இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(17-08-1980 தேதியிட்ட 'ராணி' இதழில் வெளியானது)

நடிகர் ரஜினிகாந்த் தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதுகுறித்து அவர் ராணி இதழுக்கு அளித்த பேட்டியை இங்கே காணலாம்.

"திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதை நான் முழுமையாக நம்புகிறேன்.நான் கடவுள் பக்தி உள்ளவன். கடவுள் மீது நம்பிக்கை வைத்து இருப்பவன்.

அவர் எங்கே, எந்த இடத்தில் யாரை எனக்காக நிச்சயம் பண்ணி வைத்து இருக்கிறாரோ, அப்போது என் திருமணம் நடக்கும். ஆனால் அந்தத் திருமணம் திடீர் திருமணமாக இருக்காது. அது மட்டும் நிச்சயம்! இந்தத் திருமணத்துக்கு ஒரு மாதமோ, ஒர் ஆண்டோ கூட ஆகலாம். அதுவரை நான் பொறுமையாக இருக்க வேண்டும்.

அவசரம்

ஆனால், என் பெற்றோருக்கு பொறுமை இல்லை. அவர்கள் எனக்கு எங்கெங்கோ பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எனக்கு ஒரு கால் கட்டு போட்டு விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள் போலிருக்கிறது!

அவர்களின் வேகம் இப்படி என்றால், என் பத்திரிகை நண்பர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று கொண்டு இருக்கிறார்கள். இதுவரை எனக்கு ஐந்தாறு திருமணத்தை நடத்திப் பார்த்து விட்டார்கள்.

லதா

ஸ்ரீதேவி என்றார்கள். ரதி என்று முடிச்சுப் போட்டார்கள். கடைசியாக, கல்லூரி மாணவி லதாவுக்கு வந்து விட்டார்கள்! இந்தப் பத்திரிகை திருமணத்தால், எனக்கு ஒரு கெடுதலும் ஏற்பட்டுவிடப் போவது இல்லை.

ஆனால், சம்பந்தப்பட்ட பெண்களின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாதே என்ற கவலைதான் எனக்கு!

என்னோடு பேசி பழகிய குற்றத்துக்காக, அவர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?


நடிகை ஸ்ரீதேவி, நடிகை ரதி, லதா

பாவம், லதா!

ஒய்.ஜி.பி.யின் வீட்டுக்கு நட்பு முறையில் நான் செல்வது உண்டு. அப்போதுதான் லதாவைத் தெரியும். நல்ல பெண். அன்பாகப் பேசுவாள். மரியாதையாகப் பழகுவாள்!

அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நானும் எண்ணியது இல்லை.

லதாவும் இப்படி ஓர் ஆசையை வளர்த்துக் கொண்டு இருக்க முடியாது. காரணம். அவள் சின்னப் பெண். படித்துக் கொண்டு இருப்பவள்.

நெருப்பு

நெருப்பு இல்லாமல் புகையுமா என்று கேட்கிறார்கள்!

நடிகனின் தொழில் அப்படி!

ஸ்டூடியோவுக்குள் சென்றால் நடிகைகளைச் சந்திக்கிறோம். சேர்ந்து கட்டிப் பிடித்து ஆடுகிறோம்; பாடுகிறோம். வீட்டுக்கு வந்தால் ரசிகர்கள் ரசிகைகளைச் சந்திக்கிறோம். சிரித்துப் பேசுகிறோம்.

இப்படி பழகுவதைப் பார்ப்பவர்கள், நெருப்பை உண்டாக்கி, புகைச்சலை கிளப்பி, பரப்பி விடுகிறார்கள்!

இதற்கு நான் என்ன செய்ய மூடியும்?


நடிகர் ரஜினிகாந்த்

மார்க்கெட்டு

திருமணம் செய்து கொண்டால், மார்க்கெட்டு குறைந்து விடும் என்பதற்காக, நான் திருமணத்தைத் தள்ளிப் போடவில்லை.

திருமணம், மார்க்கெட்டை குறைக்கும் என்பது நடிகைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்! நடிகர் விஷயத்தில், வீழ்ச்சி சாத்தியம் இல்லை.

எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் திருமணத்துக்குப் பிறகுதான் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தார்கள்!

என்னைப் பொறுத்தமட்டில், நான் இப்பொழுதும் அதிகப் படங்களில், ஒப்புக் கொள்வது இல்லை.

உடம்புக்கு ஓய்வு முக்கியம் என்று ஆன பிறகு, ஆண்டுக்கு மூன்று நான்கு படங்கள் மட்டுமே ஒப்புக் கொள்கிறேன்.

இந்த எண்ணிக்கை திருமணத்துக்குப் பிறகு குறைய வாய்ப்பு இல்லை.


நடிகர் ரஜினியுடன் லதா

ரசிகர்கள்!

என் ரசிகர்களிடம் இருந்து, என்னை அவ்வளவு சீக்கிரமாக ஒதுக்கிவிட முடியாது!

சரி, முதலில் திருமணம் நடக்கட்டும். மார்க்கெட்டை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!

"எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்?" என்று கேட்கிறீர்களா?

அதுதான் முதலிலேயே சொன்னேனே !

திருமணப் பொறுப்பை கடவுள் மீது போட்டு இருக்கிறேன்.

அவர் யாரை, எனக்குக் காட்டுகிறாரோ, அவள் கழுத்தில் தாலி கட்ட நான் தயார்.

அப்படி தாலி கட்டும் முன், நிச்சயமாக உன்களுக்கு அழைப்பு அனுப்வேன், காத்து இருங்கள்!” என்றார் நடிகர் ரஜினிகாந்த்

Updated On 26 Sept 2023 12:29 AM IST
ராணி

ராணி

Next Story