இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(03.02.1974 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

ஆப்பிள் கன்னம், எலுமிச்சம் பழ நிறம், வாழைத்தண்டு உடல், இந்தி நடிகை ஹேமா மாலினியின் சாயல்! இத்தனையும் பெற்றவர், புது முகம் பத்மபிரியா. கல்லூரி கன்னியாகத் திகழ்ந்த பத்மாவை “பத்மபிரியா”வாக மாற்றி, சினிமா உலகுக்குக் கொண்டு வந்தவர், டைரக்டர் ஸ்ரீதர். “ஹீரோ-72” படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக பத்மபிரியாவை ஸ்ரீதர் ஒப்பந்தம் செய்தார்!

கூண்டுக்கிளி

முதல் படமே ஸ்ரீதர் படம்! அதுவும் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக!. பத்மபிரியா நல்ல "அதிர்ஷ்டக்காரி" என்றார்கள், எல்லோரும்!. “72” போனது, “ஹீரோ-72" படம் வெளிவரவில்லை. “73” கடந்த பிறகும், “ஹீரோ-72” வரக்காணோம். அது மட்டுமா? அந்த இளம் கதாநாயகியை வேறு படத்திலும் காண முடியவில்லை! “ஒகோ” என ஆகப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், "ஐயோ பாவம்! ” என்று அனுதாபம் கொள்ளும் அளவுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கக் காரணம் என்ன?

அவரிடமே சென்று கேட்டோம்!


இரு வெவ்வேறு அழகிய தோற்றங்களில் பத்மபிரியா

படம் வருமா?

நிருபர்: நீங்கள் நடிக்கத் தொடங்கிய முதல் படம், “ஹீரோ-72” தானே?

பத்மபிரியா: ஆமாம். பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது நாடகங்களில் நடித்தேன். எல்லோரும் என் நடிப்பை பாராட்டினார்கள். அதனால், சிறு வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எனது ஆசையை நிறைவேற்றி வைத்தவர், டைரக்டர் ஸ்ரீதர்.

நிருபர்: “ஹீரோ-72" எப்பொழுது வெளிவருகிறது?

பத்மபிரியா: இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் படம் வெளிவந்துவிடும் என்று டைரக்டர் கூறினார்.

ஒப்பந்தம் உண்டா?

நிருபர்: நீங்கள் வேறு படங்களில் நடிக்காமல் இருப்பதன் காரணம் என்ன? ஒப்பந்தத்தில் இருந்து இன்னும் விடுபடவில்லையா?

பத்மபிரியா: “ஹீரோ-72” படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தபோது, நாங்கள் ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை, “நீ வேறு படத்தில் நடிக்கக்கூடாது” என்று ஸ்ரீதர் என்னிடம் கூறிவிட்டார். நானும் அதற்கு சம்மதித்தேன். இப்பொழுது ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வாய்ப்பை ஸ்ரீதர்தான் வாங்கித்தந்தார். அந்த அளவு ஸ்ரீதருக்கு என் வளர்ச்சியில் அக்கறை உண்டு. இந்த வாய்ப்பை தொடக்கத்திலேயே பெற்றுதந்து இருந்தால், இன்று அதிகமான தெலுங்குப் படங்களில் நடித்து, நல்ல அனுபவம் பெற்றிருப்பேன்!


முதல் இரவு காட்சி ஒன்றில் பத்மபிரியா நடித்த தருணம்

மகள் பெயர்

நிருபர்: “பத்மபிரியா” என்ற பெயர் உங்களுக்கு எப்படி வந்தது?

பத்மபிரியா: டைரக்டர் ஸ்ரீதரின் மகள் பெயர் ஸ்ரீபிரியா. அவர் என்னையும் ஒரு மகளாக பாவிப்பதால், தான் பெற்ற மகளின் பெயரைச் சேர்த்து எனக்கு "பத்மபிரியா" என்று வைத்தார் !

நிருபர்: இந்தி நடிகை ஹேமா மாலினியின் சாயல் கொண்டு இருக்கும் நீங்கள், அவரை நேரில் சந்தித்தது உண்டா?

பத்மபிரியா: ஹேமா மாலினியை பல தடவை சந்திக்க முயற்சி செய்தேன். முடியவில்லை. என்னை சந்திக்க ஹேமா மாலினியும் விரும்புவதாக அறிந்தேன். விரைவில் அவரை சந்திக்கப்போகிறேன். எங்கள் இருவரிடையே உருவ ஒற்றுமை இருப்பது போன்று, அவரது அம்மா பெயரும் ஜெயா. என் தாயார் பெயரும் ஜெயா.

சிவாஜி ரசிகை

நிருபர்: உங்களுக்குப் பிடித்தமான தமிழ் நடிகர்-நடிகை யார்?

பத்மபிரியா: நான் சிறுவயதில் இருந்தே சிவாஜி கணேசனின் ரசிகை. நடிகைகளில் முன்பு சாவித்திரி பிடிக்கும். இப்பொழுது கே. ஆர். விஜயா படத்தை மட்டும் விரும்பிப் பார்க்கிறேன்.

நிருபர்: இந்திப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தால் நடிப்பீர்களா?

பத்மபிரியா: ஹேமா மாலினி தயாரிக்கும் படத்தில் என்னை நடிக்க அழைத்தார். அது பற்றி இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டும். இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டு என்று “ஒப்பந்தம்” கேட்டால், இந்திப் படத்தைப் பற்றி கவலைப்பட மாட்டேன்.

Updated On 17 Jun 2024 6:14 PM GMT
ராணி

ராணி

Next Story