இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ வைரலாகி பலரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அது தான் பிரபல கராத்தே வீரரும் திரைப்பட நடிகருமான ஷிஹான் ஹுசைனி தனக்கு புற்றுநோய் இருப்பதாக கொடுத்துள்ள பேட்டி. கராத்தே பயிற்சி அளிப்பவராகவும், திரைப்படங்களில் நடிகராகவும் பலருக்கும் பிரபலமான இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர் கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பலருக்கும் மிக நெருக்கமானவர். மேலும் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளிலும் தோன்றி சாதாரண வெகுஜன மக்களும் அறியக்கூடிய நபராக வலம் வரும் இவருக்கு புற்றுநோய் எதனால் வந்தது? மற்றவர்களை போல் அல்லாமல் அதனை எப்படி இவர் தைரியத்துடன் எதிர்கொள்கிறார்? இவர் கடந்து வந்த பாதை என்ன? எதிர்கால கனவுகள் என்ன? என்பது குறித்தெல்லாம் விரிவாக இத்தொகுப்பில் காணலாம்.

கலைத்துறையில் ஆர்வம்

ஷிஹான் ஹுசைனி, பொதுவாக கராத்தே பயிற்சியாளராக அறியப்படும் இவர், நடிகர், வில்வித்தை வீரர், ஓவியர், சமையல் கலைஞர் எனப் பல திறமைகளைக் கொண்டவர். மதுரை பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மறைந்த புகழ்பெற்ற நடிகர் விவேக்குடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இணைந்து கல்வி பயின்றவர். கல்லூரி நாட்களிலேயே கராத்தே பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர், அதேசமயம் நடிப்பிலும் அதிக ஆர்வம் செலுத்தினார். இதன் காரணமாக விவேக்கிற்கும் இவருக்குமிடையே கல்விக் காலத்திலேயே ஆழமான நட்பு உருவாகியது. இருவரும் ஒரே கனவை கொண்டிருந்தனர்; அதாவது, எப்படியாவது திரைப்பட உலகிற்குள் நுழைய வேண்டும் என்ற ஆவல். இந்த சூழ்நிலையில், இருவரும் திரைப்பயணத்தை தொடங்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, ஷிஹான் ஹுசைனி, விவேக்கிற்கு முன்னதாகவே பிரபல இயக்குநர் கே. பாலசந்தரின் படம் வாயிலாக திரையுலகில் அறிமுகமானார். பாலசந்தர் இயக்கிய ‘புன்னகை மன்னன்’ என்ற திரைப்படத்தில் இவர் ஒரு சிறப்புப் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் நடனக் கலைஞராக அவரது நடிப்புத் திறமை வெளிப்பட்டது. இந்த திரைப்படம் வெற்றியடைந்ததன் காரணமாக தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவரை தேடிவந்தன. அதன் தொடர்ச்சியாக, ‘வேலைக்காரன்’, ‘மூங்கில் கோட்டை’, ‘உன்னை சொல்லிக் குற்றமில்லை’ போன்ற திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக, ஆபாவாணன் தயாரிப்பில், விஜயகாந்த் நடித்த ‘மூங்கில் கோட்டை’ திரைப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் வெளிவராததால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார்.


'கராத்தே மாஸ்டர்' மற்றும் 'புன்னகை மன்னன்' படத்தில் ஒரு காட்சியில் ஷிஹான் ஹுசைனி

இதைத் தொடர்ந்து, 1988-ஆம் ஆண்டில் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பிளட்ஸ்டோன்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் பணியாற்றியவர். 1993-ஆம் ஆண்டு வெளிவந்த சரத்குமார் நடித்த ‘வேடன்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி 1980-ஆம் ஆண்டுகளின் இறுதியிலிருந்து 1990-ஆம் ஆண்டுகள் முழுவதும் பல திரைப்படங்களில் தொடர்ந்து இவர் நடித்து வந்தாலும், இவருக்கு பெரும் புகழை தேடி தந்த திரைப்படம் என்றால் அது விஜய் நடித்த ‘பத்ரி’ திரைப்படம்தான். 2001-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், விஜய்க்கு கராத்தே பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக இவர் நடித்த ஒரு பாடல் மிகவும் பிரபலமானது. இதன் மூலம், திரையுலகில் பெரும் அறிமுகம் பெற்றார். பின்னர், ‘மை இந்தியா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், அந்த திரைப்படம் வெளியாகவில்லை. இவர் திரைப்படங்களில் நடிகராக மட்டும் இல்லாமல் பிற துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதிலும் கவனம் பெற்றவர் ஆவார். குறிப்பாக, 1998-ஆம் ஆண்டு, கமல்ஹாசன் தயாரித்த ‘மருதநாயகம்’ திரைப்படத்திற்கும், அதே ஆண்டு வெளிவந்த இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ திரைப்படத்திற்கும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு பணிகளில் இருந்துள்ள இவர், திரைப்படங்களைத் தாண்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் உருவாக்கி இருந்தார். அதில் குறிப்பாக 1990-ஆம் ஆண்டுகளில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் இவர் நடத்திய ‘திடீர் சமையல்’ என்ற நிகழ்ச்சி இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் மெகா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அதிரடி சமையல்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் சாதாரண வெகுஜன மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.


