இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கிராமப்புற பின்னணியில் இருந்து ஒரு பெண் திரைத்துறைக்கு வருவது மிகவும் கடினம். பல விமர்சனங்கள், பல அவமானங்கள் இருந்தாலும் திரையில் சாதிக்க வேண்டும் என்ற ஏக்கமும், கனவும் இருக்கும். அப்படியாக, நடிக்கத்தான் பிடித்திருக்கிறது எனக்கூறி, அம்மாவின் ஆதரவுடன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து பல ஆடிஷன்கள் சென்றாலும் எதுவும் பயன்படவில்லை. எனவே டிக்டாக் செயலி மூலம் தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்க கடுதாசிக்காரி, மைம் என வீடியோக்கள் வெளியிட்டதால் அவருக்கு சில நாட்களில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரைம் டைம் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ள நடிகை, மைம் ட்ரெய்னர், நாடக கலைஞர் என பன்முகங்களைக் கொண்ட கேப்ரியல்லா செல்லஸிடம் ஒரு சுவாரஸ்ய விவாதம்.


நடிக்கவந்த புதிதில் நாடகம் ஒன்றில் கேப்ரியல்லாவின் தோற்றம்

கேப்ரியல்லா செல்லஸ் யார்? உங்கள பத்தி சொல்லுங்க?

என்னுடைய பெயர் கேப்ரியில்லா செல்லஸ். எனக்கு திருச்சிக்கு அருகில் இருக்கும் அல்லித்துறைதான் சொந்த ஊர். நான் ஒரு மைம் ட்ரெய்னர், மைம் சொல்லித்தர பிடிக்கும். சிறு கதைகள் எழுதும் ஆர்வம் இருக்கிறது, நிறைய எழுதியிருக்கேன். நான் ஆடை சுதந்திரத்தை விரும்பும் பெண். எனக்கு பிடித்த ஆடைகள் அணிவதுதான் பிடிக்கும். நான் ரொம்ப ஜாலியான ஒரு நபர்தான்.

கிராமப்புற பின்னணியில் இருந்து திரைத்துறையை தேர்வு செய்ததற்கு காரணம்?

என்னுடைய அம்மா, அப்பா பள்ளியில் தலைமையாசிரியர்களாக பணியாற்றினார்கள். கிராமத்து பெண்ணாக இருந்தாலும் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு புரட்சி எல்லாம் பண்ணியிருக்கிறேன். படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை. டிவி அதிகம் பார்க்கும் பழக்கம் இருந்தது. வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்லுவாங்க. அது எனக்குதான் பொருத்தமா இருக்கும். பழங்காலத்து நடிகர்கள் ரொம்ப பிடிக்கும். சாவித்திரி அம்மா, பத்மினி அம்மா, சிவாஜி கணேசன் நடிப்பெல்லாம் பார்த்து நம்மளும் இந்த டிவி பெட்டிக்குள்ள நடிக்கணும்னு வந்த ஆர்வம்தான் இது.


கேரக்டர்களுக்கு ஏற்றவாறு சிகை மற்றும் உடை அலங்காரத்தில்

கிராமங்களில் திரைத்துறைக்கு பெண்கள் போறதுபத்தி தவறான கண்ணோட்டம் இருக்கும், அதை எப்படி பார்க்கிறீர்கள்?

