளிவிட்டு, மடியில் தூக்கி வைத்துக் கொள்ளுவார்கள். நான் கலைத் தொழிலில் வளர்ந்தவள். அதனால், ஷோபாவிடம் இருந்த கலை ஆர்வம், எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது! அந்த ஆர்வம் அவளிடம் மேலும் மேலும் வளர வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். ஊக்கப்படுத்தினேன்.


பிடிவாத குணம் கொண்டவள் ஷோபா - தாயார் பிரேமா

வீடு மாற்றம்

இதற்கு இடையில், எங்கள் குடும்பத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. குழந்தைகளின் படிப்பு வசதிக்காக, கோவையில் இருந்த முதல் மனைவியையும் குழந்தைகளையும் சென்னைக்கு அழைத்துக்கொள்ள ஷோபா அப்பா விரும்பினார். அது எனக்கும் சரி என்றே பட்டது!. நாங்கள் குடியிருந்த வீட்டின் மேல் மாடியில் இருந்த தனி அறையில் நானும் ஷோபாவும் தங்கினோம். கீழ்ப்பகுதியில் முதல் மனைவியும் குழந்தைகளும் குடியேறினார்கள். ஆனால், நாளடைவில், ஒரே வீட்டில் இரண்டு குடித்தனம் நடத்துவது எனக்கு என்னவோ போல் இருந்தது. "சின்ன வீடாக இருந்தாலும் பரவாயில்லை. என்னை தனியாக ஒரு வீட்டில் வைத்து விடுங்கள். இப்பொழுது நடந்து கொள்ளுவது போல, அப்போதும் நடந்து கொண்டால் போதும்" என்று ஷோபா அப்பாவிடம் நான் முறையிட்டேன். அதற்கு அவரும் சம்மதித்தார். எனவே, ராயப்பேட்டையைவிட்டு, தேனாம்பேட்டையில் ஒரு சிறு வீட்டில் குடியேறினோம்.

நடனப் பயிற்சி

நான் ஏற்கனவே நடனப் பயிற்சி பெற்று, இடையில் நிறுத்தியிருந்தேன். இப்பொழுது தொடர்ந்து நடன பயிற்சி பெறுவது என்று முடிவு செய்தேன். நடன ஆசிரியர் கிருஷ்ணகுமாரிடம் பயிற்சியைத் தொடங்கினேன். நான் ஆடத் தொடங்கியதும், ஷோபா ஓடிவந்து என் காலைக் கட்டிப்பிடித்துக் கொள்ளுவாள். "மம்மி! ஆடாதிங்க... ஆடாதிங்க!" என்று கத்துவாள்! அம்மாவுக்கு கால் வலிக்கும் என்று அவள் நினைப்பாள் போலும்!. உடனே நடன ஆசிரியர் அவளைத் தூக்கிப்போய் தன் மடியில் போட்டுக் கொள்ளுவார். ஒரு கையால் அவளைத் தட்டி தூங்க வைப்பார். இன்னொரு கையால் எனது நடனத்துக்கு தாளம் தட்டுவார். சிறு வயதிலேயே ஷோபா எதைச் சொன்னாலும் உடனே புரிந்து கொள்ளுவாள்!. சொன்னதை அப்படியே திரும்பச் சொல்லுவாள். நாம் செய்து காட்டுவதை, திரும்பச் செய்து காட்டுவாள்!.


'கோகிலா' திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகை ஷோபா

கடைக்குப் போவாள்

நாங்கள் தேனாம்பேட்டையில் இருக்கும்பொழுது, அவளுக்கு ஒன்றரை வயது இருக்கும். அந்த வயதில், அவள் தனியாக கடைக்குச் சென்று சாமான் வாங்கி வருவாள்! ஒரு சின்ன கூடைக்குள், வேண்டிய சாமானை தாளில் எழுதிப்போட்டு, காசை வைத்து கையில் கொடுத்து விட்டால், பக்கத்து நாயர் கடைக்குச் சென்று, சாமான் வாங்கி வந்து விடுவாள்!. கூடையை அவள் கையில் கொடுத்ததும், மம்மி எனக்கு! என்பாள். "நாயர் மாமா தருவார் போ!" என்பேன், நான். கடைக்குச் சென்றதும், கூடையைக் கடைக்காரரிடம் கொடுக்க மாட்டாள். அவளுக்கு உரியதை கடைக்காரர் அவள் கையில் கொடுத்த பிறகே, அவள் கூடையை நீட்டுவாள்!.

ஷோபா அப்படி விரும்பி வாங்கிக்கொள்வது என்ன தெரியுமா? அடுத்த பதிவில் காணலாம்.

Updated On 19 Aug 2024 6:05 PM GMT
ராணி

ராணி

Next Story