'பத்ரி' திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு காட்சியில் கராத்தே பயிற்சியாளராக வரும் ஷிஹான் ஹுசைனி

ஜெயலலிதாவின் பக்தன்

பொதுவாகவே இவரை ஷிஹான் ஹுசைனி என்று அழைப்பதைவிட, கராத்தே ஹுசைனி என அழைத்தாலே பலருக்கும் தெரியும் . நடிகர் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்துள்ள இவர், தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காக தனியாக ஒரு பள்ளியை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இப்படி பொது மக்களுக்கும் நடிகர்களுக்கும் கராத்தே பயிற்சி அளித்து, அவர்களுக்கு சண்டை கலையின் முக்கியத்துவத்தை விளக்கி வரும் இவர், கராத்தே மட்டுமின்றி வில் வித்தையில் கூட தேர்ச்சி பெற்றவர். இதனால் தமிழ்நாட்டில் வில் வித்தை சங்கத்தை உருவாக்கி, அதன் பொது செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் உலக சாதனை மற்றும் கின்னஸ் சாதனை என அடிக்கடி இவர் செய்யும் சாகச சம்பவங்கள் அவ்வப்போது ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளதோடு, இதற்காகவே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தனது வலது கையில் 101 கார்களை ஏற்ற வைத்ததோடு மட்டுமல்லாமல், அதே கையால் 5,000 களிமண் தடிகள் மற்றும் 1,000 செங்கற்களை உடைத்தார். இந்த சாதனையின் போது, கையில் ஏற்பட்ட ரத்தத்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை வரைந்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். எப்போதுமே ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த இவர், அவரின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வித்தியாசமான செயல்களை செய்துள்ளார்.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலையை உருவாக்கிய ஹுசைனி

அந்த வகையில் 2005ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு, 1,500 மில்லிலிட்டர் ரத்தத்தைப் பயன்படுத்தி, 56 ஜெயலலிதா ஓவியங்களை வரைந்தார். அவர் மேற்கொண்ட இச்செயல்கள் ஜெயலலிதாவின் கவனத்திற்கு சென்றபோது, ஜெயலலிதா அவரை அழைத்து அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், கராத்தே பயிற்சி மையம் தொடங்குவதற்காக உதவி செய்ததாகவும் தகவல்கள் உண்டு. அதேபோல் மற்றொரு முறை ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது, அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வேண்டி, தன்னைத் தானே சிலுவையில் அறைந்துப் பிரார்த்தனை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடையச் செய்தது. மேலும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை 350 மில்லிலிட்டர் வீதம் எட்டு ஆண்டுகளாக தனது உடம்பில் இருந்து 11.2 லிட்டர் ரத்தத்தைச் சேகரித்து, அதைக் கொண்டு ஜெயலலிதாவின் உருவச் சிலையை உருவாக்கிய ஹுசைனி, தன் செயல்களால் தொடர்ந்து மக்களை பதற்றமடையச் செய்து வந்தார். இவரின் இந்த செயல்கள் ஜெயலலிதாவுக்கும் பெரிய மன உளைச்சலை தந்ததனால் பலமுறை ஷிஹான் ஹுசைனியை அழைத்து ஜெயலலிதா கண்டித்ததாக ஒரு தகவல் உண்டு. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, ‘அனைத்து மக்கள் முன்னேற்ற அமைப்பு’ என்ற புதிய அமைப்பை தொடங்கி, தொடர்ந்து தனது கராத்தே பயிற்சி மையத்தில் கவனம் செலுத்தி வந்த ஹுசைனி, பல வீரர், வீராங்கனைகளை உருவாக்கி வந்தார்.