அது உண்மை இல்லை. எல்லாமே இன்னசென்ட் மக்களோட பயம் மட்டும்தான். எங்கள் வீட்டில் ஒரு முறை டான்ஸ் கிளாஸ் போக கூடாதுன்னு சொன்னாங்க. அந்த கோபத்தில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நான் சென்னைக்கு ஓடி வந்துட்டேன். அப்போ என்னை 5 மணி நேரத்தில் கண்டுபிடித்துவிட்டார்கள். உனக்கு என்ன வேண்டும் என கேட்டார்கள். அப்போ நான் சொன்னேன், எனக்கு படிக்க வரவில்லை, நான் யாருன்னு கண்டுபிடிக்க நினைக்கிறேன்னு சொன்னேன். காலேஜ் டைம்ல நிறைய மேடை நாடகம் பண்ணியிருக்கேன் அப்போ எல்லாருமே என்னுடைய நடிப்புக்கு கை தட்டினாங்க. நான் நல்லா நடிக்குறேன்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. ஆசை இருக்கு அதனால சென்னைக்கு போறேன்னு சொன்னப்போ, எங்க அம்மாதான் எனக்கு முழு ஆதரவு. சினிமாவுக்கா அனுப்புறன்னு அம்மாவ எல்லாருமே கேட்டாங்க. அப்போ அம்மா சொன்னது எந்த துறையில்தான் தப்பு இல்லை. எல்லாத் துறையிலும் தப்பு இருக்கத்தான் செய்யும். என்னோட பொண்ணு தப்பு பண்ணலாம். ஆனா அவளை அவளே திருத்திக்குவான்னு நம்புனாங்க.

டிக்டாக் பண்ற ஆர்வம் எப்படி வந்தது?

ஒரு கலைஞனை பொறுத்தவரை எல்லாருக்கும் பரிச்சயமா இருக்கணும்னு நினைப்பாங்க. தொலைக்காட்சியில் நடிக்கும்போது அது நான்தான் என்பதே நிறைய பேருக்கு தெரியவில்லை. எனக்கென ஒரு அடையாளம் வேண்டுமென ஆரம்பிக்கப்பட்டதுதான் டிக்டாக். ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்டா, நிறைய ஸ்கிரிப்ட் எழுதியிருப்போம். அதுலாம் வீடியோவாக பண்ணலாம்னு பண்ணேன். எல்லாரும் பாட்டுக்கு நடிக்கிறாங்க, நம்ம ஏன் சொந்த குரலில் பண்ண கூடாதுனு பண்ணினேன். வாழ்க்கையில் நிறைய அழுதிருப்பதால, வீடியோக்களிலும் அழுகை சாதாரணமாகவே வந்துவிடும். நான் இப்போ இருக்கிற இடம் கடுதாசிகாரியாலதான்.


இணையத்தில் பலரையும் கவர்ந்த கேப்ரியல்லாவின் புகைப்படங்கள்

பட வாய்ப்புகள் எப்படி கிடைத்தது?

நண்பர்கள்தான் காரணம். சினிமாவை பொறுத்தவரை காண்டாக்ட்தான் நமக்கான வாய்ப்புகளை தரும். ஐரா படத்தில் நடித்தபோது உதவி இயக்குநராக இருந்த முகிலன் அண்ணா துணையுடன் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. தினமும் நான் வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். இன்ஸ்டாகிராமில் எப்போதும் அப்டேட்டாக இருப்பேன். சீரியல் என்னோட அம்மாச்சியின் ஆசைக்காக பண்ணதுதான். மிராக்கிள் மீடியாவில் இருந்து எனக்கு கால் பண்ணாங்க. நமக்காகவே எழுதப்பட்ட கதையில் நடிப்பது பெரும் பாக்கியம்.


சுந்தரி சீரியல் காட்சிகளில் கேப்ரியல்லா செல்லஸ்

சீரியலில் உங்க அம்மா, அப்பத்தா பற்றி சொல்லுங்கள்…

சிறு வயதிலிருந்து பி.ஆர். வரலக்ஷ்மி அவர்களின் நடிப்பை பார்த்து வளர்ந்தேன். அவர்களுடன் நடிப்பது எனது பாக்கியம். அவர்களை பார்க்கும் பொழுது எனக்கு என் சந்திரா அம்மாச்சி நினைவுதான் வரும். அவர்களிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். நிஜ வாழ்க்கையில் எனது அம்மா என்னை அடித்ததே இல்லை. திரையில் அம்மாகிட்ட வாங்காத அடியே இல்லை. முதல் நான்கு எபிசோடில் அடி வெளுத்துட்டாங்க.

Updated On 10 Jun 2024 11:59 PM IST
ராணி

ராணி

Next Story