இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(19.01.1975 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

முதல் அத்தியாயம்

"அவள் ஒரு தொடர் கதை"யைத் தொடர்ந்து, எனது வாழ்க்கையும் ஒரு தொடர்கதை ஆகிவிட்டது! அதுவும், "கல்கி" எழுதும் கதை போல, புகழ் பெற்ற தொடர்கதை ஆகி விட்டது!

பூமாரி பொழிவது போல ரசிகர்கள் எனக்கு புகழ்மாரி பொழிகிறார்கள். ரசிகர்களிடம் இருந்து நாள்தோறும் எனக்கு வந்து குவிந்து கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான பாராட்டுக் கடிதங்களில் இருந்து இதை நான் தெரிந்து கொள்ளுகிறேன்.

ஆனால், இத்தனை புகழும் எனக்கு உரியவை அல்ல. என்னை உருவாக்கிய டைரக்டர் பாலச்சந்தருக்கே சொந்தமானவை. கடவுளை கண் எதிரில் காண முடியாததால், ஏதோ ஒரு சிலையை செய்து வைத்துக் கொண்டு அர்ச்சனை செய்வது போல, திரை மறைவில் இருக்கும் அவரை நேரில் காண முடியாததால், திரையில் தோன்றிய என்னை எல்லோருமே பாராட்டுகிறார்கள்.

ஒரு பாராட்டுக் கூட்டத்தில் டைரக்டர் பாலச்சந்தர் பேசும் போது, "அவள் ஒரு தொடர்கதை"யின் வெற்றி, சுஜாதாவுக்கு நான் கொடுத்த பாத்திரத்தால் கிடைத்தது அல்ல. அந்தப் பாத்திரத்துக்கு நான் தேர்ந்து எடுத்த புதுமுகத்தால் கிடைத்தது” என்றார். இதைவிட எனக்கு வேறு என்ன பெருமை வேண்டும்? வசிஸ்டர் வாயால் "மகராசி" என்று பட்டம் பெற்றது போல இருக்கிறதே!.


இருமாறுபட்ட தோற்றங்களில் நடிகை சுஜாதா

அத்தியாயம்-2

"அவள் ஒரு தொடர் கதை" எனக்கு நட்சத்திர இடத்தைப் பெற்றுத் தந்தாலும், எனக்கு இது முதல் படம் அல்ல! நான் ஏற்கனவே 40 மலையாளப் படங்களில் நடித்து இருக்கிறேன். தொடர்கதை எழுதுவதற்கு முன்பு, சிறுகதைகள் எழுதுவது போல! நான் நடித்த முதல் படம் "தபசுவினி" என்ற மலையாளப் படம்! அதில் நடிகை ஷீலாவின் விதவை தங்கையாக நடித்தேன்.

தமிழில்கூட எனக்கு முதன் முதலில் வாய்ப்பு கிடைத்தது, "அவள் ஒரு தொடர்கதை”யில் அல்ல. "தேடும் நெஞ்சங்கள்" என்ற படத்தில்தான் முதல் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அந்தப் படம் ஏனோ இன்னும் முடிந்து வெளிவரவில்லை!. பாலச்சந்தரின் படத்தில் நடிப்பேன் என்று நான் கனவுகூட காணவில்லை. நான் முதன் முதலில் பாலச்சந்தரை சந்தித்த போது, "அவள் ஒரு தொடர்கதை"யில் நான்கு பெண்களுடன் நீயும் ஒரு பெண்ணாக நடிக்க வேண்டும்" என்றார். பாலச்சந்தர் படம் என்றதால், உடனே ஒப்புக்கொண்டு விட்டேன். அது எனக்கு புகழை தேடித் தந்துவிட்டது.


புன்னகையுடன் காட்சியளிக்கும் சுஜாதாவின் அழகிய தோற்றம்

அத்தியாயம்-3

இன்று உங்கள் மத்தியில் நான் ஒரு நடிகையாகத் திகழுவதற்கு காரணம், என் அண்ணன்தான்! நான் இலங்கையில் பிறந்தவள். என் தந்தை கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு சினிமா, பாட்டு, நடனம் கற்பது பிடிக்காது, நன்கு படிக்கிறவர்களைத்தான் பிடிக்கும்.