மரண விளிம்பில் ஹுசைனி


ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஹுசைனி

சினிமா மற்றும் கராத்தே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புகழ்பெற்று, தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ள ஹுசைனி, திடீரென தனக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதாக அறிவித்திருப்பது அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இதுகுறித்து அவர் கூறியதாவது: "எனக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கான காரணமாக மூன்று விஷயங்களை முன்வைக்கின்றனர். முதலாவது, இது எனது வம்சாவளியால் (ஜெனட்டிக்) வந்திருக்கலாம். இரண்டாவது, ஏதேனும் ஒரு வைரஸ் தொற்றால் உருவாகியிருக்கலாம். மூன்றாவது, சக்திவாய்ந்த மன அழுத்தத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என கூறுகிறார்கள். எனது உடல்நிலையை வைத்துப் பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் உயிர் வாழ இரண்டு யூனிட் ரத்தமும், குறிப்பிட்ட அளவில் இரத்த அணுக்களும் (பிளேட்லெட்ஸ்) தேவைப்படுகிறது. மருத்துவ அறிவுரைப்படி, நான் இன்னும் மிக குறைந்த நாட்களே உயிருடன் இருப்பேன். இருப்பினும், என்னுள் தைரியம் குறைந்தது இல்லை. எனது நண்பர்கள், உறவினர்கள் என பலரும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறுகிறார்கள். ஆனால், இந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சை இல்லை. எனது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், மரணத்தைப் பார்த்து நான் பயப்படவில்லை. அதற்கு நேரடியாக எதிர்த்து போராடும் மனப்பக்குவம் என்னுள் உள்ளது. உயிரின் கடைசி நொடி கூட நான் சிரித்துக் கொண்டே இருப்பேன். இந்த நேரம் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் கராத்தே கற்றுக் கொடுத்த இடத்தை விற்கலாம் என முடிவு செய்துவிட்டேன். பவன் கல்யாண் நேரில் வந்து இங்கு கராத்தே பயிற்சி பெற்றவர்.


துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த ஷிஹான் ஹுசைனி

எனவே, அவர் இந்த இடத்தை வாங்க முன்வர வேண்டும். அதேபோல், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் எனது நேரடி கோரிக்கையை முன் வைக்கிறேன். அவர் விளையாட்டுத்துறைக்கு பொறுப்பானவர் என்பதால், தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும். நான் கடந்த நாற்பது ஆண்டுகளாக, வில்வித்தை மற்றும் கராத்தே ஆகியவற்றை ஊர் ஊராகச் சென்று மக்களிடம் கொண்டு சேர்க்க பெருந்துயரம் அனுபவித்துள்ளேன். எனவே, மற்ற விளையாட்டுகளுக்காக அரசால் வழங்கப்படும் மைதானங்களை போல், தமிழகத்தில் வில்வித்தைக்கென தனியாக ஒரு விளையாட்டுப் பகுதி (கிரவுண்ட்) அமைக்கப்பட வேண்டும். இது எனது ஒரே ஒரு கோரிக்கையாகும். அதேபோல் எனது மிகப்பெரிய கனவு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது மாணவர்கள் அல்லது மாணவிகள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே. அதற்காக நான் கட்டியிருந்த கலை மாளிகையை உடனடியாக விற்று, அந்த பணத்தினை எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மாணவிகளின் ஒலிம்பிக் பயிற்சிக்காக பயன்படுத்த வேண்டும் என எண்ணுகிறேன். மேலும், தமிழ் திரையுலக நடிகர் விஜய்க்கு ஓர் வேண்டுகோள். அவர் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு வில்வித்தை வீரர் அல்லது வீராங்கனையை உருவாக உறுதுணையாக இருக்க வேண்டும். இது சிறந்த விளையாட்டுப் புரட்சிக்கான தொடக்கம் ஆக இருக்கலாம்" என உருக்கமாக தெரிவித்துள்ளார். இவரது இந்த உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், ஷிஹான் ஹுசைனியின் மன தைரியத்தையும், நாட்டுப் பற்றையும் பாராட்டி பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே ஷிஹான் ஹுசைனிக்கு, தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On 18 March 2025 12:02 AM IST
ராணி

ராணி

Next Story