(28.01.1968 தேதியிட்ட `ராணி’ இதழில் வெளியானது)
வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் சிரிப்பு நடிகர் ‘தேங்காய்’ சீனிவாசன் "சிரிக்கவைத்தால் மட்டும் போதாது; சிந்திக்க வைக்கவும் வேண்டும்" என்ற கொள்கை உடையவர். அவருக்கு ஒரே ஒரு ஆசை. அந்த ஆசையும் நிறைவேறிவிட்டது என்கிறார். அது என்ன ஆசை? அவரையே கேட்டு விடுவோமே!
நிருபர்: உங்கள் சொந்த ஊர் எது?
‘தேங்காய் ’சீனிவாசன்: தமிழ்நாட்டுக்காரனான என்னைப்பார்த்து இப்படிக் கேட்டுவிட்டீர்களே! எல்லாம் நம்ம ஊர்தான் அண்ணாச்சி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம்.
‘தேங்காய்’ சீனிவாசன்
நிரு: சென்னைக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?
தேங்: என் அப்பாவுக்கு சென்னையில்தான் வேலை. ஆகவே, நான் சிறுவயதில் இருந்தே சென்னையில்தான் இருக்கிறேன்.
நிரு: அப்படியானால் சிறுவயதிலேயே உங்களுக்கு சினிமாப் பைத்தியம் உண்டு என்று சொல்லுங்கள்.
தேங்: உண்மைதான். சிறுவயதிலேயே எனக்கு நடிப்பில் ஆர்வம் உண்டு. என் அப்பாவையே நான் டைரக்டு செய்திருக்கிறேன்!
நிரு: இது என்ன புதுக்கதை!
தேங்: எங்கள் அப்பாவின் ஆபீசில் நண்பர்களாக சேர்ந்து நாடகம் நடத்தினார்கள். அதில் என் அப்பாவும் நடித்தார். வீட்டிலேதான் ஒத்திகை பார்ப்பார். அப்பொழுது நான்தான் ‘அப்படி நடியுங்கள், இப்படி நடியுங்கள்' என்று சொல்லுவேன்.
நிரு: பிறகு நீங்கள் எப்படி நடிக்கத் தொடங்கினீர்கள்?
தேங்: சென்னையில் நடந்த நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். ஆனால் பத்தோடு பதினொன்றாக இருந்தேனே தவிர என் பெயர் வெளியே தெரியவில்லை.
‘கட்டிலா தொட்டிலா’ திரைப்படத்தில் ‘தேங்காய்’ சீனிவாசன்
நிரு: எப்பொழுது நல்லகாலம் பிறந்தது?
தேங்: ‘தேங்காய்’ வியாபாரம் செய்யத் தொடங்கிய பின்புதான்!
நிரு: ‘தேங்காய்’ வியாபாரம்கூட செய்தீர்களா? சென்னையில்தானா?
தேங்: ‘தேங்காய்’ வியாபாரம்தான். ஆனால், கொத்தவால்சாவடியில் அல்ல; நாடகத்தில்! ‘கல்மனம்’ நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்தேன். அதுமுதல் ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். ‘தேங்காய்’ என்றே என்னை அழைக்கத் தொடங்கி விட்டார்கள்.
நிரு: சினிமாவில் எப்பொழுது நுழைந்தீர்கள்?
தேங்: ‘ஒருவிரல்’தான் என் முதல் படம். ‘வல்லவன் ஒருவன்’ மூலம் நானும் ஒரு நகைச்சுவை நடிகன் என்ற நிலையான இடத்தைப் பெற்றேன்.
நிரு: நகைச்சுவை எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தேங்: அப்போதைக்கு சிரித்துவிட்டுப் போகும்படி இருக்கக்கூடாது. கலைவாணரின் நகைச்சுவை போல சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும். கோமாளி வேடம் போட்டே, கொள்கையைப் பரப்ப வேண்டும் என்பதே என் ஆசை.
நிரு: புஷ்பமாலா உங்களுக்கு சரியான ஜோடியாக இருக்கிறார் போலிருக்கிறதே!
தேங்: புகழ் தந்த ஜோடிதான்! ஆனால், நான் எந்த ஜாடிக்கும் மூடியாக இருப்பேன். என் திறமை மீது எனக்கு நம்பிக்கை உண்டு.
‘நான் வாழ வைப்பேன்’ திரைப்படத்தில் புஷ்பமாலா உடன்...
நிரு: உங்கள் ஆசை என்ன?
தேங்: ஒரு வண்ணப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான்! அந்த ஆசையும் நிறைவேறி விட்டது. விநாயகா பிக்சர்ஸ் தயாரிக்கும் வண்ணப்படத்தில் இப்பொழுது நடித்துக் கொண்டு இருக்கிறேன்.
நிரு: மிகச்சிறிய ஆசையாக இருக்கிறதே?
தேங்: ஆசைப்படுவதும், அவதிப்படுவதும் நான் அல்லவா! பேராசை கூடாது. ஆகவே, சிறிய ஆசையோடு நிறுத்திக் கொண்டேன்.
நிரு: உங்களோடு நடிக்கும் ஜோடியையே காதலித்து திருமணம் செய்து கொள்வீர்களா?
தேங்: மிகவும் காலம் தாழ்ந்து கேட்கிறீர்கள். நான் இப்பொழுது மூன்று குழந்தைகளுக்குத் தந்தை!