நான் எஸ். எஸ். எல். சி. படித்துக் கொண்டிருக்கும் பொழுது என் தந்தை வேலையில் இருந்து ஓய்வு பெற்றார். எனவே, எனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கேரளாவில் வந்து குடியேறினோம்.

கேரளாவுக்கு வந்த பிறகு எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் என் தந்தை நான் நடிகையாக ஆவதை கொஞ்சமும் விரும்பவில்லை. எனக்கும் நடிகை ஆக வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருக்கவில்லை. ஆனால், என் அண்ணன் பெரும் முயற்சி செய்து என்னை நடிக்க வைத்து விட்டார்.


“முத்தான முத்தல்லவோ" படத்தில் சுஜாதா

அத்தியாயம்-4

நான் கவர்ச்சியானவளும் அல்ல. கவர்ச்சியான வேடத்தில் நடித்து நடிகை ஆனவளும் அல்ல. நான் நாற்பது மலையாளப் படங்களில் நடித்தேன். அத்தனையிலும் அழுகை வேடம்தான்!. ஒன்று இரண்டு படங்களைத் தவிர!. அதனால்தானோ என்னவோ "அவள் ஒரு தொடர்கதை"யிலும் எனக்கு சோகப் பாத்திரமே கிடைத்தது!.

இப்பொழுதும் நான் கவர்ச்சியில் நம்பிக்கை வைக்கவில்லை. நடிப்புத் திறமையினால் முன்னுக்கு வர ஆசைப்படுகிறேன். "படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதற்கு முன் கதை என்ன? பாத்திரம் என்ன? என்று கேட்டு தெரிந்து கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போடு!" இது, எனக்கு பாலச்சந்தர் சொல்லி அனுப்பிய புத்திமதி!. இதை நான் அப்படியே கடைப்பிடித்து வருகிறேன். இதன்படியே, "பறவைகள்", "ஆயிரத்தில் ஒருத்தி", "மயங்குகிறாள் ஒரு மாது" ஆகிய புதுப் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறேன். இதற்குக் காரணம், நான் ஒரு நடிகையாக மட்டும் இருக்க விரும்பாமல், நடிக்கவும் ஆசைப்படுவதுதான்!

"பத்தோடு ஒன்னு பதினொன்னு அத்தோடு நான் ஒன்னு" என்று இல்லாமல், கலை உலகில் எனக்கு என்று ஓர் இடத்தை பெற விரும்பும் என் நியாயமான ஆசைக்கு டைரக்டர் பாலச்சந்தர் போன்றவர்களும், ரசிகர்களும் துணையாக-ஏணியாக இருக்க வேண்டுகிறேன். இதை நான் எங்கோ இருந்து கொண்டு கேட்கவில்லை. உங்களில் ஒருத்தியாக நின்று கேட்கிறேன்.


”சந்திப்பு” படத்தில் வரும் சுஜாதா

அத்தியாயம்-5

எனக்கு வயது 24! நடிகைகள் மறைக்கும் ஒரு விஷயத்தை நான் வெளிப்படையாக சொல்லுகிறேனே என்றுதானே ஆச்சரியப்படுகிறீர்கள்!. ஆனால் இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை!. நான் ஒன்றும் அபூர்வப் பிறவி அல்ல. உங்களில் ஒருத்தி!. நடிகை ஆவதற்கு என்றே அவதரித்தவள் அல்ல. சாதாரணப் பெண்!. எனக்கு இப்பொழுது ஏராளமான கடிதங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அப்பப்பா! என்ன வர்ணனை! கடிதங்களை படிப்பதே இப்பொழுது எனக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது!

ஆனால், எந்தக் காதலையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் நான் இல்லை. ஏனென்றால், இப்பொழுது நானே ஒரு தொடர்கதை ஆகிவிட்டேன்! அதுவும் இப்பொழுதுதான் ஆரம்பமாகி இருக்கும் தொடர்கதை!!

Updated On 1 July 2024 11:55 PM IST
ராணி

ராணி

Next Story