இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சினிமாத் துறையைப் பொறுத்த வரையில் உச்சம் தொட்ட நடிகர்களின் எண்ணிக்கையை விட, இத்துறையில் உச்சத்தை எட்டிப்பிடிக்க அரும்பாடுபட்டு போராடி வரும் நடிகர்களின் எண்ணிக்கை என்பது ஏராளம். அந்த வகையில், தான் பார்த்துக்கொண்டிருந்த போலீஸ் வேலையை விட்டுவிட்டு, தற்போது முழுநேரமாக தன் சினிமாக் கனவை படிப்படியாக நிஜமாக்கி வருபவர்தான் ‘கராத்தே கார்த்தி’.1995ஆம் ஆண்டு தொடங்கிய இவரது இந்த சினிமா பயணமானது தற்போது வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. பேட்ட, டாக்டர், ஜெய்லர் என பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்துள்ள கராத்தே கார்த்தியோடு நடத்திய உரையாடல் இப்பதிவில் பின்வருமாறு...

உங்களுடைய “வென்றிட வா” ஆல்பம் பாடலுக்கான தொடக்கம் எவ்வாறு அமைந்தது மற்றும் அதற்கான காரணம் என்ன?

நான் 1991ஆம் ஆண்டில் இருந்தே மார்ஷியல் ஆர்ட்ஸ் அதாவது கராத்தே, பாக்சிங், ஜிம்னாஸ்டிக் என அனைத்தையும் கற்றுக்கொள்ள தொடங்கினேன். சினிமாத்துறையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக எனது போலீஸ் பணியை விட்டுவிட்டு சினிமாத்துறைக்குள் அடி எடுத்து வைத்தேன். எனக்கு மட்டுமல்ல ஒவ்வொருவரது வாழக்கையிலுமே உடல் சார்ந்த கிண்டல்களும், கேலிகளும் நடப்பது வழக்கம் தான். அது வாழ்க்கையில் உச்சத்தை தொட்டவர்களாக இருந்தாலும் சரி, சராசரி ஆட்களாக இருந்தாலும் சரி, கிண்டல் கேலி சார்ந்த விஷயங்களையெல்லாம் கடந்துதான் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் அடித்தளமாக வைத்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக எடுக்கப்பட்டதுதான் இந்த ‘வென்றிட வா’ பாடல்.


பாக்சிங் பயிற்சியின்போது நடிகர் கராத்தே கார்த்தி

உங்களுக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் இருக்கும் 33 ஆண்டுகள் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?

33 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு மாணவனாகதான் நான் என்னைப் பார்க்கிறேன். இங்கு கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. அனைத்தையுமே கற்று முடித்துவிட்டேன் என்று நான் எப்பொழுதுமே என்னுடைய கற்றலுக்கு முற்றுப்புள்ளி இடுவதில்லை. மாணவனாகவே இருந்து அந்த கலையை முழுவதுமாக கற்றுத் தேர்வதுதான் வெற்றிக்கான வழி என்பது தான் என்னுடைய கருத்து.

கைதி திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?

எந்த மொழிப் படமாக இருந்தாலும் சரி, அது எந்த இடமாக இருந்தாலும் சரி என்னுடைய நட்பு வட்டத்தை சண்டைப் பயிற்சியாளர்களிடம் இருந்து தொடங்குவதுதான் எனது பழக்கம். அதன் வழிதான் அன்பறிவு மாஸ்டர் உடனான நட்பு எனக்கு கிடைத்தது. இயக்குநர் லோகேஷ் மற்றும் அன்பறிவு மாஸ்டர் இருவருமே நல்ல நண்பர்கள். அப்படித்தான் எனக்கு கைதி திரைபடத்திற்கான வாய்ப்பும் கிடைத்தது.


நடிகர் கராத்தே கார்த்தி ராணி ஆன்லைனுக்கு பேட்டியளித்தபோது

கைதி திரைப்படத்தை பார்த்த பின் உங்கள் குடும்பத்தினரின் மகிழ்ச்சி எந்த அளவிற்கு இருந்தது?

