
(17.05.1981 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
"தீபா நடிகை ஆனதும், அவளுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் தொந்தரவுகளையும் வார்த்தையால் சொல்ல முடியாது" என்று சொல்லத் தொடங்கினார், அம்மா விக்டோரியா.
விக்டோரியா மேலும் சொல்லுகிறார்:-
"தீபாவைப் போலவே இளம் வயதில் நானும் அழகாக இருப்பேன். கல்லூரியில் படிக்கும் பொழுது நாடகங்களில் நடித்தேன். என் அம்மா(தீபாவின் பாட்டி) ஒரு நடிகை. அதனால், எனக்கும் இயற்கையாகவே நடிக்கக்கூடிய திறமை இருந்தது. அதைப் பார்த்த சில தயாரிப்பாளர்கள் என்னை நடிக்க அழைத்தார்கள். படித்து பட்டம் பெற வேண்டும் என்று நான் விரும்பியதால் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
1951-ல், எர்ணாகுளத்தில் உள்ள புனித தெரசா கல்லூரியில் படித்து, பி.ஏ. பட்டம் வாங்கினேன். அப்போது, "மருமகள்" என்ற படத்தில் நடிகர் பிரேம்நசீருக்கு ஜோடியாக நடிக்க அழைத்தார்கள். அந்த நேரத்தில், எர்ணாகுளத்தில் டெலிபோன் இலாகாவில் வேலை கிடைத்ததால், நடிக்க மறுத்துவிட்டேன். வேலை கிடைக்காமல் இருந்தால், ஒருவேளை நானும் நடிகை ஆகியிருப்பேன். ஆனால், என்னால் நடிக்க முடியாத பிரேம் நசீருடன், பின்னால், தீபாவை நடிக்க வைத்தேன். எனக்கு வேலை கிடைத்ததும், திருமணமும் நடந்தது.
மூன்று விதமான முகபாவனைகளில் நடிகை தீபா உன்னி
அழகி தீபா
திருமணம் முடிந்து 10 ஆண்டு கழித்து, 1961 மார்ச் 12-ம் தேதி தீபா பிறந்தாள். சின்ன வயதில் தீபா குண்டாக, அழகாக இருப்பாள். தீபாவுக்கு ஏழு வயது நடக்கும்பொழுது, சினிமாவில் நடிக்க அழைப்பு வந்தது. தீபா முதல் படத்தில் பேசிய முதல் வசனம், "அப்பனும் இல்லை; அம்மையும் இல்லை. ஆராரோ உன்னி கிருஷ்ணா, என்னைக் காப்பாற்று” என்பதுதான். தீபா 12 வயதில் மிகவும் குண்டாக இருந்தாள். அதனால், தினமும் காலையில் எழுந்ததும், தீபாவை வீட்டு விட்டத்தை பிடித்து தொங்கவிட்டு, ஊஞ்சல் போல ஆட்டி விடுவேன். குனிந்து நிமிரும் பயிற்சியும் அளித்தேன்.
அந்தரங்கம்
தீபாவுக்கு 14 வயது நடக்கும் பொழுது, (1975-ல்) தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்தேன். "அந்தரங்கம்" என்ற படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னைக்கு ஓட்டலில் வந்து, தங்கியிருந்தோம். படப்பிடிப்பு இல்லாதபோது, ஊருக்குச் சென்றுவிடுவோம். இப்படியாக ஓர் ஆண்டு முழுவதும், சென்னைக்கும் எர்ணாகுளத்துக்கும் அலைந்துகொண்டு இருந்தோம்.
அழகு பதுமையாக இருமாறுபட்ட தோற்றங்களில் தீபா உன்னி மேரி
கழுகுகள்
நாங்கள் சென்னைக்கு வந்ததும், தீபாவின் அழகு பலருடைய கண்ணையும் உறுத்தியது. அவளைக் கொத்தித் தின்ன பல கழுகுகள் துடித்தன. இப்பொழுது பிரச்சினைக்கு உரியவராக உள்ள ஓர் ஒளிப்பதிவாளர், நயவஞ்சகமாகப் பழகி, தீபாவை அபகரித்துச் செல்ல முயன்றார். அவரை அடித்து விரட்டினேன். இப்படி எத்தனையோ புலிகளை அடித்து விரட்டிய பெருமை எனக்கு உண்டு.
"அந்தரங்கம்" படத்தைத் தொடர்ந்து, தீபாவுக்கு தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. அதனால், 1976-ம் ஆண்டு இறுதியில் நாங்கள் சென்னையில் குடியேறினோம். அப்போதும் நான் வேலைக்குப் போய்க் கொண்டுதான் இருந்தேன். தீபாவுக்குத் துணையாக அவள் பாட்டி இருந்தார்.
நடிகை ஆனாலும், படிப்பையும் விடாது பட்டதாரி ஆன தீபா
குழந்தை
தீபா நட்சத்திரம் என்றாலும், எனக்கு பச்சைக் குழந்தைதான்! தினமும் நான்தான் அவளை எழுப்பி விடவேண்டும். அவள் நடித்துக்கொண்டு, படித்தும் வருவதால், அதிகாலை 4.30 மணிக்கே எழுப்பி விட்டுவிடுவேன். முதலில் சிணுங்குவாள். பிறகு, புத்தகத்தை எடுத்துக்கொண்டு, படிக்கத் தொடங்கிவிடுவாள். என்னைப் போல், ஒரு பட்டதாரி ஆகவேண்டும் என்பதில் தீபா தீவிரமாக இருக்கிறாள்!
அதில் அவள் வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கும்பொழுது, திருமணமும் கனிந்துவிட்டது. என் மகள் நடிகை ஆனாலும், ஒருவனுக்கு அடக்கமான மனைவியாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை! அந்த ஆசையையும் என் மகள் நிறைவேற்றித் தந்துவிட்டாள் என்பதை நினைக்கும் பொழுது, எனக்கு உண்மையாகவே பெருமையாக இருக்கிறது.