நான் நடித்த காட்சியைப் பொறுத்த வரையில், எனக்கே எதிர்பாராத விதமாக தான் அக்காட்சி அமைந்திருந்தது. என்னுடைய தோற்றமாக இருக்கட்டும், நான் காட்சியில் நடக்கும் பொழுது பின்னாடி ஒலிக்கப்பட்ட இசையாக இருக்கட்டும், மீண்டும் மீண்டும் அதனை நான் பார்க்கும்போதெல்லாம் அது எனக்கு மிகுந்த ஆனந்தத்தைதான் ஏற்படுத்தி தந்தது. எனது மனைவி மற்றும் குழந்தைகளும் அக்காட்சியைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டனர். ஏனென்றால் அது எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாகும்.


'டாக்டர்' படத்தில் ஒரு காட்சியில் நடிகர் கராத்தே கார்த்தி

உங்களுக்கு இந்த சினிமாத் துறையில் எவ்வாறு வாய்ப்பு கிடைத்தது?

1995ஆம் ஆண்டு ‘லவ் பேட்ஸ்’ திரைப்படம்தான் சினிமாத்துறையில் எனக்கான முதல் படமாகும். நான் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமையத்தில், சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு குறித்த கலந்தாய்வு நடந்தது. அதில் நானும் என்னுடைய நண்பர்களும் கலந்துகொண்டோம். பல்வேறு சுற்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அப்பொழுதுதான் நான் சினிமாத் துறைக்குள் முதன்முதலில் அடி எடுத்துவைத்தேன்.


உடற்பயிற்சிகளின் போது நடிகர் கராத்தே கார்த்தி

நடிகனாக உங்கள் கதாபாத்திரத்தில் உங்களால் வேறுபாடு காட்ட முடிகிறதா?

நிச்சயமாக, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வேறுபாடு காட்டுவதற்கான முழு முயற்சியில்தான் ஈடுபட்டு வருகிறேன். பெரும்பாலும் எனக்கு போலீஸ் ரோல்களுக்கான வாய்ப்புகள்தான் அதிகளவில் வருகிறது. ஆனால் நானோ ஒரு வில்லனாக வேண்டும் என்ற கனவோடுதான் சினிமாத்துறைக்கு வந்தேன். எனக்கு பொதுவாகவே வெவ்வேறு மாதிரியான வித்தியாசமான கதாப்பத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

டாக்டர் திரைப்படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

டாக்டர் திரைப்படத்திற்காக கமிட்டான முதல் நாளில் இருந்தே எனக்கு அதிகப்படியான பயம் இருந்தது என்பதே உண்மை. ஏனென்றால் மிகச்சிறந்த நடிகர்கள்தான் என்னை சுற்றி இருந்தனர். யோகி பாபு, கிங்ஸ்லி, சிவகார்த்திகேயன் போன்ற உச்சம் தொட்ட நடிகர்களுடனான எனது இந்தப் பயணம் வெற்றிகரமாகவே அமைந்தது. அதுமட்டுமின்றி எனக்கு கிடைத்திருக்கும் இந்த மிகப்பெரிய வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைத்தேன். அதன்படியே செய்தும் முடித்தேன். டாக்டர் திரைப்படத்தை பொறுத்தவரையில் படத்தின் இயக்குநர் எனக்கு முழு ஆதரவையும், என்னுடைய கதாபாத்திரத்திற்கான சுதந்திரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.


செம ஃபிட்டான தோற்றங்களில் கராத்தே கார்த்தி

உங்கள் 46 வயதிலும் நீங்கள் ஃபிட்டாக இருப்பது எப்படி?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அதிலும் என்னுடைய பேரே ‘கராத்தே கார்த்தி’. அதற்கேற்றார் போல இருந்துதான் ஆக வேண்டும். அதுமட்டுமில்லாமல் எனக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் மீது இருக்கும் தீராத காதல் தான் ஃபிட்டாக வைத்திருக்கிறது.

மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் உங்களுக்கு அதிகளவில் ஆர்வம் இருப்பதற்கான காரணம் என்ன?

1991 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாயும் புலி’ திரைப்படத்தை பார்த்த பின்புதான் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணனிடமும் கூறியிருக்கிறேன். பேட்ட மற்றும் ஜெய்லர் திரைப்படத்தில் அவருடன் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அப்பொழுதுதான் நான் அவரிடம் இதனைக் கூறினேன்.

Updated On 28 Nov 2023 12:12 AM IST
ராணி

ராணி

Next Story